08 Feb 2024 12:37 amFeatured
S.D.சுந்தரேசன், I.A.S
(அரசுச் செயலர், அருணாச்சலப்பிரதேசம்)
(8) சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயார் செய்வது எவ்வாறு ?
சிவில் சர்வீஸ் தேர்வில் எதிர்பார்க்கப்படும் அறிவின் ஆழமும் அகலமும் அதிகம். எனவே இதற்கு முழுமையாகத் தயார் செய்ய ஆகக்கூடிய காலமும் அதிகமே. ஓரிரு மாதங்கள் படித்து வெற்றி பெறக்கூடிய தேர்வு அல்ல இத்தேர்வு.
எவ்வளவு காலம் உழைக்க வேண்டும்?
சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற எவ்வளவு நாள் உழைக்க வேண்டும்? என்று கேட்டால் நாம் வெற்றி பெற எவ்வளவு காலம் ஆகிறதோ அவ்வளவு காலமும் உழைக்க வேண்டும் என்பதே பதிலாக கூற வேண்டும்.
சிலர் முதல் முயிற்சியிலேயே வெற்றி பெற்றுவிடுவர். இவர்கள் இதற்காக உழைக்கும் காலமும் குறைவாக இருக்கலாம். சிலர் மூன்றாவது அல்லது நான்காவது முயற்சியில் தான் வெற்றி பெறுகின்றனர். இவர்கள் கிட்டத்தட்ட நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளாக இதற்காக உழைத்திருப்பார்கள் எனவே கால அவகாசம் என்பது அவரவர் தேவையைப் பொருத்தது
ஒருவர் பொறியியல் (Engineering) பட்டம் பெற வேண்டுமாயின் அதற்காகக் குறைந்தது நான்கு ஆண்டுகள் கல்லூரி படிப்பு தேவைப்படுகிறது. மருத்துவர் பட்டம் (M.B.B.S) பெற 5 ஆண்டுக் கல்வி அவசியமாகிறது சி.ஏ போன்ற தேர்வுகளில் வெற்றி பெற எட்டு ஆண்டுகளுக்கு மேலும் உழைத்தவர்களும் உண்டு. நிலைமை இவ்வாறு இருக்க ஐ.ஏ.எஸ் தேர்வில் மட்டும் உடனடியாக வெற்றி வேண்டும் என்று எண்ணுவது சாத்தியமாகக் கூடியதுதானா?
கல்லூரிப் படிப்பு முடித்த பின்பு தான் தேர்வுக்குத் தயார் செய்ய வேண்டும் என்ன என்பது சரியன்று. அதிக காலம் உழைத்தால் தான் அதில் வெற்றி பெற முடியும் என்று அறிகிறோம். எனவே இதற்காக முயற்சி செய்வதை தள்ளி போட வேண்டாம். இத்தேர்வு எழுதும் ஆர்வம் முதலிலேயே வந்துவிட்டால் இளநிலை பட்டப்படிப்பு (Under Graduation) படிக்கும் பொழுதே இதற்கு தயார் செய்ய ஆரம்பிப்பது நல்லது. இன்னும் சொல்லப்போனால் பள்ளி படிக்கின்ற காலத்திலேயே தேர்வு பற்றிய விழிப்புணர்வு பெற்று தேர்வுக்கு தயார் செய்யத் தொடங்குவது நல்லது.
சிவில் சர்வீஸ் தேர்வு அகில இந்திய அளவில் நடைபெறும் போட்டித்தேர்வு. கடினமான இத்தேர்வில் வெற்றி பெறச் சற்று அதிகமாக உழைப்பும் காலமும் தேவைப்படுகின்றன. இத்தேர்வில் வெற்றி பெற குறைந்தது இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளாவது உழைக்க வேண்டும். இத்தேர்வு 100 மீட்டர் ஓட்டப்போட்டி போன்றதன்று அதிக தூரம் ஓடக்கூடிய மாரத்தான் ஓட்டப் போட்டி போன்றது. உடனடி முடிவு தெரிய விரும்புவோருக்கு சிவில் சர்வீஸ் தேர்வு ஏற்றதென்று. எவ்வளவு விரைவில் தேர்வுக்காக தயார் செய்ய தொடங்குகிறோமோ அவ்வளவு எளிதில் இத்தேர்வில் வெற்றி பெறலாம்.
