11 Apr 2023 1:41 amFeatured
பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு உரிய காலத்திற்குள் ஆளுநர் ஒப்புதல் வழங்கும் வகையில் அறிவுரைகளை ஒன்றிய அரசும், ஜனாதிபதியும் உடனடியாக வழங்க வேண்டும் என்று சட்டப் பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித் தீர்மானம் பேரவையில் நேற்று நிறைவேறியது.
தமிழக சட்டப்பேரவையில் காலை கேள்வி நேரம் முடிந்ததும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசினர் தனி தீர்மானத்தை கொண்டுவந்தார். ஆளுநருக்கு அறிவுறுத்தும் வகையிலும் ஆளுநர் செயல்பாடு குறித்து விவாதிக்கவும் ஒரு தீர்மானத்தை கொண்டுவரவேண்டுமானால் பேரவை விதிகளில் சில தளர்வு (விலக்கு) கொண்டுவரவேண்டும்.
அதன்படி பேரவை முன்னவர் துரைமுருகன் ஒரு தீர்மானத்தை கொண்டு வந்தார். அதில், சட்டப் பேரவை விதி 92(7)ல் அடங்கியுள்ள ‘ஆளுநரின் நடத்தை குறித்து’ என்ற சொற்றொடர், விவாதத்தில் தாக்கம் ஏற்படுத்தும் வகையில் ஆளுநரின் பெயரை பயன்படுத்துவது என்ற சொற்றொடர் மற்றும் விதி 287-ல் அடங்கிய 92(7) ஆகியவற்றின் பயன்பாடுகளை நிறுத்தி வைத்து அரசினர் தனித்தீர்மானத்தை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறி தீர்மானத்தை முன்மொழிந்தார். அந்த தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டுமானால் பேரவை உறுப்பினர்களில் நான்கில் மூன்று பங்கு உறுப்பினர்கள் அதற்கு ஆதரவு தரவேண்டும்.
அதேநேரத்தில், அதிமுக உறுப்பினர்கள் எதிர்க்கட்சித் துணை தலைவர் இருக்கை கேட்டு அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர். அதன்பின்னர் இந்த தீர்மானம் எடுத்துக் கொள்ளப்பட்டது. தீர்மானத்தை நிறைவேற்ற எண்ணிக்கை முறையை சபாநாயகர் அப்பாவு கொண்டுவந்தார். இதற்காக சட்டப் பேரவையின் அனைத்து வாயில் கதவுகளும் மூடப்பட்டன. பேரவைக்குள் இருக்கும் எம்.எல்.ஏ.க்கள் யாரும் ஓட்டெடுப்பு முடியும் வரை எழுந்து வெளியே செல்லக்கூடாது என்று சபாநாயகர் அறிவுறுத்தினார். இந்த ஓட்டெடுப்பு நடைபெறுவதற்கு முன்பே, நேரமில்லா நேரத்தில் அதிமுகவினர் வெளிநடப்பு செய்துவிட்டதால் அவர்களது இருக்கை காலியாக இருந்தது.
பாஜ உறுப்பினர்கள் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் ஆகியோர் நேற்று காலை பேரவைக்கு வரவில்லை. பாஜ எம்.எல்.ஏ.க்கள் எம்.ஆர்.காந்தி (நாகர்கோவில்), சரஸ்வதி (மொடக்குறிச்சி) ஆகியோர் அவையில் இருந்தனர்.
ஆளுநருக்கு எதிராக தீர்மானம் தொடர்பான வாக்கெடுப்பு பற்றி விஷயம் தெரியாமல் உள்ளே அமர்ந்திருந்த பாஜ உறுப்பினர்கள் இருவரும் எண்ணிக்கை தொடங்கிய நேரத்தில் எழுந்து வெளியே செல்ல முற்பட்டனர். ஆனால், பேரவை கதவுகள் மூடப்பட்டு இருந்ததால் அவர்களால் வெளியே செல்ல முடியவில்லை. அவையில் இருந்த உறுப்பினர்களும் ஓட்டெடுப்பு முடிந்தபிறகுதான் வெளியே செல்ல முடியும் என்று அந்த இரண்டு எம்எல்ஏக்களிடம் தெரிவித்தனர்.
அப்போது, சபாநாயகர் ஓட்டெடுப்பு நடப்பதால் நீங்கள் இப்போது வெளியே செல்ல இயலாது. தீர்மானத்தை ஆதரித்தோ, எதிர்த்தோ, நடுநிலை என்றோ நீங்கள் ஓட்டெடுப்பில் பங்கேற்கலாம் என்றார். அதன்பிறகு விதியை நிறுத்தி வைக்கும் தீர்மானத்தின் மீது, ஓட்டெடுப்பு எண்ணிக்கை எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை அடிப்படையில் தொடங்கப்பட்டது. அதன்படி சட்டப்பேரவையில் உள்ள 6 டிவிசன் வாரியாக உறுப்பினர்களை எண்ணும் பணி நடந்தது. பேரவையில் மொத்தம் 146 உறுப்பினர்கள் இருந்தனர். அதில், 144 பேர் தீர்மானத்தை ஆதரித்தனர். பாஜ எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் மட்டும் எதிர்த்தனர். தீர்மானத்தின் மீது யாரும் நடுநிலை வகிக்கவில்லை.
