17 Sep 2019 9:32 amFeatured
-பெ.கணேசன்
(மும்பை திராவிடர் கழகத் தலைவர்)
இந்திய சமுதாய வாழ்வுக்கு விடியலை தோற்றுவித்தவர்கள் மராட்டியத்தின் ஜோதிராவ் பூலே ,திராவிடத் தந்தை பெரியார், அறிவுலக மேதை அம்பேத்கர் ஆகியோர் "மகாத்மா" ஜோதிராவ் புலே அவர்கள் 19ஆம் நூற்றாண்டிலேயே சமுதாய மறுமலர்ச்சி இயக்கத்தை தொடங்கினார் அவரின் மறைவுக்குப்பிறகு தோன்றியவர்தான் பாபாசாகேப் அம்பேத்கர்.
தந்தை பெரியார் அவர்களும்,அண்ணல் அம்பேத்கர் அவர்களும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்றால் மிகையல்ல!
பெரியார் கருத்தை எழுதி கீழே -அம்பேத்கர் என்று எழுதினாலும்
அம்பேத்கர் கருத்தை எழுதி கீழே -பெரியார் என்று எழுதினாலும்
இருவருமே கொள்கை பொருத்தப்பாடு உடையவர்கள் என்பதை அறியமுடியும் .
மனிதனை மனிதனாக ஏற்றுக்கொள்ள மறுக்கும் எதையும் அழித்தொழிக்கவேண்டும் என்பது தான் பெரியாரியல்- அம்பேத்கரியல் அப்படி மறுப்பது கடவுளா, மதமா, சாதியா
சனாதனமா எதுவாக இருந்தாலும் ஒழித்துக்கட்டவேண்டும் என்பதில் உறுதியாய் இருந்தார்கள் !
சிறந்த சிந்தனையாளர்கள் ஒரே மாதிரி சிந்திப்பது இயற்கையானது தான் ஆனால் இவர்கள் வெறும் சிந்தனையாளர்கள் மட்டுமல்ல இந்திய துணைக்கண்டத்தில் நடக்கின்ற கொடுமைகளை புரட்டிப்போட எண்ணியவர்கள்! இந்த மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைவிட அவர்களின் சுயமரியாதைக்கும் ,பிறவி இழிவு ஒழிப்புக்கும் திட்டம் வகுத்து சமூக மருத்துவர்களாக இருந்து உழைத்தவர்கள்!
அம்பேத்கர் உலகின் பல்வேறு நாடுகளுக்கு சென்று கல்விகற்று அங்கு வாழும் மக்களின் வாழ்க்கை முறை அனுபவங்களை நேரில் கண்டறிந்தவர்.
பெரியார் அவர்களோ தனது வாழ்க்கை என்ற அனுபவ உறைக்கல்லிலே உரசிப்பார்த்து கருத்துரை வழங்கி உழைத்தவர்.
1925 -ல் பெரியார் தலைமையில் நடைபெற்ற வைக்கம் போராட்டம் தான் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் 1927 -ல் மகாத் குளத்தில் நீர் அருந்துகின்றபோராட்டத்திற்கு தூண்டுகோளாக இருந்தது என்று அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு எழுதிய தனஞ்செய் கீர் குறிப்பிடுகிறார்.
இந்து மதத்தில் சாதி கட்டமைப்பின் மூலம் நிகழ்த்தப்படும் சாதி வெறிக் கொடுமைகளிலிருந்து மக்களை மீட்க இக்கொடுமையான மதம் ஒழிக்கபடவேண்டும் என்பதில் தீவிரம் காட்டினார்கள்!
அம்பேத்கர் அவர்கள் ஒருபடி மேலே சென்று 1935-ல் நான் இந்துவாகப்பிறந்து விட்டேன் அது எனது குற்றம் அல்ல, ஆனால் இந்துவாக சாக மாட்டேன் என்று உறுதி ஏற்றார் .பின் தனது இறுதிகாலத்தில் பவுத்தத்தை தழுவினார்!
