12 May 2024 9:00 amFeatured
S.D.சுந்தரேசன், I.A.S (அரசுச் செயலர், அருணாச்சலப்பிரதேசம்)
(11) விருப்பப் பாடம் தேர்வு செய்தல்
சிவில் சர்வீஸ் தேர்வுகளில் தொடக்கநிலைத் தேர்வில் வெற்றி பெறும் போட்டியாளர்கள், அடுத்ததாக எதிர்கொள்வது முதன்மை எழுத்துத் தேர்வு. மொழித்திறன் தேர்வுகள் (2 தாள்கள்), கட்டுரை (1 தான்), பொது அறிவுத் தேர்வுகள் (4 தாள்கள்) மற்றும் விருப்பப் பாடத் தேர்வு (2 தாள்) என ஒன்பது (9) தாள்கள் கொண்டது, முதன்மை எழுத்துத் தேர்வு. இந்த அத்தியாயத்தில் முதன்மை எழுத்துத் தேர்வில் இடம் பெறும் விருப்ப்பாடத் தேர்வு பற்றி விரிவாகக் காண்போம்.
விருப்பப் பாடங்கள்:
UPSC தனது விளம்பரத்தில் வெளியிட்டுள்ள விருப்பப் பாடப்பட்டியலிருந்து ஒரு பாடத்தை முதன்மை எழுத்துத் தேர்வுக்கு விருப்பப்பாடமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். இத்தேர்வுக்கு விருப்பப்பாடங்கள் தேர்ந்தெடுக்க 25 பாடங்களும், 23 மொழி இலக்கியங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றிலிருந்து தேர்வு எழுதுவோர் தங்களுக்கு பிடித்தமான ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டும். விருப்பப்பாடங்களின் பட்டியல் பின்வருமாறு:
விருப்பப் பாடம் தேர்ந்தெடுத்தல்:
சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுவோர், விருப்பப்பாடம் (Optional Subject) தேர்ந்தெடுத்தல் குறித்துச் சிறப்பான கவனம் செலுத்தவேண்டும். முதன்மை எழுத்துத் தேர்வில் விருப்பப் பாடம் முக்கியப் பங்கு வகிக்கிறது. முதன்மை எழுத்துத் தேர்வில் ஒருவர் விருப்பப் பாடம் ஒன்றைத் தேர்ந்தெடுத்துப் பயில வேண்டியதுள்ளது. விருப்பப் பாடத்தை தேர்ந்தெடுப்பது நம் சுயசிந்தனையின் அடிப்படையில் அமைந்திருக்க வேண்டும். விருப்பப்பாடம் தேர்ந்தெடுப்பதில் கவனிக்க வேண்டியவை வருமாறு:
• நமது விருப்பம் என்ன?
• நாம் விரும்பும் பாடத்திற்குத் தேவையான புத்தகங்கள் எளிதில் கிடைக்கக் கூடியவைதானா?
• தேர்ந்தெடுக்கும் பாடத்தில் ஏற்படும் சந்தேகங்களைப் போக்கச் சிறந்த வல்லுனர்கள் கிடைப்பார்களா?
• தேர்ந்தெடுக்கும் பாடத்தைக் கிடைக்கும் நேரத்திற்குள் நன்றாகப் படித்துத் தெளிவு பெற்றுவிட முடியுமா?
ஒருவர் இளநிலை (U.G.) முதுநிலை (P.G.) ஆகிய பட்ட வகுப்புகளில் ஒரே பாடத்தைத் தேர்ந்தெடுத்துப் படித்து அப்பாடத்தில் முழுமையானத் தெளிவு பெற்றவராக இருப்பாராயின், அதை அவரது விருப்பப் பாடமாகக் கொள்ளலாம்.
அதிக மதிப்பெண்கள் எந்தப் பாடத்தில் கிடைக்கும்?
சிவில் சர்வீஸ் தேர்வுக்கு விருப்பப் பாடமாக நாம் தேர்ந்தெடுக்கக்கூடியதை அதிக மதிப்பெண்கள் பெறத்தக்கது என்றோ, அதிக மதிப்பெண்கள் பெற முடியாது என்றோ பிரிக்கமுடியாது. பெரும்பாலான விருப்பப் பாடங்களில் முதல் மதிப்பெண் எழுபது சதவீதத்தை (70%) ஒட்டியதாக இருக்கும். அதுவும் அப்பாடத்தில் தனித்துவமான அறிவு பெற்றிருந்தால் மட்டுமே கிடைக்கும்.
பொதுவாக கணிதம் (Mathematics) பொறியியல் (Engneering), புள்ளியியல் (Statistics), இயற்பியல் (Physics) போன்ற அறிவியல் துறைப் பாடங்களைத் தேர்ந்தெடுத்துப் படித்தால் மற்றவர்களைக் காட்டிலும் அதிக மதிப்பெண்கள் பெறலாம். என்று எண்ணுகிறார்கள். இது சரியன்று. மேலே குறிப்பிட்டுள்ள பாடங்களில் 85% மதிப்பெண்களைப் பல்கலைக்கழகத் தேர்வுகளில் பெற்றவர்கள் கூட சிவில் சர்வீஸ் தேர்வில் இப்பாடங்களைத் தேர்ந்தெடுத்து எழுதி சிறப்பான வெற்றி பெறமுடியவில்லை.
அறிவியல் துறைப் பாடங்களில் பட்டம் பெற்ற பெரும்பாலானோர், கலைத்துறைப் பாடத்தையே (Art Subjects) இத்தேர்வுக்கு விருப்பப் பாடமாகத் தேர்ந்தெடுக்கின்றனர். அதற்காக அறிவியல் பாடங்களைத் தவிர்க்க வேண்டும் என்பது கருத்தன்று. அப்பாடங்கள் நமக்கு மிகவும் பிடித்தமாக அமைந்து அவற்றைப் படித்துச் சிறப்பாகத் தேர்ச்சி பெற முடியும் என்ற நம்பிக்கை நம்மிடம் இருந்தால் அறிவியல் துறைப் பாடங்களை தேர்ந்தெடுக்கலாம்.
