09 Jul 2019 1:50 pmFeatured
காஷ்மீரி மொழி எட்டாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ள போதிலும் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ஆட்சி மொழியாக இருப்பது உருது மொழியேயன்றி காஷ்மீரி அல்ல. அதே வேளை இமாச்சல பிரதேசமக்களின் தாய் மொழி இந்தியல்ல. ஆனால், இந்திதான் அங்கு ஆட்சி மொழி. நாகலாந்திலும் அருணாசலப் பிரதேசத்திலும் ஆங்கிலந்தான் ஆட்சிமொழி. மாநில அரசுகளுக்கிடையேயும் இந்தியாவிற்கும் வெளி நாடுகளுக்கிடையேயும் செய்தி தொடர்புக்கும் நிருவாகத்திற்கும் கல்வித் துறையிலும் ஆங்கிலம் மிக விரிந்த அளவில் பயன் படுத்தப்படுகின்றது. எனினும் ஆங்கிலத்திற்கு அரசியலமைப்புச் சட்ட அங்கீகாரம் இன்னும் வழங்கப்படவில்லை. ஆனால் பயன்பாட்டில் இல்லா சமற்கிருதத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஏனெனில் என்றாவது ஒரு நாள் ஆங்கிலத்தை அகற்றிவிட்டு அவ்விடத்திற்கு இந்தியைக் கொண்டு வந்துவிட வேண்டும் என்ற சங்பரிவாரங்களின் நீண்டகால திட்டமது.
இந்தியைப் படிப்படியாக தேசிய மொழியாக மாற்றும் நோக்கத்தை அரசியலமைப்பு சட்டவிதி 351 இவ்வாறு கூறுகின்றது. 'இந்தி மொழியைப் பரப்புவதை ஊக்குவிப்பதும்; இந்தியக் கூட்டுப் பண்பாட்டின் எல்லா கூறுகளும் தம்மை வெளிப்படுத்திக் கொள்வதற்கான ஊடகமாக அம்மொழியை வளர்ப்பதும்; இந்தி மொழியின் தனித்தன்மைக்கு கேடு ஏற்படாவண்ணம் அதனை செழுமைப்படுத்தும் பொருட்டு எட்டாவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள எல்லா இந்திய மொழிகளிலிருந்தும் இந்துஸ்தானியிலிருந்தும் வடிவங்கள், பாணிகள், சொற்றொடர்கள் ஆகியவற்றை உட்கிரகித்து கொள்வதும் அதன் சொற் களஞ்சியத்தை பலப்படுத்தும் பொருட்டு தேவை ஏற்படும் போதும் விருப்பத்திற்கு ஏற்பவும் முதன்மையாக சமஸ்கிருதத்திலிருந்தும் இரண்டாவதாக பிற மொழிகளிலிருந்தும் சொற்களை எடுத்துக் கொள்வதும் இந்திய ஒன்றியத்தின் கடமையாகும்'.
மேற்சொன்ன விதியில் இந்துஸ்தானி குறிப்பிடப்படுகின்றது. ஆனால், இந்துஸ்தானி எட்டாவது அட்டவணையில் இல்லவே இல்லை. 'முதன்மையாக சமஸ்கிருதத்திலிருந்தும் இரண்டாவதாக பிற மொழிகளிலிருந்தும்' என்று கூறப்பட்ட விதிகளில் சமஸ்கிருதத்திற்கு முதலிடம் கொடுக்கப்பட்டுள்ளதைக் கவனிக்க. எந்த மொழிக்கு இங்கு முதலிடம் தரப்படுகின்றது என்பதையும் சிந்தியுங்கள்.
அதனால்தான் அண்ணல் அம்பேத்கர் தலைமையில் இந்தியச் சட்டம் அமைக்கப்பட்ட போது சட்டம் இயற்றிய பகுதியில் தமிழகத்தின் காஞ்சி பெரியவர் என்றழைக்கப்பட்ட சங்கராச்சாரியார் முகாமிட்டிருந்தார். துறவியான காஞ்சிசங்கராச்சாரிக்கு சட்டமியற்றும் இடத்தில் என்னவேலை?
