Thennarasu, தென்னரசு மும்பையிலிருந்து வெளியாகும் செய்தித் தளம்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

பட்டா – பெரணமல்லூர் சேகரன்

17 Jan 2022 1:45 amFeatured Posted by: Sadanandan

You already voted!

தென்னரசு மின்னிதழ் சிறுகதைப் போட்டி-06
படைப்பாளர் - பெரணமல்லூர் சேகரன்

கொசுக்கடியொரு புறம் என்றால் மறுபுறம் நினைவுச் சங்கிலியின் அனத்தல். மத்தளத்திற்கான இருபக்க இடியாய் உறக்கம் தங்கம்மாவுடன் சண்டையிட்டது.

பெயருக்கொன்றும் குறைச்சலில்லை. பெயரில்தான் தங்கம்மா. நிஜத்தில் குண்டுமணி பொன்னகை கூட உடம்பில் இல்லை. பார்வையற்றவன், பெயரில் கண்ணாயிரம், பிச்சைக்காரன், பெயரில் கோட்டீஸ்வரன் இருப்பதில்லையா? அது மாதிரிதான். பெற்றவர்கள் பெயர் வைக்க காசா, பணமா யோசிக்க? வாயில் வந்தது, அப்பன், பாட்டன், முப்பாட்டன், அம்மா, பாட்டி என அவர்களின் பெயரையோ, குலதெய்வங்களின் பெயரையோ வைப்பதுமுண்டு. எது எப்படியோ தங்கம்மாவுக்கு வைத்த பெயர் மீது அவளுக்கே விருப்பமில்லை.

என்னதான் இருளர் குடியாக இருந்தாலும் பசி, பட்டினி இல்லாமல் இருந்தாலே போதும் என்கிற மனோநிலை தான். இப்பவும் ரேஷன் அரிசியில் சாதம் வடித்து கத்தரிக்காய் குழம்பு வைத்து புருஷனுக்கும் மகனுக்கும் மகளுக்கும் சாப்பாடு போட்டு சாப்பிட்ட பிறகு சட்டியைப் பார்த்தாள். அரை வயிறு நிரம்பும். பரவாயில்லை என்று நினைத்துக் கொண்டது மனம்.

டவுன் பஞ்சாயத்துன்னுதான் பேரு. எந்த வசதியுமில்ல. மூனாவது தலமுறையா பத்துக்குப் பத்து ரூம்ல தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா, புருஷன், ரெண்டு பசங்களோட எப்படி அடஞ்சிக் கெடக்கிறது? மல சங்கத்துல பட்டா கேட்டு நம்மள மாதிரி பதினஞ்சி குடும்பம் எத்தினி தரம் போராடுறது? எப்படியோ மனசு வந்து இப்பத்தான் மணிகார், ஆர்.ஐ, சர்வேயர், தாசில்தார்னு வந்து கைகாமிச்சிட்டுப் போயி ஒரு வாரமாச்சு. இந்த பாழாப் போன மக்களும் சட்டுப்புட்டுனு கொட்டாயப் போட்டா தான!

மனதுடன் பேசிக் கொண்டிருந்த தங்கம்மாவுக்கு முனகல் சத்தம் கேட்கவே எழுந்து பெட்ரமாஸ் விளக்கு நாடாவை உயர்த்திப் பார்த்தாள். மகனும் மகளும் கொசுக்கடியில் முனகிக்கொண்டே கொசுவை அடித்துக் கொண்டு கண்ணை மூடிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் மீது சேலையை நன்றாகப் போர்த்தி கால்களைச் சுற்றி சுருட்டிவிட்டாள். மீண்டும் பெட்ரோமாஸ் விளக்கு நாடாவைத் தாழ்த்திவிட்டு வந்து படுத்துக் கொண்டாள்.

புருஷன் ஞாபகம் வந்தது. பழைய வீட்டில் பெருசுகளுடன் படுக்கப் போய்விட்டான்.

"நீங்க போட்டிருக்கிற குடிசைலதான் தங்கனும். இல்லன்னா நீங்க பேருக்குத் தான் பட்டா கேப்பிங்க அப்புறம் வித்துட்டு வேற இடத்துக்குப் போய்விடுவிங்கன்னு எகத்தாளமா தாசில்தார் பேசுறாரு"

மலைவாழ் மக்கள் சங்கத் தலைவர் சொன்னது தங்கம்மாவின் நினைவுக்கு வந்தது.

