10 Jul 2019 11:54 amFeatured
தங்களின் மொழிப் பண்பாட்டு தனித்தன்மையை இழந்து வருபவர்களில் போஜ்புரி, பிரஜாபாஷா, மகதி, இராஜஸ்தானி, சத்தீஸ்கரி போன்ற மொழிகளைப் பேசுபவர்களும் அடங்குவர். இம்மொழிகள் இந்தி மொழியின் வட்டார வழக்குகளாகவே கருதப்படுவதால் அம்மொழிகளைப் பேசுபவர்களையும் இந்தி மொழி பேசுபவர்களாக காட்டுவதன் மூலம் இந்திதான் இந்தியாவின் தனிபெரும்பான்மையினர் பேசும் மொழி என்று காட்டி அதனை இந்தியாவின் தேசிய மொழியாக ஆக்குவதற்கு ஆளும் வருக்கம் நியாயங்களை உருவாக்குகின்றது.
1935-ஆம் ஆண்டு பிரிட்டிசாரால் கொண்டு வரப்பட்ட இந்தியச் சட்டத்தில் குறிப்பிட்டிருந்த 'கூட்டாட்சி' என்ற சொல்கூட அரசியலமைப்பு சட்டத்தில் இடம் பெறவில்லை. அங்கு ஒன்றியம் என்ற சொல்தான் இடம் பெற்றுள்ளது.
இந்த அரசியலமைப்புச் சட்டம் இந்தியா பல தேசிய இனங்களைக் கொண்ட ஒரு நாடு என்பதை ஏற்றுக் கொள்ளவில்லை. மாறாக இந்தியா என்பது பல மாநிலங்களின் ஒன்றியம் என்று கூறுவதன் மூலம் பல்வேறு மாநிலங்கள் பிரிக்க முடியாதபடி ஒன்றிணைத்துவிட்டன.
1935-ஆம் ஆண்டுச் சட்டத்தில் நடுவண் அரசு பட்டியல், மாநில அரசு பட்டியல், பொதுப் பட்டியல் என்ற மூவகை அதிகாரங்கள் இருந்தன. கல்வி அன்று மாநில பட்டியலில் இருந்தது. 1976-ஆம் ஆண்டுக்குப் பின் கல்வி என்பது பொதுப் பட்டியலுக்கு கொண்டு செல்லப்பட்டது. இதற்கு எதிர்ப்பு கிளம்பவே அப்போதைய நடுவணரசு ஜனதா தோசை என்ற ஒரு திட்டத்தை கொண்டு வந்தது.
உணவகங்களில் தோசை இத்தனை கிராம் இருக்க வேண்டும் என்று துலாக்கோலில் எடை போட்டு மக்களுக்கு வழங்கப்பட்டது. மக்களோ தோசையைப் பற்றியே எங்கும் பேசிக் கொண்டிருந்தனர். இந்தியாவோ ஒரு தோசைக்குள் மக்களின் அறிவுக் கண்ணை திறக்கும் கல்வியை சுருட்டிக் கொண்டு போய்விட்டது. சூத்திரனுக் குக்கல்வியைக் கொடுக்காதே என்ற மநுதரும சட்டத்தை இங்கே நினைத்துப் பார்க்கவும். இன்றுவரை கல்வி நடுவண் அரசிடமே உள்ளது. அதனால்தான் கரிகாற் சோழனைப்பற்றியோ, ஆரியப்படை கடந்த பாண்டிய நெடுஞ்செழியன் பற்றியோ, இமயவரம்பன் செங்குட்டுவன் பற்றியோ நமது மாணவர்கள் அறிந்திருக்கவில்லை. மாறாக இராமனையும் கிருஷ்ணனையும் பிள்ளையாரையும் பற்றி தெரிந்திருக்கிறார்கள்.
இதுவரை அரசியலமைப்பு சட்டம் சற்றொப்ப 100 திருத்தங்களைக் கண்டுள்ளது ஆயினும் ஒரு திருத்தம் கூட இந்தியாவின் கூட்டாட்சித் தன்மையை வலியுறுத்துகின்ற திருத்தமாக இல்லை. இத்தகைய இறுக்கமான வலிமையான இந்தியா என்ற உருவாக்கத்தை நியாயப்படுத்தவும் நிலை நிறுத்தவும் இந்து என்ற பார்ப்பனிய கருத்தாக்கமும் சமஸ்கிருத மயமாக்கப்பட்ட இந்தி மொழியும் பயன்படுகின்றன.
