08 Dec 2021 9:20 amFeatured
முனைவர் வதிலை பிரதாபன்
தலைவர், மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்றம்
வாழ்வின் உயிர் அன்பில்தான் இருக்கிறது. மனிதன் - உயர்வு, தாழ்வு, சிறியர், பெரியர் என்று தம்மைத்தாமே போற்றிக் கொள்வதெல்லாம் அன்பில்லாதவர்க்கு வசப்படுவதில்லை.
பொருளில்லார்க்கு இவ்வுலகு இல்லை. அன்பில்லார்க்கோ இவ்வுலகில் வாழத் தகுதியுமில்லை. வாழ்வு என்பது மண்ணில் நிலைத்திருப்பது அல்ல. மனங்களில் நிலைத்திருப்பதே!
வாழ்ந்த காலத்தில் நாம் செய்த செயல்களே நம்மை நமது மறைவிற்குப் பிறகும் வாழவைக்கும் அருமருந்து.
காசு, பணம், பொருள், இன்பம் எல்லாம் நிலையற்றவை. மனதில் கனிந்த அன்போடு தம்மை அடையாளப் படுத்துபவர்களை காலம் மறப்பதில்லை. தம்மோடு வாழும் இணையர்; பிள்ளைகள்; உறவினர்; நண்பர்கள்; ஊரார்; உலகோர் எனப் பரந்து விரிந்து தம்மைத்தாமே உயிர்ப்போடு வைத்திருப்பது நமது செயல்களே!
அப்படி தமது அடையாளங்களை சுவடுகளாக்கி விட்டுச்செல்பவர்கள் அடுத்தடுத்த சந்ததிகளாலும் அவர் சார்ந்த நண்பர்கள் குழுமத்தாலும் போற்றத்தக்க மனிதர்களாக மண்ணில் என்றென்றும் நிலைத்து விடுவதுண்டு.
அப்படிப்பட்ட மனிதர்களின் வரிசையில் பலரை நாம் சொல்ல முடியும். அந்தவகையில் மும்பை மண்ணில் தனக்கென ஒரு தனியிடத்தைப் பிடித்து மும்பை வாழ்த் தமிழர்களின் நெஞ்சங்களில் நிலையான இடத்தைப் பெற்று மறைந்து மூன்று ஆண்டுகள் சென்றாலும் நிகழ்வுகள் யாவும் நினைவுகளாகும் வகையில் தமிழ் இலக்கிய உலகில் தம்மோடு பழகிய அனைவரது உள்ளங்களிலும் நீங்காப் புகழுடைத்த அன்பிற்குரியோர் தான் அண்ணன் பேராசிரியர் சமீரா மீரான் அவர்கள்.
கனத்த உடம்பு; கணீர் குரல்; கனிவான அன்பு; கற்றோரையும் கல்லாரையும் ஒருசேரக் கவர்ந்திழுக்கும் கருணை என தனிப்பெருங் குணத்தோராய் வலம் வந்த அண்ணன் சமீரா அவர்கள் இயக்கம் சார்ந்தும் இலக்கியம் சார்ந்தும் ஆற்றிய பணிகள் நினைந்து நினைந்து போற்றுதலுக்குரியன.
மும்பையின் அனைத்து அமைப்புகளில் நடக்கும் நிகழ்வுகளில் கலந்து கொள்வதும்; புதிய அமைப்புகளை வளா்தெடுக்கும் பொதுமைப் பண்பும்; புதியவர்களை ஊக்கப்படு்த்தி மொழியுணர்வு கொள்ளவைப்பதும்; வீட்டிற்கு அழைத்து விருந்தளித்து உறவுகளாக்கி மகிழ்வதோடு அவர்களது அறியாமையைக் களைந்து ஆற்றலாளர்களாக அடையாளப் படுத்துவதும் எல்லோருக்கும் இயல்பாக அமைந்து விடுவதில்லை.
தம்மோடு மறைந்து விடும் நினைவுகள் நீர்குமிழிகள் போன்று நிலையற்று உடைந்து போகும். பிறரது மனங்களில் நிலையாக நிலைத்து நிற்பது உண்மையான அன்பிற்குரியோரால் மட்டுமே முடியும். பணிபுரியும் இடத்தில் மாணவச் செல்வங்களுக்கு நல்லாலோசனை வழங்குவதும், படைப்பாளர்களை ஊக்கப்படுத்தி எழுதவைத்துத் தொகுத்து நூல்களாக்கி மும்பைத் தமிழிலக்கிய உலகிற்கு படைப்புகளை வழங்கியதோடு அவர்களது சிந்தனைத்திறனிற்கு உரமூட்டுவதும் எவருக்கும் எளிதாக வந்துவிடும் இயல்பல்ல.
எந்த எதிர்பார்ப்புமின்றி தமது செயல்களில் முனைப்பும் ஈடுபாடும் வைத்து, ஆற்றுகின்ற பணிகளில் வெற்றியை நோக்கிப் பயணித்து பலரது மனங்களில் மறக்கவியலா அன்பூற்றாய், இலக்கியச் சோலைக்கு உரமூட்டிய அருமருந்தாய், கொள்கை உறவுகளாக அரவணைத்த தாயுளமாய் வாழ்ந்து மறைந்த அண்ணனுக்கு மூன்றாவது நினைவு நாளாம் இன்று.
தம்பி! தம்பி!! என அழைத்த குரலை நினைவு கூர்ந்து கண்ணீர் வடிக்கும் தம்பிகளில் நானுமுண்டு.
நினைவுகளுக்கும் உயிருண்டு. அன்பென்ற உரத்திற்கு அளவற்ற ஆளுமை எப்போதுமே உண்டு.
காய்ந்து கிடந்த உள்ளங்களுக்குள் பாலைவனத்து நீரூற்றாய் அன்பைப் பொழிந்த அண்ணனை நினைவு கூர்ந்து அவரது பாதையில் பயணிக்கும் அனைவரோடும் தோள் கொடுத்து அன்னைத் தமிழுக்கு அழகு சேர்ப்போமெனக் கேட்டு நிறைவு செய்கிறேன்.
அண்ணன் சமீரா அவர்களது புகழ் என்றென்றும் ஓங்கட்டும்.