09 Apr 2020 7:26 pmFeatured
-சதாசிவம் பிரபாகர்
வெளிர் மஞ்சளாய்,
ஒளிந்து தெரிந்த தன்பழம்,
”ஓரிரண்டு நாளில்
குலை வெட்டலாம்”
என
யோசித்தபோது…
சந்தைக்கருகே தெருவிருந்தும்!
வாசலில்,
எப்பொழுதுமில்லா அதிசயமாய்
காய்கறி வண்டி.
புரிகிறது,
ஊரடங்கும், உத்தரவும்…
ஏழ்மையின்
அத்தனை விளக்கங்களும்
சுருக்கங்களாய் ஒரு பாட்டி.
எடுத்து தந்த காய்கறியைத்
தொடாமல் வாங்கினேன்.
பணம் பெறும் பொழுது
பாட்டி சொன்னாள்,
”எய்யா, வீட்டில வெளஞ்சது,
மூட்டம் போடாத தன்பழம்,
கொள்வார் யாருமில்லை
வெலக்கி போவாண்டது,
ரஸகதளி”.
பாட்டியின் கண்களில்
என் வீட்டு வாழைக்குலை,
தெரிந்தே ஒளிந்திருக்கும் போல்.
மறுத்த போது,
பாட்டி கெஞ்சலாய் சொன்னாள்
சகாயமாய் தருவதாக.
சந்தையில் வாங்குறதைக் காட்டிலும்
ஒரு மடங்கு குறைவாக.
ஒரு குலை
வேண்டாத வாழைப்பழம்
வாங்கிய போது
லேசாய் வலித்தது மனம்.
”வெளஞ்சதும் வெளச்சவனும்
முகத்தை மூடிக் கொண்டு”
கை கழுவி, கால் அலம்பி
வீட்டினுள் சென்றபோது,
எதற்கும் திட்டும் என் மனைவி ,
சீறினாள்,
”அதுதான் நம்மளே வெட்டலாமே”
விலையைக் கேட்டவுடன்
முகம் வாடிச் சொன்னாள்,
”ஆனாலும்,
இந்த மாதிரி நேரத்தில்
பேரம் பேசாதீங்க.
பாவம் பிடிக்கும்”
எதுவும் புரியாமல்
எட்டிப் பார்த்தேன்.
என் வீட்டு வாழை சொன்னது,
“ சரி , ஒரு வாரம் பொறுத்துக்கிறேன் ”.