மொத்தத்தில் மாணவர்கள் தமது விருப்பம் மற்றும் வாய்ப்புகளைப் பற்றிச் சிந்தித்து விருப்பப் பாடம் தேர்ந்தெடுப்பதே நல்லது. அதிக மதிப்பெண்ணைப் பெற்றுத் தரும் பாடம் எது? என்று தேடிக்கொண்டிருக்க வேண்டியதில்லை. ஏனெனில் இத்தேர்வுக்கு விருப்பப்பாடங்களாக உள்ளவற்றில் அதிக மதிப்பெண் பெற்றுத்தரும் பாடம் என்று எதுவும் இல்லை.
விருப்பப் பாடமாகத் தேர்ந்தெடுக்கப் பல பாடங்கள் குறிப்படப்பட்டிருக்கும்பொழுது, பல மாணவர்கள் விரும்பித் தேர்ந்தெடுக்கும் பாடங்கள் ஒரு சிலவே. அவை வருமாறு:
வரலாறு (History)
சமூகவியல் (Sociology)
பொது நிர்வாகம் (Public Administration)
அரசியல் (Political Science)
புவியியல் (Geography)
மானிடவியல் (Anthropology)
மேற்குறிப்பிட்ட பாடங்களைப் பலரும் விரும்புவதற்கு காரணம் இப்பாடங்களை முழுமையாகப்
பயில அவற்றை ஏற்கெனவே பட்டப்படிப்பு வகுப்பில் படித்திருந்தால்தான் முடியும் என்ற நிலைமை இல்லை. இப்பாடங்களை முன்னர் படித்திருக்காவிட்டாலும் அறிவுத்திறன் உள்ள மாணவர் ஒருவரால் பேராசியர்களின் துணை இல்லாமல் ஆறுமாதம் அல்லது ஒரு வருட காலத்திற்குள் படித்துத் தெளிய பெறமுடியும்.
மொழி இலக்கியங்கள்:
முதன்மை எழுத்துத் தேர்வுக்கு மொழி இலக்கியங்களை ஒரு விருப்பப் பாடமாகத் தேர்ந்தெடுக்கலாம். நாம் எந்த மொழியைத் தாய்மொழியாகக் கொண்டிருந்தாலும், கொடுக்கப்பட்டுள்ள மொழி இலக்கியங்களிலிருந்து நாம் விரும்பிய ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். தமிழ் மொழி இலக்கியம் என்பது பற்றி சென்ற அத்தியாயத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.
UPSC வெளியிட்டுள்ள ஆண்டு அறிக்கையின்படி, கடந்த 2017 முதல் 2022 வரை முதன்மை எழுத்துத் தேர்வு எழுதிய போட்டியாளர்களில், ஆங்கில இலக்கியம், தமிழ் இலக்கியம், மற்ற மொழி இலக்கியங்கள், மற்ற பாடங்கள் ஆகியவற்றினை தேர்வு செய்து எழுதிய போட்டியாளர்களின் எண்ணிக்கை வருமாறு:
விருப்பப்பாடத்தை அவ்வப்போது மாற்றுவது நல்லதன்று:
விருப்பப் பாடத்தைத் தேர்ந்தெடுக்கும் முன்னர் அதைப்பற்றி பலமுறை அறிவுப்பூர்வமாகச் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. ஒன்றைத் தேர்ந்தெடுத்து, அதற்காக உழைக்க ஆரம்பித்த பின்னர் அந்தப் பாடத்தை மாற்றுவது நல்லதன்று. நாம் விரும்பித் தேர்ந்தெடுத்த பாடத்தில் நாம் விரும்பியவாறு தேர்ச்சி பெறமுடியவில்லை என்றால் அதற்காக உடனடியாக அதை மாற்றிவிடவேண்டும் என்று எண்ணவேண்டாம். நாம் எவ்வகையில் உழைத்தால் இப்பாடத்தில் சிறப்பான தேர்ச்சி பெற முடியும் என்று அறிந்து அவ்வகையில் முயல வேண்டும்.தொடர் முயற்சி ஒரு பாடத்தினை முழுமையாகப் படித்துவிட நமக்கு உதவியாக இருக்கும்.
விருப்பப் பாடத்தை தேர்ந்தெடுத்தது அறிவுப் பூர்வமாக சிந்தித்து செய்யப்பட்ட முடிவாக இல்லாவிட்டால் அதனை மாற்றி மற்றொன்றைத் தேர்ந்தெடுப்பது நன்று. விருப்பப் பாடத்தைப் பற்றித் தீர்மானம் செய்யச் சிறிது காலதாமதமானாலும், ஒன்றைத் தீர்மானித்த பின் அப்பாடத்திற்காகத் தொடர்ந்து உழைப்பதே வெற்றிக்கு வழிசெய்யும்.
அடுத்த அத்தியாயத்தில் சிவில் சர்வீஸ் நேர்முகத் தேர்வு பற்றி விரிவாகக் காண்போம்.
குறிப்பு :
(இன்னமும் இரண்டு தொடர்கள் வெளியாகும், இந்த தலைப்பில் வெளியான திரு S.D.சுந்தரேசன், I.A.S அவர்களின் கட்டுரைகள் குறித்த உங்கள் கருத்துக்களை பின்னூட்டமிடுங்கள் (Comments)
-வே.சதானந்தன்
முதன்மை ஆசிரியர்,
தென்னரசு