19 Jan 2022 12:24 amFeatured
தென்னரசு மின்னிதழ் சிறுகதைப் போட்டி-05
படைப்பாளர் - விவேக் சண்முகம், சென்னை
அழகிய பூந்தோட்டத்துடன் இருக்கும் சிறிய வீட்டிற்கு சொந்தக்காரர்; அந்த முதியவர். வேலியின் உள்புறம் சூரியன் தன் தங்க கைவிரல்களால் அத்தோட்டத்தை தடவிச் செல்லும் மாலைப்பொழுதில் முதியவர் பராமரித்தல், நீர் பாய்ச்சுதல் என்று இதமாக நேரத்தை கழிப்பார்.
வேலியின் வெளிப்புறத்தில் பட்டாம்பூச்சிக் கூட்டத்தைப் போல சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருக்க ஒரு சிறுமி மட்டும் வேலியின் மீது சாய்ந்து சிந்தனையில் மூழ்கியிருந்தாள். கண்களில் ஒளிந்திருந்த ரசனையை வாரிவரியாகப் படித்த முதியவர் தோட்டத்தின் ஒரு ரோஜாவை அவளுக்குச் சொந்தமாக்கியதும், அவள் பற்கள் பூத்துக் குலுங்கின. சிறுமி தான் விளையாடியக் கூட்டத்திடம் மகிழ்ச்சியை பகிர, அந்த குறும்புக் கூட்டத்தின் சேட்டை விரல்களுக்கு ஈடு கொடுக்க முடியாமல் அந்த ரோஜா பூ தன் இதழ்களை இழக்க சிறுமியின் கண்களில் நீர் உதிர்ந்தது.
இவ்வனைத்தையும் ரசித்த முதியவர் சிறுமியை தன் தோள்களுக்குப் பரிசளித்து 'ஒன்று போனால் என்ன? நிச்சயம் வேறொன்று இருக்கும், நாளை வந்துப்பார் உனக்கானது கிடைக்கலாம்” என்று நம்பிக்கையை விதைத்தார்;.
மறுநாள் மாலை முதியவரிடம் தோட்டத்தில்பூக்களைப் பற்றி பிரம்மிப்பாக விதவிதமாக கேள்விக் கேட்டுக் கொண்டிருந்த சிறுமி திடீரென மாடியில் மாட்டிவைக்கப்பட்ட “TO-LET” போர்டை பற்றி வினவினாள். அதற்கு முதியவர் தன் 'நண்பர் சென்று விட்டதாலும், இனிமேல் இங்கு இருக்கமாட்டார்” என்பதாலும் அதை மாட்டியதாகக் கூறியதோடு? 'வருபவா;கள் அனைவரும் வாடகைக்கே!” என்று நகைத்தப்படி விதையை விதைத்தார்.
நாட்கள் செல்ல, ஒரு நாள் சிறுமி தோட்டத்தில் நுழைய அவர் வீட்டில் மக்கள் கூட்டம் காணப்பட்டது. தோட்டத்தில் தனியாக சுற்றித்திரிந்த தன்னை கூட்டத்தில் ஒருவர் கவனிப்பதைக் கண்டு பேட்டரி குறையும் பொம்மைப் போல் கொஞ்சகொஞ்சமாக தன் ஆட்டத்தைக் குறைத்து அவர் அழைப்பில் அருகில் சென்றாள். முதியவரை தேடிய கண்கள் இப்போது அவரிடம் பதிலை எதிர்ப்பார்த்தது. அவர் ”முதியவர் சென்றுவிட்டார், இனிமே இங்கு இருக்கமாட்டார்” எனக்கூற சிறுமியின் விழியிரண்டும் சில விநாடிகள் மௌன அஞ்சலி செலுத்தியது.
நொடிப்பொழுதில் மாடிக்கு சென்று அவள் “TO-LET” போர்ட்டை கீழே எடுத்து வந்து மாட்டினாள்.