01 Jul 2023 10:52 pmFeatured
S.D.சுந்தரேசன், I.A.S (அரசுச் செயலர், அருணாச்சலப்பிரதேசம்)
ஐ.ஏ.எஸ். அதிகாரியாக வேண்டும் என்ற எண்ணம் உதித்தது. சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றால்தான் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக முடியும் என்பதைத் தெரிந்து கொண்டேன். முயன்று படித்துத் தேர்வு எழுதினேன். 1993 ஜூன் மாதம் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற செய்தி கிடைத்தது. ஐ.ஏ.எஸ். சார்ந்த பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு இன்று ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியாற்றி வருகிறேன்.
தேர்வில் வெற்றி பெற்றபின் அந்த மகிழ்ச்சியில் மறைந்தன நாட்கள் சில; ஐ.ஏ.எஸ். தேர்வு பற்றி அறியும் ஆர்வத்தோடு என்னிடம் வந்து கேட்போரிடம் விளக்கம் கூறி கடந்தன சில நாட்கள்; சிவில் சர்வீஸ் தேர்வு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நான் பயின்ற ஆதித்தனார் கல்லூரியினரோடு நானும் அப்பணியில் சேர்ந்து செயல்பட்டதால் சென்றன சில வாரங்கள், ஆயினும் பணியில் சேர்வதற்கு நாட்கள் உள்ளனவே என்ன செய்யலாம்? என்று எண்ணியிருந்தேன்.
”ஐ.ஏ.எஸ். தேர்வு தொடர்பாக நீ பலருக்கும் தெரிவித்த கருத்துக்களைப் புத்தகமாக எழுதி வெளியிட்டால் நீ பணியில் சேர்ந்த பின்பும் பலருக்கும் பயன்படுமே” என்று கூறி ஐ.ஏ.எஸ். தேர்வுகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் புத்தகம் எழுதும் எண்ணத்தை என்னுள் தூண்டியவர் எனது தமிழ்ப் பேராசிரியர் டாக்டர் அப்துல் ரசாக். அந்த தூண்டுதலின் விளைவாக கல்லூரியின் முன்னாள் முதல்வர் டாக்டர் இரா. கனகசபாபதி, பேராசிரியர் டாக்டர் மா.பா. குருசாமி மற்றும் பேராசிரியர் கி. ஆழ்வார் ஆகியோரின் வழிகாட்டுதலுடன் ”நீங்களும் ஐ.ஏ.எஸ். அதிகாரியாகலாம்” எனும் புத்தகம் எழுதினேன். பலருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் புத்தகம் அமைந்திருந்தது. அந்தப் புத்தகத்தில் கூறியுள்ள விபரங்கள் உட்பட தற்போது மாறியுள்ள தேர்வு விபரம் அடங்கிய விழிப்புணர்வு தொடராக இத்தொடர் அமைய உள்ளது. ஐ.ஏ.எஸ் தேர்வுகள் பற்றிய இந்த விழிப்புணர்வுத் தொடரும் ”நீங்கள் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆகலாம்” எனும் எனது புத்தகத்தின் பெயரிலேயே அமைந்திருக்கும்.
இருளைக் கண்டால் அச்சம் வருகிறது பலருக்குக் காரணம் என்ன? இருட்டிவிட்டால் நம் எதிரே இருப்பது என்ன? நடப்பது என்ன ? என்பதை நாம் தெளிவாக காண முடியவில்லை என்பதே ஆகும். ஐ.ஏ.எஸ் தேர்வு எழுதப் பலரும் முயலாமல் இருப்பதற்குக் காரணம் அது பற்றிய விபரம் தெரியாமையே. அதனால்தான் இந்தத் தேர்வு எப்படி இருக்குமோ? நம் பிள்ளைகளால் எப்படி ஐ.ஏ.எஸ் தேர்வு எழுத முடியும்? என்று பெற்றோரும், நம்மால் எப்படி வெற்றி பெற முடியும்? என்று பிள்ளைகளும் நினைக்கும் நிலைமை உள்ளது. இந்த அச்சமே இத்தேர்வில் கலந்து கொள்வதிலிருந்து பலரையும் தடுக்கிறது.
