04 Oct 2020 5:19 pmFeatured
கவிஞர் இரஜகை நிலவனின்
தொடர்கதை
அத்தியாயம்-6
மதயானைகளின் கூட்டம்
நெய்லி தொலைபேசியில் தொடர்பு கொண்டு ”எந்த அளவில் போய்க்கொண்டிருக்கிறது ?” என்று கேட்டாள்
“ம்..ம்… ஏரக்குறைய நெருங்கி விட்டோம் என்று தான் நினைக்கிறேன். ஆங்… நெய்லி.. எனக்கு கொஞ்சம் பணம் வேண்டுமே?” என்றான் நரேன்
“ஏய்… எப்ப பாரு பணம் கேட்டுக்கொண்டிருக்கிறாய். அப்படி உனக்கு என்ன தான் செலவு இருக்கிறது…? நான் என்ன பணம் காய்க்கும் மரமா என்ன? இங்கே வேலை செய்து உனக்கு செலவிற்கே பணம் அனுப்ப போதுமென்று சலிப்பு தான் தட்டுகிறது..”
“ நீ ஒன்றும் சும்மா தர வேண்டாம்”
“ராஜா நரரேந்திர பிரபு நெறைய சொத்து சேத்து வச்சிருக்காரு. ஓ…அத வித்து பணம் தரப்போறாராக்கும்…”
“ அதான் கோடிக்கணக்கிலே வரப்போகிறதே.. அதிலே திருப்பித் தந்து விட்டுப் போகிறேன்” என்றான் கேலியாக சிரித்துக் கொண்டே…
”ஆமா போய் இரண்டு வாரமாகப் போகிறது. இன்னும் நுனி வாலைக்கூட பிடிக்க துப்பில்லை”
”ஓகோ… பாரு. நீ அந்த வெளி நாட்டுக் கம்பெனி காரன்கிட்டே சொன்ன உடன்படிக்கை மாதிரி நான் இந்த மாசக் கடைசிக்குள்ளே அந்த செடியோட வர்றேன். அந்த நாலு கோடி ரூபாயும் வாங்கி மொதல்ல உன் கடனைத்தான் திருப்பிக் குடுக்கப் போறேன்”
சரி..சரி சீக்கிரம் காரியத்தை சாதிக்கப் பாரு. நான் இந்தியா நேரத்திற்கு சரியா ஏழு மணிக்கு கூப்பிடுகிறேன்”
”ம்… சரி சரி…”என்று அவன் பேசி முடிப்பதற்கும், வசந்த் காரில் கண்ணனை விட்டு விட்டு வருவதற்கும் சரியாக இருந்தது.
வசந்த்” ஏறிக்கோ… நீ சொல்லு.. நான் ஓட்டுகிறேன்” என்றான்.
நரேன் வண்டியில் ஏறிக்கொள்ள, அலை பேசியை அவன் கையில் கொடுத்து, “இது காட்டுகிற வழியிலே போ” என்றான்.
வசந்த் வண்டியை ஓட்டிக்கொண்டே, “இன்னும் எத்தனை நாள் தானிந்த காட்டிற்குள் அலைய போகிறோமோ?” என்று சலித்துக் கொண்டே வானொலியை திருக்கினான்.
எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ‘கம்பன் ஏமாந்தான்’ என்று பாட ஆரம்பித்தார். “ இளங்கன்னியரை ஒரு மலர் என்றானே.. கற்பனை செய்தானே…” என்று வசந்த் தொடர்ந்தான்
“என்னடா.. கவிதா ஏதாவது சொன்னாளா?” நரேன் சிரித்தான்
“ஏம்பா பாட்டு கூட படிக்க கூடாதா?”
“படிக்கலாம்… படிக்கலாம்… சரி. நாம இறங்க வேண்டிய இடம் வந்து விட்டது. வண்டியை நிறுத்து” என்றான் நரேன்.
வசந்த் வண்டியை அருகிலிருந்த மர நிழலில் நிறுத்தி விட்டு கீழே இறங்கினான்.
”பாரு. நாம் வண்டியை இங்கே விட்டு விட்டு நடக்கலாம்” என்றான் நரேன்
”கண்டிப்பா நாம் இங்கே வண்டியை விட்டு இறங்கி விட்டோம் எனபதை பிரபு கண்டிப்பா பார்த்திருப்பார்” வசந்த் இறங்கி அருகிலிருந்த மரத்தில் இருந்த மரத்தில் அமர்ந்திருந்த புறாவை மறைத்துக் கொண்டே நின்றான்.
