25 Apr 2020 9:24 amFeatured
கவிஞர் இரஜகை நிலவனின் குறுந்தொடர் கதை
அத்தியாயம்-3
”குவைத்தில் போய் ஹனிமூனா?” நம்மூரிலே எத்தனை பிக்னிக் ஸ்பாட் டூரிசம் சென்டர் இருக்கிறது அதையெல்லாம் விட்டு விட்டு அந்தப் பாலை வனக்காட்டிலே அடிக்கிற வெயில்லே போய் யாரவது ஹனிமூன் வெச்சுக்குவாங்களா?” சுவேதா தன் கணவனிடம் நூறாவது முறையாக சொல்லிக்கொண்டிருந்தாள்.
”வேற வழியில்லை சுவேதா ஊட்டி, கொடைக்கானல் பெங்களூர் போகலாம்தான். கம்பெனியிலே விடுமுறை தர மாட்டார்கள். ஏற்கனவே திருமண விடுமுறை எடுத்து வந்து உன்னைப் பெண் பார்த்து உடனடியாக கல்யாண ஏற்பாடெல்லாம் செய்து முடிப்பதற்குள்ளே ஒரு மாதம் முடிந்து போய்விட்டது.
இனி விடுமுறையை நீடித்தால் உன் ஊரிலேயே இருந்துகொள் நாங்கள் வேறு ஆள் பார்த்துக் கொள்கிறோம் என்று அனுப்பி விடுவார்கள். அப்புறம் சோறு கஞ்சிக்கு லாட்டரி அடிக்க வேண்டியதுதான்.”
”அது சரி வேலைக்கு உடனடியாக திரும்பிச் செல்ல வேண்டும் என்று சொல்லுங்கள் இதில்லே ஹனிமூனுக்கு ஏன் குவைத்துக்குப்போக வேண்டும்
என்று சொல்கிறீர்கள்.” சிரித்தாள் சுவேதா.
”சுவேதா இப்போது திருமணம் செய்துவிட்டு உடனடியாக நான் மட்டும் குவைத் போனால் எப்படி இருக்கும்”
”பைத்தியக்காரத்தனமாக இருக்கும். அதற்கு திருமணமே செய்யாமல் இருந்திருக்கலாம் என்று தான் நினைப்பு வரும்”
அதனால் தான் உனக்கு மூன்றுமாத விசிட்டிங்க் விசா வாங்கி வந்திருக்கிறேன். நாம் இருவரும் ஹனிமூன் கொண்டாடிய மாதிரியும் இருக்கும்.அத்தோடு உன்னைத் தனியாக விட்டு விட்டு அங்கே போய் எண்ணெய்க் கிணத்தில் உன் முகம் பார்த்து விரகத்தோடு……….. வேலை செய்த மாதிரியுமிருக்காது. அதனால் தான் நம் ஹனிமூன் குவைத்திலுள்ள தஸ் மன் பிளாட்டில்லே என்றேன்”
”ஆமாம் அங்கே என்னை அறையில போட்டு ஜெயில் கைதி மாதிரி பூட்டி வைத்துவிட்டுப் போய் விடுவீர்கள் தினமும் இரவில் தான் உங்களை பார்க்க முடியும்”
அப்படியில்லை சுவேதா நீ அங்கே வந்துவிட்டால் அடிக்கடி விடுமுறை போட்டுக்கொண்டு ஒருசில பிக்னிக் பாய்ண்டுகள் போய் வரலாம், குவைத் நண்பர்கள் வீடுகளுக்கு சென்று வரலாம். அவர்களை அழைத்து நமது திருமண விருந்து கொடுக்கலாம்
”அப்போது உனக்கும் நேரத்தைப் போக்குவதற்கு வசதியாக இருக்கும்”
”ஆமாம். குவைத்தில் எனக்கு எதுவும் வேலை பார்க்க முடியாதா?”
”முயற்சிக்கலாம்”
“நாம் குடும்பத்தோடு அங்கே தங்க முடியாதா ?”
”அதற்கு விசா எடுக்க வேண்டும் அத்தோடு ஊரிலே இருக்கும் என் அப்பா அம்மாவை யார் கவனித்துக் கொள்வது?”
”உங்களுக்கு மனைவியாக இருக்கவா அல்லது வீட்டுக்கு வேலைக்காரியாக்கவா என்னைக் கல்யாணம் செய்து கொண்டீர்கள்”
”வீணாக திருமணமான மூன்றாவது நாளே சண்டை போட வேண்டாம். விமானத்திற்கு நேரமாகிவிட்டது. இப்போது கார் வந்துவிடும் சீக்கிரம் எல்லாம் எடுத்துஅடுக்கி வை”
”எனக்கு நீங்கள் ஓர் உறுதி சொல்ல வேண்டும்”
”அங்கே எனக்கு வேலை கிடைக்காவிட்டாலும், எப்படியாவது விசா எடுத்து நான் உங்களோடு தங்கிவிட விட வசதி செய்ய வேண்டும்.”
”சும்மா ஊரிலே இருக்கும் என் அப்பா அம்மாவை யார் கவனித்துக் கொள்வது
என்று சீனெல்லாம் போடக்கூடாது”
“ பின்னே இந்த இழுபறியெல்லாம் வேண்டாம். கண்டிப்பாக விசா வாங்கி செட்டில் செய்கிறேன் என்று சொல்லுங்கள்”என்றாள் ஸ்வேதா.
அவன் “சரி” என்று சொல்லவும் வாசல் கதவு மணி சப்தம் கேட்கப் “போய் பார்” என்றான்
”சுவேதா குவைத்திற்கு புறப்பட்டாகிவிட்டதா” கதவைத் திறந்ததும் சுவேதாவின் அப்பா கேட்டார்.
”வாங்க அப்பா. அம்மா வரவில்லையா?” என்றாள் சுவேதா
”அம்மா ஏர்ப்போட்டிற்கு நேரடியாக தம்பி தங்கைகளுடன் வருவதாகச் சொல்லி இருக்கிறாள்”
”சரி வாங்க கார் வருவதற்காகதான் காத்திருக்கிறோம்.. காப்பி தருகிறேன் குடியுங்கள். நாங்களும் புறப்பட்டு ஏர்ப்போட்டுக்கு எல்லோரும் சேர்ந்து போய்விடலாம்”
”மாப்பிள்ளை எங்கே?”
”மேலே பேக் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். வரச்சொல்லுகிறேன்” என்று சமையலறையை நோக்கிக் கிளம்பினாள்.
தொடரும்...........