12 Feb 2022 2:29 amFeatured
தென்னரசு மின்னிதழ் சிறுகதைப் போட்டி-29
படைப்பாளர் - சகா, பொள்ளாச்சி
“இதெல்லாம் எங்க அக்கா வாங்கின பரிசுகள்..”
கண்களில் ஆர்வம் பொங்க சொன்ன கணேசனைப் பார்த்து புன்னகைத்தான் ஜெகன். “உங்க அக்கா பெரிய ஆள் தான்! ஒரு கடையே வைக்கலாம் போல...”
கண்ணாடி செல்ஃப்பிற்குள் சினேகா வாங்கின பதக்கங்களும், விருதுகளும், பரிசுகளும் குவிந்திருந்தன. பிரபலங்களுடன் எடுத்த போட்டோக்கள்.
“அக்காவுக்கு கவிதை எழுதறதும், கூட்டத்துல கலந்துக்கிட்டு பேசறதும் தான் உலகத்துலயே பிடிச்ச விசயம்!” அவனது குரல்களில் பெருமையும், பிரமிப்பும். “இந்தப் போட்டோ வைரமுத்து சார் தலைமையில சென்னையில நடந்த ஒரு போட்டியில எடுத்தது. அக்காவுக்கு அதுல ரெண்டாவது பரிசு! இது மும்பையில ஒரு தமிழ் அமைப்பு நடத்தின போட்டியில கலந்துக்கிட்டு ‘இளஞ்சுடர்’ன்ற பட்டம் ஜெயிச்சப்போ எடுத்த போட்டோ. அப்புறம் இது பிறைநிலா மாத இதழ் நடத்தின போட்டியில ஜெயிச்சப்போ அமைச்சர் தந்த விருது..”
கணேசன் ஒவ்வொரு விருதிற்குப் பின்பும் இருந்த முன்கதைச் சுருக்கம் சொல்ல சொல்ல.. வந்த கொட்டாவியை சபை நாகரீகம் கருதி அடக்கிக் கொண்டான் ஜெகன்.
சினேகாவின் அப்பா கிருஷ்ணன் உதவிக்கு வந்தார். “கணேசு, போதும்ப்பா. தப்பா நினைச்சுக்காதீங்க. நீங்க சொன்ன நேரத்தை விடவும் கொஞ்சம் முன்னதாகவே வந்துட்டீங்களா.. அதான் நேரம் போக்க தெரியாம..”
“ஒண்ணும் தப்பில்லைங்க..” சமாளித்து சிரித்தாள் ஜெகனின் அம்மா அகிலா. “சினேகா அலங்காரம் முடிச்சு. பொறுமையா வரட்டும்..” “இது எங்க அக்கா எழுதின கவிதை புக். படிச்சுப் பாருங்க..”
ஜெகன் அதை வாங்கிப் பார்த்தான். ’வானவில் ஊஞ்சலில் ஒரு நிலா’ என்றிருந்தது அதன் தலைப்பு. புரியாமல் அதையே கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டிருந்தான். உள்ளே திருப்ப அச்சமாக இருந்தது.
“நல்லா மாட்டினியா. நீ படிச்சு முடிச்சதும் அதிலிருந்து கேள்வி கேட்பான்..” சித்தி காதோரம் வந்து பயமுறுத்தினாள்.
சித்தப்பாவைப் பார்க்க அவர் மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். பாவம் அவரும் அரசியல், ஆன்மீகம், காலநிலை என்றெல்லாம் ஒரு இருபது நிமிசம் பேசிவிட்டு முடியாமல் ஒதுங்கியிருந்தார்.
மெளனத்தின் அகலம் விரிந்து கொண்டேயிருக்க கிருஷ்ணன் எழுந்து “இவ்வளவு நேரமா என்ன பண்றாங்க..” என்றபடி எழுந்து போனார்.
“அப்பவே சொன்னேன். கோவில்லயாவது காத்திருப்போம்ன்னு. இப்படி சொன்ன நேரத்துக்கு முன்னாடியே வந்து தர்மசங்கடம் பண்ணிட்டு..” முனகினான் ஜெகன்.