"எங்க சொன்னா கேக்குதுங்க? புருஷங்காரன் பழய வீட்ல போய் படுத்துக்கினான். எதையாவது சொன்னாலோ, அவர் சொல்றத மீறிக் கேட்டாலோ 'அதனால்தாண்டி உன்னைக் கட்னவன் ரெண்டு வருசத்துல ரெண்டு புள்ளய குடுத்துட்டு ஆந்திராவுக்குப் பூட்டான்'னு குத்திக்காட்றான். என்ன செய்ய? என் நெலமதான் இப்படின்னா பரிமளான்றவ புருஷன் எந்நேரமும் குடி குடின்னு பொண்டாட்டி கஷ்டப்பட்டு சம்பாதிச்சிக் கொண்டாறத அழிச்சிட்டுத் திரியறான். மளிகை சாமான் இல்லாம புள்ளைக்கும் இந்த ராத்திரியில கஞ்சியக் குடிப்புட்டுத் தானும் குடிச்சிட்டுப் படுத்துக் கெடக்கா. அவள் புருஷனோ குடிச்சிட்டு வந்தவன் பாற மேல படுத்துக் கெடக்கான். வீட்டுக்கு வீடு வாசப்படிதான்.

இப்போது முகத்தின் மீது உட்கார்ந்து கொசுவைப் படாரென அடித்து நசுக்கினாள். குடிசையின் பக்கவாட்டில் ஓலைகள் கட்டப்படாததால் சில்லென்ற காற்று பக்கத்து ஏரி நீரிலிருந்து வந்து படுத்தியது. ஊசியால் குத்துவதைப் போல காற்று. பழைய வீட்டில் இருக்கும் சேலையை நினைத்துக் கொண்டாள். நாளைக்கு எடுத்துக் கொண்டு வந்தால்தான் போர்த்திக் கொள்ள முடியும் என்று தீர்மானித்தது மனம் மாடு அசைபோடுவதைப் போல பழைய சம்பவங்கள் வந்து போயின.

"இருளக் கூட்டத்துக்கு வழி காட்னதே நீங்கதான! மலையில இருக்கிற முருகருக்கே இது அடுக்காது! திருனா சமயங்கள்ல ஏராளமான கூட்டம் வரும். அப்ப கீழே இந்த குடிசைங்களும், கலீஜ் பண்ற இருளருங்களும் இருந்தா நல்லாவா இருக்கும்? நாங்க இத விடமாட்டோம். எங்கெங்க போகுமோ அங்கெல்லாம் போவம்" னு கோயில் நிர்வாகம் பார்க்கும் கந்தசாமியின் மகள் கொக்கரித்து தங்கம்மாவின் நினைவுக்கு வந்தது.

"தோ பாருங்க..சும்மா அனத்தாதீங்க..அந்த முருகனோட பொண்டாட்டி வள்ளி யார் தெரியும்ல, வள்ளியே பழங்குடிதான், நீங்க என்னவோ பழங்குடி மக்களக் கேவலமா பாக்கறீங்க! இத கம்ப்ளெயிண்டா குடுத்தா
உங்க நெலம என்னாகும்னு யோசிங்க"ன்னு தோழர் செல்வன் சொன்னதும் அந்த இடமே களேபரமானதும் கண்முன் நின்றது. எதிர்த்தரப்பு கூட்டமாக சேர்ந்துவிட வாயில் இந்த வார்த்தைகள் என்றில்லாமல் சகட்டுமேனிக்கு வந்து விழுந்தன.

செல்வன் சொன்னது நடந்தே விட்டது. அதற்கேற்றாற்போல் ஏற்கெனவே போடப்பட்டிருந்த பத்து குடிசைகளில் ஒன்று பிய்த்தெறியப்பட்டது. வார்த்தை வசவுகள் சரமாரியாக விழுந்தன. தகவல் தோழர்களுக்குப் போகவே போலீஸ் ஸ்டேஷனில் புகார் தரப்பட்டது. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை கோரப்பட்டது.

