01 Oct 2019 5:05 pmFeatured
-பாவரசு முனைவர் வதிலை பிரதாபன்
கண்களால் கதைசொன்ன கலைஞனைக் காணவில்லை
கடல்கடந்த நெஞ்சமும் கவலையின்றித் தூங்கவில்லை
செந்தமிழின் பொருட்சுவையை அருட்சுவையாய்த் தந்தவனே
எந்தமிழும் ஏங்கிடுதே என்னவரைக் காணாது
காணாத சிற்றூரின் கருவறையில் பிறந்துவந்தாய்
போகாத ஊரெல்லாம் புகழ்வழியே போய்ச்சேர்ந்தாய்
தீராத வலியெல்லாம் திரைவழியே தீர்த்திட்டாய்
மாறாத காவியமாய் மானுடத்தை மகிழ்வித்தாய்
மகிழ்வென்ற சொல்லொன்றும் விளையாட்டாய் சொல்லவில்லை
மனதோடு மண்தனிலே மாசற்று வழங்கியதை
அறியாத வேற்றுவரும் அரிச்சுவடி ஆக்கிட்டார்
அழிவென்றும் உனக்கில்லை ஆழ்மனதில் பதிந்துவிட்டாய்
பதிந்தவை பாடமென பாரெங்கும் பரவியதால்
காணாத தலைவரெல்லாம் காட்சிவழி தெரிந்தனரே
நாட்டிற்காய் உயிர்நீத்த நல்லோர்கள் பலபேரை
நாளைவரை பிறக்காத நெஞ்சங்களும் அறிவாரே
அறிவார்ந்த பெரியோரும் அறியாத அறந்தனையே
ஆற்றல்மிகு நடிப்பாலே அவனிக்குத் தந்தாயே
அன்பென்ன அடக்கமென்ன அறிவென்ன ஆண்மையென்ன
எழிலென்ன ஏற்றமென்ன எழுச்சியுறும் சீற்றமென்ன
சீற்றமுடன் உருமிநின்றால் சிங்கங்கள் தோற்றோடும்
அகந்நொந்து அழும்போது அரண்கூட உருகிடுமே
எகத்தாளம் இடும்போது எவர்நெஞ்சும் படிந்திடுமே
இடுப்பசைத்து நடக்கையிலே இந்திரனும் தோற்றிடுவான்
தோல்விதனில் துவளாது வெற்றிதனில் திளைக்காது
தொழில்மீது கொண்டிருந்த தொய்வற்ற பற்றாலே
ஓய்வின்றி உழைத்ததுடன் விடியுமுன்பே சென்றதனை
திரைத்துறையே சொல்கிறது திகட்டாத பக்கங்களில்
பக்கங்கள் பலவெனினும் பரவசமாய் படித்திட்டு
வகையாக வசனங்கள் வான்வெளியில் வீசிட்டு
‘பா’வரிசைப் படங்களிலே பைந்தமிழை வளர்த்ததனை
தேனொழுக ரசித்தவர்கள் தரணியிலே பலருண்டு
பலருண்டு என்றாலும் பார்த்தவர்கள் திகட்டவில்லை
ஹாலிவுட்டும் பாலிவுட்டும் கோலிவுட்டும் டோலிவுட்டும்
கண்களிலே விளக்கெண்ணை கருத்தாக இட்டாலும்
நின்புகழை ஈடுசெய்ய நிகரில்லை அறிவாரே
அறிவார்ந்த பெரியோரும் ஆடுமேய்க்கும் சிறியோரும்
மறுப்பேது மில்லாது மனம்குளிர ஏற்கும்வண்ணம்
சிறப்போடு செதுக்கியநின் செந்தமிழின் சித்திரத்தை
வேற்றுமொழி கலைஞர்கள் வேட்கையுடன் பார்ப்பதுண்டு
பார்த்தவுடன் சொல்கின்றார் படைப்பாளி இவனன்றோ‘
பராசக்தி’ என்றவுடன் பெண்தெய்வம் நினைவிலில்லை
‘பாசமலர்’ என்றவுடன் பாவைஎழில் உணர்விலில்லை
‘தெய்வமகன்’ என்றவுடன் தெய்வங்களும் நினைவிலில்லை
நினைவெல்லாம் நீதானே நெஞ்சமெல்லாம் நீதானே
நினைப்போல வேறொருவர் நிலமெதிலும் காணவில்லை
நீங்காத நினைவலைகள் நாள்தோறும் வாட்டிடுதே
இல்லையென்று சொல்வதற்கு இயலாது போகிறதே
போகின்ற திசையெல்லாம் புகழ்கொணரும் திசையல்ல
திரைத்துறையில் சாதித்தாய் திரைவெளிநீ ஏன்சென்றாய்?
அரசியல் களத்திற்கு அடிமாறிச் சென்றாலும்
அன்பால் இயன்றதை ஆழமாய் செய்தாயே
செய்ததை விளம்பரம் செய்கின்ற பாங்கின்றி
மறுகை அறியாது மகிழ்வோடு வழங்கியதை
மாநிலம் மட்டுமல்ல மாண்பினர் உரைத்ததுடன்
வாழ்க்கையில் நடிக்காத மனமிகு மனிதனென்றார்
மனிதனின் அத்தனை முகந் தனையும்
திரைதனில் காட்டிய திரைத்துறை வேந்தே
தென்றலும் புயலும் தெவிட்டா இனிமையும்
இன்னல் மகிழ்வென இயல்பாய் தந்தாய்
தந்தவை யெல்லாம் தரணி வியந்தது
தமிழன் பெருமையின் தகைமை நிறைந்தது
உன்னைப் போலே வேறொரு நடிகர்
ஒருவன்நீ மட்டும் உலகம் அறிந்தது