26 May 2022 10:23 pmFeatured
பிரதமர் மோடி 31,500 கோடி ரூபாயில் 11 திட்டங்களை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி பிரதமர் மோடி, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி, ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் மேடையில் இடம்பெற்றனர்.
நிகழ்வில் வரவேற்புரை ஆற்றிய ஒன்றிய அமைச்சர் எல்.முருகன்,'' வரலாற்றில் தமிழகத்தினுடைய உள்கட்டமைப்புக்கு இன்று முக்கியமான நாள். 31 ஆயிரம் கோடி ரூபாய்க்கான நலத்திட்டங்களைத் துவக்கி வைக்கும் பிரதமர் மோடிக்கு நன்றி. சாமானிய மக்களுடைய ஆளுநர் ஆர்.என்.ரவியை வரவேற்கிறேன். ஆற்றல்மிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினையும் வரவேற்கிறேன். விழாவில் கலந்து கொண்டுள்ள தமிழக அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் எனது வரவேற்பை தெரிவித்துக் கொள்கிறேன்''என்றார்.
அதைத்தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்
திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் பிரதமர் மோடி முதல்முறையாக பங்கேற்றுள்ள அரசு நிகழ்ச்சி இது. மற்ற மாநிலங்களின் வளர்ச்சியை விட தமிழ்நாட்டின் வளர்ச்சி தனித்துவமிக்கது. கல்வி, பொருளாதாரம், மருத்துவம் உட்பட பல்வேறு துறைகளிலும் தமிழ்நாடு சிறப்பாக விளங்குகிறது. சமூகநிதி, சமத்துவம், பெண்கள் முன்னேற்றம் ஆகிய அம்சங்களை உள்ளடக்கியது தமிழ்நாடு. அனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சியையே திராவிட மாடல் என்று கூறுகிறோம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
ஒன்றிய அரசும், மாநில அரசும் இணைந்து செயல்படுத்தும் திட்டங்களில் மாநில அரசின் பங்கும் மகத்தானது. எடுத்து காட்டாக நெடுஞ்சாலை துறையில் நமது நாட்டிலேயே அதிக மூலதன செலவை மேற்கொள்ள கூடிய மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு தொடர்ந்து விளங்கி வருகிறது.
தேசிய நெடுஞ்சாலைகளுக்காக தமிழ்நாட்டில் தற்போது ரூ.44,762 கோடியில் திட்டங்கள் செயல்படுத்தப்படும் நிலையில், மாநில நெடுஞ்சாலைதுறைக்கு இந்த ஆண்டில் மட்டும் தமிழ்நாடு அரசு ரூ.18,218.91 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. சாலை கட்டமைப்பில் ஒன்றிய அரசுடன் இணைந்து பணியாற்ற தமிழ்நாடு அரசு முனைப்புடன் உள்ளது. அதிக அளவிலான திட்டங்களை தமிழ்நாட்டில் செயல்படுத்தவேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
ஒன்றிய, மாநில அரசுகள் இணைந்து செயற்படுத்தும் திட்டங்களில் ஆரம்ப காலத்தில் அதிக தொகையை ஒன்றிய அரசு ஒதுக்கீடு செய்தாலும் காலப்போக்கில் ஒன்றிய அரசின் நிதி பங்களிப்பை கொள்வதால், மாநில நிதிச்சுமை அதிகரிக்கிறது. இதனால் ஒன்றிய, மாநில அரசுகள் இணைந்து செயற்படுத்தும் திட்டங்களில் தொடக்கத்தில் குறிப்பிடக்கூடிய ஒன்றிய அரசின் பங்கானது திட்டம் முடியும் வரை தொடரவேண்டும் என முதல்வர் கேட்டுக்கொண்டார்.
தமிழ்நாட்டின் கடலோர மீனவ சமுதாய மக்களின் முக்கிய பிரச்சனைக்கு தீர்வு காண கூடிய வகையில் 'கட்சத்தீவை' மீட்டெடுத்து, தமிழக மீனவ மக்களின் மீன்பிடி பகுதிகளில் அவர்களின் உரிமையை நிலைநாட்ட உரிய நடவடிக்கை இதுவே சரியான தருணம் என முதல்வர் கூறினார்.
ஒன்றிய அரசின் வருவாயில் தமிழ்நாட்டுக்கு 1.21% மட்டும்; இந்தியாவின் மொத்த உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்கு 6% ஆகும். தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி. நிலுவைத்தொகை ரூ.14,006 கோடியை விரைந்து வழங்க வேண்டும் என முதல்வர் வலியுறுத்தினார். பல்வேறு மாநிலங்களின் வருவாய் சீரடையாத நிலையில் ஜி.எஸ்.டி. இழப்பீடு காலத்தை ஜூன் 2022 பின்னரும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்க கோரினார்.
தமிழ் மொழியை ஹிந்திக்கு இணையான அலுவல் மொழியாகவும், உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் என முதல்வர் வலியுறுத்தினார். மேலும் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ள தேசிய தகுதி நீட் நுழைவு தேர்வை தமிழ்நாடு அரசு தொடர்ந்து எதிர்த்து வருகிறது. இது குறித்து சட்டம் நிறைவேற்றப்பட்டு மாண்புமிகு ஆளுநர் ஒப்புதலுடன் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதியை பிரதமர் விரைந்து வழங்குமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். நவீன தமிழ்நாட்டின் தந்தை கலைஞர் சொன்னதுபோல 'உறவுக்கு கைகொடுப்போம்; உரிமைக்கு குரல் கொடுப்போம்’ என முதல்வர் உரையில் கூறினார்.