04 Jul 2022 12:13 amFeatured
காரைக்காலில் வயிற்றுப்போக்கும் காலரா தொற்று பரவல் எதிரொலியாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை விடப்பட்டன.
புதுவை மாநிலம் காரைக்கால் பிராந்தியத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வாந்தி மற்றும் வயிற்றுப்போக்குடன் அரசு ஆஸ்பத்திரியில் அதிகளவு நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதுவரை வயிற்றுப்போக்கால் 700-க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சைக்கு அனுமதிக்கபட்டனர். அவர்களில் 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு காலரா தொற்று இருப்பதும் உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று முதல் காரைக்கால் மாவட்டத்தில் பொது சுகாதார அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது.
இந்த நிலையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி உத்தரவின் பேரில் பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியின் சுகாதாரக்குழுவினருடன் சென்று ஆய்வு நடத்தினார். அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுபவர்கள் குறித்து நேரில் சென்று விசாரித்தார். போக்குவரத்துத்துறை அமைச்சர் சந்திர பிரியங்காவும் இந்த ஆய்வில் கலந்து கொண்டார். அதைத்தொடர்ந்து அங்கு அமைச்சர்கள் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இதில் சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமுலு, மாவட்ட கலெக்டர் முகமது மன்சூர் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
144 தடை உத்தரவு
இந்த நிலையில் காரைக்காலில் இன்று முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மாவட்ட கலெக்டர் முகமது மன்சூர் பிறப்பித்துள்ளார்.அந்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
ஓட்டல்கள், தங்கும் விடுதிகளில் கொதிக்க வைத்த குடிநீர் அல்லது சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை மட்டுமே கொடுக்க வேண்டும். குடிநீர் தொட்டிகளை குளோரின் பவுடர் (1 லிட்டர் தண்ணீருக்கு 0.5 மில்லி கிராம் என்ற அளவில்) கலந்து சுத்தம் செய்ய வேண்டும். கைகளை கழுவும் வசதி ஏற்பாடு செய்ய வேண்டும். சாப்பிடும் முன்பாக கைகளை கழுவ ஏற்பாடு செய்ய வேண்டும்.
கல்வி நிறுவனங்கள், விடுதிகள், திருமண நிலையங்கள், மருத்துவமனைகள், தனியார் கிளினிக்குகள், பேக்கரிகளில் கட்டாயம் கொதிக்க வைத்த குடிநீர் அல்லது சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வழங்க வேண்டும். அங்குள்ள தண்ணீர் தொட்டிகளை உடனடியாக குளோரின் பவுடன் கலந்து சுத்தம் செய்ய வேண்டும்.
போர்வெல் ஆபரேட்டர்கள் (பாசிக், நிலத்தடி நீர் ஆணையத்தின் சான்றளிக்கப்பட்ட ஆபரேட்டர்கள்) தண்ணீர் வினியோகம் செய்யும் போது அதனை குளோரின் பவுடர் கலந்து சுத்தம் செய்து வினியோகிக்க வேண்டும்.
கட்டுமான தொழில் நடைபெறும் இடங்களில் தொழிலாளர்களுக்கு கொதிக்க வைத்த தண்ணீர் அல்லது சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வழங்க வேண்டும். சோப்புடன் கை கழுவும் வசதியும் ஏற்படுத்தி தர வேண்டும். உள்ளாட்சி அமைப்புகள், வருவாய்த்துறை அதிகாரிகள் இந்த உத்தரவுகளை அமல்படுத்த வேண்டும். ஓட்டல்கள், உணவகங்கள், திருமண மண்டபங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளில் உடனடியாக ஆய்வு செய்து அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்.
அனைவரும் கண்டிப்பாக இந்த உத்தரவை கடைபிடிக்க வேண்டும். இந்த உத்தரவுகளை மீறுபவர்கள் மீது இந்திய தண்டனை சட்டத்தின் படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த 144 தடை உத்தரவு பொது இடங்களில் பொதுமக்கள் கூடுவதை தடுக்கவோ, தடை செய்யவோ இல்லை. பொதுமக்கள் வழக்கம்போல் அனைத்த இடங்களிலும் பாதுகாப்புடன் சென்று வரலாம். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் காரைக்கால் மாவட்ட கலெக்டர் முகமது மன்சூர் நிருபர்களிடம் கூறுகையில், 'காலரா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக, காரைக்கால் மாவட்டத்தில் நாளை (திங்கட்கிழமை) முதல் 6-ந் தேதி (புதன்கிழமை) வரை 3 நாட்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. 3 நாட்களும் பள்ளி, கல்லூரிகளில் உள்ள குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்து பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும் கிருமிநாசினி மருந்து தெளிக்கப்படும். அதே வேளையில் விடுமுறை நாட்களில் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு ஏற்கனவே அறிவித்தப்படி, அதே தேதிகளில் தேர்வுகள் நடக்கும்' என்றார்.
காலரா தொற்று பரவலால், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். அவர்கள் அச்சப்பட வேண்டாம் எனவும், உரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.