27 Aug 2020 12:12 pmFeatured
2009-ம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில் பட்டியல் இன பிரிவினருக்கான 18% இடஒதுக்கீட்டில் அருந்ததியினருக்கு 3% உள் ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டம் கொண்டுவரப்பட்டது
தமிழகத்தில் மக்கள் தொகையில் 15.7% அருந்ததியினர் உள்ளனர். சமூக நிலையிலும் பொருளாதாரத்திலும் பின்தங்கியுள்ள தங்களுக்கு தனி உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது அருந்ததியினரின் நீண்டகால கோரிக்கையாக இருந்தது இதனை ஆராய நீதிபதி ஜனார்த்தனம் தலைமையில் ஒரு குழுவையும் தமிழக அரசு அமைத்திருந்தது. நீதிபதி ஜனார்த்தனம் குழு பரிந்துரையின்படி, 2009-ம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில் எஸ்சி-எஸ்டி பிரிவினருக்கான 18% இடஒதுக்கீட்டில் 3% அருந்ததியினருக்கு உள்ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டம் கொண்டுவரப்பட்டது.
தமிழகத்தின் சமூக நீதி வரலாற்றில் இந்த உள்ஒதுக்கீடு மிக முக்கியமான திருப்பமாக பார்க்கப்பட்டது.
புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி ரத்து செய்யகோரி வழக்கு
இந்நிலையில் இந்த உள்ஒதுக்கீட்டை ரத்து செய்யக் கோரி புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, சரவணகுமார் உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான பெஞ்ச் விசாரித்து இன்று தீர்ப்பளித்துள்ளது.
அந்த தீர்ப்பில், பட்டியலின இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.