05 Jan 2024 9:24 pmFeatured
S.D.சுந்தரேசன், I.A.S
(அரசுச் செயலர், அருணாச்சலப்பிரதேசம்)
(7) சிவில் சர்வீஸ் தேர்வின் தன்மையும் வெற்றி பெறுவதற்கான அணுகுமுறையும்.
சாதாரணத் தேர்வும் சிவில் சர்வீஸ் தேர்வும்:
சாதாரணமாக பல்கலைக்கழகங்கள் கல்லூரி மாணவர்களுக்கு நடத்தும் தேர்வுக்கும் சிவில் சர்வீஸ் போன்ற போட்டித் தேர்வுகளுக்கும் அதிக வேற்றுமை உண்டு.
கல்லூரிகளில் நடத்தப்படும் தேர்வுகளில் ஒவ்வொரு மாணவரும் எவ்வாறு தேர்வு எழுதுகிறார் என்ற அடிப்படையில் அம்மாணவர் தேர்வில் வெற்றி பெற்றுள்ளாரா? தோல்வி அடைந்துள்ளாரா? என்று முடிவு செய்யப்படும். ஆனால் சிவில் சர்வீஸ் போன்ற போட்டித் தேர்வுகளில் தேர்வு எழுதுபவர் ஒவ்வொருவரும் மற்றவர்களைக் காட்டிலும் எந்த அளவுக்கு அதிகமாக மதிப்பெண்கள் பெறுகிறார்? என்ற அடிப்படையில் வெற்றி தோல்வி முடிவு செய்யப்படுகிறது.
பல்கலைக்கழகத் தேர்வில் ஒரு மாணவர் தோல்வி அடைகிறார் என்றால் அவர் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு கீழ் மதிப்பெண்கள் பெற்றுள்ளார் என்று பொருள்படும்.. இதில் ஏற்படும் தோல்வி மாணவர்களைப் பெருமளவுக்கு மனதளவில் பாதிப்பு ஏற்படுத்துவதில்லை. ஆனால் சிவில் சர்வீஸ் தேர்வில் ஒருவர் தோல்வி அடைகிறார் என்றால் அவர் அம்முறை பதவிக்கு கண்டிப்பாக தேர்ந்தெடுக்கப்பட மாட்டார் என்பது திண்ணம். இதில் ஏற்படும் தோல்வி மனச்சோர்வையும் விரத்தியும் ஏற்படுத்த அதிக வாய்ப்பு உள்ளது
சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் வெளியானதும் தேர்ந்தெடுக்க பட்டவர்களின் பட்டியலில் வெற்றி பெற்றோர் பெற்றிருக்கும் இடம் (Rank In the Selected List) மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஏனெனில் பணிகள் ஒவ்வொன்றும் இத்தேர்வில் போட்டியாளர்கள் பெற்றிருக்கும் இடம் மற்றும் விருப்பம் ஆகியவற்றின் அடிப்படையிலேயே முடிவு செய்யப்படுகிறது.
இத்தேர்வில் வெற்றி பெற வேண்டுமானால், இவ்வளவு மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்ற வரையறை இல்லை. நாம் எவ்வளவு அதிக மதிப்பெண்கள் பெறுகிறோமோ அந்த அளவுக்கு நமது வெற்றி வாய்ப்புகள் அமையும். எனவே ஒவ்வொரு மதிப்பெண்ணுக்கும் முயன்று உழைத்தால் மட்டுமே வெற்றி பெற்று ஐஏஎஸ் அதிகாரியாக முடியும் என்று உணர வேண்டும்.
சிவில் சர்வீஸ் தேர்வின் தொடக்க நிலை தேர்வு, முதன்மை எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வு என்ற மூன்று கட்டத்திலும் ஒருவர் எந்த அளவுக்கு சிறப்பான மதிப்பெண்களை பெற்றிருக்கிறார் என்ற அடிப்படையிலேயே அவரது வெற்றி வாய்ப்பு அமைகிறது.
