11 Jul 2019 1:05 pmFeatured
நடு ஆசியாவின் 'பர்கானா' என்ற இடத்தில் பிறந்தவர்தான் பாபர். இவரின் இயற்பெயர் ஜாகிருதீன். இவர் தந்தையின் வழியில் தைமூர் பரம்பரையையும் தாய்வழியில் செங்கிஸ்கான் பரம்பரையையும் சேர்ந்தவர். இஸ்லாம் மதத்திலுள்ள சன்னிபிரிவைச் சேர்ந்தவர்.
பர்கானா மன்னரான பாபர் பின்பு காபூல் மன்னராகவும் முடிசூட்டிக் கொண்டார்.
இது நடந்தது 16-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில். இக்கால கட்டத்தில் தில்லியை இப்ராஹிம் லோடி என்ற துருக்கியர் வழியில் வந்த முஸ்லிம் மன்னர் ஆண்டு வந்தார். இவர் மீது வெறுப்புக் கொண்ட இந்திய இந்து பிரபுக்கள் காபூல் மன்னரான பாபரை இந்தியா மீதுபடையெடுத்து தில்லியை பிடித்து ஆட்சி செய்யும்படி அழைப்பு விடுத்தார்கள்.
பாபரை தாம்பூலம் வைத்து அழைத்தவர்கள் இங்குள்ள நிலப்பிரபுத்துவ இந்துக்கள்தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஒரு முஸ்லிம் மன்னனை எதிர்க்க இன்னொரு முஸ்லிம் மன்னனே அன்று தேவைப்பட்டான்! ஆயினும் இந்தியர்களின் அழைப்பை ஏற்று பாபர் தில்லி மீது படையெடுத்தார். இது நடந்தது கி.பி.1526 ஆம் ஆண்டு. இதற்கு முதலாம் பானிபட்டுப் போர் என்று பெயர்.
இப்ராஹிம் லோடியை வென்ற பாபர் பின்பு பஞ்சாப், ஆக்ரா, அயோத்தி, குவாலியர், பீகார், இராசபுத்திரம் ஆகிய பகுதிகளில் தனது அரசை விரிவுபடுத்தி தில்லியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி நடத்தினார்.
கி.பி.1526 –ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு வந்து அரசமைத்த பாபர் கி.பி.1530-ஆம் ஆண்டு காலமாகிவிட்டார். அவர் இந்தியாவை ஆண்டது நான்கே நான்கு ஆண்டுகள் மட்டுமே. இதனிடை கி.பி.1528- ஆம் ஆண்டு அயோத்தியில் ஒரு மசூதியைக் கட்டினார். அதுவே இன்று 'பாபர்மசூதி' என்று அழைக்கப்படுகின்றது
இந்தக் குறுகிய நான்கு ஆண்டுகால பாபர் ஆட்சியிலும் அவர் இந்துக்களின் ஆதரவோடுதான் ஆட்சிநடத்தி இருக்கின்றாரே தவிர எங்கேயும் இந்துக்களைப் பகைத்தார் என்றோ இந்துக் கோவில்களுக்கு தீங்கு விளைவித்தார் என்றோ ஒரு சிறு ஆதாரம் கூட வரலாற்று ஆசிரியர்களால் சுட்டிக் காட்டப் படவில்லை.
மேலும் பல ஊர்களில் பாபருக்கு வெற்றியைத் தேடித்தந்தவர்கள் அவருடைய இந்துத்தளபதிகள். ஏராளமான கோவில்களுக்கும் பார்ப்பனர்களுக்கும் பாபர் மானியம் அளித்ததை வரலாறு கூறுகின்றது. பாபரின் வரலாற்றைக் கூறும் 'பாபரிநாமா' என்ற அரிய வரலாற்று நூலில் அவர் எங்குமே இந்துக் கோவில்களை இடித்ததாகச் செய்தியோ குறிப்புகளோ இல்லை. அருவருப்பு எனக் கருதி குவாலியருக்கு அருகே இருந்த நிருவாண சமணச்சிலைகளை மட்டும் அவர் இடிக்கச் சொன்னதாக அந்தநூல் கூறுகின்றது. உண்மையில் இந்து கோவில்களை அவர் இடித்திருந்தால் அது அவரின் வரலாற்று வெற்றியாக போற்றப் பட்டிருக்குமேயன்றி அதை மறைத்திருக்க தேவையுமில்லை.
பாபர் மட்டுமல்ல அவரது வழித் தோன்றல்களான 'ஷாஜகான்' வரையில் எந்த ஒரு முகலாய மன்னரோ இந்துக்களையும் அவர்களின் மத வழிபாட்டுத் தலங்களையும் பழித்தனர், அழித்தனர் என்று ஒரு குறிப்பும் வரலாற்றில் இல்லை! இவர்களில் ஔரங்கசீப் மட்டுமே மாறுபட்டிருந்தார் என்பதும் உண்மை.
பாபரின் பெயரன் அக்பர் இந்து முஸ்லிம் ஒற்றுமைக்கும் மதசார்பற்ற அரசுக்கும் அரும்பாடு பட்டுள்ளார். அக்பர் ஒரு முஸ்லீமாக இருந்தும்கூட இராசபுத்திர இந்துப் பெண்ணை தன்மனைவியாக ஏற்று அப்பெண்ணை இறுதிவரையில் ஒரு இந்துவாகவே மதம் மாற்றம் செய்யாமல் வாழ வைத்துள்ளார்.
