Thennarasu, தென்னரசு மும்பையிலிருந்து வெளியாகும் செய்தித் தளம்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

சதுரப்பூதம் – சீ.குறிஞ்சிச்செல்வன்

10 Feb 2022 12:40 amFeatured Posted by: Sadanandan

You already voted!

தென்னரசு மின்னிதழ் சிறுகதைப் போட்டி-21
படைப்பாளர் - சீ.குறிஞ்சிச்செல்வன், திருச்சி 

ஞாயிறு வந்து விட்டால், நாய்ப் பிழைப்பாகி விடுகிறது அவனுக்கு...வாரா வாரம்...."

விடிந்தும் விடியாமல் போய் ஏழுரூவாய் போட்டு அன்றைய தினசரி வாங்க வேண்டியது. வாங்கி வந்த கையோடு அவசர அவசரமாய் விளம்பர பக்கத்தை திருப்ப வேண்டி யது. பிறகு , ரியல் எஸ்டேட் கம்பெனிகளுக்கு  ஃபோன் போட்டு  வீட்டிலிருந்து புறப்பட வேண்டியது. 

இதென்ன இன்று நேற்றா நடக்கிறது ?  ரெண்டு  வருஷ மாய்  இதே போராட்டம்  தான். நாய் அலைச்சல் தான்... எதுவும் கைகூடவில்லை. பெருமூச்சில் முடிந்து மீண்டும் ஒரு நப்பா சையில், ஞாயிறு வந்து விட் டால், கிளை துருத்திக் கொள் கிறது , ஏதோ ஒரு ஆவேசத் தில்.... ஒருவேளை அவளிடம் தோற்றுவிடலாகாது என உள்ளிருந்து கண்சிமிட்டும் கனலாகவும் இருக்கலாம்....

வெளுத்து சாயம் போன சட்டை, பாண்ட்டும் ...ஓட்டை மோட்டார் சைக்கிளுமாய் புறநகரில், அவன் போய் பார்க் காத வீட்டு மனைகள் ஏதாவது பாக்கி இருக்கிறதா என்ன?. தோற்று முகம் தொங்க திரும் பி மீண்டும் தோற்ற இடத்திற் கே போய் ....அம்மணமாய் நிற் கும் அவலம்... கெஞ்சல்... வாலாட்டல் ... குழைவுகள்...

 அவனோடு வந்து பிளாட்டுகள் பார்த்த எத்தனையோ  முகமறி யா மனிதர்கள் , அட்வான்ஸ் கொடுத்து  கிரயம் பண்ணி அஸ்திவாரம்  போட்டு, மேலே மேலே நகர்ந்து கொண்டே இருந்தார்கள்.  ஒரு சிலர் வீடு கட்டி குடி புகவும் செய்தார்கள். அவனுக்கு அதையெல்லாம் பார்க்க பார்க்க  ஒரு ஒரு சம யம் ஆனந்தமாகவும் , சில சமயம் அளவு  மீறிய சோர் வாகவும் இருந்தது.

"ஒரு மனுசனென்றால், வாழ் க்கையில் தன் மனைவிக்கும், பிள்ளைகளுக்கும் நிரந்த ரமாய் ஒரு வீட்டை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்  என்று அவன் மனைவி தான் சொன் னாள்."..  சோறு சுடச்சுட பரிமா றும் போதும் ...  ஆவி பறக்க காஃபி  தரும் போதும்.

 ஆரம்ப கட்டத்தில் , அவன் அவள் சொன்னதை  அப்படி யொன்றும் பெரிதாய் எடுத்துக் கொள்ளவில்லை. சரியாய் சொல்வதானால், அவன் அதைப் பற்றி சிந்திக்கவே இல்லை. சந்நியாசி  கெளபீனம் போல் ,பாங்க் பேலன்ஸ் சுருங்கிவிட்ட நிலையில்  பெரிதாய் ஒருவன் என்ன செய்து விடமுடியும்?

