08 Apr 2020 12:29 pmFeatured
சிறுகதை
கவிஞர் கா. பாபுசசிதரன்
அந்தக் கடையில் மட்டும் எப்போதுமே கூட்டம் இருக்கும். மங்களம் கடையில், காலை ஆறு மணியிலிருந்தே கூட்டம் சேர்ந்திடும். கடைக்கு சாப்பிட வருபவர்கள், இரவு வெளிச்சத்து விட்டில்கள் போல, சுத்தி வட்டம் போட்டுக்கொண்டே இருப்பார்கள். அந்த அளவிற்கு மங்களத்தின் கைப்பக்குவம். கடைய சுத்தி எப்போதுமே கையில தட்டோடு கூட்டம் காத்திருக்கும். மங்களத்தோட இட்லி தான் நிறையபேரோட காலை ஆகாரம். குழந்தைக்கு ஊட்ட, இல்ல உடம்பு முடியலன்னு யாராவது வந்து கேட்டா கூடுதல் கவனத்தோடு சுட சுட தனியாக எடுத்து, அவங்க கொண்டுவர பாத்திரத்தில போட்டு தருவா மங்களம்.
மங்களத்தோட புருஷன் ஒரு குடிகாரன். சதா குடிச்சிட்டே இருப்பான். காலையிலயே ஏத்திக்கணும், இல்லனா மங்களம் மேல சாமி எறங்கிடும். வாரத்துக்கும் நூறு ரூபா வேலைக்குப் போவான், அதை ரொம்ப ஒழுங்கா குடிச்சிட்டு வந்துடுவான். வாங்குற கூலில, பாதிய குடிச்சிட்டு வீட்டுக்கு வருவான். இல்லனா, மொத்தத்தையும் குடிச்சிட்டு வெறுங்கைய்யா வருவான். தெனமும் வீட்டில சண்டை தான். சில நேரம், புள்ளைங்க சரியா சாப்பிட கூட காசிருக்காது. தூங்கி எழுந்தா, உன் புருஷன் அங்க விழுந்து கெடக்குறான் இங்க விழுந்து கெடக்குறான் என்று யாராவது சொல்லுவாங்க. அவனை தூக்கிக்கிட்டு வர்றதே அவளுக்கு பெரிய வேலை.
கொஞ்சமா குடிச்சிட்டு வர்ற அன்னைக்கு ஒரே காதல் தான், புள்ளைங்க மேலேயும் அவ்வளவு பாசம் காட்டுவான். ஒத்தநாடியா, ஒல்லியா, நல்லா செவசெவன்னு, அழகா, ஆளு நால்லாவே இருப்பான். மங்களத்துக்கும் புருசன்னா கொள்ள உசுரு. அவங்கிட்ட, குடிக்கிறத தவிர வேற ஒரு கொறையும் இல்ல.
அப்படி தான் ஒருநாளு, பஞ்சாயத்து போர்டு ஆலமரத்தடியில குடிச்சிட்டு கீழே விழுந்து கிடந்தவனை பெரிய ஆஸ்பத்திரியில் சேர்த்தா மங்களம், பெறவு அவன் வீடு திரும்பவே இல்ல.
புருசன் போன பிறகு, நிர்க்கதியா நின்ன மங்களம், வேற வழி தெரியாம இட்லி கடை போட்டா. அதுவும், நல்லாவே கைகொடுத்தது.
தாலி அறுத்தவர்களுக்கெல்லாம் தாசில்தார் உத்தியோகம் இட்லிக்கடை தானே.
மூணு புள்ளைங்கள காப்பத்தனுமே, நல்ல படியா கரைசேக்கணுமே என்ற கவலை வேற. அவரவர் வாழ்க்கைய அவரவர் தான் வாழனும், நமக்காக அடுத்தவங்களா வாழ முடியும். எழவுக்கு வந்த செனமெல்லாம் காரியத்தோட ஓடிப்போச்சி. அதுக்கப்புறம், இவ செத்தாளா இருக்காளான்னு கூட யாரும் எட்டி பார்க்கல. அது தானே நெச ஒலகம்.
பெரியவ கல்யாணி ஒன்பதாவது படிக்கிறா, அடுத்து அரசு ஆறாவது படிக்கிறான், கடைசி கடைக்குட்டி ரேணுகா இரண்டாம் வகுப்பு.
புருசன் போன பிறகு, அவ வாழும் உலகத்துல எப்போதுமே மங்களம் சோர்வா இருந்ததேயில்ல. சோர்வாகவும், கவலையாகவும் தன்னை காண்பிச்சுகிட்டதும் இல்ல. எப்போதும் சுறுசுறுப்பா தான் இருப்பா. அவன் பையன் அரசு சொன்னதால ஸ்டிக்கர் பொட்டு மட்டும் வச்சிக்கிட்டா. ஒரு பெண்ணு தாலியறுத்துட்டு தனியா இருந்தாலே, வர பிரச்சனை தான்.
எவனாவது கொஞ்சம் தப்பா பாத்தாலும், பேசினாலும் நெருப்பத்தான் கக்குவா. ரொம்ப சாதுவா இருந்த மங்களம், அவளை சுத்தி போட்டுக்கிட்ட தற்காப்பு வளையம் அது. காலைல நாலு மணிக்கு எழுந்திருச்சு அஞ்சு ஆறு மணிக்கெல்லாம் கடைய ரெடிப்பண்ணிடுவா. ஆறுமணிக்கெல்லாம் பசங்கள எழுப்பிப் படிக்க சொல்லுவா, கடைக்குப் பக்கத்திலேயே பிள்ளைங்க புக்க வெச்சு படிச்சுகிட்டு இருக்கும். இட்லி, தோசை, ஆப்பம், இடியாப்பதோடு இவள் சுத்திக்கிட்டேயிருப்பாள்.
