03 Oct 2019 9:11 amFeatured
கேப்டன் தமிழ்ச்செல்வன் – கணேஷ் குமார் யார் வென்றாலும் அது தமிழனின் வெற்றியே
மராட்டிய சட்டசபைக்கு வருகிற 21-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. மகாராஷ்ட்ரா தலைநகர் மும்பையில் 20 லட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள் வசித்து வருகின்றனர். கடந்த 35 ஆண்டுகளுக்கு முன் சுப்ரமணியம் என்பவர் மாட்டுங்கா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார். அதன் பிறகு கேப்டன் தமிழ்ச்செல்வன் கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் பா.ஜனதா சார்பில் சயான் கோலிவாடா தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார். இடையே தமிழர்கள் யாரும் மகாரஷ்ட்ரா சட்டமன்றத்தில் கால்பதிக்கவில்லை
இந்த நிலையில் இந்த தேர்தலில் போட்டியிடும் முதல் வேட்பாளர் பட்டியலை பா.ஜனதா நேற்று வெளியிட்டது. அந்த கட்சி சார்பில்
சயான்-கோலிவாடா தொகுதியில் போட்டியிட மீண்டும் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்கோட்டை அருகே உள்ள பிலாவிடுதி என்ற கிராமத்தை சேர்ந்த கேப்டன் தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ.வுக்கு வாய்ப்பு வழங்கி உள்ளது. இவர் எம்.எல்.ஏ. ஆவதற்கு முன் சயான்கோலிவாடா பகுதியில் கவுன்சிலராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது
இதேபோன்று காங்கிரஸ் கட்சி தனது முதல் வேட்பாளர் பட்டியலை கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது. அதில் சயான் கோலிவாடா தொகுதியில் நெல்லை மாவட்டத்தில் உள்ள வள்ளியூரை சொந்த ஊராகக் கொண்ட தமிழர் கணேஷ்குமார் போட்டியிட அக்கட்சி வாய்ப்பு வழங்கி உள்ளது.
கணேஷ்குமார் கல்லூரி படிக்கும் காலத்தில் இருந்தே காங்கிரசில் இணைந்து பணியாற்றி வருகிறார். மேலும் இளைஞர் காங்கிரசில் தேசிய அளவில் பொறுப்புகளை வகித்து வந்தவர் ஆவார். தற்போது இவர் மும்பை இளைஞர் காங்கிரஸ் தலைவராக உள்ளார். கணேஷ்குமார் மாட்டுங்காவில் உள்ள பிரபல அரோரா தியேட்டரின் உரிமையாளர் நம்பிராஜனின் மகன் ஆவார்.
சயான் கோலிவாடாவில் பா.ஜனதா, காங்கிரஸ் என பிரதான கட்சிகள் சார்பில் 2 தமிழர்கள் போட்டியிடுகிறார்கள்.
சிவசேனா கட்சி ஆதரவுடன் பா.ஜனதா வேட்பாளரும்
தேசியவாத காங்கிரஸ் ஆதரவுடன் காங்கிரஸ் வேட்பாளரும் களத்தில் உள்ளனர்.
இந்த தேர்தலிலும் சயான் கோலிவாடா தொகுதியில் 2 தமிழ் வேட்பாளர்களுக்கு இடையே நேரடி போட்டி நிலவும் சூழலில் இவர்களுக்கு போட்டியாக பலமான வேறு பலமான கட்சி போட்டியிடாததால் மராட்டிய சட்டசபைக்கு மீண்டும் தமிழ் எம்.எல்.ஏ. ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியாகி உள்ளது.
எவர் வென்றாலும் அது தமிழனின் வெற்றியே