1932-ல் தாழ்த்தப்பட்டமக்களுக்கு இரட்டை வாக்குரிமை கோரிய அண்ணலின் வேண்டுகோளை ஏற்று வழங்க முன்வந்த நிலையில் அதை எதிர்த்து பூனா ஏர்வாடா சிறையில் இருந்த காந்தியார் இது இந்துக்களை இரண்டாகப்பிரிக்கும் செயல் நினைத்து உண்ணாநிலையை மேற்கொண்டார்.
காந்தியின் பிடிவாதத்தால் உடல் நிலை மோசமானது இந்தியாவில் உள்ள தலைவர்கள் பலரும் கோரிக்கையை திரும்ப பெறவேண்டும் என்று அம்பேத்கருக்கு கடும் நெருக்கடி கொடுத்த நிலையில் ,தந்தை பெரியார் அய்ரோப்பாவில் சுற்றுப்பயணத்தில் இருந்தார் அம்பேத்கர் நெருக்கடியில் உள்ளார் என்பதை அறிந்து அவருக்கு ஆதரவாக தந்தி கொடுத்தார்
ஒரு காந்தியின் உயிர் முக்கியமல்ல கோடிக்கணக்காண ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை மிக முக்கியம் அந்த உரிமையை நிலைநாட்டுங்கள் என்றார்
காந்தியின் உடல் நிலையால் கோரிக்கை திரும்பப் பெறவேணடியதாயிற்று அதன் விளைவால் உருவானதுதான் 24/09/1932-ல் பூனா ஒப்பந்தம்
1936-ல் அம்பேத்கர் அவர்களால் எழுதப்பட்ட "சாதியை ஒழிக்கவழி" என்ற நூலை தனது அச்சகம் சார்பாக முதல்முறையாக வெளியிட்டார் இந்த காலகட்டத்தில்தான் பரவலாக தமிழ்நாட்டுக்கு அம்பேத்கர் அறியப்படுகிறார். 1940-ல் சனவரி6ஆம் தேதி பெரியாரும் அவர்தம் குழுவினரும் மும்பை வந்து சேருகிறார்கள் அம்பேத்கர் தனது இல்லத்திற்கு அழைத்து விருந்தோம்பல் செய்தார். 8ஆம் தேதி ஜனாப் ஜின்னா அவர்களை அவரது இல்லத்தில் டாக்டர் அம்பேத்கரும் உடனிருக்கப் பெரியார் சந்தித்துபேசினார்.
பெரியார் தமது இந்தி எதிர்ப்பு பற்றி விளக்கவே அவர்களிருவரும் ஆரவாரத்துடன் ஆதரவு தெரிவித்தனர் இந்துக்களின் கொடுமையிருந்து முஸ்லிம் ,தாழ்த்தப்பட்ட,திராவிடமக்களை எப்படி மீட்பது குறித்துகருத்துப்பரிமாற்றம் செய்து கொண்டனர்.
பெரியார் அவர்களுடன் இயக்கத்தில் பணியாற்றிய சிலர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருந்த நிலையில் ,அம்பேத்கர் சென்னை வந்தபோது பெரியார் மீது புகார் கடிதம் கொடுத்தார்கள் இதை அவர் கண்டித்து ,உங்களுக்கு பெரியாரைப்போல் ஒரு நல்ல தலைவர் கிடைக்க மாட்டார் என்று அறிவுரை கூறிவிட்டு வந்தார்.
அந்த அளவுக்கு கொள்கை ஒற்றுமை உள்ளவர்களாக வாழ்ந்தார்கள் . அண்ணல் மறைந்த போது அவரின் மறைவில் மர்மம் இருப்பதாகவும் இது இயற்கை முடிவாக இருக்க முடியாது என்று பெருந்துயரத்துடன் அறிக்கை வெளியிட்டார்.