23 Mar 2024 9:52 amFeatured
பேராசிரியர் சமீரா மீரான் எழுதிய மூன்றாம் தலைமுறைக்கு முதல் தலைமுறையின் மடல்
2- மகிழ்வித்து மகிழ்வதுதான் வாழ்க்கை
இப்படித்தான் வாழவேண்டும் என்று நமக்கு வழிகாட்ட நம் முன்னோர் பலவற்றைச் சொல்லி வைத்திருக்கிறார்கள்.
சொல்வதை விடச் செய்து காட்டுவது சிறப்பு எனக்கருதி,
எப்படி வாழ வேண்டும் எனப் பலர் வாழ்ந்தும் காட்டியிருக்கிறார்கள்.
உனக்காக நீ வாழ்வதும் வாழ்க்கைதான், ஆனால், உன் உறவுகளுக்காகவும் நீ வாழ்வது நல்வாழ்க்கை!
உலகுக்காக நீ வாழ்ந்தால், அது புகழ் வாழ்க்கை!.
அந்த வாழ்க்கைதான் வரலாறு ஆகும். உன் அடுத்த தலைமுறைக்கு அந்த வரலாறு பாடமாக வழிகாட்டும்
பிறக்கும்போதே உனக்காகவென்று எவரும் பிறப்பதில்லை. ஆனால், உனக்காகவென்று ஒருவரை நீ மாற்ற முடியும்.
உயிரும் வாழ்வும் உனக்காகவென்று வாழ விரும்புவோரை, உன் உறவாய்ப் பெறும் விதமாய் உன் வாழ்வு அமைய வேண்டும்.
'நான் விரும்புவது மகிழ்ச்சி மட்டுமே' என்று, சிலர் வாழத் துடிக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு மகிழ்ச்சி கிடைப்பதில்லை. ஏன்?
மகிழ்ச்சி கிடைப்பதற்கு அவர்கள் என்ன செய்யவேண்டும்.?
முதலில் 'நான்' என்ற சொல்லைத் தவிர்க்கவேண்டும்.
பலருடைய மகிழ்ச்சியின்மைக்கு 'நான்' என்ற அகம்பாவமும்
தன்னலமும்தான் காரணமாக இருக்கின்றன.
பிறகு, தனிப்பட்ட விருப்பங்களையும் அவர்கள் சுருக்க வேண்டும். இந்த உலகில் தன்னலத்தால் அழிந்து போனவர்கள்தாம் ஏராளம். நான் மட்டுமே மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என விரும்புவது தன்னலம். மற்றவர்களும் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என நினைப்பது பொதுநலம்.
'நான் விரும்புவது மகிழ்ச்சி மட்டுமே என்பதில் 'நான்' சொல்லைத் தவிர்த்துவிட்டு, தன்னல விருப்பத்தையும் நீக்கிவிட்டால் மகிழ்ச்சி மட்டுமே மிச்சமிருக்கும்.
இதில் வேடிக்கை என்ன தெரியுமா?
உண்மையான மகிழ்ச்சி எது என்று உணராமல், பலர் மகிழ்ச்சி வெளியே தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
நீயும் அப்படி இருந்து விடாதே!
ஒவ்வொரு நாளும் நீ பள்ளியிலிருந்து வந்ததும் உன் தாயை இறுக்கிக் கட்டிப்பிடித்து அணைக்கும்போதும், அவள் உன்னை உச்சி முகர்ந்து, உன் கன்னத்தில் முத்தமிடும்போதும், நீயும் உன் தாயும் ஒரே நேரத்தில் அடையும் மகிழ்ச்சியைவிடவா பெருமகிழ்ச்சி இன்னொன்று கிடைத்துவிடும்?
அலுவலக வேலையாக வெளியூர் சென்றிருக்கும் உன் தந்தைக்கு உன் நினைவு வரும் அதே தருணத்தில் உன் தொலைபேசிஅழைப்பும் வத்தால் ஏற்படும் மகிழ்ச்சிக்கு இணையாக இன்னொரு மகழ்ச்சி இருக்க முடியுமா ?
முதுமையும் முதுமைக்காலப் பிணியும் உன் பாட்டியை வருந்தும் போது, உன் சிறு மலர்க்கரங்களால் தொட்டு, உடல்நலம் உசாவும்போது கிடைக்கும் மகிழ்ச்சி எப்படி இருக்குமென்று இப்போது உனக்குப் புரியாது. அது எனக்குத்தான் தெரியும்.
