Thennarasu, தென்னரசு மும்பையிலிருந்து வெளியாகும் செய்தித் தளம்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

நீங்களும் ஐ.ஏ.எஸ் அதிகாரியாகலாம் (தொடர்- 5)

05 Nov 2023 10:23 pmFeatured Posted by: Sadanandan

You already voted!
thennarasu Pictures IAS-05

S.D.சுந்தரேசன், I.A.S (அரசுச் செயலர், அருணாச்சலப்பிரதேசம்)

(5) ஐ.ஏ.எஸ்.தேர்வு முறை

சிவில் சர்வீஸ் தேர்வுகள் எல்லா ஆண்டுகளிலும் நடைபெறுகின்றன. இத்தேர்வு தொடர்பான விளம்பரம் வெளியானதிலிருந்து இறுதி முடிவு வெளியாகும் வரை சுமார் ஒன்றரை ஆண்டுக் காலம் (18 மாதங்கள்) ஆகின்றன. இதற்கான தேர்வுகள் இரண்டு அடுக்குகளைக் கொண்டதாக அமைந்துள்ளன. அவை

  • தொடக்கநிலைத் தேர்வு (Preliminary Exam)
  • முதன்மைத் தேர்வு (Main Exam)

இவற்றுள் முதன்மைத் தேர்வு என்பது எழுத்துத் தேர்வு என்றும் நேர்முகத்தேர்வு என்றும் இரண்டு நிலைகளைக் கொண்டதாக விளங்குகிறது. எனவே, சிவில் சர்வீஸ் தேர்வுகள் நடைமுறையில் மூன்று நிலைகளாக நடைபெறுகின்றன என்று கொள்ளலாம். அவை:

  1. தொடக்கநிலைத் தேர்வு (Preliminary Exam)
  2. முதன்மைத் எழுத்துத் தேர்வு (Main Written Exam)
  3. நேர்முகத் தேர்வு (Interview) மூன்று நிலைகளாக நடைபெறுகின்ற இந்தத் தேர்வுகள் அனைத்திலும் ஒரே ஆண்டில் வெற்றி பெறுபவர்கள் மட்டுமே பணிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

தேர்வுக்கான விளம்பரம்
சிவில் சர்வீஸ் தேர்வு பற்றிய விளம்பரம் பொதுவாக எல்லா பிப்ரவரி மாதங்களிலும் மத்திய தேர்வாணைக் குழுவால் (UPSC) அதன் வலைதளமான www.upsc.gov.in -ல் வெளியிடப்படுகின்றது.

  1. தொடக்கநிலைத் தேர்வு (Preliminary Exam)
    சிவில் சர்வீஸ் தேர்வுகளில் முதலில் நடைபெறுவது தொடக்கநிலைத் தேர்வாகும். இத்தேர்வு பொது அறிவு தொடர்பான இரண்டு தாள்களைக் கொண்டது.

தேர்வுக்கான தாள்கள்: பொது அறிவுத்தாள்:1 - 200 மதிப்பெண்
பொது அறிவுத்தாள்:2 - 200 மதிப்பெண்
-------
மொத்தம் - 400 மதிப்பெண்
-------

பொது அறிவுத்தாள் -I (200 மதிப்பெண்)

தற்கால நிகழ்வுகள், வரலாறு, புவியியல், அரசியல், பொருளாதாரம், அறிவியல் முன்னேற்றம் மற்றும் சூற்றுச்சூழல் போன்றவை பற்றிய நமது பொது அறிவை சோதிக்கும் வகையில் வினாக்கள் கேட்கப்படும்.

பொது அறிவுத்தாள் -II (200 மதிப்பெண்).

தொகுத்து எழுதுதல், மொழித்திறன், ஒரு விசயம் பற்றிய பல் கோண ஆய்வு, முடிவெடிக்கும் திறன், நுண்-அறிவு, 10-ஆம் வகுப்பு தகுதியுள்ள அடிப்படை கணிதம், மற்றும் வரைபடம் அட்டவணை போன்றவற்றின் அடிப்படையில் விபரம் அறிதல் என்று அறிவுத் திறனை சோதிக்கும் வகையில் வினாக்கள் கேட்கப்படும்.

