10 Mar 2024 1:55 amFeatured
S.D.சுந்தரேசன், I.A.S
(அரசுச் செயலர், அருணாச்சலப்பிரதேசம்)
(9) விழிப்புடன் பொது அறிவைப் பெருக்குவோம்
சிவில் சர்வீஸ் தேர்வுகளில் தொடக்கநிலை தேர்வு, முதன்மை எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு என மூன்று நிலைகளிலும் போட்டியாளர்கள் ஒவ்வொருவருக்கும் பொது அறிவு பற்றிய வினாக்களை எதிர்கொள்ளும் நிலை உள்ளது
தொடக்க நிலை தேர்வில் இரண்டு தாள்களும் 100% பொது அறிவு மற்றும் அறிவுத்திறன் தொடர்பான வினாக்கள் நிறைந்திருக்கும். முதன்மை எழுத்துத் தேர்வில் ஒவ்வொரு போட்டியாளரும் எழுத வேண்டிய ஒன்பது(9) தாள்களில் கட்டுரைத் தாள் மற்றும் பொது அறிவுத் தாள் 1 முதல் 4 வரை உள்ள ஐந்து தாள்களும் பொது அறிவை அடிப்படையாகக் கொண்டவை. இறுதியாக நடைபெறும் நேர்முகத் தேர்விலும் பெரும்பாலும் பொது அறிவு அடிப்படையிலான வினாக்கள் கேட்கப்படுகின்றன. இவ்வாறு அனைத்து நிலையிலும் நம் பொது அறிவினை செறிவு செய்வதன் தேவையான உணர்ந்து அதற்காக ஒவ்வொரு போட்டியாளரும் தம்மை தயார் செய்து கொள்வது இன்றியமையாதது
தொடக்கநிலை தேர்வு:
தொடக்கநிலை தேர்வில் அனைத்து வினாக்களும் பொது அறிவு தொடர்பான வினாக்களே. 300 மதிப்பெண்ணுக்கான முதல் தாள் மற்றும் 300 மதிப்பெண்ணுக்கான இரண்டாம் தாள் ஆகிய இரண்டும் ஒரே நாளில் காலை மாலை தலா 2 மணி நேரம் நடைபெறும் தேர்வுகள், வினாக்கள் கீழ் கண்டவற்றை உள்ளடக்கியதாக அமைந்திருக்கும்.
முதல் தாள்: தேசிய மற்றும் உலகளாவிய அண்மைக்கால நிகழ்வுகள் இந்திய மற்றும் இந்திய தேசிய இயக்க வரலாறு, இந்திய மற்றும் உலக புவியியல் தொடர்பான வினாக்கள், இந்திய அரசியல் மற்றும் பொருளாதாரம் பற்றிய வினாக்கள், சுற்றுச்சூழியல், உயிரியல் பல்வண்மை காலநிலை மற்றும் பொது அறிவியல் போன்றவை தொடர்பான வினாக்கள் கேட்கப்படும்.
இரண்டாம் தாள்: சுருக்கி எழுதுதல், தொடர்வுத்திறன் உட்பட ஒவ்வொருவரிடமும் உள்ள பல் கோணப் பகுப்பாய்வுத் திறன் மற்றும் பிரச்சனை தீர்க்கும் திறன், பொது அறிவுத்திறன், பத்தாம் வகுப்பு தகுதியுள்ள எண் கணிதம் மற்றும் அட்டவணை விளக்கப்படம், வரைப்படம் உள்ளிட்ட தரவுகளின் ஆய்வு தொடர்பான வினாக்கள் கேட்கப்படும்
வினாக்கள் எவ்வாறு அமைந்திருக்கும்?
