23 Jul 2019 11:54 pmFeatured
நெல்லை மாநகராட்சியான பின்னர், 1996-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தி.மு.க சார்பாகப் போட்டியிட்டு வெற்றிபெற்று, முதல் மேயராகப் பொறுப்பேற்றவர், உமா மகேஸ்வரி. தொடர்ந்து தி.மு.க-வில் தீவிரமாகப் பணியாற்றிவந்தார். உமா மகேஸ்வரியின் கணவர் முருக சங்கரன். நெடுஞ்சாலைத் துறையில் ஓய்வுபெற்ற பொறியாளர் ஆவார்
நெல்லை ரெட்டியார்பட்டியில் இன்று மாலை வீட்டில் பயங்கர ஆயுதங்களுடன் அங்கு நுழைந்த கும்பல் ஒன்று உமா மகேஸ்வரி, அவரது கணவர் முருக சங்கரன், பணிப்பெண் மாரி ஆகியோரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச்சென்றது. அதில் மூவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். உருட்டுக்கட்டை, இரும்புக்கம்பி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களால் மூவரின் தலைகளில் தாக்கியுள்ளனர் கொலையாளிகள். மேலும், மூவரையும் தனித்தனி அறையில் வைத்து கொலை செய்துள்ளனர்.
இந்தக் கொடூர கொலைச் சம்பவத்துக்குக் காரணம் யார்? என்பது உடனடியாகத் தெரியவில்லை. முன்விரோதம் காரணமாகக் கொல்லப்பட்டாரா அல்லது சொத்து தகராறு காரணமாக இந்தக் கொலை நடந்ததா என்பது பற்றி மேலப்பாளையம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்கள். சம்பவ இடத்துக்கு மோப்பநாய் வரழைக்கப்பட்டது. கைரேகை நிபுணர்களும் தீவிர சோதனை நடத்தினார்கள். ஆணையாளர் பாஸ்கரன், துணை ஆணையர் சரவரணன் உள்ளிட்ட அதிகாரிகள், சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினார்கள். உமா மகேஸ்வரி, கட்சி நிகழ்ச்சிகள் அனைத்திலும் தவறாமல் பங்கேற்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். கட்சிப் பணிகளில் மட்டும் அல்லாமல் பொது நிகழ்ச்சிகளிலும் அதிக ஆர்வத்துடன் பங்கேற்பதை வழக்கமாகக்கொண்டிருந்தார்.