தினமும் எத்தனை மணி நேரம் படிக்க வேண்டும்
சிவில் சர்வீஸ் தேர்வு எழுத விரும்பும் பலர் இதற்காகத் தினமும் எத்தனை மணி நேரம் படிக்க வேண்டும்? என்பதை அறிந்து கொள்ள விரும்புகின்றனர். தினமும் இத்தனை மணி நேரமாவது படித்தால் தான் நல்லது என்ற வரையறை எதுவும் இல்லை
நாம் அறிந்து கொள்ள விரும்பும் செய்திகள் நமது மனதில் பதிவதற்கு எவ்வளவு நேரம் ஆகிறதோ அவ்வளவு நேரம் படிப்பது அவசியம். எத்தனை மணி நேரம் படிப்பது என்பது ஒவ்வொருவருக்கும் வேறுபடும். இத்தேர்வு சில நாட்களுக்கு முன்னர் நாள் ஒன்றுக்கு 20 மணி நேரம் படித்தவர்களும் உண்டு. இரண்டு மூன்று மாதங்களாக தினமும் குறைந்தது 10 மணி நேரமாவது படித்தவர்களும் உண்டு பலர் தேர்வுக்கு முந்தைய மாதத்தில் இருந்து தினமும் சராசரி 14 மணி நேரமாவது படித்திருக்கின்றார்கள்
படிக்க வேண்டிய பாடங்களின் அளவு தொடர்ந்து படிப்பதில் உள்ள ஆர்வம் மூளையின் ஏற்புத்திறன், நாம் இருக்கும் சூழ்நிலை ஆகியவற்றிற்கு ஏற்ப படிக்கும் நேர அளவு அமைகிறது. புதிதாக ஒன்றை படிக்கும் பொழுது மெதுவாக படிப்பது நல்லது. அதுவே அப்பாடத்தை தெளிவாக மனதில் பதிய வைக்க உதவும். ஆனால் படித்து முடித்து தேர்வுக்கு முன்னர் திருப்பி பார்க்கும் பொழுது தேவைக்கு ஏற்ப விரைவாகவும் அதிக நேரம் செலவு செய்தும் படிக்க முடியும்.
தேர்வுக்கு தேர்ந்தெடுக்கும் விருப்ப பாடத்தை பட்ட படிப்பிலேயே படித்து முடித்தவர்களுக்கு மற்றவர்களைக் காட்டிலும் குறைந்த அளவு காலமே போதுமானது. விருப்ப பாடத்தை புதிதாக தேர்ந்தெடுத்து படிப்பவர்கள் அதற்கான அதிக நேரம் ஒதுக்க வேண்டும்
படிப்புக்காக முன்னர் அதிக நேரம் செலவு செய்யாதவர்கள் கூட சிவில் சர்வீஸ் தேர்வுக்குத் தயார் செய்ய தொடங்கிய பின் அதிக நேரம் செலவு செய்து படித்துள்ளனர். தொடர்ந்து படிப்பது என்பது முதலில் சற்று சிரமமாகத் தோன்றினாலும் நாட்கள் செல்லச் செல்ல நன்கு பழக்கமானதாகிவிடும். எப்படியாவது ஐ.ஏஎ.ஸ் அதிகாரி ஆகிவிட வேண்டும் என்ற மனதிண்மை (Will Power) தொடர்ந்து கடின உழைப்புக்கு உறுதுணையாக அமையும்.