ஐ.ஏ.எஸ். அதிகாரியாக வேண்டும் என்று எண்ணத் தொடங்கிய காலத்திலிருந்து பல வகையான சூழ்நிலைகளை எதிர்கொண்டிருக்கிறேன். எனது எண்ணத்திற்கு ஊக்கம் கொடுத்தோர் பலருண்டு, ஆனாலும் அவர்களால் சரியானபடி வழிகாட்ட முடியவில்லை. கலைக்களஞ்சியம் (Encyclopedia) முழுவதையும் படித்தால் தான் ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற முடியும் என்றார் பேராசிரியர் ஒருவர். தினமும் ஐந்து செய்தித்தாளாவது படித்தால்தான் இந்தத் தேர்வில் வெற்றி பெற முடியும் என்றனர் சிலர். “ஆசைக்கும் ஒரு அளவு வேண்டும். ஐ.ஏ.எஸ். தேர்வு பற்றிய எண்ணமெல்லாம் நமக்கெதற்கு? அதெல்லாம் நம்மால் முடியாது தம்பி! வேறு ஏதாவது வேலைக்கு முயற்சி செய் போதும்” என்ற உபதேசங்களும் வந்தன. இந்த காலகட்டத்தில் இத்தேர்வு தொடர்பான புத்தகங்களை மற்றவர்களுக்குத் தெரியாமல் மறைத்தும் படித்திருக்கிறேன்.
ஐ.ஏ.எஸ். தேர்வு ஒரு போட்டித் தேர்வு. இதில் கலந்துகொள்ளும் ஒவ்வொருவரும் ஒருவருக்கொருவர் போட்டியாக அமைகின்றனர். இதனால் இத்தேர்வுக்குத் தயார் செய்யும் பலர் தாம் பயிலும் புத்தகங்களையும் வழிமுறைகளையும் பற்றி மற்றவர்களுக்குத் தெரிவிப்பதை தவிர்க்கின்றனர். எனக்குத் தெரிந்த ஒருவர் இத்தேர்வுக்குத் தயார் செய்த காலத்தில் தான் சென்று பயிலும் நூலகத்தின் பெயரைக் கூட ரகசியமாக வைத்துக் கொள்ளும் பழக்கம் உடையவர். ஐ.ஏ.எஸ். தேர்வு பற்றி பலருக்கும் தெரியாமல் இருப்பதற்கு இது போன்ற வழக்கங்கள் ஒரு முக்கிய காரணம் என்று கருதுகிறேன்.
இத்தகைய சூழ்நிலையில் சிவில் சர்வீஸ் தேர்வுக்குப் பயன்படும் செய்திகள் பலவற்றை அடிப்படையிலிருந்து புதிதாகக் கற்றுத் தெரிந்து கொள்ள வேண்டிய நிலைமை பலருக்கும் உள்ளது. இதனால் தான் தோல்விகள் பல வருகின்றன. வெற்றிக்குக் காலமும் அதிகமாகிறது. பலவிதமான உண்மைகளையும் , தோல்விகளையும் எதிர்கொண்ட பின்பு தான் இத்தேர்வுக்கான சரியான அணுகுமுறையை அக்காலத்தில் ஓரளவு அறிந்து கொள்ள முடிந்தது. வெற்றி பெற முடிந்தது. கிராமப்புறத்தில் (Rural Area) பிறந்து ஐ.ஏ.எஸ். அதிகாரியாக வேண்டும் என்ற விருப்பம் கொண்டோர் எவரும் இது போன்று இடர்படக் கூடாது என்று விரும்புகிறேன்.
ஐ.ஏ.எஸ். அதிகாரியாக வேண்டும் என்று விரும்புவோர் வெற்றிபெற வேண்டிய சிவில் சர்வீஸ் தேர்வு பற்றியும், ஐ.ஏ.எஸ். சார்ந்த பணிகள் பற்றியும், இத்தேர்வு பற்றிய பொதுமக்களின் கண்ணோட்டம், இத்தேர்வை எழுத எண்ணம் கொண்டோருக்குப் பயன்படும் அணுகுமுறை போன்ற அனைத்தும் உள்ளடக்கியதாக இத்தொடர் அமைந்திருக்கும்.
ஒவ்வொரு பெற்றோரும், தம் பிள்ளைகளுக்கு நல்ல வாழ்க்கை அமைத்துத் தரும் ஆர்வம் உள்ளவர்கள். கிராமப்புற பெற்றோர் பலருக்கும் ஐ.ஏ.எஸ். தேர்வுகள் பற்றி விபரங்கள் தெரியாத நிலையில், தமது பிள்ளைகள் இத்தேர்வு எழுத ஊக்குவிக்கும் நிலையில் இல்லாமல் இருக்கிறார்கள் இத்தேர்வு எழுத விருப்பம் உள்ள போட்டியாளர்களுக்கு, தம் பெற்றோரின் ஊக்கமும் முழு ஒத்துழைப்பும் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும். எனவே இந்தத் தொடர் பெற்றோருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எழுதப்பட்டுள்ளது
ஐ.ஏ.எஸ். தேர்வுகள் பற்றிய மேலும் விபரங்கள் அடுத்த தொடரில் காண்போம்.