கவிழ்ந்து படுத்தும் மல்லாக்காகப் படுத்தும் உறக்கம் வரவில்லை தங்கம்மாவுக்கு."மொதல்ல கட்னவன் ஒழுங்கா குடும்பம் பண்ணியிருந்தா இந்த கதி வந்திருக்குமா..கண்ணுமறயகிடந்திருப்போம். அம்மா அஞ்சலிதான் அல்லாடுது. அப்பா கூட மனக்கஷ்டத்துக்குப் போதை ஏத்திக்கிட்டுப் படுத்துக் கெடந்துடுது. ஆனா அம்மா, அப்டியில்லயே! வாழாவெட்டியா புள்ள குட்டிங்களோட கண்கலங்கி
வந்து நின்னப்ப தைரியம் சொல்லிச் சேத்துக்கிச்சி..ஆனா தெனம் தெனம் ரெண்டு குடும்பத்தயும் சமாளிக்க மாடா உழைக்குது. பக்கத்து ஊர்ல பொண்டாட்டி செத்துப் போய் கெடந்த ரவிகிட்ட பேசி ஒருத்தருக்கொருத்தர் ஆதரவா இருங்க. உனுக்கும் வயசு முப்பத்தஞ்சி, அவளுக்கும் முப்பது, ரெண்டு பசங்களயும் உம் பசங்களா நெனச்சி குடும்பம் பண்ணுன்னு ஓயாம புத்திமதி சொல்லி கல்யாணத்தையும் பண்ணி வச்சிது. இந்நேரம் அம்மாவுக்கும் தூக்கம் வராதுதான்.

மழை சத்தம் சிந்தனையைக் கலைத்தது. பெட்ரோமாஸ் லைட் நாடாவை உயர்த்தினாள் தங்கம்மா மழையிலும் பிள்ளைகள் தூங்கிக் கொண்டுதான் இருந்தார்கள். அவர்கள் மீது போர்த்திய புடவை விலகாமல் இருந்தது. குடிசையின் முனைக்கு வந்து எட்டிப் பார்த்தாள். மழை சோவெனப் பெய்து கொண்டிருந்தது. மலை சங்கத்தில் கொடுத்த அழுத்தத்தால் டவுன் பஞ்சாயத்து நிர்வாகம் போட்டிருந்த மின்விளக்கு கம்பத்தில் எரிந்து கொண்டிருந்தது.

மீண்டும் வந்து படுத்துக் கொண்டாள் தங்கம்மா. பழய வீட்லயும் ஒழுகல் தான். அநேகமா நாலு பேரும் தூக்கத்துல எழுந்து உட்கார்ந்துகினு இருப்பாங்க. பிரிச்சிப்போட்ட குடிசைக்காரி நெறமாச புள்ளத்தாச்சி. அவ அம்மா வூட்டுக்குப் புருஷனோட போயிட்டா.

சிந்தனையைக் கைபேசி கலைத்தது. கையைத் துடைத்துக் கொண்டு கைபேசியை எடுத்துக் காதில் வைத்தாள் தங்கம்மா.

"தோழரே..நாளைக்கி தாலுக்காபீஸ்ல காத்திருப்புப் போராட்டம். நாம கொடுத்த கேஸ்ல நடவடிக்கை எடுக்கல. பட்டாவும் கொடுக்கல. கலகம் பொறந்தா தான் நீதி பொறக்கும். ஒருத்தர் விடாம எல்லோரையும்
அழச்சிக்கிட்டு டாடாஏசி வண்டியில வந்துருங்க"

'சரி தோழரே' என்றதோடு பதிலேதும் பேசவில்லை தங்கம்மா. தோழர் தங்கம்மாவிடம் மட்டும் பேசியிருக்க மாட்டார். கைபேசி வைத்திருக்கும் எல்லோரிடமும் பேசியிருப்பார். இது போல் எத்தனையோ போராட்டங்கள் நடந்திருக்கின்றன. எல்லாப் போராட்டங்களிலும் பழங்குடியினர் கலந்து கொள்வதால் அவர்களது பட்டா கோரிக்கையை இந்த முறை வெல்ல வேண்டும் என்பதில் குறியாக இருந்தார் செல்வன்.