புத்தகத்தின் பின்னால் புன்னகையுடன் இருந்த சினேகாவைப் பார்த்து அகிலா திருப்தியுடன் தலையசைத்தாள். “லட்சணமா இருக்காடா.. தெய்வக் குழந்தை சீரியல்ல வர்ற சுஸ்மிதா ஜாடை!”
ஜெகன் வேறொரு கட்டாயத்தில் இருந்தான். இந்த இரண்டு வருடத்திற்குள் அவன் சுமார் பத்து பேரை பெண் பார்த்திருந்தான். இந்த இடமாவது தகைந்தால் அம்மா சந்தோசமும், நிம்மதியும் அடைவாள்! ஆரம்பங்களில் பெண் பார்க்கிற போது தனக்கிருந்த, வருங்கால மனைவி மீதான கற்பனைகளும், எதிர்பார்ப்புகளும் அடுத்தடுத்த ஒவ்வொரு இடங்களிலும் குறைந்து நீர்த்துப் போவது குறித்து அச்சம் உருவாகியிருந்தது.
சாலையில் கடந்து போகும் எல்லாப் பெண்களும் ஏதோ ஒரு விதத்தில் அழகாக தெரிய ஆரம்பித்திருந்தார்கள். ‘திரும்பத் திரும்ப ஒரே முகத்தைப் பார்த்தா நமக்கே ஒரு வேளை ஈர்ப்பு வந்துடுமோ’ என்ற அளவிற்கெல்லாம் யோசனைகள் அபாயகரமாக போய்க் கொண்டிருந்தன.
நகரில் பிரபல கார் ஷோ ரூமில் துணை மேலாளராக இருந்தான் அவன். மோசமில்லாத சம்பளம். நல்ல முன்னேற்ற வாய்ப்புகள். திறமையானவன் என்கிற பெயர். போன வருடம் தான் சொந்த வீடு அமைந்திருந்தது. அப்படியே திருமணமும் முடித்துவிட்டால் வாழ்வில் செட்டிலாகி விடலாம்.
ஜெகன் சினேகாவுடன் தான் ஏதாவது தனியாகப் பேச வேண்டுமா என யோசித்தான். இலக்கணம், இலக்கியம் என ஏதாவது அவள் ஆரம்பித்தால்..? அவனுக்கு அதிலெல்லாம் பரிச்சயமில்லை. எப்படி சமாளிப்பது என கவலை உண்டானது.
அதுசரி இதுவரை பார்த்த அத்தனை பெண்களிடமும் தனியாகப் பேசி என்ன கண்டோம். ஒரு மாறுதலுக்கு இவளிடம் எதுவும் பேச வேண்டாமே. அந்த மாறுபட்ட ராசி வேலை செய்கிறதா பார்ப்போம்.
சில நிமிடங்களில் சினேகா வந்தாள். சபையில் இருந்த எல்லோருக்கும் ஒரு பொது வணக்கம். அகிலாவின் அருகில் இருந்த காலியிடத்தில் அமர்ந்தாள். அவளது தோளில் ஆதரவாக கை வைத்த அகிலா குனிந்திருந்த அவள் தலை நிமிர்த்தி புன்னகைத்தாள். “உன்னைப் பத்தி சொல்லும்மா..”
“என் முழுப் பெயர் சினேக சித்ரா..” என ஆரம்பித்தவள் தன் படிப்பு, குடும்ப விவரங்கள், தனிப்பட்ட விருப்பு வெறுப்பு, ரசனைகள் என சில வார்த்தைகளில் விடையளித்தாள்.
“ஏதாவது சாமி பாட்டுப் பாடறியாம்மா..” என்றாள் சித்தி.
தலையாட்டினவள் பிரபலமான ஒரு முருகன் பாடல் பாடினாள்.
ஜெகன் படபட மனதுடன் அவளையே பார்த்தபடி. தனக்கு இவள் போதும் என்ற முடிவு மனதில் ஏற்கனவே பதிவாகியிருந்தது. யாராவது ஏதாவது உளறி நல்ல வாய்ப்பினைக் கெடுத்து விடக் கூடாதே என அச்சம் எழுந்தது.
