03 Jul 2019 12:37 pmFeatured
மும்பையில் இருந்து 275 கிமீ தொலைவில் உள்ள ரத்னகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வந்த கனமழையால், ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள திவாரி அணை நேற்றிரவு திடீரென உடைந்து ஊருக்குள் வெள்ள நீர் புகுந்தது.
அணைக்கு அருகில் உள்ள 12 வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. அந்த வீடுகளில் இருந்தவர்களைக் காணவில்லை. அவர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வெள்ளத்தில் சிக்கி இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 18க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர். அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதுதவிர அணையில் இருந்து வெளியேறிய தண்ணீர் அருகில் உள்ள 7 கிராமங்களை சூழ்ந்துள்ளது.
இதையடுத்து மாவட்ட அதிகாரிகள், போலீசார் மற்றும் தன்னார்வலர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தேசிய பேரிடர் மீட்பு படையினர், அங்கு தேடுதல் மற்றும் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், அரசாங்க அதிகாரிகள், காவல் துறையினர் மற்றும் தன்னார்வலர்களைக் கொண்ட கூடுதல் மீட்புக் குழுக்களும் விரைந்து பணியாற்றி வருகின்றன.
கடந்த 12 மணி நேரத்தில் மட்டும், 300 முதல் 400 மிமீ மழை அளவு பதிவாகியுள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத பெரும் மழையாகும்.