21 Apr 2021 10:36 amFeatured
மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்றம் இந்தியா, வொரேயால் தமிழ்க் கலாச்சார மன்றம் பிரான்ஸ், மலேசிய சகோதரிகள் தமிழிசைக் குழு, முன்சென் தமிழ்ச்சங்கம் ஜெர்மெனி, ரஸ்யா தமிழ்ச்சங்கம் ஆகிய நாடுகள் இணைந்து கொண்டாடும் பார்போற்றும் பாவேந்தர் பாரதிதாசன் பன்னாட்டுக் கருத்தரங்கம் இணையம் வழியாக வருகிற 25-04-2021 ஞாயிறு மாலை 5 மணியளவில் நடைபெறவுள்ளது.
மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்றத் தலைவர் முனைவர் வதிலை பிரதாபன் தலைமையில் நடைபெறவுள்ள பாவேந்தர் விழாவில் வொரேயால் தமிழ்க் கலாச்சார மன்றச் செயலாளர் அலன் கிருஸ்ணராஜ் வரவேற்புரையாற்றுகிறார். நிகழ்வினை வொரேயால் தமிழ்க் கலாச்சார மன்றத் தலைவர் இலங்கை வேந்தன் தொடங்கி வைக்கிறார்.
பாவேந்தர் பெயரன் கலைமாமணி பேராசிரியர் முனைவர் கோ.பாரதி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ளவுள்ளார். ஜெர்மனி முன்சென் தமிழ்ச்சங்கத்தைச் சார்ந்த பவித்ரா குணசீலன் மற்றும் கலை அரசி முருகேசன் ஆகியோர் நெறியாள்கை செய்கிறார்கள் பிரான்ஸ் வொரேயால் தமிழ்க்கலாச்சார மன்றத்தின் இணைச்செயலாளர் கௌதம் துரைராஜ் நன்றியுரை ஆற்றவுள்ளார்.
மலேசிய சகோதரிகள் பண்ணிசைமணி டாக்டர் பண்பரசி கோவிந்தசாமி மற்றும் இன்னிசைவாணி கனிமொழி கோவிந்தசாமி இருவரும் வழங்கவுள்ள பாவேந்தரின் திரையிசைப் பாடல் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.
இனம் மொழியின் சிறப்பிற்காக தமது புரட்சிகரமான எழுத்துகளால் தமிழுணர்வை ஊட்டும் வகையில் உலகெங்கும் வாழும் தமிழர்களின் மனங்களில் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கி தமது வீரியமிக்க சிந்தனைகளை மண்ணில் விதைத்துச் சென்ற பாவேந்தரின் பல்வேறு படைப்புகளை முன்னிறுத்தி பன்னாட்டுக் கருத்தரங்கம் ஒன்றும் நடைபெறவுள்ளது.
சென்னை உலகத்திருக்குறள் இணையக் கல்விக்கழக இயக்குநரும் பெர்க்கிளி - கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் மேனாள் சிறப்பு வருகைதரு பேராசிரியருமான முனைவர் மறைமலை இலக்குவனார் தலைமையில் நடைபெறவுள்ள பாவேந்தரின் பன்னாட்டுக் கருத்தரங்கில் வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த பேச்சாளர்கள் உரையாற்றுகிறார்கள்.
மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்றம்- இந்தியா சார்பில் "பாவேந்தரின் காப்பியப்புனைவு" எனும் தலைப்பில் நற்றமிழ் நாவலர் செல்வி இராஜ், "பாவேந்தர் பார்வையில் அழகியல்" எனும் தலைப்பில் நற்றமிழ் நாவரசி வே.பூங்குழலி பெருமாள், "பாவேந்தரின் தமிழியக்க மறுமலர்ச்சி" எனும் தலைப்பில் அயர்லாந்திலிருந்து தமிழ்மைந்தன் ஜான் ரிச்சர்டு மற்றும் "பாவேந்தரின் பொதுமை நேயம்" எனும் தலைப்பில் அமெரிக்காவிலிருந்து அமெரிக்கன் பாப்பையா அகத்தியன் ஜான் பெனெடிக் என நால்வர் கருத்துரையாற்ற உள்ளார்கள்.
உலகத் தமிழாராய்சி நிறுவனத்தின் மேனாள் இயக்குநர் ஆய்வறிஞர் முதுமுனைவர் ச.சு.இராமர் இளங்கோ கருத்தரங்க நிறைவுரையாற்ற உள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.
மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்ற ஆலோசகர் வெ.பாலு என்ற இளமுருகு, ரஸ்யா தமிழ்ச்சங்கத் தலைவர் சேகர் சாமியப்பன், ஜெர்மெனி தமிழ்ச்சங்கத் தலைவர் செல்வக்குமார் பெரியசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கவுள்ளார்கள்.
நிகழ்வில் அனைத்து அமைப்புகளின் நிர்வாகிகள், புரவலர்கள், ஆலோசகர்கள், அங்கத்தினர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்.
உலகெங்கும் உள்ள பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தமிழ் அமைப்புகளின் நிர்வாகிகளும் கலந்துகொண்டு அன்னைத் தமிழ்பெற்ற அருங்கவியின் சிறப்பினை கொண்டாடி மகிழவுள்ளார்கள்.
நிகழ்ச்சியின் சிறப்பினை உலகறியச் செய்யும் செயலாக தமிழ் அமெரிக்கத் தொலைக்காட்சி காட்சிப்படுத்த உள்ளது. பிரித்தானியா இந்திய வானொலியும் அலைவரிசையின் வழியாக கடல்கடந்து வாழும் தமிழுணர்வாளர்களிடம் கொண்டு சேர்க்க உள்ளது.
எனவே, இதனையே அன்பான அழைப்பாகக் கருதி அனைவரும் கலந்து மகிழும்படி மேற்சொன்ன அனைத்து நாடுகளின் நிர்வாகிகள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் கேட்டுக்கொள்கின்றார்கள்.
வாழ்த்துகள் ஐயா