பொது அறிவுத் தாளில் கேட்கப்படும் வினாக்கள் அனைத்தும் மாணவர்கள் பல காலமாகக் கற்று உணர்ந்தவற்றை சோதிப்பதாகவே அமைந்திருக்கும்
தொடக்கநிலை தேர்வில் ஒவ்வொரு கேள்விகளுக்கும் ABCD என்று நான்கு விடைகள் கொடுக்கப்பட்டு சரியான விடையினை தேர்வு செய்து சிறைத் தாளில் அதற்குரிய கட்டத்தில் குறிப்பிடும் முறையில் அமைந்திருக்கும் என்பதை நாம் அறிவோம், இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் பல வினாக்களில் கொடுக்கப்படும் விடைகள் அனைத்தும் சரியானது போல் தோன்றுவதுண்டு ஆயினும் முழு விபரம் தெரிந்தவர்கள் மிகச் சரியான விடையினை தேர்வு செய்து குறிப்பிட முடியும். இவ்வகை வினாக்களுக்கு சரியான விடையினை குறிப்பதற்கும் பொது அறிவினை சரிவு செய்தல் மிகவும் இன்றி அமையாது.
முதன்மை எழுத்துத் தேர்வு:
முதன்மை எழுத்துத் தேர்வில் கேட்கப்படும் வினாக்கள் போட்டியாளரின் முழுமையான ஆளுமை திறனை சோதிக்கும் வகையில் அமைந்திருக்கும். ஒருவருக்கு அன்றாட நாட்டு நிகழ்வுகளில் விபரம் அறிந்திருக்கிறாரா என்பதை சோதிப்பதை விட அன்றாட நிகழ்வுகளால் ஏற்படும் விளைவுகளை புரிந்துணரும் தன்மை கொண்டிருக்கிறாரா என்பதை சோதிக்கும் வகையில் வினாக்கள் அமைந்திருக்கும்.
தம்மைச் சுற்றிலும் நடைபெறும் விபரம் அறிந்த கற்றறிவு உள்ள ஒருவர் எந்தவித முயற்சியும் இல்லாது விடைகளுக்கும் வகையில் அமைந்திருக்கும். நாட்டு நிர்வாகத்தில் பங்கேற்க உள்ள ஒருவரின் விழிப்புணர்வை சோதிக்கும் வகையிலான வினாக்களாக இருக்கும். வினாக்கள் நாட்டுப் பிரச்சனைகள் பற்றிய போட்டியாளரின் அடிப்படை பட்டறிவு பல்கோண ஆய்வுத் திறன், நாட்டின் பல்வேறுப்பட்ட சமூகப் பொருளாதார இலக்குகள், நோக்கம் மற்றும் தேவை போன்றவை பற்றியதாக அமைந்திருக்கும், இவ்வாறான கேள்விகளுக்கு போட்டியாளர்களின் பதில் தொடர்புடையதாக, அர்த்தமுள்ள மற்றும் போதுமான வகையில் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இவற்றை சோதிக்கும் வகையிலேயே எழுத்துத் தேர்வில் உள்ள நான்கு பொது அறிவுத் தேர்வுக்கான தாள்களில் வினாக்கள் கேட்கப்படுகிறது. ஒவ்வொரு தாளிலும், எவ்வகை பொது அறிவு தொடர்புடைய வினாக்கள் கேட்கப்படும் என்பதை காண்போம்.
பொது அறிவுத் தாள் - 1: இந்திய கலாச்சாரம், பண்பாடு, உலகம் மற்றும் சமூக வரலாறு மற்றும் புவியியல்.
பொது அறிவுத்தாள் - 2: இந்திய ஆட்சிமுறை, அரசியல் சாசனம், அரசியல், சமூக நீதி மற்றும் பன்னாட்டு உறவுகள்
பொது அறிவு தாள் - 3: தொழில்நுட்பம், பொருளாதார முன்னேற்றம், உயிரியல் பல்வகைமை, சுற்றுச்சூழல், பாதுகாப்பு மற்றும் இயற்கை இடர்பாடுகள்.
பொது அறிவு தாள் 4: நன்னெறி (Ethics), நேர்மை (Integrity), உழச்சார்பு நாட்டம் (Aptitude)
வினாக்கள் எவ்வாறு அமைந்திருக்கும்?
பெரும்பாலான வினாக்கள் தேர்வு எழுதுவோர் எந்த அளவுக்கு செய்திகளை (Facts) நினைவில் வைத்துள்ளார் என்று சோதிக்கும் வகையில் அமைவதில்லை. நம் அறிவை பயன்படுத்தி நினைவில் உள்ள செய்திகளை எந்த அளவுக்கு பல குணத்தில் ஆராய்ந்து (Analytical) ஆக பதில் கூறுகிறார் என்பதை சோதிக்கும் வகையிலேயே அமைந்திருக்கும்.
