30 Jan 2021 7:05 pmFeatured
கவிஞர் இரஜகை நிலவனின்
தொடர்கதை
அத்தியாயம்-12
வசந்தின் சாதனை!!!
அடிக்கடி நாணம் வந்து ஆளை மயக்கும்” ஜானகி அம்மாவின் பாடல் ஆட்டோவில் வசந்தை மயக்கிக் கொண்டிருந்தது. திரும்பிப் பார்த்தான். கண்ணனின் ஆட்டோ தொடர்வதைக் கண்டதும் ஒரு கணம் திகைத்துப் போனவன் அந்த காட்டிற்குள் போவதற்கான பாதுகாப்பினரின் கேட்டை அடைந்ததும், ஆட்டோவை நிறுத்தி விட்டு, உள்ளே இருந்த பாதுகாப்பாளரின் மேலதிகாரியிடம் சென்று தன்னுடைய அடையாள அட்டையை காட்டிவிட்டு, “என்னை ஒருவன் பின் தொடர்கிறான். அவனிடம் எந்த அடையாள அட்டையும் கிடையாது” என்று சொல்லி விட்டு ரமணியை ஆட்டோவை ஓட்டும்படி சொல்லி விட்டு, அவன் மட்டும் ஒதுங்கி நின்று கண்ணனின் ஆட்டோ வருகிறதா என்று கண்காணித்தான்.
கண்ணன் வேகமாக வந்து “சார். நான் அடிக்கடி இங்குள்ள காட்டிலாகா அதிகாரிகளுடன் உள்ளே வருபவன் தான் சார். அடையாள அட்டையை எடுத்து வர மறந்து விட்டேன். ஒரு சின்ன வேலை … உடனடியாக திரும்பி விடுவேன்” என்று பையிலிருந்து பணம் எடுத்தான்.
“மிஸ்டர். லஞ்சம் கொடுக்கிற பழக்கத்தை விடுங்க.. நீங்க போய் முதலில் அடையாள அட்டையை எடுத்துக் கொண்டு வாருங்கள்”
”சார். நம்ம பிரபு சார். அலுவலகத்திலேயிருந்து தான் வருகிறேன் அவரோடு பேசுங்களேன்” என்று அலைபேசியில் பிரபுவை அழைத்தான்.
“மிஸ்டர். நான் யார் கூடவும் பேசத்தயாரில்லை. போய் உங்கள் அடையாள அட்டையை எடுத்து வாருங்கள். இந்த காட்டுக்குள்ளே சும்மா யார் வேண்டுமிண்ணாலும் போக முடியாது. தெரியுமில்ல..” பாதுகாப்பாளரின் மேலதிகாரி கத்தினார்.
பிரபு எதிர்முனையிலிருந்து“ என்ன கண்ணன் என்ன செய்தி?” என்றார்.
”சார். நான் வசந்தை தொடர்ந்து வருகிறேன். இப்போது காட்டிலாகா கேட்டிலே உள்ளே விடமாட்டேங்கிறாங்க. நீங்க சொன்னால்..” அவன் முடிப்பதற்குள் : இந்த மாதிரி இடியாட்டிக் தனமா எதையும் செய்யாதே… நீ அடையாள அட்டையை எடுத்து
போயிருக்க மாட்டாய்… சரி… கேட் நம்பர் 7 ல் நம்ம கதிரவன் இருப்பார். நீ அவரைப்பார்த்துச் சொல்லிவிட்டுக் கிளம்பு” என்றார்.
கண்ணன் வெளியேறுவதைப் பார்த்து பெருமூச்சு விட்டவாறு ரமணியை அழைத்து ஆட்டோவில் ஏறிக்கொண்ட வசந்த் அலைபேசியில் வரை படம் பார்த்து வழி சொல்ல ஆரம்பித்தான்.
கண்ணன் வேகமாக கேட் நம்பர் ஏழுக்கு வந்து, கதிரவனிடம் சொல்லி விட்டு ஆட்டோ டிரைவரை விரட்டினான்.
எங்கே தேடியும் வசந்த் வந்த ஆட்டோவைக் காணாமல், திரும்ப முனையும் போது, அங்கே வந்த ஜீப்பில் இருந்த அலுவலகரிடம் ”சார் இந்த வழியாக ஒரு ஆட்டோ போச்சுதா?” என்று கேட்டான்
“ஆமாம் தம்பி.. இப்ப தான் ஒரு ஆட்டோ இங்கே கிழக்கு பக்கமாக போச்சுது… யாரோ மொபைல் பார்த்து வழி சொல்லி கிட்டிருந்தாங்க..” என்றார்.