 கரன்ஸிகள் மோதிக்கொள் ளும் உலகியலில் கெளபீன தாரிகளுக்கு ஒருபோதும் மரியாதைக்கு இடமே இல்லை என்னும் உண்மை அவனுக்கு தெளிவாக புரிந்திருந்தது. அவனின் அடர்ந்த அந்த மெளனத்தை அசட்டை என்று அவள் அர்த்தப்படுத்தி கொண் டிருக்க வேண்டும்.

 "சூடா இருக்கா சோறு... உப்பு புளி காரமா இருக்கா?" குழம்பு. நல்லா தின்னு...ம்...   என்று அவள் முகத்தை கடுகடுப்பாய் வைத்துக்  கொண்டு, ஒரு தினுசாய் சொன்ன போது, அவை அவனுக்கான வாழைப் பழ  ஊசிகள்  எனப் புரிந்தும் அதை வெளிக்காட்டாமல், தன்னுள்ளே விழுங்கிக் கொண்டான் , அவன் ...

பார்க்கலாம்...எனச் சொல்லி  வறண்ட ஒரு புன்னகையை மட்டுமே உதிர்க்க முடிந்தது   அவனால், அத்தருணத்தில். 

அன்றிலிருந்து, அவள் அவனி டம் எந்த தயவு தாட்சண்யமும் காட்டாமல் தான் நடந்து கொ ண்டாள். அவளை வேண்டிய அவனின் அந்த பார்வையில், ஆசையானதொரு நெருங்க லில்....பாறாங்கல் போல அழுத் தும் எதிர்ப்பை ஒரு மெல்லிய விலகல் சுலபமாய் ஆக்கிர மித்து விடுகிறது என்பதை நினைத்து சுவரைப் பார்த்து சிரித்துக் கொண்டான் அவன்.

பாங்கு பாஸ் புஸ்தகத்தை மூணு மாதம் ஆறுமாதமென பக்கம் பக்கமாய் எத்தனை முறை தான்  ஜெராக்ஸ் போட்டு எடுத்துக் கொண்டு ஓடுவது ? 

"நிலத்துக்கும் கன்ஸ்ட்ரக் ஷனுக்கும்  சேர்த்து தான் ஸாருக்கு  லோனா?..."

 புரமோட்டர்கள் எனும் மகா னுபவர்கள்  ஒரே மாதிரி சிரித்து கொண்டே  கேட்டார் கள்....

-அவன் சிரிக்கவில்லை.  சிரிக்க முடியவில்லை. 

இல்லாமையும் இயலாமையும் குவியும் புள்ளியில் வாழ்வின் கருகிப் பொசுங்கிய  கமறல் நெடியில்...  சிரிப்பாவது... மண் ணாவது?

கால்குலேட்டர் எடுத்து தட்டி கணக்கு போட்டு, இவ்ளோ இ.எம்.ஐ. கட்ட வேண்டி வரும். முடியுமா?  ஸார் என்று காட்டி னார்கள் அவனிடம்... . 

வாங்குகிற சொற்ப சம்பளத் தில்,  வீடு என்னும் சதுரப்பூதம்  மாதா மாதம்  ஒரு பெரும் பகுதியை  விழுங்கி விட்டு போய்விடும் போல் இருந்தது. நிரந்தரமற்ற வேலை. நாலு வயிறுகளின் கூக்குரலை,  எஞ்சிய   சொற்ப  தொகை யில்   நிரப்பி விடுவது அவ்வ ளவு  லேசா என்ன? 

 காய்கறி ஒவ்வொண்ணும்  கால் கிலோ முப்பதுக்கு  சாதாரணமாய் வந்துவிட்ட நிலையில் , காலச்சூழலில், அதன் அசுர சுழலில் சிக்கி விழி பிதுங்கநிற்கும்  அவனு க்கு எதைப் பற்றி நினைக் கவும்  பேரச்சமாக...  பீதியாக...  இருந்தது.

