24 Nov 2020 9:27 pmFeatured
புதுச்சேரியிலிருந்து 380 கி.மீ தொலைவிலும், சென்னையிலிருந்து 430 கி.மீ கி.மீ தொலைவிலும் 'நிவர்' புயல் நிலை கொண்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், அடுத்த 12 மணி நேரத்தில் தீவிரப் புயலாக மாறிய பின், அதி தீவிரப் புயலாக வலுப்பெறும். 'நிவர்' புயல் கரையைக் கடக்கும் போது 120 கி.மீ முதல் 145 கி.மீ வேகத்தில் காற்றின் வேகம் இருக்கக்கூடும். கடந்த மூன்று மணி நேரமாக, ஒரே நேரத்தில் நிலைகொண்ட நிவர் புயல், தற்போது 5 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
'நிவர்' புயல் எச்சரிக்கை - நாளை தமிழகம் முழுவதும் அரசு விடுமுறை!
தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக உள்ளாட்சி துறை, மின்துறை அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் அந்தந்த அமைச்சர்களின் தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்நிலையில், இந்தப் புயல் காரணமாக, நாளை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நீட்டிக்கப்படுமா என்பது குறித்து பின்பு முடிவு செய்யப்படும் என்று செய்தி குறிப்பு தெரிவிக்கிறது
இந்நிலையில், இந்தப் புயல் காரணமாக, நாளை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நீட்டிக்கப்படுமா என்பது குறித்து பின்பு முடிவு செய்யப்படும் என்று செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.
சென்னையில் நாளை காலை 10 மணிமுதல் புறநகர் ரயில் சேவை ரத்து!
எங்கே கரையைக் கடக்கும் என்று உறுதியாகத் தெரியாத நிலையில், கடலோர மாவட்டங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் மதியம் முதலே காற்றுடன் மழை பெய்து வருகிறது. கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் சென்னை முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பேரிடர் மீட்புக் குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும், பேருந்து போக்குவரத்துக் குறைக்கப்பட்டுள்ள நிலையில், நாளை காலை 10 மணி முதல் புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்கள் நாளை ரத்து
நிவர் புயல் காரணமாக தென் மாவட்டங்களுக்குச் செல்லும் அனைத்து ரயில்களும் நாளை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி சென்னை எழும்பூரில் இருந்து இருமார்க்கத்திலும் இயக்கப்படும் 24 ரயில்கள் நாளை ரத்து.
விமானம் ரத்து
நிவர் புயல் காரணமாக சென்னை-திருச்சி விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சென்னை விமான நிலையம் அறிவித்துள்ளது. இன்று இரவு 8.35க்கு சென்னையில் இருந்து திருச்சிக்கு புறப்படும் இண்டிகோ விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மக்களைக் காக்க ஒன்றிணைவோம் வாரீர்; மக்களைப் பாதுகாப்பது நமது கடமை - மு.க.ஸ்டாலின்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “நிவர் புயல் பாதிப்புகளின்போது மக்களைப் பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதற்கும் உணவு - குடிநீர் - மருத்துவ வசதிகளைச் செய்யவும் கழகத்தினர் தயாராக இருக்க வேண்டும். அரசு அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிடுவோம். மக்களைக் காக்க ஒன்றிணைவோம் வாரீர்; மக்களைப் பாதுகாப்பது நமது கடமை” என்று அழைப்பு விடுத்துள்ளார்.
வீட்டிற்குள் இருங்கள், பாதுகாப்பாக இருங்கள் - ராகுல் காந்தி
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, நிவர் புயல் கரையைக் கடக்கும்போது, அனைவரும் வீட்டிற்குள் இருங்கள், பாதுகாப்பாக இருங்கள் என்று தெரிவித்துள்ளார். “நிவர் புயல் முன்னெச்சரிக்கையாக அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பின்பற்றவும்; தேவைப்படுபவர்களுக்கு உதவி வழங்குமாறு அனைத்து காங்கிரஸ் கட்சி ஊழியர்களுக்கும் நான் வேண்டுகோள் விடுக்கிறேன்; வீட்டிற்குள் இருங்கள், பாதுகாப்பாக இருங்கள்” என்று ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார்.
Cyclone Helpline
044 2538 4530
044 2538 4540
1913 (24*7)