பெற்றோரின் பங்கு:
தற்சமயம் தமிழகத்திலிருந்து சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயார் செய்வோரின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. இச்சூழலில் இதற்கு முயல்வோர் பலரும் தங்களுக்கு தேவையான ஊக்கத்தையும் ஒத்துழைப்பையும் உறவினர்கள் இருந்தோ நண்பர்களிடமிருந்தோ அல்லது கற்றோரிடமிருந்தோ பெற முடியாத சூழ்நிலையிலேயே இருக்கிறார்கள் இந்நிலையில் பெற்றோர்களின் பங்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
பலரும் முயற்சி செய்யத் துணியாத இந்த தேர்வினை எழுதத் துணிவோருக்கு அந்த எண்ணத்தை பாராட்டி ஒத்துழைப்புக் கொடுக்கும் வகையில் பெற்றோர்கள் செயல்பட வேண்டும். வீட்டுக்கு வெளியில் உள்ளோர் எவரும் ஊக்கப்படுத்தாத நிலையில் வீட்டில் பெற்றோர்களாவது முழுமையாக ஊக்கப்படுத்தினால்தான் இதற்காக ஒருவர் முழு மனதுடன் உழைக்க முடியும்.
பொதுவாக பெற்றோர் எல்லோரும் தம் பிள்ளைகள் நல்ல நிலையில் சிறப்புடன் வாழ வேண்டும் என்றே விரும்புவார்கள் அரசாங்க வேலை வாய்ப்பு குறைவாக உள்ள இக்காலத்தில் பெற்றோர்கள் பெரும்பாலானோர் தம் மகன் இளநிலை பட்டம் பெற்றவுடன் அவனுடைய வாழ்க்கை சிறப்புடன் அமைய வேலை ஒன்றில் அமர்ந்து விடுவது நல்லது என்று எண்ணுகிறார்கள் அவர்களால் முடிந்த அளவுக்கு உதவியும் செய்கிறார்கள்.
இதே பெற்றோர்கள் தம் பிள்ளைகள் உடனடியாக வேலைக்குச் சென்று பொருளீட்ட வேண்டியதில்லை இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் படித்தாலும் பரவாயில்லை என்று எண்ணுவார்களாயின், இந்தியாவின் மிக உயர்ந்த பணிகளில் அப்பிள்ளைகள் அமர்ந்து பணிபுரிய வழி செய்ய முடியும். வெளியாரின் ஒத்துழைப்பு எவ்வளவு கிடைத்தாலும் பெற்றோர்களின் ஒத்துழைப்பைப் பெறாதவர்கள் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெறுவது கடினமே. பெற்றோருக்கு இத்தேர்வின் தன்மை, இதில் வெற்றி பெறுவதால் பெறக்கூடிய நன்மை போன்றவற்றை விளக்கமாக விவரித்து அவர்களது ஒத்துழைப்பை பெறுவது மிகவும் இன்றி அமையாத ஒன்று.
கல்வி கற்றோரின் பிள்ளைகள்தான் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற முடியும் என்றோ, உயர் பதவி வகிக்கும் அதிகாரிகள்தான் தம் பிள்ளைகளை இத்தேர்வுக்கு வழிகாட்ட முடியும் என்றோ எண்ணி விட வேண்டாம் பெற்றோர்கள் படித்தவர்களாகவும் உயர் பதவி வகிப்பவர்களாகவும் இல்லாவிட்டாலும் பிள்ளையின் முன்னேற்றத்தை முதன்மையாகக் கொண்டு ஒத்துழைப்பு கொடுத்தால் போதுமானது.
பெற்றோர், உறவினர்கள், ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களிடமிருந்து பெரும் ஊக்கம் சிறந்த உற்சாகத்தை கொடுக்கும், எதையும் சவாலாக எடுத்து செயல்படுத்துவோருக்கு தமது முயற்சி பற்றி குறை கூறுபவர்கள் வார்த்தைகள் கூட பெரும் சவாலாக அமைந்து வெற்றிக்கு கடுமையாக உழைக்கத் தூண்டுகோலாக அமையும் பெற்றோரின் ஒத்துழைப்போடு தேவையான அறிவுத் திறனும் ஆர்வமும் பெற்றிருந்து கடினமான உழைப்புக்கும் தயாராக இருக்கும் ஒருவர் இத்தேர்வில் கண்டிப்பாக வெற்றி பெற முடியும்.
முழுமையான முயற்சிக்குச் செழுமையான பலன்
போட்டிகள் நிறைந்த சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற முழுமையான முயற்சி இன்றியமையாதது. தகுந்த உழைப்பு இல்லாமலோ முழுமையாக தயார் செய்யாமலே இத்தேர்வு எழுதல் சிறப்பன்று.