இந்த இட்லி கடைய வச்சி, மூன்று பேரையும் கட்டி கொடுத்துட்டா.
தனியாளா நின்னு, தன் கடமைகளை எல்லாம் முடிச்சுட்டா. புள்ளைங்க எல்லாம் கல்யாணம் ஆகி அவங்க வேற வேற ஊர்ல இருக்காங்க. அவ பையன் மட்டும் சென்னையில கவர்மென்ட் உத்தியோகத்தில இருக்கான்.
கடந்த ஒரு வருசமா மங்களம் இட்லி கடை போடுறதில்ல. இப்போதெல்லாம், பையன் அனுப்புற காசில தான் சாப்பிட்டுட்டு இருக்கா. இட்லி குண்டான், வடசட்டி, ஆப்பக்கடாய், இடியாப்பம் புழியரது, தோசைக்கல்லு, கரண்டிக, இரும்படுப்பு, தாலிப்புச்சட்டி எல்லாமே பரண்ல கிடக்கு.
அவளுக்கு கொஞ்ச நாளா உடம்புக்கு முடியாம படுத்தே கிடக்கிறா. அவ அக்கம்பக்கத்துல இருக்கிறவங்க கிட்ட சொல்லி விட்டு, இட்லி வாங்கிட்டு வரச் சொல்லுவா...
இட்லிய வாங்கிட்டு வரவங்க.,
"மங்களம்., நீ போடுற மல்லிப்பூ இட்லிக்கு இணையாக வருமா இது..." என்பார்கள்.
மனசுல பழச நினைச்சுகிட்டு, அந்த இட்லியும், சட்டினி சாம்பாரையும் சாப்பிடுவாள்.
அவளுக்கு ரொம்ப முடியாம போகவே., அவ மகன் அரசு குடும்பத்தோடு இப்போ ஊருக்கு வந்து இருக்கான்.
"அம்மா..!! பேசாம நீயும் என் கூடவே
சென்னை வந்துரேன்..."
"அங்க பெரிய பெரிய ஆஸ்பத்திரி எல்லாம் இருக்கு நான் நல்லா வச்சு பாத்துக்குறேன் மா..." என்றான்.
"இல்லப்பா அரசு., எனக்கு நம்ம ஊரு தான் எனக்கு பழக்கப்பட்ட எடம். உங்க எல்லாரையும் கரைசேத்த எடம்...."
"கடைசியா, உசுரு போனாலும் இந்த ஓட்டு வீட்டுலேயே போயிடட்டும் பா..."
"இங்கையே இருந்தா, இந்த இடத்திலேயே நான் நிம்மதியா போய் சேருவேன்..." என்றாள்
"அங்க நாலு சுவத்துக்குள்ள என்னால உட்கார்ந்துகிட்டு இருக்க முடியாதுப்பா"
கொஞ்சம் வேப்பங்காத்து நெழலும், போர் தண்ணியும், காலையில எழுப்பி விடும் காக்கா கூட்டமும்,
அப்படி இப்படின்னு வந்து பேசிட்டு போற அஞ்சலை அத்தையும், முனுசாமி தாத்தாவும் போதும்."
அப்படி அவர்கள் பேசிக்கிட்டு இருக்கும்போதே...
ஐந்தாம் வகுப்பு படிக்கும், அரசுவோட பையன் சஞ்சய்., மங்களம் பக்கத்துல வந்தான்.
"ஆயா...!! நீ., ரொம்ப நல்லா இட்லி சுடுவியாமே...
இட்லி பூப்போல இருக்கும் ன்னு அப்பா தெனமும் சொல்வாரு..."
என்றான்.
"ஆயா., நான் ஒருநாள் கூட உன்னோட இட்லிய சாப்பிட்டதே இல்ல. எனக்கு நீ இட்லி சுட்டு தருவியா..." அப்படின்னு கேட்டான்.
படுத்தபடியே மங்களம், சஞ்சய்ய சைகையால கூப்பிட்டு நெருக்கமா தன் நெஞ்சோடு அணைச்சிக்கிட்டா...
கண்ணு ரெண்டும் மேல பரணப்பார்த்துக் கொண்டே இருந்தது. பரணில் போட்ட இட்லி குண்டானையும், இரும்பு அடுப்பையும், வடைசட்டியையும் பார்த்தபடியே இருந்தா. அப்படியே கண்ணு ஓரத்துல தண்ணீ கசிய ஆரம்பித்தது.
சஞ்சய், அரசு பக்கம் திரும்பி...
"அப்பா..!! ஆயா க்கு என்ன ஆச்சி பா..."
"ஆயா., எனக்கு இட்லி சுட்டு தருவாங்களா ப்பா..." என கேட்க
முட்டிக்கிட்டு வந்த அழுகைய மறச்சி கிட்டு, அரசு கண்ண மூடி குலதெய்வத்தை வேண்ட ஆரம்பித்தான். அதில், அம்மா எழுந்து தன் பையனுக்கு இட்லி சுட்டு தருவாங்க என்ற நம்பிக்கை தெரிந்தது...!!
மங்களம் போலவே, ஒரு குடும்பத்தைக் கரைசேர்த்த திருப்தியோட மங்கலத்தோட இட்லி குண்டானும் பரணுல படுத்திருந்தது.