11 Apr 2020 7:01 pmFeatured
-சதாசிவம் பிரபாகர்
பொறுப்பு துறப்பு:
பட்டு ஆச்சி, பாட்டி , வயசு –NA
பவளக்கொடி ,
அம்மா, வயசு 73 முடிஞ்சிருக்கு
இந்தக் கவிதை அரசியல் மற்றும் மத நம்பிக்கை குறித்து பேசவில்லை. எழுத்துப் பிழைகள், இலக்கணப் பிழைகள், சமயங்களில் ஏற்படும் பொருட் பிழைகள், அனைத்தும் பட்டு ஆச்சியுடையது.
ஒரு தேசத்தின் வரைபடம் போல்,
நேர்த்தியாக,
வாசலைப் பார்த்துக்
கால் நீட்டி
ஒருக்களித்துப் படுத்திருந்தாள்
சுரண்டி வச்ச சுண்ணாம்பும்,
வாடிப்போன வெத்திலையையும்
குதப்பிக்கிட்டு
எழுந்திருச்சா பட்டு ஆச்சி.
“ கொள்ளையல போறவன்
சூத்த பாக்க வச்சிருக்கான்.
இதெல்லம் என்ன புதுசா?"
தொத்துன்னா,
மொத மனுசனுக்கு ஆரு கொடுத்தா?
அண்டத்தில உள்ளதுதான
பிண்டத்தில்ல!
நாம்பாக்காத அதிசயமா!
கோவத்தில ஆத்தா தெரு தெருவா திரிவா.
வழியில வாரவல போரவல
வாரிக்கிட்டு போவா.
சூதானமா இல்லாட்டி
சுருக்குன்னுதான் போவனும்
கருக்கலாச்சுன்னா
கதவ அடைக்கனும்,
வீதி தூத்து, விளக்கு போடனும்.
வானுக்கும் பூமிக்கும்
நிப்பா பாரு,
பாம்பு சடை விழுந்து,
பல்லெல்லாம் ரத்தமாக,
கொத்து கொத்தா ஆஞ்சிருவா,
பாவமறுக்கும் பாதகி.
தொடப்புடாதாம்,
அப்பல்லம் ஆத்தா
கண்ணுலய படப்புடாது.
தீ புடிச்ச தீர்ப்புக்காரி.
இப்பிடித்தான்,
சொல் பேச்சி கேக்காத
சொக்கலிங்க மாமன்,
கதவிடுக்குல ஆத்தாவ பாத்துப் புட்டான்.
அகங்காரம் பிடிச்சவன்.
மறுநா, பாத்தா உடம்பெல்லாம்
மரு, மருவா….
ஆத்தானா,
மொதல்ல மருவாதி வெனும்
பயந்து கெடக்கனும்.
புழச்சது என்னவோ
அவரு பொஞ்சாதி புண்ணியம்.
பேசாம வூட்டில கெடெந்தா மூனு வாரம்,
கேக்காம திரிஞ்சா,
பேதியில்லதான் போவனும்.
ராவும், பவலும் கருமம்,
அந்த பொட்டியும், டப்பாவுமெ
கெதின்னு கிடந்தா!
அடங்கி கிடங்க மக்கா,
வந்திருக்கிரது ஆத்தா.
எம்மா, பவளக்கொடி,
ஆத்தா பொல்லாத கொவக்காரி
தீட்டா திரிஞ்சி,
திமிரெடுத்து ஆட்டம் போட்டா,
ஆத்தா இங்கனக்குள்ளேதான் சுத்துவா.
இப்பொதைக்கு,
கதவச் சாத்து”