Thennarasu, தென்னரசு மும்பையிலிருந்து வெளியாகும் செய்தித் தளம்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

ஏன் வேண்டாம் இந்தி?

06 Jul 2019 10:04 amFeatured Posted by: Sadanandan

You already voted!

ஆய்வுத் தொடர்-1

-பாவலர் நெல்லைப் பைந்தமிழ்

இந்திய நடுவண் அரசின் “கஸ்தூரி ரங்கன் குழு” அண்மையில் புதிய கல்விக் கொள்கை அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. அதில் இந்தியாவில் மும் மொழிக் கொள்கை தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்றும் ஆறாம் வகுப்பு முதல் இந்தி மொழி பாடம் பயிற்றுவிக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளது.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும் இந்தியை ஏற்போம் என்றும் கூறியுள்ளார்.

மேலும் தென்னக தொடர்வண்டி நிலைய அலுவலகங்களில் தமிழில் பேச தடை என்றும் இந்தி, ஆங்கில மொழிகளிலேயே பேச வேண்டும் என்றும் பட்டப்படிப்பில் இந்தி கட்டாயம் என்றும் செய்திகள் வந்த வண்ணமுள்ளன.

இதற்கு தமிழகத்தில் இருந்தும் புலம் பெயர்ந்த தமிழர்களிடமிருந்தும் எதிர்ப்புகள் வலுத்த வண்ணம் உள்ளன.

இந்தியாவின் ஏனைய மாநிலங்கள் யாவும் இந்தியை ஏற்றுக்கொள்ளும் பொழுது தமிழர்கள் மட்டும் ஏன் இந்தியை ஏற்க மறுக்கிறார்கள் என்றும், இந்தி படிப்பது நல்லதுதானே என்றும் சிலர் வாதிட்ட வண்ணம் உள்ளனர்.

இந்தி தேவையா, தேவையில்லையா என்ற முடிவுக்கு வரும் முன் இந்தி மொழியினை இரு கண்ணோட்டத்தில் நோக்குவது தேவையாகும். ஒன்று மொழிவழி பார்வை; இன்னொன்று அரசியல்வழி பார்வை.

அன்று சிந்து வெளியில் இருந்த மக்களை கிரேக்கர்கள் 'ஹின்டஸ்' என அழைத்தனர். அங்கு பாய்ந்த ஆறை ஹின்டஸ் ஆறு (Indus river) என்றும் அங்குள்ள மக்கள் வாழ்வை ஹின்டஸ் (சிந்து) சமவெளி நாகரிகம் (Indus Valley Civilisation) என்றும் அழைத்தனர். அங்கு வாழ்ந்த முஸ்லிம்கள் அல்லாத மக்களை இந்து என்ற சொல்லாலும் அவர்கள் வாழும் நிலப்பரப்பை இந்தியா என்ற சொல்லாலும் அழைத்தனர்.

அவ்வாறு அழைக்கப்பட்ட மக்கள் வாழ்ந்த நிலப்பரப்பை பின்னர் டச்சு, போர்த்துகீசிய, பிரஞ்சு, பிரிட்டானிய ஆதிக்கவாதிகள் கைப்பற்றினர். அவ்வாறு கைப்பற்றிய பகுதிகள் டச்சு இந்தியா, பிரெஞ்சு இந்தியா, பிரிட்டிசு இந்தியா என்று அழைக்கப்பட்டன. பிரிட்டிசாரின் ஆதிக்கத்தின் கீழ் வராத அதேவேளை அவர்களுடைய மேலாதிக்கத்தை ஏற்றுக் கொண்ட சமஸ்தானங்கள் அன்று சற்றொப்ப 600-க்கும் மேற்பட்டவையாகும்.