இந்தப் பொருள் என்னிடம் இல்லையே என்று ஒரு பொருளுக்காக நீ ஏங்கிக் கொண்டிக்கும் போது அந்தப் பொருளையே தந்தை உனக்குப் பரிசாகக் கொண்டு வந்து தரும்போது, உனக்கு ஏற்படும் மகிழ்ச்சி இருக்கிறதே… பார்த்தாயா, இதைப் படிக்குப்போதே விழிகள் மகிழ்ந்து விரிகின்றன.
எந்த வயதிலும் இது போன்ற சிறுசிறு மகிழ்ச்சிகளில் விருப்பம் இருக்கும். இருக்க வேண்டும்.
என் முத்து மகளின் மூத்த மகளே!
மழைக்காலத்தில் மழையில் நனைவதும், நடப்பதும், ஓடுவதும்
விளையாடுவதும், ஆடுவதும், பாடுவதும் எல்லா வயதினருக்கும். மகிழ்ச்சிதான். ஆனால் பெருமழையால் மக்கள் பேரிடருக்கு உள்ளாகும் போது பிறருக்கு உதவுவது பெருமகிழ்ச்சி தருமல்லவா?.
சென்னை மாநகரும் அதைச் சுற்றியுள்ள ஊர்களும் பெருமழையாலும் வெள்ளப்பெருக்காலும் மூழ்கிக் கிடந்தபோது அப்பேரிடரில் பலர் உடைமைகளை இழந்து உண்ண உணவும் உடுக்க உடையும்கூட இல்லாமல் தவித்த போது, அவர்களுக்கு எங்கிருந்தெல்லாமோ ஓடி வந்து பலர் உதவிக்கரம் நீட்டினார்கள்.
அந்தப் பெருவெள்ள பாதிப்பிலிருந்து நாமும் தப்பவில்லை. உனக்கு நினைவிருக்கிறதா?
அப்போது நானும் உன் பாட்டியும் சென்னை வந்திருந்தோம்.
உன் தாய், தந்தை, தங்கை ஆகியோருடன் உன் சென்னை பாட்டியின் வீட்டில் தங்கியிருந்தோம். அன்று இரவு திடீரென்று பெருவெள்ளம் ஒன்று அந்தப் பகுதியில் பெருக்கெடுத்து வந்தது. நம் வீடு உட்பட அந்தப் பகுதியின் எல்லா வீடுகளும் பாதிக்கு மேல் மூழ்கி விட்டன. மக்கள் அனைவரும் தவித்தார்கள். நாமும் இரண்டு நாட்களாகப் பரிதவித்தோம். தமிழக அரசு செயலிழந்து முடங்கிக் கிடந்த அந்த நேரத்தில், அந்தப் பகுதியில் மீன்பிடி தொழில் செய்யும் சில இளைஞர்கள் தங்கள் படகுகளைக் கொண்டு வந்து நம்மைக் காப்பாற்றினார்கள். மறக்க முடியுமா அந்த மனித நேய மாமணிகளை!
அந்தப் பேரிடர் காலத்தில், உதவி பெற்றவர்களைவிட உதவியவர்கள் அதிக மகிழ்ச்சியடைந்தார்கள். ஆமாம், உரிய நேரத்தில் உதவி பெறுவது மகிழ்ச்சிதான். அதைவிட உதவி செய்வதில் கிடைப்பதோ பெரும் மகிழ்ச்சி.
அதெல்லாம் இருக்கட்டும் தாத்தா, உனக்கு எது மகிழ்ச்சி?" என்று என்னைக் கேட்க வேண்டும் என்று உனக்கு இப்போது தோன்றுகிறது. இல்லையா?
அதையும் சொல்லிவிடுகிறேன் கேள்!
பிறருக்கு உதவுவது எனக்கும் மகிழ்ச்சிதான்.
உறவுகளின் மகிழ்ச்சியும் எனக்கு மகிழ்ச்சிதான்.
உன் தாயும், உன் தாயின் தாயும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பதும் எனக்கு மகிழ்ச்சிதான். உன் தந்தையையும், உன் தாய் தந்தையின் கவனிப்பில் உன் தந்தையின் தாயும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பதும் எனக்கு மகிழ்ச்சிதான் உன் தாய்மாமன்கள் உன்னிடம் காட்டும் தாய்மையும் எனக்கு மகிழ்ச்சிதான். எல்லாவற்றிற்கும் மேலாக தீயும் உன் தங்கையும் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் என்பதே எனக்குப் பெரும் மகிழ்ச்சிதான்!
