01 Jul 2021 5:38 pmFeatured
தமிழ்நாடு முதலைமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றப்பின் முதல்வரும்,அமைச்சர்களும் ”இந்திய ஒன்றியம்” என்ற சொல்லை பயன்படுத்தி வருகிறார்கள் அத்துடன் சட்டமன்ற முதல் கூட்டத்தில் ஆளுநர் உரையிலும் ”இந்திய ஒன்றியம்” என்றே இருந்தது. தமிழ்நாட்டில் பாஜகவினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துவந்தனர்.
இந்நிலையில் திண்டுக்கல்லைச் சேர்ந்த ராமசாமி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில் திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு இந்திய அரசை ஒன்றிய அரசு என்று அழைப்பதாகவும் அவ்வாறு அழைக்க ஊக்கப்படுத்துவதாகவும் கூறியுள்ளார். எனவே ஒன்றியம் என்ற சொல்லை பயன்படுத்த தடை விதிப்பதுடன் இந்திய அரசு அல்லது பாரத் என்று அழைக்க உத்தரவிட வேண்டும் என்று மனுதாரர் கூறி இருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சிவஞானம், ஆனந்த அடங்கிய அமர்வு ஒன்றிய அரசு என அழைக்க கூடாது என முதல்வருக்கோ, அமைச்சர்களுக்கோ உத்தரவிட முடியாது என தெரிவித்தனர்.
சட்டமன்றத்தில் இவ்வாறு தான் பேச வேண்டும் என உத்தரவிட முடியாது என்றும் அது அவர்களின் தனிப்பட்ட உரிமை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். எனவே தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசு என அழைப்பதற்கு தடை விதிக்க முடியாது என்றும் தெரிவித்த நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
ஒன்றியம் என அழைப்பதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்த பாஜக, அவ்வாறு அழைப்பதை எதிர்த்து நீதிமன்றத்தை நாட போவதாக கூறி வந்த நிலையில், ஒன்றிய அரசு என அழைப்பதை தடை செய்ய முடியாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உறுதிப்பட கூறியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.