இன்று இந்தியா என்று கூறப்படும் நிலப்பரப்பு கடந்த 150 ஆண்டு காலத்தில் பல்வேறு வரையறைகளையும் நாட்டு எல்லைகளையும் கொண்ட ஓர் அரசமைப்பாகவே இருந்து வந்துள்ளது. ஒரே நாடாக ஒருபோதும் இருந்ததில்லை. 1947-ஆம் ஆண்டிற்குப் பிறகுதான் ஒருங்கிணைந்த இந்தியாவாக இருந்து வருகின்றது. ஒரே நாடு என்பதற்குரிய இலக்கணங்களான ஒருமொழி, ஒருமதம், ஒருபண்பாடு என்பன போன்ற எதுவும் இந்தியாவுக்குக் கிடையாது. பல மாநிலங்களின் கூட்டமைப்பே இந்தியா. இதை அண்ணல் அம்பேத்கரும் உறுதி செய்கிறார்.

மேலும் இந்தியாவில் வழங்கும் இந்தி மொழி இரு வகைப்படும். ஒன்று மேலை இந்தி மற்றொன்று கீழை இந்தி.

வடமதுரையைத் தலைநகராகக் கொண்டு கண்ணனின் பாட்டனான சூரசேனன் ஆண்டு வந்தான். சூரசேனன் ஆண்டதால் அப்பகுதியில் வழங்கிய மொழியும் சூரசேனி என்று அழைக்கப்பெற்றது. அந்த சூரசேனை மொழியின் வழிவந்ததே இன்றைய மேலை இந்தி.

அருத்த மாகதி மொழியிலிருந்தும், பீகாரி மாகதி மொழியிலிருந்தும், இராசத்தானி நகர அவப்பிரபஞ்ச மொழியிலிருந்தும் திரிந்துவந்ததே கீழை இந்தி. இதை மொழிநூல் அறிஞர்கள் ஒப்புக் கொள்கின்றனர்.

மேலும் தில்லியைச் சூழ்ந்த பகுதியில் செவ்விய முறையில் வழங்கும் 'கடிபோலி' என்னும் இந்தி நடைவழக்கு 19-ஆம் நூற்றாண்டு இறுதியில் சீர்திருத்தம் செய்யப்பட்டது. அதுமுதலே இந்தி என்பது ஓர் ஒருங்கிணைந்த மொழியாகியது.

இந்தி மொழிக்கென தனியாக எழுத்து வரிவடிவம் தமிழைப் போல் கிடையாது. அதனால் அது தேவநாகரி என்னும் நாகர் எழுத்தின் வரிவடிவத்திலேயே இன்றளவும் எழுதப்பட்டு வருகின்றது. சமசுகிருத மொழிக்கும் இதே நிலைதான். நாகர்கள் என்போர் பண்டைத் தமிழரின் ஒரு பிரிவினர்.

15-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இராமாநந்தர் என்னும் துறவியார் இராமகாதை பற்றி பாடிய பாடல்களே இந்தி இலக்கியத்தின் தொடக்கமாகும். அதுவே இந்தி இலக்கியத்தின் முதற்பனுவல் (ஆதிகிரந்தம்).

அதே வேளை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் மொழியானது இலக்கியங்கள் இலக்கணங்கள், வானநூல், கலைநூல், மறைநூல், மருத்துவநூல், ஓகநூல், தவ நூல், பட்டாங்குநூல், உள நூல், கணிதநூல், சொல்லியல் நூல், தருக்க நூல் என எண்ணற்ற நூல்களும் பற்பல பாவகைகளையும் இயற்றி மொழிக்கென முஞ்சங்கங்களையும் கண்டு தமிழ்ப் பொழிலாய் செழித்திருந்தது என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.

இராமாநந்தருக்குப் பின் அதே நூற்றாண்டில் அவர் மாணவர்களுள் ஒருவரான கபீர்தாசர் அவதி இந்தியில் பிராமணியத்தை வன்மையாகக் கண்டித்து 'விப்பிரமதீச' என்னும் செய்யுள் இயற்றினார்.

கபீர்தாசருக்குப் பின் அவர் மாணவரான குருநானக்கு என்பவர் பஞ்சாபில் சீக்கிய மதத்தைத் தோற்றுவித்து பஞ்சாபியும் இந்தியும் கலந்த கலவை மொழியில் தம் பாடல்களைப் பாடினார்.