ஓட்டெடுப்பு முடிந்ததும் சபாநாயகர் கூறுகையில், ‘அவை முன்னவரின் தீர்மானத்தை 146 பேரில் 144 பேர் ஆதரித்துள்ளதால் சட்டசபை விதி 287-ன் கீழ் 92 (7)-ல் உள்ள சில குறிப்பிட்ட சொற்றொடர்கள் நிறுத்தி வைக்கப்படுகிறது’ என்றார். இதைத் தொடர்ந்து பேரவையின் வாயில்கள் திறக்கப்பட்டன. தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்த பாஜ உறுப்பினர்கள் 2 பேர் வெளிநடப்பு செய்தனர். இதைத்தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநரின் செயல்பாடு குறித்து விவாதிக்கும் அரசினர் தனித் தீர்மானத்தை முன்மொழிந்து பேசினார்.
தீர்மானத்தில் அவர் கூறும்போது, “தமிழ்நாட்டு மக்களின் பேராதரவைப் பெற்று, ஆட்சிப்பொறுப்புக்கு வந்துள்ள தமிழ்நாடு அரசுக்கு, தமது மக்களின் எதிர்பார்ப்புகளையும், தேவைகளையும் நிறைவேற்ற வேண்டிய அரசமைப்புச் சட்டத்தின்படியான பொறுப்பும், ஜனநாயகரீதியான கடமையும் உள்ளது. இவற்றைக் கருத்தில்கொண்டு, மாண்புமிக்க இந்தச் சட்டமன்றப் பேரவைக்கு உள்ள இறையாண்மை மற்றும் இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படியான சட்டமியற்றும் பொறுப்புகளின் அடிப்படையில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை நிறைவேற்றி அனுப்பியுள்ள பல்வேறு மசோதாக்களை தமிழ்நாடு ஆளுநர் அனுமதி அளிக்காமல் காலவரையின்றி கிடப்பில் போட்டு, தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கு எதிராகச் செயல்பட்டு வருவதை இப்பேரவை மிகுந்த வருத்தத்துடன் பதிவு செய்கிறது.
அதுமட்டுமின்றி, தமிழ்நாடு சட்டப் பேரவை நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்கள் குறித்து பொதுவெளியில் ஆளுநர் தெரிவிக்கும் சர்ச்கைக்குரிய கருத்துகள், அவர் வகிக்கும் பதவி, எடுத்துக் கொண்ட பதவிப் பிரமாணம் ஆகியவற்றுக்கும், மாநிலத்தின் நிர்வாக நலனுக்கும் ஏற்புடையதாக இல்லை என்பதோடு, அரசமைப்புச் சட்டத்திற்கும், கடைபிடிக்கப்பட்டு வரும் மரபுகளுக்கும் எதிராகவும், இப்பேரவையின் மாண்பைக் குறைத்து, நாடாளுமன்ற ஜனநாயகத்தில் சட்டமன்றத்தின் மேலாண்மையை சிறுமைப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது.
எனவே, மாநில மக்களின் குரலாக விளங்கும் சட்டமன்றங்களில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களுக்கு அந்தந்த மாநில ஆளுநர்கள் ஒப்புதல் வழங்க குறிப்பிட்ட கால நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்று ஒன்றிய அரசையும், குடியரசுத் தலைவரையும் வலியுறுத்துவது என்றும், மக்களாட்சி தத்துவம் மற்றும் மாட்சிமை பொருந்திய இச்சட்டமன்றத்தின் இறையாண்மை ஆகியவற்றிற்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் தொடர்ந்து தமிழ்நாடு மக்களின் நலனுக்கு எதிராகச் செயல்படுவதைத் தவிர்த்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் சட்டமியற்றும் அதிகாரத்தை நிலைநாட்டும் வகையில், இப்பேரவை நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கு உரிய காலத்திற்குள் ஒப்புதல் அளித்திட வேண்டுமென்று, ஆளுநருக்கு உரிய அறிவுரைகளை ஒன்றிய அரசும், குடியரசுத் தலைவரும் உடனடியாக வழங்கிட வேண்டும் என்றும் இப்பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது என்னும் தீர்மானத்தை நான் மொழிகிறேன் என்றார்.
இதையடுத்து, இந்த தீர்மானத்தின் மீது அவை முன்னவர் துரைமுருகன், செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்), ஜி.கே.மணி (பாமக), நாகை மாலி (மார்க்சிஸ்ட்), ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்), சதன் திருமலைக்குமார் (மதிமுக), சிந்தனை செல்வன் (வி.சி.க), ஜவஹீருல்லா (மமக), ஈஸ்வரன் (கொமதேக), வேல்முருகன் (தவாக) ஆகியோர் ஆதரவு தெரிவித்து பேசினர். இதையடுத்து, குரல் வாக்கெடுப்பு மூலம் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.
ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு ஆர்.என்.ரவி ஒப்புதல்
ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட மசோதாவுக்கு அனுமதி கொடுக்காமல் பல மாதங்களாக வைத்திருந்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றியவுடன், சில மணி நேரங்களிலேயே அந்த மசோதாவுக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.
உடனடியாக அரசிதழில் வெளியிடப்படும்-தமிழ்நாடு முதல்வர்
இந்த மசோதா உடனடியாக அரசிதழில் வெளியிடப்படும் என்றும், உடனடியாக அமலுக்கு வந்தது என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதன் மூலம் சூதாட்டம் நடத்தினால் 3 மாதம் சிறை, ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.