"உள்ளூர்ல பெரிய எதிர்ப்பு. கோயில் சாமின்ற பேர்ல மெஜாரிட்டி ஆளுங்க ஒன்னாயிட்டாங்க! ஊர்ப்பஞ்சாயத்துன்ற பேர்ல கூப்டு பாத்தாங்க, செல்வனும் மற்ற தோழருங்களும் அசஞ்சி கொடுக்கல இதனால செல்வத்தோட வீட்ல வேற நெருக்கடி. உள்ளூர்ல பிரச்சினை பெருசாயி கரிச்சிக் கொட்றாங்களே! இது என்ன ஞாயம்? நாங்க என்ன ஜனங்களோட பட்டா எடத்தயா கேக்கறோம். ஆபீசருங்க காமிச்ச இடம் முள்ளுக் காடா கெடந்தத வெட்டி சுத்தப்படுத்தன பிறகு ஜனங்க ஆட்சேபணை பண்றாங்க. கோயிலுக்கு மண்டபம் கட்டப் போறன்றாங்க" மனப் பேச்சு பெருமூச்சுடன் முடிந்தது.

தாலுக்காபீஸ் முன்பு நூறு பேருக்குத் திரண்டு கோஷம் போட்டுக் கொண்டிருந்தனர். தகவலை முன்கூட்டியே தெரிந்து கொண்ட தாசில்தார் வேண்டுமென்றே முகாம் சென்று விட்டார்.

பழங்குடி மக்கள் எல்லோருமே தாலுக்காபீஸ் வரவும் போடப்பட்ட பத்து குடிசைகளும் தாசில்தார் துணையோடு ஆதிக்கவாதிகள் பிய்த்து எறிந்து விட்டதாகத் தகவல் வரவே போராட்டம் தீப்பிடித்தது. தாசில்தார், துணைத்தாசில்தார், ஆர்.ஐ, மணியக்கார், போலீஸ்காரர்கள் என யாரையும் விட்டுவைக்கவில்லை போராட்டக்காரர்கள். தங்களின் பலவீனங்களால் அவர்கள் செய்து வரும் அட்டூழியங்களை அடுக்கிக் கொண்டே போனார்கள் ஆர்ப்பாட்டக்காரர்கள். செல்வன் எல்லோரையும் தாலுக்காபீசில்‌ குடியேறச் சொன்னதுதான் தாமதம். டாடா ஏசியில் ஏற்கெனவே பேசியபடி கொண்டுவந்திருந்த அண்டா குண்டா தொடப்பம் முறத்தோட திபுதிபுவென கூட்டம் தாலுக்காபீசுக்குள் நுழைந்தது. சீட்டுகளுக்கிடையிலும் நடு ஹாலில் நீளமாகவும் தட்டுமுட்டுச் சாமான்களுடன் உட்கார்ந்து கொண்டார்கள். போலீஸ் என்னென்னவோ செய்து பார்த்தது. ஒன்றும் செல்லுபடியாகவில்லை. வந்திருப்பவர்கள் பழங்குடியினர் அவர்கள் மீது கை வைத்தால் படையெடுத்துக் கொண்டிருக்கும் மீடியாக்கள் சாட்சியாகி வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் போலீஸ்காரர்கள் மீதே பாய்ந்துவிடும் என்னும் பயம்.

மீடியாக்கள் கர்ப்பிணியையே குறிவைத்து புகைப்படமும் வீடியோவும் எடுத்தார்கள். கர்ப்பிணியைக் காண்பித்து "இந்த நெறமாச கர்ப்பிணியோட கொட்டவதான் மொதல்ல பிரிச்சாங்க! இரக்கமே இல்லாத ஆளுங்க! அதுக்குத் துணை போற தாசில்தாரு, ஆர்.ஐ. மணிக்கார். 'சீச்சீ வெட்கக்கேடு..தூத்தூ மானக்கேடு" என செல்வன் முழக்கமிட்டதை ஃபோகஸ் செய்தார்கள் மீடியாக்காரர்கள்.

டி.எஸ்.பி தலைவர்களை அழைத்துச் சமாதானம் செய்ய முயற்சித்துத் தோல்வியில் முடிந்தது.