இந்தி பாவலருள் முதன்மையானவராகக் கருதப்படும் துளசிதாசரின் பாடல்கள் அவதிக் கொந்தியிலும் அதற்குத் தெற்கில் வழங்கும் பழைய அவதி இந்தியிலுமே பெரும்பாலும் பாடப் பெற்றுள்ளன.

கபீரின் படைப்புகள் யாவும் பிரசபாசை, கோசலி, பழைய தில்லி பேச்சு ஆகியவற்றில் இலக்கணக் கலப்பைக் காட்டுகின்ற கலவை மொழியில் இயற்றப்பெற்றன.

வேத காலத்தையடுத்து சமசுகிருத மொழி உருவாக்கப்பட்ட போது இந்திய வட்டார மொழிகள் எல்லாம் வடவிந்தியாவில் (மேற்கிலிருந்து கிழக்காய்ப்) பைசாசி, சூரசேனி, மாகதி என்றும் நடுவில் மராட்டிரி என்றும் தென்னிந்தியாவில் திராவிடி என்றும் ஐந்து பிராகிருத மொழிகள் கணக்கிடப் பெற்றன. திராவிடி என்றது தமிழை.

பிராகிருதம் என்பவை சமசுகிருதத்திற்கு முன்பு இருந்தவை. பிரா=முன். கிருத=செய்யப்பெற்றது.

சமசுகிருதம் என்பது வழக்கற்றுப் போன வேத ஆரியரின் முன்னோர் மொழியும் ஐந்து பிராகிருத மொழிகளும் கலந்து செய்யப் பெற்றது. ஸம்= உடன், ஒருங்கு, ஒன்றாக. க்ருத = செய்யப் பெற்றது. எளிதில் எவரும் அறிந்து விடக் கூடாது என்பதற்காக ஸகரமெய் (ஸ்) இடையில் சேர்க்கப் பெற்று 'ஸம்ஸ்க்ரு' (சமசுகிரு-சமசுகிருதம்) என்றாயிற்று. இந்த சமசுகிருதத்தின் பெருவாரியான சொற்களைக் கொண்டதுதான் இந்தி.

மேலும் அன்று இந்தியாவின் பொது மொழி எது என்று தீர்மானிக்க கூட்டிய கூட்டத்தில் 18 பேர் பங்கேற்றனர். அவர்களில் 9 பேர் ஆங்கிலம் சார்பாகவும் 9 பேர் இந்தி சார்பாகவும் வாக்களித்தனர். இரண்டு பக்கமும் சரிசமமாய் வாக்களிக்கவே அக்கூட்டத்திற்கு தலைமை தாங்கிய இராசேந்திரபிரசாத் என்னும் இந்தி ஆதரவாளர் தனது வாக்கை இந்திக்கு சார்பாக அளித்து பெரும் கலகத்திற்கு வழிவகுத்தார்.

இந்தி மொழி என்பது தமிழைப் போல் ஒரு தனித்த மொழியல்ல. அதனால் தனித்து இயங்க முடியாது. அது 79 நடை மொழிகளையும் கிளைப் பிரிவுகளையும் கொண்ட கலவை மொழி. அவ்வெழுபத்தியொன்பது மொழிகளாவன இந்துஸ்தானி, இராஜஸ்தானி, இராசபுதனி, முசல்மானி, கோதியாணி, மிர்சுனி, பைகனி, புவானி, வாணி, பீகாரி, போவாரி, போயாரி, சடாரி, பான்சாரி, மாதுரி, மேவாரி, மார்வாரி, பசுதாரி, மகேசுவரி, மீர்சாபுரி, கோடுவாரி, பரதபூரிகோரக்புரி, ஜெய்ப்புரி, காசுமீரி, கிராரி, மராரி, பாசபுரி, கங்கேரி, மேர்வாரி, உத்தாரி, பகரி, அகரி, கலாரி, அதுகுரி, தேவநாகரி, சத்தீசுகடி, இராசுகடி, கோசங்காபாடி, பிரதாபகடி, கங்காபாடி, உலோடி, இரங்கடி, சடி, மைதிலி, பந்தேலி, கோர்க்காலி, குருமாலி, போபாலி, சங்கலி, ஆகராவாலி, உற்கேதிபோலி, சார்மாலி, பூலி, மால்வி, கோசாவி, பலாகி, ஓகி, இரகோபான்சி, பர்தேசி, தமிதி, சுவதி, நிமாதி, பிரசபாசை, பாடு, பங்கி, கால்பி, பர்பி, பாமி, நுனியா, பூலியா, பாண்டோ, குர்சார், அபு, கந்தால், இரிவை, உருது, உலோதாந்தி, கோர்த்தி என்பன.

