24 Aug 2019 11:02 amFeatured
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமும் சென்னை மாநகரத் தமிழ்ச்சங்கமும் விஜிபி உலகத் தமிழ்ச்சங்கமும் இணைந்து நடத்திய திருவள்ளுவர் விழா சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கடந்த சனிக்கிழமை காலை 10.30மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரை நடந்தது.
மரபுக் கவிதையில் தனித்துவம் பெற்று சிறப்பான கவிதையை வழங்கிய 115 கவிஞர்கள் சேர்ந்து இலக்கணத்துடன் எழுதப்பட்ட கவிதைகளை இணைத்து 'குறளின் குரல்' என்ற தலைப்பில் நூல் ஒன்று வெளியிடப்பட்டது.
நிகழ்வின் தொடக்கமாக 'குறளின் குரல்' நூலில் உள்ள அனைத்துக் கவிஞர்களும் கலந்து கொண்ட கவியரங்கம் நடந்தது. சென்னை மாநகரத் தமிழ்ச்சங்கத் தலைவரும் திருவள்ளுவர் விழாவின் ஒருங்கினைப்பாளருமான பாவரசு பாரதி சுகுமாரன் அவர்கள் தலைமையில் நடந்த இந்தக் கவியரங்கத்திற்குப் பிறகு ஆறு நூல்களின் வெளியீடும் விஜிபி உலகத் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் செவாலியே வி.ஜி.பி.சந்தோசம் அவர்களின் 83 ஆவது பிறந்தநாள் விழாவும் அனைத்துக் கவிஞர்களுக்கும் 'பாவரசு' பட்டத்துடன் 'குறளரசு' விருதும் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வை உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநரும் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநருமான முனைவர் கோ.விசயராகவன் அவர்கள் தலைமை ஏற்று நடத்த, விழாவில் தமிழ் ஆட்சிமொழி, தமிழ்ப் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மாண்புமிகு மா.ஃபா.க.பாண்டியராசன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை வழங்கியதுடன் அனைத்துக் கவிஞர்களுக்கும் 'பாவரசு' பட்டத்துடன் 'குறளரசு' விருதும் வழங்கினார்.
நிகழ்வில் புதுவைத் தமிழ்ச்சங்கத் தலைவர் முனைவர் முத்து, தமிழ்ச்செம்மல் முனைவர் முத்துக்குமாரசாமி தமிழ்த்திரு இரா.செல்வராஜ், தமிழ்த்திரு மாதவ சின்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்றத் தலைவர் முனைவர் வதிலை பிரதாபனுக்கு 'பாவரசு' பட்டத்துடன் 'குறளரசு' விருதும் வழங்கப்பட்டது.
நிகழ்வில் தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்தும் பல கவிஞர்கள் வந்திருந்து கலந்து கொண்டனர். அத்துடன் மும்பை, பெங்களூரு, ஹைதராபாத் போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் குறிப்பாக பிரான்ஸ் போன்ற வெளிநாட்டிலிருந்தும் கவிஞர்கள் பத்ரிசியா, அருணா நாதன் ஆகிய இருவரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
அய்யன் திருவள்ளுவரின் 2050 ஆம் ஆண்டு சிறப்புமிகு நிகழ்வாக தமிழுணர்வு பொங்கியெழும் விழாவான திருவள்ளுவர் விழாக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டது மிகவும் மகிழ்வூட்டியதாக விருதுபெற்ற முனைவர் வதிலை பிரதாபன் கூறினார்.