08 Jul 2019 2:55 pmFeatured
1949-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 5-ஆம் நாள் நடந்த காங்கிரசு செயலர் குழு கூட்டத்தில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினர். நடுவண் அரசின் ஆட்சி மொழி இந்தியே என்றும் ஆங்கிலத்தின் இடத்தை இந்தி பெறும்வரை 15 ஆண்டு காலத்திற்கு தொடர்ந்து ஆங்கிலத்தைப் பயன்படுத்தலாம் என்றும் அத்தீர்மானம் கூறிற்று.
1961ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தி பேசுவோர் வெறும் 2.10 விழுக்காட்டினர் மட்டுமே. அப்படியிருந்தும் இந்தி மொழி இந்தி பேசாத பெரும்பான்மையான மக்கள் மீது திணிக்கப்பட்டுவிட்டது.
இந்திய அரசியலமைப்பு சட்ட விதிகள் 344(1), 351 பிரிவுகளின் கீழ் எட்டாவது அட்டவணையில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் 22 மட்டுமே. அவை அசாமி, வங்காளி, குசராத்தி, இந்தி, காசுமீரி, மராத்தி, ஒடியா, பஞ்சாபி, சமசுகிருதம், உருது, சிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், போடோ, சந்தாலி, மைதிலி, டோக்ரி, கொங்கணி, மணிப்பூரி, நேப்பாளி என்பன. இவ்வட்டவணையில் இந்தி மொழி சேர்க்கப்பட்டது 1967ஆம் ஆண்டுதான்.
இந்த எட்டாவது அட்டவணையில் ஆங்கிலம் சேர்க்கப்படவில்லை. ஆயினும் நடுவண் அரசாலும் மாநில அரசாலும் அலுவல் மொழியாக ஆங்கிலம் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
ஆங்கிலத்தை முற்றிலுமாக அகற்றிவிட்டு இந்தியை மட்டுமே அரசின் அலுவல் மொழியாக ஆக்க வேண்டும் என்று 1963-64-இல் நடுவண் அரசாங்கம் முடிவு செய்த போது அதற்கு தமிழ்நாடு மட்டுமின்றி மகாராட்டிரா, கருநாடகம், மேற்குவங்காளம், கேரளம், புதுச்சேரி, பஞ்சாப், ஆந்திரா ஆகிய மாநிலங்களிலும் கடும் எதிர்ப்பு தோன்றியது. எனினும் 1965-இல் இந்தி எதிர்ப்பானது பெரும் போராட்டமாக தமிழகத்தில் வெடித்ததால் மற்ற எந்த மாநிலத்திலும் எதிர்ப்பு இருக்கவில்லை என்று சங்பரிவாரங்கள் பொய்யுரைத்தன.
ஆனால் பல்கலைக் கழக மானியக் குழு பல்கலைக் கழக மேல் படிப்புகளில் இந்தியை கட்டாயமாகப் படிக்க வேண்டும் என்னும் சுற்றறிக்கையை கடந்த 2014 செப்டம்பரில் விடுத்த போது மேற்சொன்ன மாநிலங்களுடன் சேர்ந்து வேறு சில மாநிலங்களிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியதால் அந்தச் சுற்றறிக்கை திரும்ப பெற்றுக் கொள்ளப்பட்டது.
இந்தச் சுற்றறிக்கை 2011-இல் மன்மோகன் சிங் தலைமையில் இருந்த காங்கிரஸ் கூட்டணி அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டன என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். இந்தியை திணிக்கும் கொள்கையில் பாஜக, காங்கிரசு ஆகிய இரண்டுக்கும் வேறுபாடு இல்லை.
இந்திய நாடாளுமன்றத்தை இந்தியிலும் ஆங்கிலத்திலும் நடத்தலாம். அதேவேளை அவைத்தலைவரின் அனுமதி பெற்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் தாய் மொழியிலும் பேசலாம் என்றும் அரசியலமைப்பு சட்டம் கூறுகின்றது. ஆயினும் சட்டங்களை ஆங்கிலத்தில் மட்டுமே இயற்ற வேண்டும் என்றும் அச்சட்டம் கூறுகின்றது.