  • தொடக்க நிலைத்தேர்வு கொடுக்கப்பட்ட விடைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் குறிக்கும் (Objective) முறையில் அமைந்திருக்கும். அதாவது ஒரு வினாவிற்கு நான்கு விடைகள் வினாத்தாளில் கொடுக்கப்பட்டிருக்கும். இதில் சரியான விடையைத் தேர்ந்தெடுத்து அதற்குரிய பகுதியில் குறியீடு செய்ய வேண்டும்.
  • பொது அறிவுத்தாள் - II வெற்றி பெற வேண்டுமாயின் குறைந்தது 33% மதிப்பெண் பெற்றிருத்தல் வேண்டும்.
  • ஒவ்வொரு போட்டியாளரும் பொது அறிவுத்தாள்-I, பொது அறிவுத்தாள்-II, ஆகிய இரண்டு தேர்வுகளையும் எழுத வேண்டும். ஒரு தாள் மட்டும் எழுதுவாராயின் அவர் வெற்றி பெறும் தகுதி இழக்கிறார்.
  • தவறான பதில் குறிக்கப்படும் ஒவ்வொரு வினாவிற்கும் 1/3 மதிப்பெண் (0.33 மதிப்பெண்) குறைக்கப்படும். ஒரே வினாவிற்கு ஒன்றுக்கு மேல் விடை குறிப்பிட்டிருந்தால் அது தவறான விடையாகக் கொள்ளப்படும். ஒரு வினாவிற்கு விடை குறிக்காமல் விட்டிருந்தால் அதற்கு மதிப்பெண் இல்லை. வினாத்தாள் விடை குறிக்காமல் விட்டிருந்தால் அதற்கு மதிப்பெண் இல்லை. வினாத்தாள் ஆங்கிலம், இந்தி ஆகிய இரு மொழிகளில் மட்டுமே அமைந்திருக்கும்.
  • ஒவ்வொரு தாளுக்கான தேர்வும் இரண்டு மணி நேரம் நடைபெறும். இரண்டு தாள்களுக்கான தேர்வும் ஒரே நாளில் முடிந்துவிடும். பொதுவாக மே மாத இறுதி ஞாயிற்றுக்கிழமை தொடக்க நிலைத் தேர்வு நடைபெறும். இந்த ஆண்டு 28.5.2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று தேர்வு நடைபெறுகிறது.
  • தேர்வில் கலந்து கொண்டோர் இரண்டு தாள்களிலும் பெற்ற மதிப்பெண்ணின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் சுமார் பத்து லட்சம் போட்டியாளர்கள் விண்ணப்பம் செய்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் எத்தனைப் பேர் இறுதியாக பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்களோ, அது போல் 12 முதல் 13 மடங்கு எண்ணிக்கையினர் மதிப்பெண் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். 1000 பேர் வெவ்வேறு பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்றால் சுமார் 12000 முதல் 13000 பேர் தொடக்க நிலைத்தேர்வில் வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்படுகிறார்கள்.
  1. முதன்மைஎழுத்துத் தேர்வு (Main Written Exam) தொடக்க நிலைத் தேர்வில், வெற்றி பெற்றவர்கள் அனைவரும் முதன்மை எழுத்துத் தேர்வு எழுத அனுமதிக்கப்படுகின்றனர். இத்தேர்வு கீழ்க்கண்ட ஒன்பது தாள்களைக் கொண்டது

தேர்வுக்கான தாள்கள் :