இந்த எழுபத்தியொன்பது மொழிகளையும் கலந்து செய்யப் பெற்ற இந்தியைத்தான் இன்று முதன்மைப் படுத்துகின்றார்கள்.

அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் எட்டாவது அட்டவணையில் 22 மொழிகள் இருக்க இந்தி மட்டுமே இந்தியப் பொது மொழி எனத் தகுதி பெறும் வண்ணம் அப்படியென்ன கூடுதல் தகுதியை இந்தி மொழியானது பெற்றுவிட்டது?

எனில் அம்மொழியின் தன்மையையும் தகுதியையும் நாம் காணவேண்டாமா?

தொடரும்……2

தொடர் -2

பெயருக்கு முன் அடையாய் வருவது பெயர் அடையாகும். இந்தி மொழியின் பெயரடைகளில் தமிழைப் போல் ஓர் ஒழுங்கு இல்லை. தமிழ் மொழியில் பெயரடைகள் என்பவை நிலையாய் அமைந்துள்ளன. ஆனால் இந்தி மொழியிலோ பெயரடைகள் வடிவங்களில் வெவ்வேறு வகையாக அமைகின்றன. தமிழ் மொழியில் பெண், பையன், பையன்கள் என்ற பெயருக்கு முன்பாக நல்ல என்ற அடைசேர்த்தால் நல்லபெண், நல்லபையன், நல்லபையன்கள் என்றாகும். இச்சொற்களில் 'நல்ல' என்ற அடைமொழி மாறுவதில்லை. ஆனால் இந்தியிலோ இவை அச்சிலட்கி, அச்சாலட்கா, அச்சேலட்கே (அச்சி, அச்சா, அச்சே) என ஒவ்வொரு பெயர்க்கும் முன்னால் அடைகள் மாறுகின்றன.
இந்தி மொழியில் தமிழ் மொழியைப் போல் உயர் திணை அஃறிணை என்ற திணைப் பாகுபாடுகள் கிடையாது. அம்மொழியில் ஆண்பால் (புல்லிங்கம்) பெண்பால் (ஸ்தீரிலிங்கம்) என்ற பால் பாகுபாடே உண்டு. அம்மொழியின் சொல்லில் உள்ள ஈற்றைக் கொண்டுதான் பொருளையோ, பாலையோ அறியவேண்டும்.
தமிழ் மொழியில் வந்தான், வந்தாள், வந்தது என்று சொல்லும்போது ஒவ்வொரு சொல்லும் வந்தது ஆணா, பெண்ணா அல்லது அஃறிணையைச் சார்ந்த ஆடா, மாடா என்று திணை காட்டிநிற்கும். இத்திணைப் பாகுபாடு இந்தியில் இல்லாததால் கையை ஆண் என்றும் கைவிரலை பெண் என்றும் கூறவேண்டியதாயிற்று.
மலைகள், மரங்கள், பறவைகள், மாதங்கள், கோள்கள் முதலானவற்றைக் குறிக்கும் சொற்கள் ஆண்பாலாகவும் ஆறுகள், மொழிகள் முதலானவற்றைக் குறிக்கும் சொற்கள் பெண்பாலாகவும் இந்திவழக்கில் உள்ளன.
தமிழின் கொள்ளுப் பெயர்த்தியே இந்தி என்பதால் தமிழ் மொழியின் இலக்கண அமைதி இந்திமொழியில் அப்படியே அமைந்துள்ளன 'கு' என்பது தமிழில் நான்காம் வேற்றுமை உருபு. 'கு' என்னும் நான்காம் வேற்றுமை இந்தியில் 'கோ' என மாறுகின்றது. உஸ்கோ (அவனுக்கு) முஜ்கோ (எனக்கு) போன்ற சொற்களில் இது வந்துள்ளமைக் காண்க. 'கண்', 'மேல்' என்பன தமிழில் ஏழாம் வேற்றுமை உருபாகும். இவற்றின் 'மேல்' என்னும் உருபு இந்தியில் 'மே' என வழங்குகின்றது. 'உஸ்மேக்யாஹை’ (அதனுள், அதன்கண், அதில் என்ன இருக்கின்றது, அதன்மேல் என்ன?) என்பது இந்தி வழக்கு.
