02 Jan 2020 2:45 pmFeatured
பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் கைது செய்யப்ட்ட பேச்சாளர் நெல்லை கண்ணன் ஜனவரி 13 வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக அண்மையில் திருநெல்வேலியில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றுப் பேச்சாளர் நெல்லை கண்ணன் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது, ‘பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதனையடுத்து, நெல்லை கண்ணன் மீது காவல்துறையினர் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளார்.
இந்தநிலையில், இன்று நெல்லை கண்ணனை உடனடியாக கைது செய்யவேண்டும் என்று வலியுறுத்தி சென்னை மெரினா கடற்கரை அருகில் ஹெச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன், பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பா.ஜ.கவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தநிலையில், பெரம்பலூர் தனியார்விடுதியில் தங்கியிருந்த நெல்லைக் கண்ணனைக் காவல்துறையினர் நேற்று கைது செய்தனர். இன்று நெல்லை நீதிமன்றத்தில் அவர் ஆஜர் படுத்தப்பட்டார்.
நெல்லை கண்ணன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பாபு நெல்லை கண்ணன் ஜனவரி 13 வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
ஆதரவாளர்கள் விளக்கம்
பட்டிமன்றங்கள் மேடைப்பேச்சுகளின் போது நெல்லை வட்டார வழக்கில் பேசும்போது பெரும்பாலும் கடவுள் முதல் மறைந்த கவிஞர்கள், தலைவர்களை கூட ஒருமையில் பேசுவது அவர் பாணி அதை யாரும் பெரிதாக எடுத்துக்கொண்டதில்லை அதேபோல்
"பிரதமர் மோடி, அமித்ஷாவின் சோலியை முடிக்க மாட்டீங்கிறீங்களே.. சாய்புமாரு முடிப்பாங்கனு பாத்தா, மாட்டேங்காகளே" என்றெல்லாம் நெல்லை கண்ணன் பேசியது நெல்லை வட்டார வழக்கம்.. இதை யாரும் சரியாக புரிந்துகொள்ளவில்லை" என்று ஆதரவாளர்கள் விளக்கம் அளித்துள்ளனர். பிரபல பட்டிமன்ற பேச்சாளர், தமிழறிஞர் நெல்லை கண்ணன்.. இவர் டிசம்பர் 29-ந் தேதி மேலப்பாளையத்தில் ஒரு கூட்டத்தில் பேசினார்.. மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக எஸ்டிபிஐ கட்சி சார்பாக இந்த கூட்டம் நடத்தப்பட்டது.
இந்த கூட்டம் முழுவதும் பாஜகவை உண்டு, இல்லை என ஆக்கிவிட்டார்.. பிரதமர் மோடி, அமித்ஷா, நிர்மலா சீதாராமன் முதல் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் வரை கடுமையாகவும் பகிரங்கமாகவும், ஒருமையிலும் பேசினார்.
மேலும் சுப்ரீம் கோர்ட் நீதிபதி ரஞ்சன் கோகாய் பற்றியும் கருத்துக்களை தெரிவித்ததாக சொல்லப்பட்டது. நெல்லை கண்ணனின் இந்த ஒட்டுமொத்த பேச்சும் இணையத்தில் வைரலானது. தமிழக பாஜகவினர் கொதித்து போய்விட்டனர். காரணம், "பிரதமர் மோடி, அமித்ஷாவின் சோலியை முடிக்க மாட்டீங்கிறீங்களே.." என்ற இந்த வார்த்தைகள்தான் பாஜகவினரின் ஆத்திரத்துக்கு காரணம். இதைதான் பலரும் சுட்டிக்காட்டி தங்கள் ஆதங்கத்தை சோஷியல் மீடியாவில் தெரிவித்துள்ளனர்.
ஆனால், இப்படி நெல்லை கண்ணன் பேசியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது என்றும், வட்டார மொழியை யாரும் சரியாக புரிந்து கொள்ளாமல் கோபப்பட்டுள்ளனர் என்றும் அவரது ஆதரவாளர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
பொதுவாக நெல்லை கண்ணன் பேசுவது திருநெல்வேலி பாஷைதான்.. அதன்படி ஒருவர் தன் காரியத்தை சரியாக செய்யாவிட்டால், அல்லது திறமையாகவும், துரிதமாகவும் வேலையை முடிக்கவில்லை என்றால், சோலிய முடிக்க மாட்டேங்காகளே" என்று அசால்ட்டாக சொல்வது வழக்கம்.. இது ஒரு லோக்கல் லேங்குவேஜ்.. நெல்லை மட்டுமல்ல.. தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் மக்கள் இப்படி சர்வ சாதாரணமாக பேசுவார்கள்.
இது ஒரு சாதாரண வழக்க பேச்சு.. இதற்கு அர்த்தம் ஒருவரை கொலை செய்ய வேண்டும் என்பதல்ல.. ஜோலியை முடிக்க மாட்டேங்காகளே என்றால், பார்க்கிற வேலைய முடிக்க மாட்டேன் என்கிறார்கள் என்றுதான் பொருள்.. "சாய்புமாரு முடிப்பாங்கனு பாத்தா, மாட்டேங்காகளே" என்றால், இவர்களுக்கு எதிராக ஓட்டு போட்டு, அவர்களை பதவியைவிட்டு ஓட செய்யுங்கள் என்று பொருள்.
இப்படி வட்டார மொழியை புரிந்து கொள்ளாமல், தவறாக புரிந்துகொண்டு.. வன்முறையை தொடுத்துள்ளனர்.. வேண்டுமானால் நெல்லை கண்ணனை கண்டித்தோ அல்லது எச்சரித்தோ விட்டிருக்கலாமே தவிர, இந்த அளவுக்கு நடந்து கொள்ளக்கூடாது என்று ஆதரவாளர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.