02 May 2022 8:14 pmFeatured
மத்திய அரசின் புதிய திட்டங்கள் செயல்படுத்துவற்கு தேவையான நிலங்கள் மாநில அரசின் உதவியுடன்தான் கையகப்படுத்தி மத்திய அரசுக்குக் கொடுக்கப்படுகிறது. பொதுநோக்கத்துக்காக என்பதால் மாநில அரசும் உதவி செய்கிறது. நிலம் என்பது மாநில அரசுக்குச் சொந்தமானது. இதனை பொதுத்துறை நிறுவனங்களுக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை தனியாருக்கு விற்கும்போது அந்த நோக்கம் மாறுபடுகிறது.
இந்த அடிப்படையில் 'தனியார்மயமாக்கப்பட்ட விமான நிலையங்களின் வருவாயில் மாநில அரசுக்குப் பங்கும் நிலத்துக்கு ஈடாக லாபத்தில் பங்கும் அளிக்க வேண்டும்' என தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்துள்ளது.
இதுதொடர்பாக, தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள புதிய தொழிற் கொள்கையில், 'விமான நிலையங்களை தனியார்மயமாக்கும் கொள்கைகளை விமான நிலையங்களின் ஆணையமான ஏஏஐ (AAI) தீவிரமாகக் கடைபிடித்து வருகிறது.
இதற்கான ஒட்டுமொத்த திட்ட மதிப்பீட்டில் நிலத்தில் விலை என்பது பெரும் பங்காக உள்ளது. மாநில அரசின் நிலங்களை விமான நிலையங்களின் ஆணையம் கையகப்படுத்தி மாற்றுகின்றபோது இந்தச் சொத்துகள் மூன்றாம் தரப்பினருக்கு மாற்றும்போது அதன்மூலம் கிடைக்கும் வருமானம் மாநில அரசுக்கு இருக்க வேண்டும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள விமான நிலையங்களில் லக்னோ, கௌஹாத்தி, அகமதாபாத், திருவனந்தபுரம், ஜெய்ப்பூர், மங்களூரு ஆகியவற்றை தனியார்மயமாக்கும் வகையில் அதானி குழுமத்துக்கு மத்திய அரசு குத்தகைக்கு ஒதுக்கியுள்ளது.
மேலும், ஏஏஐயால் நடத்தப்பட்டு வரும் 25 விமான நிலையங்களை 2025 ஆம் ஆண்டுக்குள் தனியார்மயமாக்கவும் முடிவு செய்துள்ளனர்.
இந்தப் பட்டியலில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை, கோழிக்கோடு, விஜயவாடா, திருப்பதி, வாரணாசி, புவனேஸ்வர், அமிர்தசரஸ், ராஞ்சி, சூரத் உள்பட 25 விமான நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், 'தனியார்மயமாக்கப்பட்ட விமான நிலையங்களின் வருவாயில் மாநில அரசுக்குப் பங்கும் நிலத்துக்கு ஈடாக லாபத்தில் பங்கும் அளிக்க வேண்டும்' என தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்துள்ளது.
தமிழகத்தை தொடர்ந்து சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் மாநிலங்களும், விமான நிலையத்தை தனியாருக்கு அளிப்பதால் கிடைக்கும் வருவாயில் பங்கு தரும்படி மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளன. இது குறித்து, காங்.,கைச் சேர்ந்த சத்தீஸ்கர் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் டி.எஸ்.சிங்டியோ கூறுகையில், ''சத்தீஸ்கர் அரசும் விமான நிலையத்தை மூன்றாம் நபருக்கு அளிக்கும் போது கிடைக்கும் வருவாயில் உரிய பங்கை தர வேண்டும் என, மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கும்,'' என்றார். தமிழகத்தின் இந்த நிலைப்பாட்டை ஆதரிப்பதாக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவைச் சேர்ந்த ஜார்க்கண்ட் நிதியமைச்சர் ராமேஸ்வர் ஓரான் தெரிவித்துள்ளார்.
''மத்திய அரசுக்கு இலவசமாக நிலம் வழங்குவதில் ஆட்சேபனையில்லை. ஆனால், அதை தனியாருக்கு வழங்கி வருவாய் ஈட்டும்போதும் அதில் மாநில அரசுக்கும் பங்கு தர வேண்டும்,'' என, ராமேஸ்வர் ஓரான் தெரிவித்தார்.