வணக்கம். நான் துரை.தனபாலன். எனது அகவை 65. முச்சங்கம் வைத்து முத்தமிழ் வளர்த்த முதுபெரும் நகராம் மதுரை எனது சொந்த ஊர் ஆகும். நடுநிலைப் பள்ளியில் படிக்கும் போதே தமிழில் கவிதைகள் எழுதத் தொடங்கிய நான், முதுகலைப் பட்டம் பெற்று, ஆசிரியராகப் பணிபுரிந்து, ஓய்விற்குப் பின், தனிப்பட்ட முறையிலும், ஒரு ரூபாய் அறிவியல் தமிழ் மன்றம் மூலமாகவும், முழுநேரத் தமிழ்ப்பணியில் ஈடுபட்டு வருகிறேன்.
திருக்குறள் – தற்கால வாழ்க்கைக்கும் வழிகாட்டும் அறநூல்
உலகத் தமிழ் வளர்ச்சி
தமிழர் பெருமை
செவ்விலக்கியங்களில் இயற்கைக் காட்சிகள் (மதுரை உலகத்தமிழ்ச் சங்க மாத இதழில் வெளியாகி உள்ளது).
தமிழ்ப் பணிகள்
ஒரு ரூபாய் அறிவியல் தமிழ் மன்றத்தின் சிறந்த தமிழ் ஆசிரியராக, இதுவரை ஏராளமான மாணவர்களுக்கும், பெரியவர்களுக்கும் திருக்குறள் வகுப்புகளும், வெளிநாடு வாழ் தமிழர்களின் பிள்ளைகளுக்குத் தமிழ் கற்பிக்கும் வகுப்புகளும் இயங்கலையில் (online) நடத்தி வருகிறேன்.
தமிழக அரசின் அகரமுதலித் திட்டத்தின் கீழ் ‘அறிஞர்கள் கலைச் சொல்லாக்கம்’ செய் திட்டத்தில் கலந்து கொண்டு, பல அருந்தமிழ்ச் சொற்களை உருவாக்கி வருகிறேன்.
‘ழகரப் பணிமன்றம்’ எனும் தமிழ் அமைப்பின் மூலம், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பல பள்ளிகளுக்குச் சென்று, இதுவரை, அங்குள்ள ஆயிரக்கணக்கான மாணவர்களுக்குப் பிழையின்றித் தமிழ் உச்சரிக்கும் பயிற்சி அளித்து வருகிறேன்.
சென்னை, ‘அடையாறு திருக்குறள் சங்கம்’, ‘குரோம்பேட்டை திருக்குறள் பேரவை’ ஆகியவற்றில் புரவலராகவும், தாம்பரம் ‘உலகத் திருக்குறள் பேரவை’யில் உறுப்பினராகவும் இணைந்து, பல கூட்டங்களில் கலந்து கொண்டு, சொற்பொழிவுகள் நிகழ்த்தி, தமிழ்ப்பணி ஆற்றி வருகிறேன்.
‘திருக்குறட் செல்வர்’ எனும் பட்டம், குரோம்பேட்டை திருக்குறள் பேரவையால், எனது ‘குறளமுதம்’ எனும் திருக்குறள் சொற்பொழிவைப் பாராட்டி வழங்கப்பட்டது.
‘மாணவர்க்கேற்ற மணிக்குறள் நூறு’ என்ற எனது நூலைப் பயன்படுத்தி, பள்ளி மாணவர்களுக்குத் திருக்குறள் வகுப்புகள் நடத்தி வருகின்றேன்.
இளம் மாணவர்களுக்கு அழகுத் தமிழ்ப் பெயர் சூட்டி, சான்றிதழ் மற்றும் பரிசுகள் அளித்து ஊக்கி, அவர்களிடையே தமிழ் உணர்வினை வளர்த்து வருகிறேன்.
எனது ‘திருக்குறள் – காமத்துப்பாலில் இலக்கிய நயம்’ என்னும் நூலானது:
தஞ்சையில் நடைபெற்ற ‘உலகத் தமிழ்ப் படைப்பாளிகள் மாநாட்டில்’ சிறந்த நூலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
சென்னையில், தமிழ்ச் சான்றோர்களால் நடத்தப்பட்டு வரும், ‘உலகளாவிய உன்னத மானிட சேவை மையம்’ எனும் தமிழ் அமைப்பால் சிறந்த நூலாகத் தேர்வாகி, அடியேனுக்கு ‘தமிழ் இலக்கிய மாமணி’ விருதினைப் பெற்றுத் தந்தது.
சென்னை, அடையாறு திருக்குறள் சங்கத்தால் அரிய நூல் என்று தேர்வு செய்யப்பட்டு, ‘இலக்கியத் தேனீ’ எனும் பட்டம் வழங்கப்பட்டது.
பண்ணுருட்டி செந்தமிழ் இலக்கியச் சங்கத்தின் முப்பெரும் விழாவில், சிறந்த நூலாகத் தேர்வு செய்யப்பட்டு, ‘எழுத்துச் செம்மல்’ எனும் விருதும், பரிசும் வழங்கப்பட்டன.
தவத்திரு.குன்றக்குடி அடிகளாரால் துவங்கப்பட்ட, சென்னை, ‘உலகத் திருக்குறள் பேரவை’ நடத்திய போட்டியில் சிறந்த நூலாகத் தேர்வு செய்யப்பட்டது.
வாழும் பூமியை வணங்கிப் போற்று! வானில் வீடு தேடிட வேண்டாம்! சூழும் இயற்கையில் சுருதியை ஏற்று! சூதாம் செயற்கைச் சூழ்ச்சிகள் வேண்டாம்! நலந்தான் நல்கும் வளங்கள் காத்து நல்லுயிர் ஓம்பும் சூழல் காத்து குழந்தாய், மனிதம் கூடிக் காத்து குவலயம் காக்கும் அறிவுடன் வாழ்க!