  • முதன்மைத் எழுத்துத் தேர்வு வழக்கமாக உள்ள கட்டுரை வடிவில் விடையெழுதும் முறையில் (Conventional Essay Type) அமைந்திருக்கும். எல்லாத் தேர்வுகளும் மூன்று மணி நேரத்திற்கானத் தேர்வாகும். கட்டுரைத் தேர்வு தவிர மற்ற அனைத்துத் தேர்வுகளும் ஒரு நாளுக்கு இரண்டு என்ற விகிதத்தில் நடந்து முடிந்துவிடும்.
  • இந்திய மொழித் தேர்வு எழுதுவதற்கான மொழிகளுள் தமிழ் மொழியும் ஒன்று. இந்திய மொழி மற்றும் ஆங்கிலம் ஆகிய தேர்வுகளுக்கான வினாத்தாள் "மெட்ரிகுலேஷன்" (Matriculation) அதாவது SSLC (பத்தாம் வகுப்பு தகுதி உடையது.
  • தாள் A மற்றும் தாள் B ஆகிய இந்திய மொழி மற்றும் ஆங்கிலம் ஆகிய தேர்வுகளில் 600 மதிப்பெண்களுக்கு கிடைக்கும் மதிப்பெண் இறுதியாகத் தேர்ந்தெடுக்கக் கணக்கிடப்படுவதில்லை. மொழித் தேர்வுகள் இரண்டையும், நீக்கி தாள் I முதல் தாள் VI வரை உள்ள 1750 மதிப்பெண்களுக்கு தேர்வாளர் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் தான் நேர்முகத் தேர்வுக்கு தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
  • இந்திய மொழி மற்றும் ஆங்கில மொழித் தேர்வுகளில் குறைந்தபட்சம் 25% மதிப்பெண்ணை பெற்றவர்கள் மட்டும் தெரிவு செய்யப்பட்டு அவர்களின் மற்ற தாள்கள் அதாவது தாள் I முதல் தாள் VII வரை திருத்துவதற்கு எடுத்துக் கொள்ளப்படும். UPSC தாள் I முதல் தாள் VII வரை ஒன்றிலோ பலவற்றிலோ குறைந்த பட்ச மதிப்பெண் நிர்ணயம் செய்யுவும் வாய்ப்பிருக்கிறது.
  • முதன்மை எழுத்துத் தேர்வு பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் தவம்பர் மாத முதல் வாரத்தில் ஆரம்பமாகி சுமார் ஒரு மாதத்திற்கு நடைபெறும். இத்தேர்வு முடிவுகள் தொடர்ந்து வரும் ஆண்டின் மார்ச்சு மாத இறுதியில் வெளியாவது வழக்கம்.
  • இத்தேர்வு எழுதும் சுமார் 12,000 முதல் 13,000 பேரிலிருந்து இறுதியாக பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவோரின் எண்ணிக்கை போல் சுமார் இரண்டு மடங்கினர் மதிப்பெண் அடிப்படையில் நேர்முகத் தேர்வுக்கு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். உதாரணமாக 1000 பேர் வெவ்வேறு பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்றால், சுமார் 2000 பேர்
    நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுகிறார்கள்.

விருப்பப் பாடங்கள்:

UPSC தனது விளம்பரத்தில் வெளியிட்டுள்ள விருப்பப் பாடப்பட்டியலிலிருந்து ஒரு பாடத்தை முதன்மை எழுத்துத் தேர்வுக்கு விருப்பப்பாடமாக தேர்ந்தெடுக்க வேண்டும். இத்தேர்வுக்கு விருப்பப்பாடங்கள் தேர்ந்தெடுக்க 25 பாடங்களும், 23 மொழி இலக்கியங்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

விருப்பப்பாடங்களின் பட்டியல் வருமாறு:

வேளாண்மை (Agriculture), கால் நடைபராமரிப்பு மற்றும் கால் நடை மருந்துவவியல் (Animal Husbandry and Veterinary Science), மானுடவியல் (Anthropology), தாவரவியல் (Botany), வேதியியல் (Chemistry), கட்டிடப்பொறியியல் (Civil Engineering). வணிகவியல் மற்றும் கணக்குபதிவியல் (Commerce and Accountancy), பொருளாதாரம் (Economics), மின்பொறியியல் (Electrical Engineering), புவியியல் (Geography), மண்ணியல் (Geology), வரலாறு (History), சட்டம் (Law), மேலாண்மை (Management), கணிதவியல் (Mathematics), இயந்திரப் பொறியியல் (Mechanical Engineering), மருத்துவ அறிவியல் (Modical Science), தத்துவவியல் (Philosophy), இயற்பியல் (Physics), அரசியல் மற்றும் பன்னாட்டுத் தொடர்பு (Political Science and International Relations), உளவியல் (Psychology), பொதுநிர்வாகம் (Public Administration), சமகவியல் (Soclology), புள்ளியியல் (Statistics), விலங்கியல் (Zoology).

கீழ் கண்ட மொழி இலக்கியங்களுள் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம். அஸ்ஸாமி, மலையாளம், மணிப்புரி, மராத்தி, நேபாளி, பெங்காலி, போடோ, ஓயா. டோகிரி, பஞ்சாபி, குஜராத்தி, சமஸ்கிருதம், இந்தி, சிந்தி, கன்னடம், தமிழ், காஷ்மிரி, கொங்கணி, தெலுங்கு, மைத்திலி, உருது மற்றும் ஆங்கிலம்.