உறவுகளையும் நண்பர்களையும் மட்டுமல்ல, மற்றவர்களையும் மகிழ்வித்து மகிழ்வதுதான் வாழ்க்கை!
பிறருக்கு உதவி செய்வதில்தான் உண்மையான மகிழ்ச்சி இருக்கிறது என்ற உண்மையை எப்போதும் நினைவில் கொள்.
என் மணிமகளின் மலர்மகளே!
பெயருக்கும் புகழுக்கும் போலிப் பெருமைக்கும் ஆசைப்படாமல் நேர்மையையும் நாணயத்தையும் எப்போதும் உறுதியாகக் கடைப்பிடித்து வாழ்வதுதான் உண்மையான மகிழ்ச்சி தரும் வாழ்க்கை.
விருப்பு வெறுப்புகளை விட்டுவிட்டு எல்லோரிடமும் அன்பு காட்டி வாழ்வது மகிழ்ச்சியான வாழ்வுக்கு வழி வகுக்கும்.
நல்ல எண்ணங்கள்தாம் நம் மனத்தில் பேராற்றலை வளர்த்தெடுக்கும். ஒற்றுமையையும், ஒன்றாக உழைக்கும் மனப்பான்மையையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
உழைப்பால் உயர்ந்தோர் உலகில் பலருண்டு. அவர்களால்தான் உழைப்பே உயர்வு பெற்றது!.
உழைப்பு மட்டுமா வெற்றியைத் தந்தது அவர்களுக்கு.
அவர்களின் உழைப்புக்கும் வெற்றிக்கும் துணையாய் நின்றவை எவை என்று உனக்குத் தெரியுமா?
அவர்களின் தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும்தான்.
இன்னொருவரால் செய்ய முடிந்ததை உன்னாலும் செய்ய முடியும் என்று நீ நினைத்தால், அது நம்பிக்கை. யாராலும் செய்ய முடியாததை உன்னால் செய்ய முடியும் என்று நீ நினைப்பதுதான் தன்னம்பிக்கை!
தன்னம்பிக்கை வளர்க்கும் தரமான சிந்தனைகளைத் தரணியில் பலர் சொல்லி வைத்திருக்கிறார்கள். வளரும் காலத்தில் அவற்றை நீ கேட்டு அறியலாம்.
நம்தாய்மொழியாம் தமிழிலும் அறிஞர் பலர் எழுதிவைத்திருக்கிறார்கள். அவற்றைப் படிக்கும் வாய்ப்பு உனக்கும் கிடைக்கும். தன்னம்பிக்கைப் பற்றி நினைக்கும் போதெல்லாம், நம் தமிழர்களின் தாத்தனை என்னால் நினைக்காமல் இருக்க முடியவில்லை!
அவன் சொன்னதுபோல் தன்னம்பிக்கைச் செய்திகளை எவரும் இதுவரை சொன்னதில்லை! அப்படி என்ன பெரிதாக அவன் சொல்லிவிட்டான் என்று கேட்கிறாயா? அவன் சொன்னான், 'தெய்வத்தால் முடியாததைக் கூட, உன் முயற்சி செய்து முடிக்குமென்று!’
அவன்தான் சொன்னான், விதி என்று ஒன்று இருக்குமானால் அதையும் உன் முயற்சியே வெற்றி கொள்ளும் என்று. அவன் வாக்கு நம் வாழ்வுக்கு வழிகாட்டி வாழ்வளிக்கும் வல்லமை உடையது. அந்த வல்லவனின் பெயர்தான் வள்ளுவன்; திருவள்ளுவன்.
அவன் சொன்ன வாழ்வியல் செய்திகளை வள்ளுவம் என்கிறோம். குறள் என்னும் செய்யுள் வடிவில் அவன் எழுதி வைத்தான். அதுவே, தமிழர்களின் வாழ்வியல் நூல் திருக்குறள் என்று வழங்கப்படுகிறது.
இறைமறையைப் படி: அதன்படி நட என்று உனக்குச் சொல்ல பலர் இருக்கிறார்கள்.
’தமிழ்மறையையும் படி, படித்தபடி நடக்கவும் முயற்சி செய்' என்று
உன் தாத்தா உனக்குச் சொல்கிறேன்.
இன்னும் சொல்வேன்!
உன் அன்புத் தாத்தா