அம்மாவிடம் தனக்குத் திருப்தி என சைகை செய்தான்.
“நல்லாப் பாடினேம்மா.” அகிலா அவள் கை விரல்களை தன்னுடன் கோர்த்துக் கொண்டாள். “என் மகனைப் பார்த்தியா. உனக்குப் பிடிச்சிருக்கா. மேற்கொண்டு பேசலாமா.” அதிரடியாகக் கேட்டாள்.
சினேகா நிமிர்ந்து ஜெகனைப் பார்த்தாள். தன் முகத்தை எப்படி வைத்துக் கொள்வது எனத் தெரியாமல் அவஸ்தை கலந்து புன்னகைத்தான் அவன்.
தலையாட்டினாள். அப்பாடா என்றானது அவனுக்கு.
“தலையாட்டினா விட்டுட மாட்டோம். வாயைத் திறந்து சம்மதம் சொல்லனும்..” படீரென சிரித்தார் சித்தப்பா.
“ம்.. சம்மதம்! வந்து, நான் தனியாகப் பேசலாமா..”
“தாராளமா. நீங்க உள்ளே போய் பேசிட்டிருங்க. பெரியவங்க நாங்க கலந்து பேசி சில முடிவுக எடுக்கனும்..” என்றாள் அகிலா.
ஜெகன் எழுந்தான்.
“இல்லை இல்லை.. அவர் கூட இல்லை.. நான் உங்க கூடத் தான் தனியாப் பேச விரும்பறேன்..” என்றாள் சினேகா அகிலாவைப் பார்த்தபடி.
ஒரு நொடி திகைத்த அகிலா சிரித்தாள். “என் கூடவா! வித்தியாசமா இருக்கே.”
ஜெகன் புரியாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
“சரி வாம்மா.”
அறைக்கு வந்து மீன் தொட்டி அருகே இருந்த பிரம்பு சேரில் உட்கார்ந்தார்கள். சினேகா நேரடியாக விசயத்துக்கு வந்தாள்.
“என்னைப் பத்தின சில விசயங்களை ஆரம்பத்திலேயே உங்ககிட்ட தெளிவு படுத்திடறது நல்லதுன்னு பட்டது. அதனால தான்..”
“அதான் உன்னைப் பத்தின எல்லாத்தையுமே சபையிலே சொல்லிட்டியேம்மா. இன்னும் இருக்கா என்ன..”
“ஆமாம். நான் ஒரு கவிஞர். கவிதைகள் எழுதறது எனக்கு சுவாசம் மாதிரி. என் திருமணத்துக்குப் பின்னாடியும் என்னோட இந்த அடையாளத்தை விட்டுத் தர நான் விரும்பலை.”
“ம்..”
“எனக்குத் தெரிஞ்சு கல்யாணத்துக்குப் பிறகு கிட்டத்தட்ட எல்லாப் பெண்களுமே தங்களோட சுயத்தை, தனி அடையாளத்தை கட்டாயத் தியாகம் செய்துடறாங்க. சாதாரண, சராசரிப் பெண்ணா மாறிடறாங்க. புகுந்த வீட்டுச் சூழல் அவங்களை அப்படி மாத்திடுது. ஆனா அந்த மாதிரி விட்டுத் தர என்னால முடியாது. நான் சராசரியான மருமகளா இருக்கிறதுக்கான வாய்ப்புகள் ரொம்பக் குறைவு. என்கிட்ட அதெல்லாம் தயவுசெய்து எதிர்பார்க்காதீங்க.”
தலையாட்டினாள் அகிலா. “புரியுது. சமையல் செய்ய, துணி துவைக்க, வீட்டைப் பராமரிக்க, உள்ளவங்களை கவனிக்க..ன்னு இந்த மாதிரி பொதுவான வழக்கமான வேலைகளை செய்கிற பெண் அல்ல நான்!னு சொல்ல வர்றே.”
