04 May 2022 10:12 amFeatured
உலக பத்திரிகை சுதந்திர குறியீட்டில் இந்தியா 150வது இடத்திற்கு தள்ளப்பட்டது. எல்லையற்ற நிருபர்கள் என்ற அமைப்பு பத்திரிகை சுதந்திரம் பற்றி 180 நாடுகள் கொண்ட பட்டியலை வெளியிட்டுள்ளது.
உலக பத்திரிகை சுதந்திரத்திற்கான தரவரிசைப் பட்டியலில் இந்தியா 150 ஆவது இடத்தை பெற்றுள்ளதாக எல்லைகளற்ற பத்திரிகையாளர்கள் அமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு நாட்டிலும் பத்திரிக்கையாளர்கள், செய்தி நிறுவனங்கள் மற்றும் இணைய பயன்பாட்டாளர்கள் கொண்டிருக்கும் சுதந்திரத்தின் அளவையும் அத்தகைய சுதந்திரத்தை மதிக்க அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளையும் வைத்து உலக பத்திரிகை சுதந்திர குறியீடு நிர்ணயிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு அறிக்கையில் 142வது இடத்தில் இருந்த இந்தியா மோசமான பத்திரிக்கை சுதந்திரங்கள் கொண்ட உலகின் மிகவும் ஆபத்தான நாடுகளின் பட்டியலில் இடம்பெற்றிருந்தது.
“பத்திரிகையாளர்களுக்கு எதிரான வன்முறை, அரசியல் சார்புடைய ஊடகங்கள் மற்றும் ஊடக உரிமைகள் பறிப்பு போன்ற நிகழ்வுகள், உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தில் பத்திரிக்கை சுதந்திரம் நெருக்கடியில் உள்ளது என்பதை நிருபித்துள்ளது. 2014 ஆண்டிலிருந்து இந்து தேசியவாதத்தை நோக்கி நாடு சென்று கொண்டிருக்கிறது” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காலனித்துவ எதிர்ப்பு இயக்கத்தின் விளைவாக, இந்திய பத்திரிகைகள் மிகவும் முற்போக்கானவையாகக் கருதப்பட்டன, ஆனால் 2010 களில் நடுப்பகுதியில் இருந்து நிலைமை தலைகீழாக மாறியது. குறிப்பிட்ட கட்சி உறுப்பினர்கள் மற்றும் அதன் ஆதரவானவர்களால் ஊடக நிறுவனங்களை கட்டுப்படுத்தும் போக்கு அதிகரித்து வருகிறது. 80 கோடி இந்தியர்களால் பின்தொடரப்படும் 70க்கும் அதிகமான ஊடக நிறுவனங்களுக்கு உரிமையாளர் தொழிலதிபர் முகேஷ் அம்பானி என்பதே முதன்மையான உதாரணம்” என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொரோனா நோய்த்தொற்று காலத்தில் அரசின் முரணான அறிக்கைகளுக்கு எதிராக செய்தி வெளியிட்ட ஊடகங்கள் மீது வழக்கு பதியப்பட்டது. கொரோனா தொடர்பாக செய்தி வெளியிட்டதற்காக 55 பத்திரிக்கையாளர்கள் மீது வழக்கு பதியப்பட்டு கைது செய்யப்பட்டதை எல்லைகளற்ற பத்திரிகையாளர்கள் அமைப்பின்அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பத்திரிக்கை சுதந்திர தரவரிசையில் முறையே முதல் 5 இடங்களில் நார்வே, டென்மார்க், ஸ்வீடன், இஸ்தானியா, ஃபின்லாந்து ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன
பாகிஸ்தான்-157, இலங்கை-146 பங்களாதேஷ்-162, மியான்மர்-176, சீனா-175, ரஷ்யா-155 இந்தியா-150.
180 நாடுகள் தரவரிசையில் வடகொரியா(180) கடைசி இடத்தைப் பெற்றுள்ளது