மேற்கண்ட பாடங்களும் சில இணைவுகள் (Combinations) விருப்பப் பாடங்களாகத் தேர்ந்தெடுக்க அனுமதிக்கப்படவில்லை.

எந்தெந்தமொழிகளில் தேர்வு எழுதலாம்?

தேர்வுக்கான வினாத்தாள்கள் ஆங்கிலம், இந்தி ஆகிய இருமொழிகளிலும் அச்சிடப்பட்டிருக்கும். ஆங்கிலமொழித் தேர்வு தவிர மற்ற அனைத்துத் தேர்வுகளையும் தமிழ் வழியிலும் எழுத வாய்ப்புள்ளது. அவ்வாறு எழுதுவோருக்க நேர்முகத் தேர்வும் தமிழில் நடைபெறும். அவர்கள் விரும்பினால் நேர்முகத்தேர்வு ஆங்கிலத்தில் நடைபெறும். ஆக, ஆங்கிலம், இந்தி தவிர இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் எட்டாவது பிரிவு ஏற்றுக் கொண்டுள்ள தமிழ் உட்பட அனைத்து மொழிகளிலும் தேர்வு எழுதலாம்; நேர்முகத் தேர்விலும் கலந்து கொள்ளலாம். முதன்மை எழுத்துத் தேர்வு இந்தியா முழுவதிலும் 24 நகரங்களில் நடைபெறுகிறது. தமிழகத்தில் சென்னையில் மட்டும் இத்தேர்வு நடைபெறுகிறது.

3.நேர்முகத் தேர்வு (Interview)

ஆளுமையைச் சோதிப்பதற்கான நேர்முகத் தேர்வு (Interview for Personality Test) என்று அழைக்கப்படும். இத்தேர்வு ஒவ்வொரு போட்டியாளருக்கும் சுமார் 30 நிமிடங்களுக்கு நடைபெறும். சிலருக்கு இந்த நேரம் சிறிது கூடலாம் அல்லது குறையலாம். நேர்முகத் தேர்வு டெல்லியில் மட்டுமே நடைபெறுகிறது.

நேர்முகத் தேர்வு பொது அறிவைச் சோதிப்பதற்கான தேர்வு அன்று. குறுக்குக் கேள்வி கேட்டு மடக்குவது இத்தேர்வுக்கான வழி முறையன்று. இயற்கையாக, அதே சமயத்தில் போட்டியாளரின் மனநிலை மற்றும் அறிவுத்திறனை அறியும் வகையில் ஒரு கலந்துரையாடல் போல அமைந்திருக்கும்.

நேர்முகத் தேர்வு ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் தொடங்கி மே மாதம் வரை நடைபெறுகிறது. நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளும் ஒருவர் 275க்கு பெற்ற மதிப்பெண் அவர் எழுத்துத் தேர்வில் 1750க்கு பெற்ற மதிப்பெண்ணுடன் கூட்டப்படுகிறது. கூட்டப்பட்ட பின் மொத்தம் உள்ள 2025க்கு அவர் பெற்ற மதிப்பெண், மற்றும் சமூகநிலை அடிப்படையில் வெற்றி தீர்மானிக்கப்படுகிறது.

இறுதியாக பணிகளுக்குத் தேந்தெடுக்கப்படுவோர் பட்டியல் மே மாத இறுதியில் அடுத்து வரும் தொடக்கநிலைத் தேர்வுக்கு முன்னர் வெளியிடப்படுகிறது. வெற்றி பெற்றோரின் மதிப்பெண்கள் அவர்களது சமூக நிலை. (SC/ST/OBC/EWS) மற்றும் அவர்களின் விருப்பம் ஆகியவற்றின் அடிப்படையில் பணிகள் ஒதுக்கப்படுகின்றன.

அடுத்து வரும் அத்தியாத்தில் தேர்வு எழுதுவோருக்கான தகுதி மற்றும் தொடர்புடைய விபரங்கள் விவரிக்கப்படும்.

You already voted!
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

Visitors

096532
Users Today : 17
Total Users : 96532
Views Today : 22
Total views : 416664
Who's Online : 0
Your IP Address : 18.223.158.132

Archives (முந்தைய செய்திகள்)