சிரித்துக் கொண்டே நரேன்” வசந்த். புறாவை இரசிப்பதற்கு எல்லா நேரமும் சரியில்லை. நீ சும்மா புறாவை மறைக்கிறதாலே நான் பரர்க்காமல் இருக்கிறேன் என்று நினைத்துக் கொண்டிருக்காதே… வா… அததுக்கு நேரமிருக்கு…” என்று முன்னால் நடந்தான் நரேன்.
”நேரம் என்னப்பா ஆகுது”? என்றான் நரேன்
“ நாலு முப்பது”
“சரி சீக்கிரம் நட… இன்னும் ஒரு கிலோ மீட்டர் நடக்கணும்” வேகமாக நடக்க ஆரம்பித்தான் நரேன்
எதிரே வந்து கொண்டிருந்த சீறுடை அணிந்த காட்டிலாகா அதிகாரி, திலக்,” எங்கேப்பா தம்பிகளா போறீங்க?” என்று கேட்டார்.
“சார். நாங்களும் காட்டிலாகாவிலிருந்து தான் வந்திருக்கிறோம் ஒரு மருந்து செடி இங்கே கிடைப்பதாக அறிந்து அதை தேடி வந்திருக்கிறோம்” என்றான் வசந்த்.
“சரி.. அடையாள அட்டையைக் காட்டுங்கள்”
“நரேன். நான் ஐ கார்டை வண்டியிலே என் பர்சோட போட்டுட்டு வந்துட்டேண்டா.. உன்னுடைய ஐ கார்டைக்காட்டு “ என்றான்
நரேன் தன் பையிருந்த அடையாள அட்டையை எடுத்துக் காட்ட “அஞ்சி மணிக்கு மேலே எல்லாம் இந்த காட்டுக்குள்ளே சுத்தக் கூடாது தெரியுமில்லியா?. “போங்க… போயிட்டு நாளைக்கு வாங்க..” என்றான்.
உடனே வசந்த் பிரபுவிற்கு போன் செய்து, “ சார். பிரபு சார் உங்ககிட்டே பேசணுமாம்” என்றான்.
திலக்,”யாரு. புதுசா வந்திருக்க ஆபீசருங்களா… குடுங்க..” என்று அலைபேசியை வாங்கி, “சார் சொல்லுங்க. ஆங்… இங்கே உங்க ஆட்கள் ரெண்டு பேர் இவ்வளவு லேட்டா சுத்திக்கிட்டிருங்காங்க.. இங்கே சிங்கம், புலி, யானை, எருமையெல்லாம் நடமாடுகிற இடம். எதாவது கொடிய மிருகம் இவங்களை ஏதாவது பண்ணிச்சின்னா யார் பொறுப்பெடுத்துக்கிறது… போயிட்டு நாளைக்கு காலையிலே வரச்சொல்லுங்க…” என்றார்
பிரபு என்ன சொன்னார் என்று புரியவில்லை. வசந்த் கையிலெ அலை பேசியை வாங்கி,
“சார். இங்கே பக்கத்திலே தான் போகிறோம். சீக்கிரம் திரும்பி விடுவோம். நீங்க அவர்கிட்டே சொன்னீங்கண்ணா எங்களை போக விடுவார்” என்றான்
எதிர் முனையிலிருந்து பிரபு, “ வேண்டாம் வசந்த். திரும்பி வந்து விடுங்கள். வீண் பிரச்சினைகள் வேண்டாம்” என்றார்
நரேன் வாங்கி, “ சார் ஒரு அஞ்சி நிமிடத்திலே வந்து விடுவோம் கொஞ்சம் போக விடச் சொல்லுங்கள்” என்றான்.
எதிர் முனையில் பிரபு, “ சரி. அவரிடம் கொடுங்கள்” என்று சொல்ல சார். பிரபு சார் உங்க கிட்டே பேசணுமாம்” என்று அலை பேசியை அவரிடம் நீட்ட, திலக் , “ ஓஓஓஓஓஓஓஓஓ செத்தோம்.. ”என்று அலறினார்.
வசந்த் திரும்பிப்பார்க்க.. எதிரே யானைக் கூட்டம் நடந்து வந்து கொண்டிருந்தது மெதுவாக…
தொடரும்.........