அவனுக்கு நா....உலர்ந்து போயிற்று. 

"எட்டு சதுரமெல்லாம் வேணா ம் ஸார். ஏழு இல்லைன்னா இன்னும் கொஞ்சம் கொறைச்சு ஒரு ஃபேமலி இருக்கறாப்ல செய்து கொடுத்தால்,  

ஒரு புண்ணியமா  இருக்கும் ஸார்..." என்ற போது...

 அவன் சாயம் போன உடுப் போடு தன் பொருளாதார சாயமும் கொஞ்சம் கொஞ்ச மாய் வெளிறி,  வெளியேறு வதை பூரணமாய் உணர்ந்தான், அவன்...

"அறு நூறு .....     அறுநூத்தைம்பது ஸ்கொயர் பீட்ல  ஜோரா எலிவேஷன் வெச்சு கார்பார்க் கிங்கோட அசத்தலா பண்ணி ரலாம் ஸார். கவலையே படாதீங்க.  ஆமா... கையில கேஷ் எவ்ளோ இருக்கும்? என்றார் சினிமா நட்சத்திரம்  சுந்தர்.சி. போல தோற்றமளித்த அந்த நடு வயது புரமோட்டர்.

"எதுக்கு ஸார்? " ஒன்றும் புரியாமல்  பரிதாபமாய் அவரைப் பார்த்து  கேட்டான்,  அவன் .

"போர்வெல்...எலக்ட்ரிசிடி எல்லாம் பார்க்க வாணாம்? வேலை நிறைய உங்க ஸைடு ல இருந்து இருக்கு துல்லே.  அப்புறம் பாங்க்ல இருந்து  ஆளுக ஸைட் விஸிட் வருவா ங்க... அவங்க வரப்போ.. நல்ல ரிப்போர்ட் கொடுக்க அப்பப் போ  தாராளமா கவனிக் கணுமே   ஸார்... பேமெண்ட் டிலே ஆகாமல்  நமக்கு வரும் பாருங்க..."

"எல்லாம் எவ்....ளோ ஆகும்?"

 கணக்குப் பாட சூத்திரம் மறந்து கரும்பலகை முன் நிற்கும்  பள்ளி மாணவன் போல நடுக்கமும் பதற்றமு மாய்  தவித்தான் , அவன் . 

"அதாவது, சுமாரா ஒரு மூணு லட்சத்திலிருந்து ஐந்து லட்சம் வரை கையில ஹாட் கேஷ் இருந்தால், ஒரு சிரமமில்லாமல்   ஒப்பேத்திரலாம்... ஸார் .... புரியுதா?..."

 ரொம்ப சாதாரண விஷயம் போல், பொரி லிட்டர் வெறும் பன்னென்டு ரூபாய் என்கிற ரீதியில்  சொன்னார் அந்த புரோமோட்டர்.

"அவ்ளோ அமெளண்ட் வேணுமா? "பயமும் பதற்றமுமாய் நின்றான் அவன். வறண்டு உலர்ந்த தொண்டைக்கு ,கொஞ்சம் நனைத்து கொள்ள தண்ணீர் இருந்தால் தேவலை என்றிருந்தது. கேட்க கூச்சமாகக் கூட இருந்தது...

"என்ன ஸார் பச்சை கொழந் தையா நீங்க. பேப்பர் ரெகுலரா படிக்கறீங்க  தானே.... விலை வாசி ஜெட்டை விட வேகமா போய்ட்டிருக்கு  ஸார். பாங்க் ஃபார்மாலிடிஸ்  , மேனேஜர் தொட்டு,  ஏஜெண்ட் வரை நிறைய இருக்கு. அப்பறம் எம்.ஓ.டி. பத்திர செலவுன்னு ஏகப்பட்டது உண்டு  ஸார். 

யூ நோ.. அசைஞ்சு தின்னும் யானை .  அசையாமல் தின்னும் வீடு..."

