08 Dec 2019 2:42 pmEditorial
வே.சதானந்தன்
முதன்மை ஆசிரியர், தென்னரசு
இலக்கிய அணித் தலைவர்,மும்பை புறநகர் திமுக
செயலாளர், கல்யாண் தமிழ் நற்பணி மன்றம்
நெல்லை ஏர்வாடியில் உதித்த முத்து, மும்பை மக்களின் மனங்களில் நிறைந்தவர், மும்பை புறநகர் திமுக துணை செயலாளர்,
தமிழ் எழுத்தாளர் மன்ற தலைவர், தென்னரசு மாத இதழ் நிறுவன ஆசிரியர், சிறந்த பேச்சாளர், பட்டிமன்ற நடுவர், பகுத்தறிவும் குறள் நெறியையும் போற்றியவர், மும்பையில் எண்ணிலா பேச்சாளர்களை, எழுத்தாளர்களை ஊக்குவித்து உருவாக்கி அறிமுகபடுத்தியவர் , மனிதநேய பண்பாளர்,
தலைவர் கலைஞரின் அன்பை பெற்றவர்,ஆசிரியர் வீரமணி, பேராசிரியர் சுப.வீர பாண்டியன் ஆகியோரின் நண்பர், பேராசிரியர் சமீரா மீரான் அவர்களின் முதலாமாண்டு நினைவு நாள்.
இரண்டு முதுகலை பட்டங்களை பெற்றவர், சொந்த தொழிலை துறந்து ஆசிரியர் பணியை ஏற்றவர், மும்பையில் பல தமிழ் பள்ளிகள் தொடங்க காரணமாக இருந்தவர். பலரின் ஏறுமுகத்திற்கு ஏணியாக இருந்தவர்.
மும்பையில் தமிழ் சங்கங்கள் மற்றும் இலக்கிய அமைப்புகள் நடத்தும் விழாக்களில் இவர் கலந்துகொள்ளாத நிகழ்வுகள் இல்லை எனலாம்.
மும்பை தமிழர்களின் எழுத்துக்களை படைப்புகளை உலகறிய செய்யவேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தில் மும்பை தென்னரசு மாத இதழை தொடங்கி நடத்தி வந்தவர்.
முதல் அறிமுகம்
நான் கல்யாண் தமிழ் நற்பணி மன்றத்தின் துணைச் செயலாளராக இருந்த காலம் அது. மராத்திய மாநில தமிழ் எழுத்தாளர் மன்றம் பல்வேறு பகுதிகளில் தமிழ் அமைப்புகளுடன் இணைந்து பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழா நடத்தி வருவதாகவும் கல்யாண் பகுதியிலும் நடத்திடவேண்டுமென்று பேராசிரியர் சமீரா மீரான் விரும்புவதாகவும் முனைவர் வதிலை பிரதாபன் அவர்கள் என்னிடம் கூற ஏற்பாடு செயப்பட்டு பாவலர் அறிவுமதி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
அதுவரை பலகாலம் பலரை மேடையேற்றியும் நான் மேடைக்கு பின்னிருந்து இயங்கிய காலம் முதன் முறையாக மும்பையில் மேடையேறினேன் வாழ்த்துரைக்காக.. நிகழ்ச்சிக்கு இரண்டு நாட்களுக்கு முன்தான் பணி புரிந்த இடத்தில் முதலாளியின் மகனுடன் ஏற்பட்ட பிணக்கால் 20 வருட பணியை உதரி விட்டு நின்ற நேரம் என் வீட்டாருக்கோ மன்றத்தின் சக நிர்வாகிகளுக்கோ தெரியாமல் பார்த்துக்கொண்டேன். ஆனால் அதிகம் பரிச்சயம் இல்லாமல் இருந்தாலும் பேராசிரியர் சமீரா மீரான் என்னிடம் நிகழ்வின் போது என்ன தம்பி முகத்தில் மகிழ்வு இல்லாமல் இருப்பது போன்று தோன்றுகிறதே என்ன என்று கேட்க ஏனோ என்னால் அவரிடம் மறைக்க தோன்றவில்லை. முதல் சந்திப்பிலேயை ஒரு நெருக்கத்தை உணர்ந்தேன். ஆறுதல் சொன்னார்.