முற்காலத் தமிழில் செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சமே வினை முற்றாய் வழங்கிற்று. 'செய்யாநின்றான்' என்றால் 'செய்யாதுநின்றான்' என்று பொருள்படும். பாலுணர்த்தும் ஈறுகள் பிற்காலத்தில் சேர்க்கப்பட்டன. இந்தியிலும் இறந்தகால வினையெச்சங்களும் முற்றுகளும் ஆண்பாலொருமையில் ஆகார ஈறாயுள்ளன.
எடுத்துக்காட்டாக ஓரிரு சொற்கள். ஆயா = வந்து, வந்தான்; போலா = சொல்லி, சொன்னான்.
தமிழ் மொழியில் எகரத்தை (எ என்ற எழுத்தை) முதலாகக் கொண்ட தமிழ்ச் சொற்கள் இந்தியில் ககரத்தை (க) முதலாகக் கொண்டுள்ளன. தமிழில் எப்-எப்பொழுது என்பது இந்தியில் 'கப்' என்று வழங்குகின்றது. எத்தனை-கித்நே, எவ்வளவு-கித்நா, எங்கே-கஹாங், ஏன்-கியூங், என்ன-கியா, எண்-கிண் என்று வழங்குதலைக் காண்க.
இது தமிழில் எகரக்குறில் தோன்றும் முன் தமிழை அடியொற்றி சமஸ்கிருதம் தோற்றுவிக்கப் பட்டுள்ளதால் அதன் வழி இந்தியிலும் எகரக்குறில் இல்லாது போனது என்பதற்கு நல்லதொரு சான்றாகும். அதனால் தான் இந்தி மொழியில் இன்றளவும் கூட 'எ', 'ஒ' என்ற குறில் எழுத்துக்களில் துவங்கும் எந்த ஒரு சொல்லும் இல்லை.
பண்ணை = மருதநிலம். நீர் நிறைந்த மருத நிலமான வயல் தோப்பு போன்றவற்றுக்கு உரிமையாளரை பண்ணையார் என்பர். தென்னை, வாழை போன்ற மரங்களுக்கு நீரை, மண் தடுப்புகளான பள்ளங்களில் தேக்கி வைப்பதைப் பண்ணைப்பிடித்தல் என்பர். பண்-பாண்-பாணி = பள்ளமான இடத்தில் தங்கும் அல்லது பள்ளம் நோக்கி ஓடும் நீர்.
"விண்ணியல் பாணியன்" (பதினொன்றாம் திருமுறை)
பாணி என்ற தமிழ்ச் சொல் கன்னடத்தில் பணி என்றும் மராட்டியில் பாணி என்றும் இந்தியில் பாணீ என்றும் திரிந்தது.
கம் என்ற சொல் செய்கை, தொழில் உழவு, கொல் என்ற பொருள்களைத் தரும். இச்சொல் மிகப்பழந் தமிழில் கம் என்றும் பழந்தமிழில் கன்மம் என்றும் பிற்காலத் தமிழில் கருமம் என்றும் ஆனது. கம்-கம்மாளர் = கை வேலை செய்யும் கொல்லர். 
கம்மை (தொழிலை)ச் செய்பவர் கம்மாளர். கம் என்ற தமிழ்ச் சொல் இந்தியில் காம் என்று தொழிலைக் குறிக்க வழங்குகின்றது. 'தும்ஹாரா காம் கர்' (உமது வேலையைச் செய்க) என்பது இந்தி வழக்கு. கம் என்பது சமஸ்கிருதத்தில் கர்ம என்றாயிற்று. 'கருமமே கண்ணாயிரு' என்ற வழக்கை நோக்குக.
(நுள்)-நெள்-நெரி-நெரியல் = நெருப்புப் போல் எரியும் மிளகு. நெரியல்-மெரியல்-மிரியல் = மிளகு.