"போராட்டம் இங்கே பற்றி எரிகிறது. தாசில்தார் அங்கே கூரைகளைப் பிய்த்து எறிகிறார். பிரச்சனையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்ற எண்ணம் இருந்திருந்தால் இந்நேரம் தாசில்தார் இங்கே இருந்திருக்க வேண்டும்" ஆக்ரோசமாக செல்வன் பேசிக் கொண்டிருந்ததை ஒலியும் ஒளியுமாக தொலைக்காட்சி அலை வரிசைகளும் சமுக வலைதளங்களும் பரப்பிக் கொண்டிருந்தன. தாசில்தார் தனது பணியை முடித்துத் திரும்பிக் கொண்டிருக்கும்போதே தமது அறையையும் ஆக்கிரமித்துப் பழங்குடியினர்
உக்கிரமாகப் போராடிக் கொண்டிருப்பதைக் கைபேசியில் கண்டு கொதிப்படைந்தார். ஜீப்பை ஓரங்கட்டச்சொல்லி நிறையப் பேருக்கு போன் பேசினார். ஜீப் திரும்பிப் போராட்டக்காரர்களின் ஊருக்கே சென்றது.

போராட்டக்காரர்களுக்கு வழங்கப்பட்ட பாக்கெட் சாப்பாட்டை அலுவலகத்திற்கு உள்ளேயே பிரித்து சாப்பிட்டனர். அதுவும் படமானது. தாலுக்காபீஸ் ஊழியர்கள் சிலர் ஒருபுறம் பழங்குடியினரைக் கரித்துக் கொட்டினர். மறுபுறம் "நாமும் தான் போராட்டம் நடத்துறமே! இவங்களப் பாத்தாவது கத்துக்கனும்" என்றவர்களும் உண்டு.

மாலை இருட்டத் துவங்கி விட்டது. போராட்டத்தை முடித்துக் கொண்டு போய்விடுவார்கள் என்று எண்ணிய வர்கள் மனதில் மண் விழுந்தது.

"தாசில்தாரிடம் பட்டா வாங்காமல் எவ்வளவு நாட்கள் ஆனாலும் இந்த இடத்தை விட்டு நகரமாட்டோம்" என்று கர்ச்சித்தார் செல்வன். சகோதர சங்கங்கள் போராட்டத்தை வாழ்த்திச் சென்றது பழங்குடி மக்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்தது.

தாசில்தாருக்கு அடுத்த ரேங்கில் உள்ள டெபுடி தாசில்தார் செல்வனை அழைத்து ஏதோ பேசிக் கொண்டே இருந்தார். செல்வனோ தலையை அசைத்துப் பேச்சைத் துண்டித்துக் கொண்டு தாலுக்கா பீஸ் ஹாலுக்குள்
வந்து பழங்குடியினர் மத்தியில் கோரிக்கையின் நியாயத்தைப் பற்றியும் பட்டா கோரிக்கைக்காக இரண்டு ஆண்டுகளாக நடத்தி வரும் போராட்டஙகள் குறித்தும் விளக்கிப் போராட்டத்தை உசுப்பேத்தினார்.

இரவு மணி ஏழு. ஊழியர்கள் வீட்டுக்குக் கிளம்பிக் கொண்டிருந்தனர். டெபுடி தாசில்தார் சில ஊழியர்களுடன் மும்முரமாக வேலை செய்து கொண்டிருந்தார். அவ்வப்போது செல்வனை அழைத்து சந்தேகங்களைக் கேட்டு நிவர்த்தி செய்து கொண்டிருந்தார். தங்கம்மாவுக்கு முன்பு போல் ஆவேசமாக இல்லாமல் செல்வன் டெபுடி தாசில்தாரிடம் பேசிக் கொண்டிருந்தது சந்தேகத்தை ஏற்படுத்தியது.