இந்திய விடுதலைக்குப் பின் இந்தியா என்ற பெயருக்கு பதில் 'பாரதவர்ஷம்' என்று பெயர் வைக்கலாம் என்ற யோசனை எழுந்தபோது அது நிராகரிக்கப்பட்டது. அவ்வாறு நிராகரித்தவர்களில் அண்ணல் அம்பேத்கர், நேரு, அபுல்கலாம் ஆசாத் ஆகியோரும் அடங்குவர். ஆயினும் 17.09.1949 ஆம் நாளன்று கொண்டுவரப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்ட திருத்தத்தின் மூலம் 'இந்தியா அதாவது பாரத் மாநிலங்களின் ஒன்றியம் ஆக இருக்கும்' என்று அறிவிக்கப்பட்டது. 'பாரத்' என்ற சொல்லை சேர்த்துக் கொண்டதற்கான விளக்கம் எதுவும் தரப்படவில்லை.
அதேவேளை இந்தியை வளர்ப்பதில் முனைப்புகாட்டும் ஆர்.எஸ்.எஸ். இயக்கமோ இந்தியாவின் தேசியக் கொடியை ஏற்றுக் கொள்ளவில்லை.
காவிநிறத்தை மட்டுமே ஆர்.எஸ்.எஸ். ஏற்றுக்கொள்கிறது. காவிநிறம் புனிதமான வேள்வித்தீயின் நிறம். அது அறிவிக்கும் செய்தியோ இலட்சிய தீவில் ஒருவர் தன்னைத்தானே எரித்துக்கொள்ள வேண்டும் என்பதுதான். 1947 சூலை 17ஆம் நாள் ஆர்.எஸ்.எஸ்.சின் அதிகாரப்பூர்வ ஏடான ஆர்கனைசரின் மூன்றாவது இதழில் The National Flag என்று தலையங்கம் தீட்டியது. இந்தியாவின் தேசியக் கொடியாக காவிக் கொடிதான் இருக்க வேண்டும் எனக் கூறியது. இந்தியாவில், இன்றுள்ள கொடி, தேசியக் கொடியாக ஏற்றுக் கொள்ளப்பட்டதை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ்-சின் ஆர்கனைசர் ஏடு 31.07.1947, 14.08.1947 நாளிட்ட இதழ்களில் கண்டனம் செய்து தலையங்கங்கள் தீட்டின. 1947 இந்திய விடுதலைக்குப் பின்னும் இந்தியாவின் மூவண்ணக் கொடியை ஆர்.எஸ்.எஸ். ஏற்றுக் கொள்ளவில்லை.
ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு தத்துவ வடிவம் கொடுத்த கோல்வால்கர் என்பவர் 1939-ஆம் ஆண்டு ஒரு நூல் எழுதினார். அதன்பெயர் We or our nationhood defined என்பதாகும். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அதன் இரண்டாவது பதிப்பு 1941-இல் வெளிவந்தது. அதன்பிறகு அந்தநூல் வெளியிடப்படவே இல்லை. அதுமட்டுமல்ல இந்த நூலை வெளியிட்ட ஆர்.எஸ்.எஸ்.அமைப்பினரே அந்தநூலைத் தேடிப்பிடித்து அழித்தார்கள். அதற்கு என்ன காரணம்? சுயராஜ்யம் என்பது இந்துக்கள் இராஜ்யமே என்று அந்தநூல் பிரகடனம் செய்தது. அதோடு மட்டுமல்லாமல் அப்போது இந்தியாவில் நடந்து வந்த சுதந்திர போராட்டத்தை இந்தநூல் கடுமையாக எதிர்த்தது. இந்த உண்மைகள் வெளி வந்துவிடக் கூடாது என்பதற்காகவே இந்தநூலைத் தேடி கண்டுபிடித்து அவர்களே அழித்தார்கள்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அதிகாரப்பூர்வ ஏடான 'ஆர்கனைசர்' இன்னொன்றையும் எழுதியது 'Let Muslims Look upon Ram as their hero and that Communal problems will be all over… (Organiser 28 June 1971). முஸ்லிம்கள் இராமனை தங்களின் கதாநாயகனாக ஏற்க முன்வரட்டும்; அப்போது மதவாத பிரச்சினைகள் முடிவுக்கு வந்துவிடும்' என்று.
1971-இல் சொன்னார்கள்; 1992-இல் பாபர் மசூதியை இடித்தார்கள்! ஏன் இடித்தார்கள்? இராமன் பிறந்தது அயோத்தி என்பதாலா? இல்லை இராமர் கோவில் மீதுதான் பாபர்மசூதி கட்டப்பட்டுள்ளது என்பதாலா?
- நெல்லைப் பைந்தமிழ்
தொடரும்……7