 "நீங்க மெட்ரிக் ஸ்கூல் வாத்தியார். அதுவும்  பிள்ளைகளுக்கு தமிழ் சொல்லித்தருகிற வாத்தியார். உங்களுக்கு இதெல்லாம் நாஞ்சொல்லி தெரிய ணுமா ஸார்... நம்மள தேடி வந்துட்டீங்க... லாபமில்லாமல்

அதுவும் உங்களுக்காக முடிஞ்சவரை பார்த்து செய்து தர்றேன்... சீக்கிரம் பணம் ஏற்பாடு பண்ணிருங்க...."என்று கடிகாரம் பார்த்தார் புரமோட்டர்.

"ஓ.கே. ஸார் ...எல்லாம் ரெடி பண்ணிட்டு மறுபடி வந்து உங்களைப்  பார்க்கிறேன்..."

 எத்தனையோ இடங்களில், எத்தனையோ முறை இப்படி யானதொரு பதிலில்  விடுவித்துக் கொண்டு திரும்புவது அவனுக்கு புதிதல்ல....

ஏழு ரூபாய் போட்டு தினசரி வாங்கும் போதிருந்த அந்த உத்வேகம்  ஓட்டைக்குடத்தில் நழுவிய நீரற்ற வெறுமையாய் பல்காட்டும்    மோசமான அந்த தருணம்... அவனை அவனுக்கு  காட்டியது ஒளிவு மறைவு ஏதுமற்று...

ஒரு மணி உச்சிவெயில், அவன்  வாழ்க்கை போல , அவன் மனைவி போல,  தஹித் தது. வறண்ட நாவுக்கு இளநீர் குடித்தால் பரவாயில்லை என்றிருந்தது. வெயில் பற்றிய நினைவினூடே  பைக்கில் பயணம் மேற்கொண்டவ னுக்கு,  இலக்கியத்தில் என்றோ படித்த வாழ்க்கையை அர்த்த புஷ்டி ஆக்குகிற அந்த காட்சி ஞாபகத்தில் வந்து  பின்னிக் கொண்டது.

வறண்ட கோடையில் தாக மெடுத்த ஒருஜோடி யானை கள் பாலை நிலத்தில் நீருக்கு தவித்து சோர்ந்து எப்படியோ ஒரு கலங்கிய குட்டையை  கண்டடைகின்றன.

 பிடியும்,உடன் வந்த  களிறும் ஓர் இடத்தை நெருங்கியதும் ஒன்றை யொன்று நிதானமாய் கண்களில் காதலொழுக பார்த்துக் கொள்கின்றன. இரண்டும் ஒரு சேர துதிக் கையால் நீரைப் பருக முடிவு செய்கின்றன.  தன் உயிர் போன்ற பிடி நீர் உறிஞ்சுவதை  கண்ட களிறு,  தானும் அத னோடு சேர்ந்து உறிஞ்சுவது போல் , பாசாங்கு செய்கிறது. பாலையின் வெம்மையை சொல்ல வந்த அந்த மகா கவிஞன், ஒரு புரிதலையும் காதலின் மகோன்னதத்தையும்  போகிற போக்கில்  காட்டி விடுவதை நினைத்து ரசித்து சிரித்தான், அவன். 

இளநீர் குடிக்காமலே தனக்கு தாகம் தீர்ந்தது போலவும், உடம்பெல்லாம்  கணத்தில் தித்திப்பு உண்டாகி விட்டது போலவும் இருந்தது அவனுக்கு ,  அக்கணத்தில் ....

நெடுஞ்சாலையில் புளியமர நிழலில் ஒரு சைக்கிளில் கிராமத்து வயசாளி இளநீர் குலையோடு நிற்பதை கண் டதும் அவனுக்கு அவரிடம் இளநீர் வாங்கி குடிக்க தோன் றியது. பைக்கை சாலையில் இருந்து கீழிறக்கி ஓரமாய்  நிப்பாட்டினான்....