அதிக நேரம் படித்தால் மூளைக்குக் களைப்பு ஏற்படாதா? அதற்கு ஓய்வு தேவையில்லையா? என்று கேட்கலாம். பொதுவாக தொடர்ந்து ஒரே பாடத்தை படித்துக் கொண்டிருந்தால்தான் மூளைக்கு சோர்வு ஏற்படும். அதன் ஏற்புத்திறன் குறைகிறது. நாம் படிக்கும் பாடத்தை அவ்வப்போது மாற்றினால் தொடர்ந்து களைப்பின்றி படிக்க முடியும்.
எத்தனை மணி நேரம் படித்தாலும் குறைந்தது ஆறு மணி நேர உறக்கமாவது நமக்கு தேவை. அப்போதுதான் நம் உடலும் உள்ளமும் கற்பதற்கு ஏற்ற ஒத்துழைப்பைத் தரும்
எவற்றைப் படிப்பது?
”கண்டதைப் படித்தால் பண்டிதனாகலாம்”, என்று கூறும் வழக்கத்தைப் பலரும் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெறுவதற்குத் தேவையான விபரங்கள் பெறத் தேர்ந்தெடுத்த புத்தகங்களைத் தெளிவாக படித்தலே பயன் தரும் வழியாகும்.
தங்களுக்குக் கிடைக்கும் புத்தகங்கள் அனைத்தையும் படித்தால் தான் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற முடியும் என்று எண்ணுவோர் பலர் உள்ளனர். பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கும் கல்லூரிப்படிப்பில் நுழைந்துள்ளவர்களுக்கும் பல புத்தகங்கள் படிப்பது பயனுள்ள ஒன்றாகும். புத்தகங்கள் படிப்பதில் அவர்களுக்கு உள்ள ஆர்வத்தை வளர்த்துக் கொள்ள இது உதவும். ஆனால் சிவில் சர்வீஸ் தேர்வை எழுத வேண்டும் என்று முடிவு செய்த பின்னும் எல்லா வகை நூல்களையும் வாசிக்க வேண்டும் என்று முயல வேண்டாம். தேர்வில் வெற்றி பெற தேர்வின் தன்மை உணர்ந்து தரமான புத்தகங்களைத் தேர்வு செய்து வாசித்தலே சிறந்த முறையாகும்.
எந்தெந்த புத்தகங்கள் தரமானவை என்று நாம் எப்படி அறியலாம்? - இதற்கு ஒரே வழி, சமீபத்தில் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்களை அணுகி அவர்களது வழிகாட்டுதலைப் பெறுதலே ஆகும். அவர்களுக்குத்தான் எந்தெந்தப் புத்தகங்கள் எந்தெந்த வகையில் சிறந்தது அல்லது பயன்படக்கூடியது என்ற விவரம் தெரிந்திருக்கும். வெற்றி பெற்றவர்களை சந்திக்க முடியாதவர்கள் அதற்காகத் தயார் செய்பவர்களையேனும் சந்தித்து சிறந்த வழிகாட்டுதலைப் பெறலாம். அந்த வகையில் சமூக ஊடகங்களில் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற பலரின் காணொலிகள் காணக்கிடைக்கின்றது. அவற்றின் மூலமாகவும் தேர்வுக்கு தயார் செய்ததற்கான பல விபரங்கள் கிடைக்கும்.
எவ்வாறு படிப்பது
சிவில் சர்வீஸ் தேர்வில் எந்த அளவுக்கு நல்ல மதிப்பெண்கள் பெறுகிறோமோ அந்த அளவுக்கு நாம் விரும்பும் பணியை பெறலாம். எனவே ஒவ்வொரு மதிப்பெண்ணுக்கும் முக்கியத்துவம் கொடுத்து உழைக்கவேண்டியது அவசியம். எவ்வளவு அதிகமாகவும் ஆழமாகவும் தெளிவாகவும், தேவையான விபரங்களைக் கற்கிறோமோ அவ்வளவு அதிகப் பயனை நாம் பெற முடியும்.
