18 Oct 2021 9:54 amFeatured
2016இல் ஆறு கோடி... 2021இல் 58 கோடி...
அதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருச்சி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் 43 இடங்களில் அதிரடி சோதனை நடைபெறுகிறது.
விராலிமலை அருகே இலுப்பூரில் மற்றும் சுற்றுவட்டார ஊர்களில் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களிலும் லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மாமனார், தங்கை, தம்பி உள்ளிட்ட உறவினர்களின் வீடுகளிலும் காலை 6 மணி முதல் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகிறது.
அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், அவரது மனைவி ரம்யா மீது லஞ்ச ஒழிப்பு போலீஸ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 2016 ஏப்ரல் 1-ம் தேதியில் இருந்து மார்ச் 31 வரை 5 ஆண்டுகளில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளார். வருமானத்துக்கு அதிகமாக 27 கொடியே 22,56,736 ரூபாய் சொத்து சேர்த்ததாக சி.விஜயபாஸ்கர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மனைவி ரம்யா, மகள்கள் பெயரில் விஜயபாஸ்கர் சொத்துக்கள் வாங்கி குவித்ததாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. லஞ்ச பணத்தின் மூலம் அறக்கட்டளை தொடங்கி கல்வி நிறுவனங்களையும் சி.விஜயபாஸ்கர் நடத்தி வந்துள்ளார். அறக்கட்டளை மூலம் பள்ளி, பொறியியல், செவிலியர், கல்லூரி என 14 கல்வி நிறுவனங்கள் நடத்தி வருகிறார்.
பதவிக்காலத்தில் ரூ.6.6 லட்சத்துக்கு டிப்பர் லாரிகள், சிமெண்ட் கலவை இயந்திரங்கள், ஜே.சி.பி. வாங்கி இருக்கிறார். அமைச்சராக இருந்த போது ரூ.53 லட்சத்துக்கு பி.எம்.டபிள்யூ. கார் வாங்கி இருக்கிறார். ரூ. 40 லட்சம் மதிப்பிலான 85 சவரன் நகைகளும் வாங்கியுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் சிலாவட்டம், மொரப்பாக்கத்தில் சுமார் ரூ.4 கோடிக்கு விவசாய நிலங்களை வாங்கியுள்ளார். லஞ்ச பணத்தில் சென்னை தியாகராயர் நகரில் ரூ.15 கோடிக்கு வீடு ஒன்றையும் வாங்கியுள்ளார்.
அமைச்சராக இருந்த போது பல நிறுவன பங்குகளை ரூ. 28 கோடிக்கு வாங்கி இருக்கிறார். அமைச்சராக இருந்த போது தான் மற்றும் மனைவி, 2 மகள்கள் பெயரில் ரூ.58 கோடிக்கு சொத்துக்கள் வாங்கி குவித்துள்ளார்.
வருமான வரித்துறை கணக்கின் படி 5 ஆண்டில் சி.விஜயபாஸ்கர் வருமானம் ரூ.58.65 கோடி என காட்டப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளில் வங்கிக்கடன், காப்பீட்டுத்தொகை என ரூ.34.5 கோடி செலவு செய்துள்ளார். சி.விஜயபாஸ்கரும் ரம்யாவும் 5 ஆண்டுகளில் செலவு போக ரூ.24 கோடி மட்டுமே சேமித்து இருக்க முடியும். வருமானத்தை மீறி ரூ.27.22 கோடி சொத்து சேர்த்துள்ளதாக சி.விஜயபாஸ்கர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக எப்.ஐ.ஆரில் குறிப்பிடப்பட்டுள்ளது.