24 Aug 2022 9:43 amFeatured
தமிழ்நாட்டில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் இனி தங்கள் பெயரை எழுதும்போது முன்னெழுத்தையும் (இனிஷியல்) தமிழில்தான் குறிப்பிட வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும், கையொப்பமிடும் சூழ்நிலைகள் அனைத்திலும் தமிழ் முன்னெழுத்துடனே கையொப்பமிட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஏற்கெனவே தமிழ்நாடு அரசு இது தொடர்பான அரசாணையை வெளியிட்டிருந்தது.
அதில் தமிழக முதல்வர் தொடங்கி கடைநிலை ஊழியர்கள் வரை அனைத்து அரசு அலுவலர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் தமிழிலேயே கையொப்பம் இடவும் அதில் முன்னெழுத்தையும் (இனிஷியல்) தமிழிலேயே எழுத வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், மாணவர்களின் தொடக்க கல்வி முதல் கல்லூரிக் காலம் வரை தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் பொருட்டு தமிழை முதன் முதலில் மாணவர்களது பெயரில் சேர்ப்பது சிறப்பானதாக அமையும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி இருந்தனர்.
“பள்ளி, கல்லூரி மாணவர்கள் இடையே தமிழில் பெயர் எழுதும்போது அதன் முன்னெழுத்தையும் தமிழில் எழுதும் நடைமுறையை அன்றாட வாழ்வில் கொண்டு வர வேண்டும். இதற்கு மாணவர்கள் பள்ளிக்குச் சேர அளிக்கும் விண்ணப்பம், வருகைப் பதிவேடு, பள்ளி, கல்லூரி முடித்து பெறும் சான்றிதழ் வரை முன்னெழுத்துடன் வழங்கும் நடைமுறையைக் கொண்டுவரவேண்டும். மேலும் மாணவர்கள் கையொப்பமிடும் சூழ்நிலைகள் அனைத்திலும் தமிழ் முன்னெழுத்துடனே கையொப்பமிட அறிவுறுத்தப்படுகிறது,” என அரசாணையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இது தொடர்பாக அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் உரிய அறிவுரைகள் வழங்க வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையடுத்து, இந்த அரசாணையை மேற்கோள் காட்டி தமிழக பள்ளி கல்வி ஆணையர் அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார்.
அதில், மாணவ மாணவியர், தங்கள் பெயரை எழுதும்போது அதன் முன்னெழுத்தையும் தமிழிலில்தான் எழுத வேண்டும் என்றும் பதிவேடுகளிலும் அதைப் பின்பற்றவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கையை தமிழ் ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர்.