கண்ணன் ஆட்டோ டிரைவரிடம்” சீக்கிரமா போப்பா..” என்று விரட்டினான்.
கொஞ்ச தூரத்தில் வசந்த் சென்று கொண்டிருந்த ஆட்டோ தெரிய டிரைவரிடம், “கொஞ்சம் இடைவெளி விட்டு நாம் பாலோ பண்ணுறது தெரியாமல் போப்பா” என்றான் கண்ணன் பெருமூச்சு விட்டவாறு.
பின்னாலே திரும்பிப் பார்த்த வசந்த், ‘கண்ணன் இங்கேயும் வந்துட்டானா?’ என்று முணு முணுத்தவாறு “ரமணி. பின்னாலே நம்மள ஒரு ஆட்டோ தொடருது... கொஞ்சம் ஏதாவது புதரிலே ஒளிஞ்சு நிக்க முடியுமா…? பாருங்க…” என்றான் வசந்த்.
முன்னால் போய்க்கொண்டிருந்த ஆட்டோவைக் காணாமல் தவித்த கண்ணன், வசந்திற்கு போன் பண்ணினான். ’இங்கே எங்கேயாவது நின்னா அவன் போன் சப்தம் கேட்காமல் இருக்காது’ என்று எண்ணினான் கண்ணன்.
அலைபேசியை எடுத்த வசந்த், ஒரு முறை அசந்து போனான். நல்ல வேளை போன் “சைலண்ட் மோடில்” இருந்ததால், சப்தம் வராததால், கண்ணனின் தந்திரத்தை புரிந்து கொண்டவன் அலைபேசியை அணைத்துப்போட்டு விட்டு கொஞ்ச நேரம் பொறுமையாக காத்திருந்தான் .
கண்ணன் பொறுமை இழந்து காட்டை விட்டு வெளியேற, வசந்த், வரை படத்தை பார்த்துக் கொண்டே, ரமணிக்கு வழி சொல்ல ஆரம்பித்தான்
நரேனும் அவனும் சந்தித்த யானைக் கூட்ட்ங்கள் வந்த இடம் தாண்டியதும், “ரமணி, வலப்பக்கம் போ” என்றான் வசந்த்.
ஆட்டோ வேகமாகப் போய்க்கொண்டிருக்க, திடீரென்று பிரபுவின் போன் வர, முதலில் எடுக்கலாமா என்று யோசித்தான்.
பின்பு ”வந்த வேலையை முதலில் முடிப்போம் ” என்று நினைத்தவாறு, “ரமணி.. அந்தப்பக்கம் வேலி தெரிகிறது பார். அதைத் தாண்டித்தான் போக வேண்டும்” என்றான் வசந்த்.
”சார். வழி ஒண்ணும் தெரியலியே” என்றான் ரமணி ஆட்டோ ஓட்டிக்கொண்டே.
”செம்மியா பாரு” என்றான் வசந்த்.
“ஆங்.. அங்கே ஒரு தொண்டு (வழி) கெடக்கு… ஆனா ஆட்டோ போவுமாண்ணு தான் தெரியல” என்றான் ரமணி
“பக்கத்திலே போய் பார். ஆங்… அந்த முனிவரோட கல்லறை தெரியுது” என்றான்.
“சாரி சார். எறங்கி நடந்து தான் போகணும். ஆட்டோ போற அளவுக்கு வழி இல்ல” என்றான் ரமணி
“சரி. சைடில நிப்பாட்டு” என்று இறங்கியதும், நரேனின் போன் வர
“எடுத்தான்”
“வசந்த் போய்ச் சேர்ந்துட்டியா?” என்றது எதிர் முனை.
“ஆங்.. கல்லறையை கண்டுபிடிச்சிட்டேன்.” என்றான் வச்ந்த்.
“வெரி குட். கமாண். சீக்கிரம் பக்கத்திலே போய் அந்த செடிய புடுங்கிட்டு என்ன கூப்பிடு: என்றான் நரேன்.
“சரி” அலைபேசியை அணைத்து விட்டு நடந்தான் வசந்த்,.
தொடரும்......