பின்னர் கல்யாண் கிளை கூட்டங்களில் நன்றியுரையாற்றும் வாய்ப்பினை முனைவர் வதிலை பிரதாபன் அவர்களால் கிடைக்கப்பெற்றேன்.
கல்யாண் பகுதியின் திமுக பிரதிநிதியாக நியமிக்கப்பட்டேன். ஒருநாள் வதிலை அவர்கள் தொடர்புகொண்டு என்னை மும்பை புறநகர் திமுகவின் இலக்கிய அணி துணைச் செயலாளராக நியமிக்கவிருப்பதாகவும் பேராசிரியர் சமீரா மீரான் மற்றும் செயலாளர் அலிசேக் மீரான் ஆகியோரின் விருப்பம் என்று சொல்ல சற்று தடுமாறிதான் போனேன். பின்னாளில் இலக்கிய அணித் தலைவராக நியமிக்கப்பட்டேன்.
தென்னரசுவும் நானும்
தென்னரசு ஆரம்பித்த நேரத்தில் என்னிடம் தம்பி இரண்டு கட்டுரை வந்துள்ளது தட்டச்சு செய்து தரமுடியுமா என்று கேட்க நான் ஒப்புக்கொண்டு செய்து கொடுத்தேன் அதோடு சில வரிகளை மாற்றியிருந்தேன் அதை பார்த்துவிட்டு பிடித்துபோக பிழை திருத்தும் பணியிலும் ஈடுபடுத்தினார்.
முகநூலில் நான் பதிவிட்ட சில நிகழ்வுகளைப் பார்த்து தம்பி கதை சொல்லும் திறமை உங்களிடம் இருக்கிறதே ஏன் நீங்கள் எழுதக்கூடாது என்று கேட்பார். நானும் வழக்கமான சோம்பலோடு சரி என்பேன்.
ஒரு முறை வாஷியில் நடைபெற்ற ஈழத்தமிழர் ஆதரவு உண்ணா விரதத்தில் கலந்துகொண்டபோது பலரும் பலவிதமாக பேச சிலரோ திமுகவை குறிவைத்து பேச நான் பதிலளிக்கும் விதமாக பேசியதை கேட்ட அவர் மாலையில் என்னிடம் தம்பி நீங்கள் பேசியதை கட்டுரையாக எழுதி தாருங்கள் தென்னரசில் போடவேண்டும். வழக்கம் போல தள்ளி போடவேண்டாம் இது செயலாளர் அலிசேக் மீரானின் விருப்பம் என்றார் மறுக்க முடியவில்லை, தட்டச்சு செய்து கொடுத்தேன் எழுத்துக்கூட மாற்றாமல் அப்படியே பிரசுரித்தார்.
இதேப் போன்று என்னை எப்படியாவது எழுத வைக்கவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டாரோ என்னவோ இரண்டு சிறுகதைகளையும் எழுதவைத்து பிரசுரித்தார்.
தென்னரசின் துணை ஆசிரியர்களில் ஒருவராக ஆக்கினார் சில காலத்திற்கு பிறகு தம்பி ஒரு PDF அனுப்பியுள்ளேன் பாருங்கள் என்றார் பார்த்துவிட்டேன் எனக்கூற எப்படியிருக்கு என்றார் எல்லாம் சரியாக இருக்கிறது, எனக்கூற தம்பி எடிட்டோரியல் பக்கம் எப்படி என்றார், பார்க்கவில்லை எனக்கூற அதற்காகத்தான் உங்களுக்கு அனுப்பினேன் என்று கூற பார்த்தேன் அதிர்ந்தேன் என்னை முதன்மை துணை ஆசிரியராக போட்டிருந்தார். என்ன தம்பி என்றார் எதுக்குண்ணே என்றவனுக்கு சரிதான் தம்பி இனி இப்படிதான் என்றார்.
ஒரு கிராமத்து அத்தியாத்தை ஆட்கொண்டு உயர்த்தியவர். எனக்கே என்னை புரியவைத்தவர், ஊக்குவித்து உயர்த்தியவர். சோர்ந்திருந்த போதெல்லாம் புத்துணர்வு ஊட்டி, தன்னம்பிக்கை ஊட்டியவர். அவர் கற்றுத்தந்த பாடம் தென்னரசை நடத்த வைத்துள்ளது அவரது புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும் முறையில் எனது பணிகள் தொடரும்
என்றென்றும் அன்புடன்!