தங்கம்மா அவளது அம்மாவின் காதில், "தோழர் சோரம் போயிடுவாராம்மா? ஆவேசமா பேசிக்கிட்டிருந்த மனுசன் இப்ப அந்த ஆளோட சிரிச்சிப் பேசிக்கிட்டிருக்காரு. அங்க என்னடான்னா தாசில்தாரு நம்ம எல்லாக் குடிசகளயும் பிரிச்சுப் போட்டுட்டாராம். இந்நேரம் வரைக்கும் தாசில்தார் வரல. அப்டியே அவரு வீட்டுக்குப் போயிட்டா நம்ம கதி என்னாவறது?"

"வாய மூடுடி! தோழரப் பத்தி தப்பா பேசாத, நாக்கு அழுகிடும்! நானே உன்ன தொடப்பக்கட்டயால அடிப்பன்"

இருவரும் பிரிந்து வெவ்வேறு இடங்களில் உட்கார்ந்து கொண்டார்கள். பெருசுகள் குத்துக்காலிட்டும் நீட்டியும் மடக்கியும் உட்கார்ந்திருந்தார்கள். கர்ப்பிணிக்குப் பெண் கிளார்க் தன் நாற்காலியின் பக்கத்தில் வைத்திருந்த பெட்டி மீது உட்கார்ந்து கொள்ள இடம் கொடுத்தார். வந்திருந்த சிறுவர்கள் ஹாலுக்குள்ளே ஓடியும் ஆடியும் காலத்தைக் கழித்துத் கொண்டிருந்தார்கள்.

தாலுக்காபீசின் ஹாலில் அந்தக் காலத்து பெண்டுலம் கடிகாரம் எட்டு முறை மணியடித்தது. ஜீப் சத்தம் கேட்டு எழுந்திருந்த மக்களை அப்படியே அமரச் சொன்னார் செல்வன்.

தாசில்தார் ஜீப்பிலிருந்து இறங்கி விருட்டென்று நடந்தார் அவரது அறைக்குச் செல்ல வழி விட்டனர் பழங்குடியினர். அவர் நாற்காலியில் அமர்ந்ததும் ஃபைலோடு ஓடி வந்தார் டெபுடி தாசில்தார்.பத்து ஃபைலையும் பார்த்துப் பார்த்துக் கையெழுத்திட்டார் தாசில்தார்.

செல்வனை அழைத்த தாசில்தார் "அவசரப்பட்டுட்டீங்க! ஊர்ல சட்டம் ஒழுங்கு பிரச்சனை வரக்கூடாதுங்கிறதுக்காகத்தான் குடிசைகளைப் பிரிச்சேன். பிரச்சினை இல்லாத வேறு இடத்துல இப்ப பட்டா ரெடி பண்ணியாச்சி..எல்லோரையும் வந்து வாங்கிக்கச் சொல்லுங்க"

புன்முறுவலுடன் தலையசைத்த செல்வன் பழங்குடியினர் மத்தியில் சென்றார். "தோழர்களே..நமது ஒன்றுபட்ட போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றியாக பதினைந்து குடும்பங்களுக்கும் பட்டா வழங்கப் போறாங்க. ஆனா இடம் வேற. பிரச்சினை இல்லாத இடம். இத மொதல்லயே காட்டியிருந்தா, பட்டா கொடுத்திருந்தா நாம ஏன் போராடப் போறோம். அதிகார வர்க்கம் அப்படித்தான் இருக்கும். இப்ப பட்டா கொடுக்க பெயர் படிப்பாங்க. வாங்க..வரிசையா வாங்கிக்கங்க"

வெற்றி முழக்கம் விண்ணைப் பிளந்தது. தாசில்தாரும் செல்வனும் சேர்ந்து முதலில் தங்கம்மாவுக்குப் பட்டா கொடுக்கவும், தங்கம்மா அஞ்சலியைப் பார்த்தாள். அஞ்சலி கட்டை விரலை உயர்த்தினாள். தங்கம்மாவின் கண்கள் ஆனந்தத்தால் கலங்கின.

You already voted!
1 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
1 Comment
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
Jananesan
Jananesan
2 years ago

ஒடுக்கப்பட்டோருடைய உரிமைக்காகக குரல் கொடுக்கும் கதை.வாழ்த்துகள்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

Visitors

096532
Users Today : 17
Total Users : 96532
Views Today : 22
Total views : 416664
Who's Online : 0
Your IP Address : 3.133.152.26

Archives (முந்தைய செய்திகள்)