07 Jun 2023 12:22 amFeatured
அனுமனுக்கு ரிசர்வேஷன்
ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள ஆதிபுருஷ் திரைப்படம் ரிலீஸாகும் தியேட்டர்களில் ஒரு சீட் அனுமனுக்கு ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
பிரபாஸ் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ஆதிபுருஷ். இப்படத்தை ஓம் ராவத் இயக்கி உள்ளார். இராமாயணத்தை மையமாக வைத்து. 3டி தொழில்நுட்பத்தில் மிகவும் பிரமாண்ட செலவில் உருவாகியுள்ள இப்படத்தில் ராமராக பிரபாஸும், சீதையாக கீர்த்தி சனோனும், ராவணனாக பாலிவுட் நடிகர் சையிப் அலிகானும் நடித்திருக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் பின்னணி பணிகள் முடிந்து வெளியிட தயாராக உள்ளது. ஆதிபுருஷ் திரைப்படம் வருகிற ஜூன் 16-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. சுமார் ரூ.600 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு உள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் ரிலீஸ் ஆக உள்ளது. ஆதிபுருஷ் படத்தின் ரிலீஸ் நெருங்கி வருவதால் அப்படத்திற்கான புரமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் இன்று அப்படத்தின் பிரம்மாண்டமான ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் 06.06.2023 அன்று திருப்பதியில் நடைபெற்றது இதற்காக திருப்பதி வந்த நடிகர் பிரபாஸ், காலை திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். இப்படம் வெற்றியடைய வேண்டி அவர் பிரார்த்தனையும் செய்துள்ளார். திருப்பதிக்கு வந்த நடிகர் பிரபாஸை காண ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர்.
இந்நிலையில், ஆதிபுருஷ் படக்குழு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அதில் ஆதிபுருஷ்’ படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் திரையரங்கின் ஒரு இருக்கையை அனுமனுக்காக காலியாக விட போவதாக பட தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக படக்குழு தனது ட்விட்டர் பக்கத்தில், "அர்ப்பணிப்பு, பக்தி மற்றும் விசுவாசத்தின் உருவமாக விளங்கும் அனுமனுக்கு மிகுந்த மரியாதையுடன் கூடிய பணிவான அஞ்சலி. ‘ஆதிபுருஷ்’ படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் ஒவ்வொரு தியேட்டரிலும் ஒரு இருக்கையை படக்குழு சார்பாக ஒதுக்குகிறோம்" என பதிவிட்டுள்ளது.
இந்திய திரைப்பட வரலாற்றில் முதன்முறையாக கடவுளுக்காக தியேட்டகளில் ஒரு இருக்கை ஒதுக்கப்படுவது இதுவே முதன்முறையாகும்.
ஆதிபுருஷ் திரைப்படம் சுமார் 500 கோடி செலவில் 3டி தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் ஆதிபுருஷின் டீஸர் வெளியானபோது அதன் சிஜி மிக மோசமாக இருந்ததாக ரசிகர்களின் கடும் விமர்சனத்தையும் கிண்டலையும் சந்தித்தது.
இது தொடர்பாக மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா, அயோத்தி ராமர் கோயிலின் தலைமை குரு சத்யேந்திர தாஸ், உத்தரப் பிரதேச துணை முதல்வர்கள் கேசவ் பிரசாத் மவுரியா மற்றும் பிரஜேஷ் பதக், விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு உள்ளிட்ட பலர் இப்படத்தை வெளியிடத் தடை விதிக்கக் கோரி கண்டனம் தெரிவித்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது