23 Feb 2020 3:50 pmFeatured
நேற்று(22.02.2020) மாலை 6 மணியளவில் தமிழ் எழுத்தாளர் மன்றத்தின் கலந்தாய்வுக் கூட்டம் மன்றத் தலைவர் முனைவர் வதிலை பிரதாபன் தலைமையில் மலாடில் உள்ள 117, செஸ் ப்ளாசா அரங்கில் வைத்து நடைபெற்றது
தமிழ் எழுத்தாளர் மன்றம் சார்பாக மலாடு தமிழர் நலச் சங்கத்தலைவர் எல்.பாஸ்கரன் ஒருங்கிணைப்பில் மன்ற ஆலோசகர் பாவரசு முகவை திருநாதன், தமிழறம் இதழாசிரியர் இராமர் மற்றும் எழுத்தாளர் மன்ற உறுப்பினர் முருகன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற நேற்றைய கலந்தாய்வு நிகழ்வு மிகச் சிறப்பாகவும் உணர்வுப்பூர்வமாகவும் வரவிருக்கும் மன்றத்தின் நிகழ்வுகளுக்கு உரமூட்டுவதாகவும் அமைந்தது.
தொடர்ந்து பல கூட்டங்கள் மத்திய மும்பைப் பகுதிகளில் நடத்தப்பட்டு வந்தது அனைவரும் அறிந்ததே.மேற்கு இரயில்வேயில் உள்ள மலாடு பகுதியில் இலட்சக்கணக்கான தமிழர்கள் வாழ்கின்ற சூழலில் மாநில இலக்கிய அமைப்பான தமிழ் எழுத்தாளர் மன்றம் தமது பணிகளை பரந்து விரிந்த அளவில் பல்வேறு பகுதிகளுக்கு முன்னெடுத்துச் செல்ல எண்ணுகின்ற முதல் நிகழ்வாக மலாடில் இருந்து தொடங்கும் வகையிலும் அதனைத் தொடர்ந்து பல்வேறு தமிழ்ச் சங்கங்களை இணைத்துக்கொண்டு பல இலக்கிய நிகழ்வுகளை நடத்துவதும் ஆங்காங்கே இருக்கின்ற தமிழ் அறியாது இருக்கின்ற சிறார்களிடம் மொழிப்பற்றை உருவாக்கும் விதமாக செயல்படுகின்ற தமிழ்ச் சங்கங்களுக்கு தமிழ் எழுத்தாளர் மன்றம் உறுதுணையாக இருக்கவேண்டும் என்றும் தீர்மாணிக்கப்பட்டது.
கூட்டத்தில் சிவாஜி ரசிகர் மன்றத் தலைவர் மருத்துவர் சிவாஜி மூர்த்தி, திருவள்ளுவர் மன்றத் தலைவர் முத்தப்பா, தேசியத் தமிழ்ச் சங்கத்தின் செயலாளர் முத்துராசா, சமூக சேவகர் கனக மணிகண்டன், மலாடு தமிழர் நலச் சங்கத்தைச் சேர்ந்த கனகராஜ் சிவக்கொழுந்து சிவலிங்கம், முனீஸ்வரன் மற்றும் பலர் கலந்து கொண்டதோடு தமிழ் எழுத்தாளர் மன்றத்தின் உறுப்பினர் படிவம் பெற்று நிரப்பிக் கொடுத்து தம்மையும் இணைத்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.