"சிறு சுளைப் பெரும் பழம் கடுப்ப மிரியல்
 புணர்பொறை தாங்கிய வடுவாழ்"

என வருகின்ற பெரும்பாணாற்றுப் படையின் வரிகளில் மிரியலை கழுதையின் மேல் ஏற்றிக் கொண்டு வணிகர்கள் வணிகத்திற்குச் சென்றதைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்று இச்சொல் இந்தியில் மிரி, காளா மிரி என்று மிளகைக் குறித்தலைக் காண்க. எரியும் தன்மையுடைய மிரி, மிர்ச் மிளகாயையும் குறிக்கும்.
மேலும் தமிழின் குத், குதி என்பது இந்தியில் கூத் என்றும் நேர்-நேரம் என்பது தேர் என்றும் உம்பர் என்பது உப்பர் என்றும் ஓரம் என்பது ஓர் என்றும் கட்டில் என்பது காட் என்றும் பழம் என்பது ஃபல் என்றும் மனம் என்பது மன் என்றும் படு (விழு) என்பது பட் என்றும் புகழ் என்பது போல் என்றும் பூ என்பது பூல் என்றும் சடுதி என்பது ஜல்தி என்றும் இன்னும் இவைபோன்று எத்தனையோ எண்ணற்ற தமிழ்ச் சொற்கள் இந்தியில் வழங்கி வருகின்றன (விரிவஞ்சி இங்கு தவிர்க்கப்படுகின்றது).
தமிழ் மொழியில் எண்களைக் கூறும் போது ஓர் ஒழுங்கியல் உள்ளது. ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு என தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஒன்பது வரை சொல்லிக்கொண்டேபோனால்அனைத்து சொற்களும் உ, உ, உ என்று உகரத்திலேயே முடியும். இந்த ஒழுங்கியல் வேறு எம் மொழியிலும் கிடையாது. 
தமிழில் ஒவ்வொரு எண்ணையும் குறிப்பிட தனித்தனி சொற்கள் உள்ளன. ஆனால் இந்தியிலோ 19, 29, 39, 49, 59, 69, 79, 89, 99 போன்ற எண்களை கூறுவதற்கு சொற்கள் கிடையாது. இந்தியில் ஒன்று முதல் பதினெட்டு வரை வரிசையாக கூறிவிட்டு 19 என்பதைக் கூறுவதற்கு 'உன்னீஸ்' என்றும் 29-ஐ கூறுவதற்கு 'உன்தீஸ்' என்றும் 39-ஐ கூறுவதற்கு 'உன்சாலிஸ்' என்றும் வழங்குவர். அதாவது இருபதில் ஒன்று குறைந்தது முப்பதில் ஒன்று குறைந்தது நாற்பதில் ஒன்று குறைந்தது என்று தான் கூறமுடியும் அம்மொழியில்.
இத்தன்மை வாய்ந்த இந்தி மொழியானது 1850-ஆம் ஆண்டளவில் வெறும் 4 இலக்கம் மக்களால் மட்டுமே பேசப்படுகின்ற மொழியாக இருந்தது. பின் இது எவ்வாறு இன்று இத்தனைக் கோடி மக்களும் பேசும் மொழியாக மாறியது. இந்தி மொழி தானே வளர்ந்ததா? இல்லை வளர்க்கப்பட்டதா? இதன் பின்னணி என்ன?
தொடரும்.....3

You already voted!
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

Visitors

096532
Users Today : 17
Total Users : 96532
Views Today : 22
Total views : 416664
Who's Online : 0
Your IP Address : 18.226.17.210

Archives (முந்தைய செய்திகள்)