சாயம் போன பேண்ட் சட்டை யில் நின்றவனைப் பார்த்து "இளநி வெட்டட்டுங்களா ஸார் அம்பது ரூவாய்...."  என்றார் அவர்... ஒரு முன்னெச்சரிக் கையோடு....

"பரவாயில்லை வெட்டுங் கைய்யா ... " கர்சீப் பால் முகத்தை ஒற்றிக்கொண்டே சொன் னான் இவன்....

தண்ணியா...வளுக்கைங்களா வெட்டுமுன் உறுதிபடுத்திக் கொண்டார் அவர்....

வறட்சியா இருக்கு... நல்லா தண்ணியுள்ளதே வெட்டுங்க என்றான் அவன் ....

அவர் நிதானமாய் தேடி எடுத்து

ஒரு முறைக்கு இருமுறை காத ருகே கொண்டு போய், இள நீரை ஆட்டி பார்த்து விட்டு, அதை அழகாய் சீவி பவ்யமாய் அவனிடம் நீட்டினார்... 

"ஸ்ட்ரா வேணும்ங்களா ...?" என்றார் சற்று கழித்து...  

இவன் வேண்டாமென  மறுத்து இரு கைகளாலும்  பிடித்து  தலையை அண்ணாந்து குடித்தான். உப்புச் சுவை அதில்  கூடுதலாக இருந்தது. மண்ணின் வாகு எப்படியோ அப்படித் தானே நீர் இருக்கும். கிழவரை போய்  குறை சொல்வதில் பிரயோஜனமில்லை என்று அமைதியாய் குடித்தான் , அவன் .

"ருசி...மட்டுங்களா". பெரியவர் எப்படியோ கண்டு பிடித்து கேட்டார்.இவன் ஆமா என்பது போல் தலையசைத்தான். ஒவ்வொரு நாளு ஒவ்வொரு மாதிரி வருதுங்க...யாவாரி என்ன செய்ய முடியும்? 

தனக்கு தானே  சொல்லிக் கொண்டார், அவர். 

"இவன், ஐம்பது ரூவாய் தாள் நீட்டினான்.அதை வாங்கி மஞ்சள் பையில் போட்டவர் பத்து ரூபாய் திரும்ப நீட்டினார்.

ஏன்?  வெச்சுக்கோங்க என்றான். இல்லீங்க பண்டம் சரியில்லை. நாப்பது போதும் இதுக்கு என்றார்...அவர்..

"இல்லை. இருக்கட்டும் வெயில்ல நிக்கறீங்க என்று பத்து ரூபாயை வாங்காமல் நடந்தான். " புடீங்க... யாருக்கும் உறுத்தல் வரப்படாது என்று இவன் கையில் வைத்து அழுத்தினார் அவர்.

"வூடு எதும் பார்க்கறீயளா....?" திடுமென இவனைப் பார்த்து கேட்டார்....

அவன் பதிலொன்றும் சொல்லவில்லை....

"நான்... புரோக்கர் இல்லீங்க. பேத்திக்கு கண்ணாலம் வெச்சாச்சு.... மவன் பார்டர்ல போன மாசம் செத்து போய்ட்டான்....சும்மா வந்து பாருங்க... இல்லை ,தெரிஞ்ச மனுசா யாரும்  இருந்தா சொல்லுங்க .  கைக்கூப்பினார்.

"நாப்பது ...அம்பது லட்சம் எல்லாம் நமக்கு தாங்காதுங்க ரொம்ப கஷ்ட ஜீவனம்".... நிறைய பார்த்து பார்த்து ஓய்ஞ்சாச்சு என்றான் இவன் சலிப்போடு....

"அவ்ளோ இல்லை சாமி. பேத்தி ரேணுக்கு  கல்யாணம் வெச்சுட்டு அல்லாடுதேன் பார்த்து  உதவு மக்கா..." அவன் கையை பற்றிக் கொண்டார்.