எந்த ஒரு பொருள் பற்றித் தெளிவு பெற வேண்டுமானாலும் முதலில் அந்தப் பொருள் பற்றிய முழு விபரத்தையும் அறிந்து கொள்ளும் ஆர்வத்தைப் பெற வேண்டும். இந்த ஆர்வம் இருந்தால்தான் நமது அறிவைப் பயன்படுத்தி பலவற்றை நம் உள்ளத்தில் பதிய வைத்துக் கொள்ள முடியும். ஒரு நாட்டுக்குச் செல்வதற்கு முன் அந்த நாடு பற்றி சிறிதளவாவது தெரிந்திருக்க வேண்டும். இல்லையேல் அந்த நாட்டுக்குச் சென்றதும் திக்குத் தெரியாத காட்டில் இருக்கும் உணர்வு தான் நமக்கு ஏற்படும். இதே போல தான் நாம் எந்த ஒரு பகுதி(Topic) பற்றியும் ஆழ்ந்து படிக்க ஆரம்பிக்கும் முன்னர் அந்தப் பகுதி பற்றிய விபரத்தை ஓரளவாவது அறிந்து கொள்வது நல்லது. அப்போதுதான் மேற்கொண்டு அதிகமாகப் பயில்வதற்கு ஓர் ஆர்வம் நம்முள் தோன்றும்.
சான்றாக, இந்திய விடுதலைப் போரை பற்றிப் படிக்க வேண்டுமானால், முதலில் அது தொடர்பான சிறிய புத்தகத்தை முதலில் படிக்க வேண்டும். இதை ஓரிருமுறை படித்தபின்தான் இந்திய விடுதலைப் போரின் முழு பரிணாமத்தையும் ஓரளவு புரிந்து கொள்ள முடியும். இதற்கு பின்னர் விரிவாக அமைந்துள்ள புத்தகங்களை வாசிக்க வேண்டும். இது போன்ற முறையை எல்லா பாடங்களிலும் உள்ள எல்லா பகுதிகளுக்கும் பயன்படுத்தினால் நல்ல பலன் பெறலாம்.
சிவில் சர்வீஸ் தேர்வுக்குத் தயார் செய்வோர் நெஞ்சில் பதிய வைக்க வேண்டிய முக்கிய விபரங்கள் அதிகம். இவற்றை எவ்வாறு பதிய வைப்பது? என்பது பலருக்கும் தெரியாத மர்மமாக இருக்கிறது. இது அவ்வளவு சிரமமான காரியமன்று. இவற்றையெல்லாம் உள்ளத்தில் பதிய வைக்க விரும்புகின்றோமோ அவை அனைத்தையும் ஒரு சில பக்கங்களில் எழுதி அவற்றை தினமும் காலையில் எழுந்து வாசித்து வந்தால் சுமார் 15 நாட்களுக்குள் பல விஷயங்கள் நம் நெஞ்சில் பதிந்துவிடும். இது தவிர அவற்றை ஒலிப்பதிவு செய்து அடிக்கடி போட்டு கேட்பதும் சிறந்த முறையாகும். இம்முறைகளில் முயற்சி செய்வது சிறந்த பலனைத் தரக்கூடியது.
படிப்பவற்றை மறக்காமல் இருக்க குறிப்பெடுத்துக் கொள்வது பயன் தரும்.
ஆனால் எப்பொழுது குறிப்பெடுப்பது என்பதை சரியாக தெரிந்து கொள்வது நல்லது. முதன்முறையாக ஒன்றைப் பற்றி படிக்கும் பொழுது குறிப்பு எடுக்க வேண்டாம். முதலில் எல்லா விபரங்களும் புதிதாக இருக்கும். எந்த கருத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று தெரியாமல் போய்விடும். ஓரிரு முறை படித்த பின்னர், நாம் வாசித்த பகுதியை பற்றி ஓரளவு அறிந்தவர்களாக இருப்போம். அதன் முக்கிய பகுதிகளை உணர்ந்திருப்போம். அதன் பிறகு நாம் எப்பகுதி பற்றி தெளிவாக அறிந்திருக்கவில்லையோ அது பற்றி குறிப்பு எடுத்தாலே போதும்.