1500-க்கும் மேற்பட்ட மொழிகள் பேச்சு மொழிகளாக உள்ள ஒரு நாட்டில் ஒரே ஒரு மொழி மட்டும் தேசிய மொழியாக்கப்படுகின்றது. இந்தியாவின் கூட்டு பண்பாட்டின் எல்லாக் கூறுகளும் தம்மை வெளிப்படுத்திக் கொள்வதற்கான ஊடகம் இந்தி என்று கூறப்பட்டாலும் அதன் சொற் களஞ்சியத்தின் வளர்ச்சிக்கு முதன்மையான ஆதாரம் சமஸ்கிருதம்தான் என்று அவ்விதி சொல்கிறது.
இந்துஸ்தானியை தேசிய மொழியாக வளர்க்க வேண்டி இருந்தால் அரபு, பாரசீக மொழிகளையும் சமஸ்கிருதத்தின் அளவிற்கு பயன்படுத்த வேண்டியிருக்கும். ஆனால் இந்திய ஆளும் வருக்கம் சமஸ்கிருதத்தை 'சுதேசி' மொழியாகவும் அரபு, பாரசீகத்தை 'விதேசி' மொழியாகவும் ஏற்கனவே முடிவு செய்துவிட்டது. 1951-ஆம் ஆண்டிலிருந்து நடுவண் அரசாங்கத்தால் வளர்க்கப்பட்டு வரும் இந்தி இந்தியாவின் கூட்டு பண்பாட்டையல்ல சமஸ்கிருத பண்பாட்டை மட்டுமே வெளிப்படுத்தி வருகின்றது என்பதைக் கூறத் தேவையில்லை.
ஒருபுறம் இந்திக்குள் சமஸ்கிருத சொற்கள் திட்டமிட்டே மென்மேலும் புகுத்தப்பட்டு வருகின்றன. மறுபுறமோ (உருதும் திராவிட மொழிச் சொற்களும் ஒருபுறம் இருக்கட்டும்) போஜ்புரி, பிரஜாபதி, மைதிலி, இராஜஸ்தானி, சத்தீஸ்கரி போன்ற மொழிகளிலுள்ள மரபுச் சொற்கள் வேண்டுமென்றே தவிர்க்கப்படுகின்றன.
இந்தியாவில் வாழும் மக்களில் கணிசமானோர் மொழி பண்பாட்டு தனித்தன்மையை இழந்து வருவதை காண்கிறோம். இவர்களில் பெரும்பாலோர் பழங்குடி மக்களும் கிராமப்புறங்களில் வாழும் உழவர்களுந்தாம்.
பார்ப்பனீயத்தால் கற்பனையில் உருவாக்கப்பட்ட இராமாயணக் கதையின் நாயகன் இராமன் பிறந்ததாக நம்பப்படுகின்ற பகுதியில் வழங்கிய அவதி மொழி இன்று இந்தியின் வரவால் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போயுள்ளது.
இராமனின் மனைவி சீதை பிறந்ததாக நம்பப்படும் பகுதியில் வழங்கிய மைதிலி மொழி இன்று இந்தியின் வரவால் நொய்ந்து நோயாளியாய்ப் போய்விட்டது. அங்குள்ள மொழியியல் அறிஞர்களோ தமிழகத்தைக் கண்டு பெருமைப்படுகிறார்கள். தமிழகத்தைப் போல் தாங்களும் இந்தியை அன்றே எதிர்த்திருந்தால் இன்று எங்கள் மொழி அழிந்திருக்காது நாங்களும் அடிமைப்பட்டிருக்க மாட்டோம் என்று கண்ணீர்மல்க கூறுகிறார்கள்.
உண்மையில் இராமனை கடவுளாக, கடவுளின் அவதாரமாக நம்புபவர்கள் இராமன் பிறந்ததாக நம்பப்படும் பகுதியில் பேசப்படும் அவதி மொழியையல்லவா புனிதம் என்று மீட்டெடுத்திருக்க வேண்டும். அல்லது சீதை பிறந்ததாக நம்பப்படும் பகுதியில் வழங்கும் மைதிலி மொழியையல்லவா அவர்கள் புனிதம் என்று மீட்டெடுத்திருக்க வேண்டும். மாறாக இந்தியை ஏன் வளர்த்தார்கள்?
- நெல்லைப் பைந்தமிழ்
தொடரும்…..6