03 Sep 2023 10:18 amFeatured
S.D.சுந்தரேசன், I.A.S (அரசுச் செயலர், அருணாச்சலப்பிரதேசம்)
3-ஐ.ஏ.எஸ் தேர்வு நம்பிக்கைகளும் உண்மை நிலையும்
சென்ற அத்தியாயத்தில் கூறியபடி சிவில் சர்வீஸ் தேர்வுகள் மூலம் பல்வேறு பணிகளில் எவ்வாறு சேரலாம் என்று அறிந்து கொண்டோம். இவ்வாறு வாய்ப்புகள் பல இருந்தும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களில் பெரும்பாலோர் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி ஐ.ஏ.எஸ் அதிகாரிகளாக வேண்டும் என்று ஏனோ எண்ணுவதில்லை. இதற்குப் பல காரணங்கள் கூறலாம். முக்கியமாக நாம் வாழும் சமுதாயத்தில் நிலைபெற்றுவிட்ட பொதுவான நம்பிக்கைகள் அடிப்படைக் காரணங்களாக அமைகின்றன.
ஒருவர் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக வேண்டுமானால் அவருக்குக் கீழ்கண்ட வாய்ப்புகள் அவசியமானவை என்று பலரும் கருதுகின்றனர். அவை:
மேற்கண்டவைகள் அனைத்தும் உண்மைகள் அல்ல. இவற்றை உண்மைகள் என்று நம்புவோர் இத்தேர்வு எழுதுவது பற்றிச் சிந்திப்பதே இல்லை. ஆனால் உண்மை நிலையோ இத்தவறான நம்பிக்கைகளுக்கு முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது.
கிராமப் பகுதிகளில் சிறு குழந்தைகள் தங்களுக்குள் விளையாடிக் கொள்ளும் போதும், பெரியவர்கள் சிறு குழந்தைகள் மேல் சினங் கொள்ளும் போதும், ”நீ என்ன பெரிய கலெக்டர் என்று நினைப்போ?” என்று கூறுவதை அனைவருமே கேட்டிருப்போம். இது போன்ற கூற்றுகள் நமது கிராமப்புற மக்கள், “கலெக்டர் பதவி என்பது நமக்கு அப்பாற்பட்டது: நாம் முயன்றாலும் அப்பதவி நமக்குக் கிடைக்காது என்று நம்பிக்கை கொண்டவர்கள் என்பதையே புலப்படுத்துகிறது. ஆனால் சிவில் சர்வீஸ் தேர்வில் கிராமப்புற மாணவர்கள் பலர் வெற்றி பெற்றுள்ளனர் என்பதே உண்மை
இத்தேர்வில் வெற்றி பெற அறிவுத் திறன் மற்றும் போதாது. கற்க வேண்டிய பாடம் அளவு அதிகம் என்பதால், அதிக நேரம் செலவு செய்து படிக்க வேண்டியது அவசியமாகிறது. கிராமப்புற நகர்ப்புற மாணவர்களின் அடிப்படை அறிவுத்திறனிலும் ஆற்றலிலும் வேற்றுமை இல்லை. ஒருவகையில் கிராமப்புற மாணவர்களுக்குப் பயன் மிக்க ஒன்றாகவே உள்ளது. நகர்ப்புறங்களில் மாணவர்களின் எண்ணங்களைத் திசை திருப்பும் சூழ்நிலைகள் அதிகமாக உள்ளன. அவர்கள் அதிக நேரம் செலவு செய்து படிக்க முடியாத சூழ்நிலையில் இருக்கிறார்கள். கிராமப்புறம் நேரம் செலவு செய்து படிப்பதற்கு ஏற்ற சூழலையுடன் திகழ்கிறது. உழைத்துப் படிப்பதில் கிராமப்புற மாணவர்களுக்கே அதிக வாய்ப்பு உள்ளது. எனவே பெரும் நகரங்களில் பிறக்காமல் கிராமப்புறத்தில் பிறந்த மாணவர்கள் “நாம் நகரங்களில் பிறந்தால் மட்டுமே ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆக முடியும்” என்று எண்ண வேண்டியதில்லை
சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற ஆங்கில அறிவு அவசியம் தான். ஆனால் ஆங்கில அறிவு அதிகம் இருந்தால் மட்டுமே இத்தேரில் வெற்றி பெற முடியும் என்ற நிலை இன்று இல்லை. இத்தேர்வினை ஆங்கிலம் இந்தி ஆகியவற்றில் மட்டுமல்லாமல் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் எட்டாவது பிரிவு ஏற்றுக் கொண்டுள்ள தமிழ் உட்பட எல்லா மொழிகளிலும் எழுதலாம். ஆங்கிலத்தில் தேர்வு எழுதாமல் வேறு மொழியில் தேர்வு எழுதியவர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மொழியிலேயே நேர்முகத் தேர்வையும் முடித்து விடலாம். அவர்கள் விரும்பினால் மட்டுமே நேர்முகத் தேர்வு ஆங்கிலத்தில் நடைபெறும்
ஆங்கிலத்தில் தேர்வு எழுதியவர்களுக்கு நேர்முகத் தேர்வு ஆங்கிலத்தில் தான் நடைபெறும் அப்போதும் ஆங்கில அறிவு பற்றிய கவலை தேவையற்றது. நேர்முகத் தேர்வில் போட்டியாளரின் அறிவுத்திறன், சிந்திக்கும் திறன் போன்றவை சார்ந்த ஆளுமையைத் தான் சோதிக்கின்றனர். இத்தேர்வுக்கு வருபவர் ஆங்கில மொழி அறிவில் வல்லவரா ஆங்கில மொழியில் ஆங்கிலேயர்களைப் போலவே பேசக்கூடியவர் தானா என்று சோதிப்பதில்லை. இன்றைய இந்தியாவில் அறிவும் திறமையும் உள்ள ஒருவர் ஆங்கில மொழி அறிவு குறைவானவர் என்ற காரணத்துக்காக ஐ.ஏ.எஸ் போன்ற பணிகளைப் பெற முடியாது என்ற நிலை இல்லை.
வகுப்பில் எப்போதும் முதல் நிலையில் இருந்து உயர்ந்த மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெறுவோர் சிலருண்டு. இவர்கள் அனைவரும் முயற்சி எடுத்துக் கடினமாக முறைப்படி உழைத்து தயார் செய்தால் சிவில் சர்வீஸ் தேர்வில் முதல் முயற்சியிலேயே கண்டிப்பாகத் தேர்வு பெற முடியும். உயர்ந்த மதிப்பெண்கள் பெற்றோர் வரிசையில் முன்னணியில் வரவும் முடியும். ஆனால் அவர்கள் மட்டுமே வெற்றிக்கு உரியவர் என எண்ணுவது தவறு. சூழ்நிலை காரணமாகப் பள்ளி , கல்லூரிகளில் பயிலும்போது சராசரி மாணவர்களாக இருந்தவர்களும் விடாமுயற்சியோடு திட்டமிட்டு படித்தால் சிவில் சர்வீஸ் தேர்வில் உறுதியாக வெற்றி பெறலாம். எனவே அக்கறையுடன் கூடிய ஆழமான படிப்பு தான் அடித்தளமே இன்றி முந்தைய தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களோ வெற்றிநிலைகளோ அன்று.
பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து படித்தால் மட்டுமே சிவில் சர்வீஸ் தேர்வில் வெல்ல முடியும் என்ற எண்ணமும் சிலரிடம் நிலவுகிறது சாதாரண இளைஞனாகப் பயிற்சி வகுப்புகளுக்குச் செல்லும் ஒருவர் பயிற்சி முடிந்து வெளிவரும் போது ஐ.ஏ.எஸ் அதிகாரியாவதற்குத் தேவையான அறிவும் திறனும் பெற்று விடுவதில்லை. இத்தேரில் வெற்றி பெற தேவையான தகுதிகள் மூன்று அல்லது நான்கு மாதங்கள் நடைபெறும் பயிற்சி வகுப்புலிருந்து பெறக்கூடியது அன்று. தேவையான அனைத்தையும் படித்து முடித்தவர்களுக்குப் பயிற்சி வகுப்புகள் தேர்வினை நன்முறையில் எழுத ஓரளவுக்கு வழிகாட்டி உதவலாம். ஆனால் இவ் வகுப்புகளில் சேர்வது தான் வெற்றியை உறுதி செய்யும் என்று கூறுவதற்கில்லை. பயிற்சி வகுப்புகளுக்குச் செல்லாமல் சுயமாகப் படித்த பலரும் இத்தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர் என்பதே உண்மை நிலை.
பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து படிப்பதால் சிவில் சர்வீஸ் தேர்வுக்காக நம்மைப் போலத் தயார் செய்வோர் பலரையும் சந்திக்கின்ற அரிய வாய்ப்புகள் கிடைக்கும். இவர்களோடு சேர்ந்து பயிலும்போது அவர்கள் எவ்வாறு தயார் செய்கிறார்கள்? நாம் எவ்வகையில் தயார் செய்து நம்மை மேம்படுத்திக் கொள்ளலாம்? என்று அறிய முடியும். இவற்றையெல்லாம் பயிற்சி நிறுவனங்களில் சேராமல் இத்தேர்வுக்குத் தயார் செய்யும் மாணவர்கள் பலரை சந்தித்தால் கூடப் பெற்றுவிடும் வாய்ப்பு உள்ளது எனவே பயிற்சி வகுப்புகளில் சேர வாய்ப்பு கிட்டவில்லை என்பதை ஒரு காரணமாகக் கொண்டு இத்தேர்வு எழுத முயற்சி செய்யாதிருக்க வேண்டியதில்லை.
ஐ.ஏ.எஸ் அதிகாரியாக வேண்டுமானால் பெரிய மனிதர்களின் சிபாரிசு தேவைப்படுகிறது என்று மற்றொரு தவறான நம்பிக்கை. சாதாரணமாகப் பல தனியார் நிறுவனங்களில் நேர்முகத் தேர்வுக்குச் செல்லும் போது சில மேல்மட்டத்துப் பெரியவர்களின் அறிமுகக் கடிதம் வாங்கிச் செல்வது நடைமுறையில் உள்ளது. அது போன்று நிலைமை தான் சிவில் சர்வீஸ் தேர்விலும் நடைபெறும் என்ற தவறான நம்பிக்கையில் ”நம்மால் அவ்வாறு முடியாது எனவே நாம் இத்தேர்வுக்குத் தயார் செய்வது வீண்” என்று சிலர் முடிவு செய்து விடுகிறார்கள்
சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெறுவதற்காகப் பல்லாயிரக்கணக்கானோர் இரண்டு அல்லது மூன்று ஆண்டுக் காலம் முயன்று படித்து வருகிறார்கள். ஏதாவது பெரிய மனிதர்களின் ஆதரவு இருந்தால் தான் வெற்றி பெற முடியும் என்ற நிலை இருந்தால் இவ்வளவு நம்பிக்கையோடு பலரும் படிக்க முடியுமா? இத்தேர்வில் வெற்றி பெறுபவர்கள் பெரும்பாலும் பெரிய மனிதர்கள் என்று குறிப்பிட அவர்களிடம் அறிமுகம் கூட இல்லாதவர்களே. நேர்முகத் தேர்வுக் குழுவில் அமர்ந்துள்ள அறிஞர்கள் யாரும் ”ஐயோ அவர் கூறிவிட்டாரே: இவர் சொல்லிவிட்டாரே” என்று எண்ணி தங்களது சுய சிந்தனையை ஈடுவைக்கும் சாதாரண மனிதர்கள் அல்ல ஆகவே எந்த நிலையிலும் எவருடைய சிபாரிசும் பெற்றுச் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற முடியாது. இந்த உண்மை தெரியாமல் தவறான யூகங்களால் இத்தேர்வுக்கு முயற்சி செய்யாமல் இருக்க வேண்டாம்.
இத்தேர்வில் வெற்றி பெற வேண்டுமானால் அளவுக்கு அதிகமாகப் பணம் செலவு செய்து படிக்க வேண்டியதிருக்கும் என்ற அச்சமும் உள்ளது. மற்றவற்றைப் போலவே இதிலும் முழு உண்மை இல்லை. படிக்கத் தேவையான முக்கியமான புத்தகங்கள் வாங்க பணம் தேவை தான். ஆனால் பணம் அதிகமாகச் செலவு செய்தால் தான் சிறப்பாகப் படிக்க முடியும் என்று எண்ண வேண்டியதில்லை. நூலகங்களில் இத்தேர்வுக்குத் தேவையான பல சிறந்த புத்தகங்கள் உள்ளன. இப் புத்தகங்களை முறையாகப் பயன்படுத்தினாலே முழுமையான வெற்றியைப் பெற்று விடலாம்.
சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற அடிப்படையாகத் தேவை எதையும், புரிந்து கொள்ளக்கூடிய அறிவு நிலையும், ஆழ்ந்து சிந்திக்கக் கூடிய சிந்தனை திறனும் தோல்வியைக் கண்டு துவளாமல் விடாமுயற்சியுடன் கடினமாக உழைத்துப் படிக்கத் தேவையான மனத்தின்மையுமே ஆகும்.