2001-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 10 இலக்கம் பேருக்கு மேற்பட்டவர்கள் பேசுகின்ற மொழிகளின் எண்ணிக்கை 29 ஆகும். இதில் இந்தி மொழிகளைப் பேசுகின்றவர்களின் எண்ணிக்கை சற்றொப்ப 42 கோடி. மொத்த மக்கள் தொகையில் இவர்கள் 41.30 விழுக்காடு. மக்கள் தொகை கணக்கெடுப்பு புள்ளி விவரம் இந்தி மொழிகளைப் பேசுகின்றவர்கள் என்றுதான் கூறுகின்றதேயன்றி தனியொரு இந்தி மொழி பேசுகின்றவர்கள் என்று கூறவில்லை. ஏனெனில் இந்திப் பிரதேசம் என்று சொல்லப்படும் மாநிலங்களில் பேசப்படும் இந்தி ஒரே வகையானதல்ல.
1955-ஆம் ஆண்டு சூன் மாதம் ஏற்படுத்தப்பட்ட பாராளுமன்றக் குழுவின் முன் கொடுக்கப்பட்ட சான்றியத்தின்படி கீழை உத்தரப்பிரதேச மக்களுக்கு மேலை உத்தரப்பிரதேச இந்தி விளங்கவில்லை. பீகாரின் போஜ்புரி மொழிக்கும் சத்தீஸ்கரின் சத்தீசுகர் மொழிக்கும் மிக வேறுபாடு உள்ளது. போஜ்புரி மட்டுமே பேசுபவர்களுடன் பீகாரின் மைதிலி மொழி பேசுபவர்களால் எளிதில் உரையாட முடியாது. இராஜஸ்தானில் பேசப்படும் இந்தியும் மத்தியபிரதேசத்தில் பேசப்படும் இந்தியும் ஒரேமாதிரியானவை அல்ல.
ஆனால், இத்தன்மையுள்ள மாநிலங்களின் மொழிகளையெல்லாம் ஒன்றிணைத்து இந்தி மொழிதான் இந்தியாவின் பெரும்பான்மையினர் பேசும் மொழி என்னும் மாயத் தோற்றம் உருவாக்கப்படுகின்றது.
மேலும் தமிழ், கன்னடம், மராத்தி, வங்காளி, ஒடியா போன்ற மொழிகள் அந்தந்த மக்களால் பேசப்படுபவை, எழுதப்படுபவை. ஆனால், நடுவண் அரசால் ஆட்சி மொழியாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள 'இந்தி' சமஸ்கிருத மயமாக்கப்பட்ட ஒரு செயற்கை மொழியே!
இன்னொன்றையும் இங்கு நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். மேற் சொன்ன கணக்கெடுப்பின்படி இந்தியாவில் ஓர் இலக்கத்திலிருந்து பத்து இலக்கம் பேர்வரை பேசுகின்ற மொழிகள் 29 ஆகும். இவற்றிலும் கூட சமசுகிருதம் இடம் பெறவில்லை. 'சம்ஸ்க்ருத்' என்னும் மொழி பண்டிதர்களாலும் பார்ப்பன புரோகிதர்களாலும் மட்டுமே பேசப்படுகின்றன. இன்று 136 கோடி மக்கள் வாழும் இந்நாட்டில் சமஸ்கிருதம் பேசுவோர் 24,821 பேர்கள் மட்டுமே. அதுவும் 1951-ஆம் ஆண்டு கணக்கெடுக்கப்பட்ட புள்ளி விபரப்படி வெறும் 1544 பேர்கள் மட்டுமே. இந்தச் சிறு கூட்டம் பேசும் மொழிக்குத்தான் ஆயிரம் கோடி அளவில் மக்கள் வரிப்பணம் வாரி இறைக்கப் படுகின்றது.
மேற்கூறியபடி இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளில் சமசுகிருதம், சிந்தி ஆகிய மொழிகளுக்கு தாயகங்கள் ஏதும் இல்லை. தமிழ் மொழிக்கு தமிழ்நாடு, கன்னடத்திற்கு கருநாடகம், மராட்டி மொழிக்கு மகாராட்டிரம் இருப்பதுபோல். மேற்கூறிய சிந்து மொழிக்கு உரிய சிந்துபகுதி தற்போது இந்தியாவில் இல்லை. அது பாகிஸ்தானில் உள்ளது.
விரல் விட்டு எண்ணக்கூடிய வெகு சிலரால் மட்டுமே பேசப்படுகின்ற பாவை சமஸ்கிருதமானது தனக்கென மொழி வழங்கும் தனி நிலப் பகுதியை ஒருபோதும் யாங்கும் கொண்டிருக்கவில்லை. இருப்பினும் சமஸ்கிருதத்திற்கு மட்டும் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஏன்?
தொடரும்…….5