எவற்றைப் படித்து எவ்வாறு தயார் செய்வது?
பொது அறிவு தேர்வுக்குப் படிக்கும் பொழுது தொடக்கநிலைத் தேர்வு, முதன்மை எழுத்துத் தேர்வு ஆகியவற்றுக்கு தனித்தனி காலகட்டத்தில் தயார் செய்ய வேண்டும் என்று எண்ண வேண்டாம். ஒரு தேர்வுக்கு தயார் செய்வது அடுத்ததற்கும் பயன்படும். தொடக்கநிலைத் தேர்வு முதன்மை எழுத்துத் தேர்வு ஆகிய இரண்டுக்குமே பயன்படும் வகையில் முழுமையானதாக (Comprehensive) நமது உழைப்பு அமைய வேண்டும்.
பொது அறிவு தாள்களுக்கு தயார் செய்யும் போது முதலில் தொடக்கநிலைத் தேர்வு, முதன்மை எழுத்துத் தேர்வு ஆகியவற்றின் பொது அறிவு தாள்களுக்கான பாடதிட்டத்தை நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும். பின்னர் கடந்த 10 ஆண்டுகளுக்கான வினாத்தாள்களை ஆராய்வது அவசியம். அவ்வாறு ஆராயும் பொழுது தான் தேர்வுக்கு நாம் எவ்வாறு தயார் செய்ய வேண்டும் என்பதை அறியலாம்.
பொது அறிவுக்கான பாடத்திட்டம் குறைந்த வரிகளில் காணப்பட்டாலும் அனைத்து விபரங்களையும் உள்ளடக்கியதாக விளங்குகிறது. இது ஒரு சில மாதங்களில் படித்து அறிந்து கொள்ளத்தக்கதல்ல. சிறுகச் சிறுக மனதில் படிவது பலவற்றைத் தெரிந்து கொள்வதில் உள்ள ஆர்வத்திற்கேற்பவே (Curiosity to know)
பொது அறிவினை ஒருவர் பெற முடியும்.
பொது அறிவு தேர்வுக்கு தயார் செய்ய இந்தந்த புத்தகங்களைப் படித்தால் போதும் என்று வரையறை செய்ய முடியாது. தேர்வுக்கான பாடத்திட்டத்தில் உள்ள பாடங்கள் தொடர்பாக சிறந்த புத்தகங்களை அறிந்து படித்தல் இன்றியமயாதது.
சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயார் செய்வது குறுகிய காலப் படிப்பல்ல, பொது அறிவைப் பெருக்கிக் கொள்வது, சிறுவயது முதலே நம்முள் இருக்கும் பொது அறிவினை பெருக்கிக்கொள்ளும் ஆர்வத்தினால் உருவாகக்கூடியது, எனினும் 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தொடக்கநிலை தேர்வு நடைபெறுகிறது என்றால் 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் தேர்வுகளுக்காக நேரம் ஒதுக்கி முழுமையாக ஈடுபாட்டுடன் படிக்கத் தொடங்கி விடுவது நல்லது.
பொது அறிவு தேர்வுக்கு தயார் செய்யும் அனைவருக்கும் பின்வருபவை அடிப்படை தேவைகளாகும்
(i) சிவில் சர்வீஸ் தேர்வு பற்றிய அரசின் அறிவிக்கை
(ii) முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்
(iii) செய்தித்தாள் வாசிக்கும் பழக்கம்
(iv) வானொலி மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
(v) என் சி இ ஆர் பாடப் புத்தகம் மற்றும் இந்தியா இயர்புக் வாசித்தல்
(vi) சிவில் சர்வீஸ் தேர்வு தொடர்பான பத்திரிக்கை மற்றும் வலை ஒளி செய்திகள்
அரசு அறிவிக்கையின் மூலம் சிவில் சர்வீஸ் தேர்வுக்கான தகுதி, தேர்வு முறை, பாடத்திட்டம் போன்ற பல விபரங்களை அறிந்து கொள்ளலாம்
படிக்கத் தொடங்கும் முன் முந்தைய ஆண்டு கேள்வித்தாள்களை ஒரு சில முறை வாசித்தல் நன்று. அப்போதுதான் வினாக்கள் எவ்வாறு அமைந்திருக்கின்றன? எந்தெந்த பகுதியில் பற்றி எவ்வாறு வினாக்கள் கேட்கப்படுகின்றன, எந்தெந்த பாடப்பிரிவுகளில் எந்தவிதமான தலைப்புகளில் எத்தனை மதிப்பெண்களுக்கு வினாக்கள் கேட்கப்படுகின்றன என்பன போன்ற விபரங்களை அறிந்து கொள்ள முடியும். நாம் தேர்வுக்கு எவ்வெப் பிரிவு பாடங்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பன போன்ற விபரங்களை நாம் அனுமானிக்க இயலும்
அன்றாட செய்திகளை அறிவதற்கும் ஆங்கில அறிவினை பெருக்குவதற்கும் தினமும் ஆங்கில செய்தித்தாள் படிப்பது நல்லது இந்த வகையில் ”ஹிந்து” (Hindu) ஆங்கில தினசரி மிகவும் பயனுள்ள பத்திரிக்கை.
வானொலியும் தொலைக்காட்சியும் பொது அறிவை பெருக்க பெரிதும் உதவும். வானொலி செய்திகள் கலந்துரையாடல் போன்ற நிகழ்ச்சிகளை கவனித்து வரலாம். தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் செய்திகள் சமீப கால நிகழ்ச்சி பற்றிய செய்திகள் ஆங்கில நிகழ்ச்சிகள் மிகவும் பயனுள்ளவை. தொலைக்காட்சியில் DD India, BBC, Gyan Darshan, DD Bharathi போன்றவை இவ்வகையில் குறிப்பிடத்தக்கது
சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயார் செய்யும் போட்டியாளர்கள் அனைவரும் NCERT எனப்படும் National Council of Educational Research and Training ஏனும் அமைப்பினரின் பள்ளிப் பாடத்திட்ட புத்தகங்களை வாசித்தல் பயனுள்ளதாக இருக்கும். புத்தகங்களில் நான்காம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வறையான புத்தகங்களை வாசித்து வருவது போட்டியாளர்களின் பொது அறிவினை பெருக்குவதற்கு மிகவும் உதவியாக இருக்கும். அறிவியல், வரலாறு, புவியியல், அரசியல், ஆட்சியில், பொருளாதாரம் போன்ற பாடப்பிரிவுகளின் அடிப்படையான (Basic Concepts) அறிந்து கொள்வதற்கு உதவியாக இருக்கும் இவற்றை சில முறை வாசித்த பின் சற்று விரிவாக தெரிந்து கொள்வதற்காக மற்ற புத்தகங்களை வாசிப்பதற்கு ஆர்வத்தினை ஏற்படுத்துவதாக அமையும். Yojana, Kurukshetra Mainstream மற்றும் Pratiyogita Dragon போன்ற பத்திரிக்கைகள் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதும் போட்டியாளர்களின் பொது அறிவினை விசாலப்படுத்தும் வகையில் உள்ளன. சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற பலரும் இவற்றை வாசித்திருக்கிறார்கள். இப்ப புத்தகங்களை நேரடியாகவோ வலைத்தளம் வாயிலாகவோ வாங்கி தொடர்ந்து வாசித்து வருவது பொது அறிவினை பெறுவதற்கு உறுதுணையாக அமையும்.
இவை போக போட்டி நிறைந்த சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயார் செய்வோருக்கென்றே மாத பத்திரிகைகள் வெளி வருகின்றன. இவற்றை தொடர்ந்து வாசித்து வருவதன் மூலமாகவும் தேர்வின் தன்மையை ஓரளவு உணரலாம்.
இவை போக நேர்முகத் தேர்வுக்கு பொது அறிவினை பெருக்குதல் இன்றியமையாதது. அதனைப் பற்றி நேர்முகத் தேர்வுக்கு தயார் செய்தல் பற்றிய அத்தியாயத்தில் விவரிக்கப்படுகிறது.
அடுத்து வரும் அத்தியாயத்தில் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதும் போட்டியாளர்களுக்கு மொழி அறிவின் இன்றியமையாத தேவை பற்றி விவரிக்கப்படுகிறது.