சிவில் சர்வீஸ் தேர்வுகளில் கலந்து கொள்வோர் எந்த அளவுக்கு விவரங்களைத் தெரிந்து வைத்துள்ளனர் என்று மட்டும் சோதிப்பதில்லை. தமக்குத் தெரிந்தவற்றை ஒருவர் எந்த அளவுக்கு ஆராய்ச்சி கண்ணோட்டத்துடன் அணுகுகிறார் என்பதையே மிகுதியாக சோதிக்கிறார்கள். எனவே விவரங்களை தெரிந்து கொள்வதோடு நிறுத்திக் கொள்ளாமல் தெரிந்தவற்றை பல கோணங்களில் ஆராய்ச்சி செய்வது அவசியம்.
தேர்வுக்குத் தயார் செய்வோருக்கு சேர்ந்து பயிலுதல் (Combined Study) மற்றும் குழு விவாதம் மிகவும் பயனுள்ளது. இவற்றுள் குழு விவாதத்தின் பொழுது தெரிந்த செய்திகளை பற்றி பல கோணங்களில் விவாதிக்கிறோம். சிலர் தாம் நேரடியாக புத்தகங்களை படிக்காமல் குழு விவாதம் மூலம் அல்லது சேர்ந்து பயில்வதன் மூலமாக மற்றவர்கள் கூறுவதில் இருந்து விபரங்களை அறிந்து கொள்ளலாம் என்று எண்ணுகின்றனர். இது நேரத்தை மிச்சப்படுத்த ஓரளவுக்கு உதவும். ஆனால் ஒரு பொருள் பற்றி தெளிவாகவும் முழுமையாகவும் அறிய வேண்டுமானால் நாமே நேரடியாக புத்தகங்களை படித்த பின் அது தொடர்பாக நம்மை போல் கற்ற மற்றவர்களுடன் விவாதிப்பதே சிறப்பு.
செய்தித்தாள் வாசிப்பது சிவில் சர்வீஸ் தேர்வுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்பது பலருக்கு தெரியும். ஆனால் அதை எவ்வாறு வாசித்தால் அதிக பயன் கிடைக்கும் என்பதை நுட்பமாக தெரிந்து கொள்ள வேண்டும். செய்தித்தாள் கிடைத்ததும் முதலில் தலையங்கம் பகுதியை வாசித்தல் நன்று. பின்னர் உலகச் செய்திகள் உள்ள பகுதியை வாசிக்க வேண்டும். அதற்கு பின்னர் மற்றவற்றை வாசிக்கலாம். பொதுவாக எல்லோரும் முதல் பக்கத்தில் இருந்து தொடங்குவர். அதை முடித்ததும் தலையங்கம் பகுதியை பின்னர் பார்த்துக் கொள்வோம் என்று முடிவு செய்கின்றனர். இதன் பிறகு செய்தித்தாளை மீண்டும் எடுத்து அப்பகுதியை படிப்போர் மிகக் குறைவு. தலையங்கத்தை முதலில் படித்துவிட்டால் முக்கிய பகுதி வாசித்தவர்கள் ஆகிவிடுகிறோம். அதன்பின்னர் நேரம் அதிகமானால் கூட அனைவரும் அறிந்து கொள்ள துடிக்கும் முதல் பக்க செய்திகளை படித்து விடுவோம். இந்த முறையை பின்பற்றுவதால் நல்ல பயனை பெறலாம்.
மேற்கண்ட விபரங்களைத் தம் சிந்தையில் பதித்துக் கொள்வோர் சிவில் சர்வீஸ் தேர்வுக்காக சிறந்த முறையில் தயார் செய்ய முடியும்.
சிவில் சர்வீஸ் தேர்வுக்கு இன்றியமையாத பொது அறிவினை பெருக்கும் வழிமுறை பற்றி அடுத்த தொடரில் விரிவாக காண்போம்.