அக்பர் அரண்மனையில் இந்துப் பண்டிகைகள் சிறப்பாக கொண்டாடப்பட்டதோடு அக்பரே நெற்றியில் திலகமிட்டுக் கொண்டு வெளியில் தோன்றும் பழக்கம் உடையவராகவே இருந்துள்ளார்.
இதுமட்டுமல்ல தனது அரசின் நிதி அமைச்சராக இராசபுத்திர தலைவர் இராஜா தோடர்மால் என்பவரையும் தளபதியாக இராஜா பகவான்தாஸ், இராஜாமான்சிங் ஆகியோரையும் தம் தலைமை ஆலோசகராக பீர்பால் என்பவரையும் இன்னும் பல உயர் பதவிகளில் இந்துக்களையே வைத்திருந்தார்.
வருமானத்தில் 10 விழுக்காட்டினை ஏழைகளுக்கு கொடு என்கிற இஸ்லாமிய நெறிப்படி அன்று இஸ்லாமியர்கள் தங்கள் ஈகையை மெக்காவுக்கு போய் அங்குள்ள ஏழைகளுக்கு கொடுத்து வந்தார்கள். பேரரசர் அக்பர் அதைத் தடுத்து, யாரும் மெக்காவுக்குப் போய் இதைச் செய்யவேண்டாம்; இந்தியாவில் உள்ள ஏழைகளுக்கு கொடுங்கள் என்று உத்தரவிட்டார்.
தமது ஆட்சியில் புதிதாக பள்ளிவாசல் ஏதும் கட்டவேண்டாம் என்றும் பழைய மசூதிகளை ஆடம்பரமாக புதுப்பிக்க வேண்டாம் என்றும் கட்டளையிட்டார். முகமது என்று இங்குள்ள இசுலாமியர் பெயர் சூட்டிக் கொள்வதை அவர் சட்டவிரோதம் ஆக்கினார். அரபு மொழி கல்வியைத் தடை செய்தார். 'ரம்ஜான்' விரதங்களை அவரே கைவிட்டதோடு பொது இடங்களில் கூடி பிரார்த்தனை செய்வதையும் தடை செய்தார்.
சீக்கிய மதத்தையும் சீக்கிய மக்களையும் பெரிதும் ஆதரித்ததோடு அவர்களின் நான்காவது குருவான இராமதாஸ் மீது அளவற்ற மரியாதைக் கொண்டிருந்தார். இதன்காரணமாக அமிர்தசரசு அருகே அக்காலகணக்குப்படி ஏறத்தாழ 500 பீகா நிலத்தை சீக்கியர்களுக்கு கோவில் கட்டுவதற்கு இனாமாகக் கொடுத்தார். அந்த இடத்தில்தான் அமிர்தசரசில் இன்று நாம் காணும் பொற்கோவில் கட்டப்பட்டுள்ளது.
இன்னும் ஒரு வியப்பிற்குரிய செய்தி என்னவெனில், துளசிதாஸ் என்பவரைக் கொண்டு இந்தி மொழியில் 'ராமசரிதமானஸ்' என்ற இராமாயணத்தை எழுதச் சொல்லி வெளியிட்டவரும் அக்பர்தான். இதைவிட வியப்பிற்குரிய செய்தி என்னவெனில் அக்பர் ஆட்சியில் வெளியிடப்பட்ட நாணயங்களில் இந்து தெய்வமான இராமனின் உருவமே பொறிக்கப்பட்டிருந்தது.
இவைகளையெல்லாம் மறைத்து விட்டு இந்துக்களை முஸ்லீம்கள் மதம் மாற்றுகிறார்கள் என்று சங்பரிவாரங்கள் தொடர்ந்து கூறிவருகின்றனர். இந்தியாவின் பெரும் பகுதிகள் பல நூற்றாண்டுகளாக இஸ்லாமியர் ஆட்சியின்கீழ் இருந்தது. அப்போதெல்லாம் அவர்கள் நினைத்திருந்தால் அந்நிலத்திலிருந்த ஒட்டுமொத்த இந்தியரையும் இசுலாமியராக மாற்றியிருக்க முடியும். அந்த ஆண்டுகளில் செய்யாததை இன்று ஆட்சியும், அதிகாரமுமில்லாத இசுலாமியர் செய்துவிடுவர் என்று கூறுவது எவ்வளவு அப்பட்டமான பொய்!
உண்மையில் துளசிதாசரை வைத்து இந்து தெய்வமான இராமனின் இராமசரிதமானஸ் எழுதிய முஸ்லிம் மன்னரை, இந்து தெய்வமான இராமனின் உருவத்தை தமது அரசியல் காலத்தில் நாணயத்தில் பொறித்து வெளியிட்ட முஸ்லிம் மன்னரை இந்துக்கள் போற்றியிருக்கவேண்டும் அல்லவா. மாறாக பாபரின் மசூதி இந்துத்துவ சங்பரிவாரங்களால் இடிக்கப்பட்டதே! ஏன்? என்ன காரணம்?
- நெல்லைப் பைந்தமிழ்
தொடரும்……..8