இவனுக்கு வயிறு பிசைவது போல் இருந்தது...  சரி என்று அவன் அவரோடு செல்ல சம்மதித்தான்.பெரியவர் சைக் கிளை மரத்திற்கு பின்னால் வைத்து பூட்டி விட்டு மெதுவாக வந்தார்....

பைக்கில் பின்னால் உட்கார் ந்து கொண்டு அவனுக்கு வழி சொன்னார்.  ரெண்டு கிலோ மீட்டரில் ஊர்  வந்தது... சந்து சந்தாய் வளைந்து வளைந்து போக வேண்டி இருந்தது. ஓரி டத்தில் நிறுத்த சொல்லி இங்கே தான் .... என்று கைக் காட்டினார் பெரியவர்.

சும்மா...உள்ளே போய் பாருங்க

புடிக்கும் என்று சொல்லிவிட்டு காணாமல் போனார்,  அவர்.

வெறும் செங்கல்கூடாய் நின்றது அக்கட்டிடம். முகப்பிலும்,  மாடிப்படிகளிலும் முளைத்திருந்த புற்களை சாவகாசமாய்  மென்று கொண் டிருந்தன ஆடுகள்... கதவு ஏதும் பொருத்தப்படாமல்   திறந்து கிடந்தது வாசல் ரெண்டு வருஷமோ அல்லது அதற்கு முன்போ அது கட்டப்பட்டிருக்க வேண்டும் என இவன் யோசித்து கொண்டு நிற்கையில்.....

இன்ஜினியர் ஷோக்கெல்லாம் இதுல எதிர்பார்க்க முடியாதுங்க... 

 - பின்னால் குரல் கேட்டது.... 

பெரியவர் ஒரு நாப்பது பக்க நோட்டோடு நின்றிருந்தார்....

கொஞ்சம் செலவு பண்ணி பூசி கதவு போட்டா பிரமாதமா ஆயிரும். ஒரு குடும்பம் தாராளமா புழங்கலாம்... பேத்திக்கு கண்ணாலம்  வெச்சாச்சுங்க.... கை நடுங்க அந்த நாப்பது பக்க நோட்டை அவனிடம் நீட்டினார்.

செலவு... விவரமாய் பென்சி லில் எழுதப்பட்டு பதினெட்டு லட்சம் என்று கோடிட்டு  முடிக் கப்பட்டிருந்தது.

அதை கையில் வாங்கி புரட்டியபோது அவனுக்கு  கண்ணீர் வந்தது. 

இடத்தோட விலைங்க...மெல்ல இழுத்தான்  , அவன் . 

அவர் சில நிமிஷம் கண்மூடி நிதானித்து  பிறகு  ஒரு  தொகை சொன்னார் . அது நியாயமான தொகை  தான் என்று  தோன்றியது , இவனுக்கு . 

 பேரம் எதுவும்  பேசாமல், "நானே... வாங்கிக்கிறேன் ஐயா ... "சம்மதம்  சொன்னான்,   ஏதோ, ஒரு நம்பிக்கையில்...

 இருவர் கண்களும் மெளனமாய் பேசிக் கொண்டன. அதே சமயம் ,அங்கே  அழகிய ஒரு கருப்புக் குருவி அலகில் ஒரு குச்சி ஏந்தி வந்து விட்டத்தில் தனக்கென ஒரு  கூடு அமைக்க தீவிரம் காட்டியது

You already voted!
4.2 6 votes
Article Rating
Subscribe
Notify of
guest
3 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
Barathi Rajendran
Barathi Rajendran
2 years ago

Ba

Boopathi 12th A1
Boopathi 12th A1
2 years ago

Sir really interested one❤️

Acharya Sri Harihara Sharma
Acharya Sri Harihara Sharma
2 years ago

நண்பா நல்ல படைப்பு

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

Visitors

097934
Users Today : 2
Total Users : 97934
Views Today : 2
Total views : 419384
Who's Online : 0
Your IP Address : 18.118.33.239

Archives (முந்தைய செய்திகள்)