இத்தேர்வை எழுத எண்ணும்பொழுதே அதற்காக அனுமதிக்கப்பட்டுள்ள ஆறு முயற்சிகளையும்
(Six Attempts) நாம் பயன்படுத்தும் வகையில் நமது வயது உள்ளதா என்பதைப் பற்றிச் சிந்தித்து செயல்பட வேண்டும். நாம் எவ்வாறு படித்திருந்தாலும் 22 வயதில் கண்டிப்பாக நமது முதல் முயற்சியை தொடங்கி விட வேண்டும். அப்பொழுதுதான் தேவைப்பட்டால் பயன்படும் வகையில் நல்ல முயற்சி செய்ய தேவையான கால அவகாசம் கிடைக்கும் 26 அல்லது 27 வயதில் தான் நமது முதல் முயற்சி தொடங்குவோமானால் இத்தேர்வில் வெற்றி பெற நமக்கு இரண்டு அல்லது குறைந்த முறைதான் முயற்சி செய்ய வாய்ப்பு இருக்கும்.
ஒருமுறை முயற்சி செய்து தோற்று விட்டால் அடுத்த முறை அதனைத் தொடர்ந்ததாக இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல், ஓராண்டோ இரண்டு ஆண்ட்டோ சென்றபின் அடுத்த முயற்சி செய்வது அவ்வளவு பயன் தருவதாக இருக்காது. ஏனெனில் அனைத்தும் நமக்கு நினைவில் நிற்கும் என்று கூறுவதற்கில்லை. மேலும் தேர்வின் தரமும், தேர்வின் முறையும் ஆண்டுக்கு ஆண்டு சற்று மாறுபடுவதால் ஒரு முயற்சிக்கும் அடுத்த முயற்சிக்கும் இடையில் இடைவெளி இல்லாமல் இருப்பதே நல்லது.
கூடுமானவரை இளம் வயதிலேயே (22 அல்லது 23) இத்தேர்வில் வெற்றி பெற்று ஐஏஎஸ் அதிகாரி ஆகி விடுவது தான் சிறப்பு. இளம் வயதில் பணியில் சேர்வோர் அதிக காலம் பணி புரிய முடியும். நாட்டில் பொறுப்பு வாய்ந்த மிக உயர்ந்த அரசு பதவிகள் அவர்களுக்கு கிடைக்கும். இவர்கள் ஓய்வு பெற்ற பின் கிடைக்கும் நன்மைகளும் அதிகமாக இருக்கும்.
சில மாணவர்கள் பல்கலைக்கழகத் தேர்வுகளிலும் கல்லூரித் தேர்வுகளிலும் தொடர்ந்து முதன்மையுடன் திகழ்பவராக இருப்பர். இவர்கள் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற ஒரு சில முயற்சி (Attempts) தேவைப்படலாம் என்று எண்ணுவதற்கும் கூசுகிறார்கள். அம்மாணவர்களின் எண்ணம் எவ்வாறாயினும் பலர் இரு முயற்சிகளுக்குப் பின்னரே வெற்றி பெற்றுள்ளனர். இதுநாள் வரை தேர்வுகளில் முதன்மைப் பெற்று வந்திருக்கிறோம். இந்த தேர்விலும் முதல் முயற்சியிலேயே நாம் சிறப்பான வெற்றி பெற வேண்டும் என்று எண்ணி முயற்சி செய்வதில் தவறில்லை. ஆனால் இத்தேர்வில் தோல்விக்கும் வாய்ப்பு இருப்பதால் இத்தேர்வை எழுத வேண்டாம் என்று எண்ணுவது சரி என்று.
சிவில் சர்வீஸ் தேர்வு எழுத விரும்புவோர் அனைவரும் தம் வயது என்ன? தான் எந்த அளவு தயாராக இருக்கிறோம்? என்பவற்றை ஆராய்ந்து இளம் வயதிலேயே வெற்றி பெற எவ்வகையில் உழைக்க வேண்டும் என்று முடிவு செய்து உழைத்து வெற்றி பெற வேண்டும்.
சிவில் சர்வீஸ் தேர்வுக்கு எவ்வளவு காலம் உழைக்க வேண்டும்? எவற்றைப் படிப்பது? எவ்வாறு படிப்பது? போன்ற தேர்வுக்கு தயார் செய்வது பற்றிய விபரங்கள் அடுத்து வரும் அத்தியாயத்தில் காண்போம்