“ஏறக்குறைய சரி. ஆனா இந்த வேலைகளை நான் கெளரவக் குறைச்சலா நினைக்கலை. இதையெல்லாம் நானும் செய்வேன். ஆனா அதைத் தாண்டியும் எனக்குன்னு இருக்கிற சில ஆதார குணங்களை விட்டுத் தர, தியாகம் பண்ண என்னால முடியாது. திருமணம் என்கிற நிகழ்வு அதைத் தடை பண்ண விடமாட்டேன்.”
சில நொடிகள் யோசித்தாள் அகிலா. “ஆனா இதையெல்லாம் ஏன் என்கிட்ட சொல்றே. ஜெகன்கிட்டயே நீ பேசியிருக்கலாமே.”
“அவரை நான் எளிதா சமாளிச்சுடுவேன்.! ஆனா ஒரு பெண்ணை இன்னொரு பெண் சரியானபடி புரிஞ்சுக்கிறது தான் இங்கே குறைவு. எழுத்துத் துறையில நான் இன்னும் சாதிக்க விரும்பறேன். அதற்கான வாய்ப்புகளும் இருக்கு. ஆனா உங்க ஆதரவும், துணையும் இல்லாம என்னால தனியா ஜெயிக்க முடியாது. அதனால
தான்.. இப்படி ஆரம்பத்திலேயே..” புன்னகையுடன் முகம் பார்த்தாள்.
அகிலா அவளை அசந்து போய்ப் பார்த்தாள். எத்தனை தெளிவாகப் பேசுகிறாள். தனக்கு என்ன தேவை, தன் குறிக்கோள் என்ன என்பதை எத்தனை அழகாக சொல்லுகிறாள்.
“உன்னோட மனநிலை புரியுது சினேகா. மனசு உணர்றேன். நீ என்ன சாதிக்க விரும்பறியோ அதுக்கு தாராளமா நான் துணை நிப்பேன். திருமணம்ன்ற உறவு உன் லட்சியத்துக்கு பக்கபலமா, உறுதுணையா இருக்குமே தவிர தடைக்கல்லா இருக்காது..”
“இந்த வார்த்தைகளே போதும் அத்தை. ரொம்ப நன்றி.”
சொன்னவளை ஆனந்தமாக அணைத்துக் கொண்டாள் அகிலா.
“என்னம்மா இதெல்லாம். நமக்கு எதுக்கு இப்படி ஒரு ரிஸ்க்.? அப்படியென்ன கண்டிசன்களோட அவ இந்த வீட்டுக்கு மருமகளா வரனும்ன்னு அவசியம். ஒரு சாதாரண, சராசரியான பெண் போதாதா, இந்த எக்ஸ்ட்ரா தகுதியெல்லாம் தேவையா.”
படபடவென்று வெடித்தான் ஜெகன்.
“ஏன்டா, கல்யாணமானா உன் லட்சியங்களை, ஆசைகளையெல்லாம் நீ விட்டுத் தந்துடுவியா. மாட்டே தானே. அப்புறம் ஒரு பெண்கிட்ட மட்டும் அதை எதிர்பார்க்கிறதுல என்ன நியாயம்..?” மடக்கினாள் அகிலா.
“அந்த அர்த்தத்துல நான் சொல்ல வரலை. அத்தனை பிற்போக்குத்தனமான எண்ணமும் என்கிட்ட இல்லை. ஆனா நடைமுறை சிக்கல்களை நீ புரிஞ்சுக்கலை. நாளைக்கே நம்ம உறவுல நெருங்கின சொந்தக்காரங்க வீட்டு விசேசம்ன்னா அவளால கலந்துக்க முடியாது. கூட்டம் இருக்கு, பேசனும்ன்னு ஓடுவா. நீ போய்ட்டு வாடியம்மான்னு அனுப்பி வைப்பியா.?
அவளால பேரும், புகழும் கிடைக்கறது ரெண்டாவது. ஆனா அதுக்காக நீ நிறைய தியாகம் பண்ணனும், விட்டுத் தரனும். இப்போ ஆர்வக் கோளாறுல தலையாட்டிட்டு பின்னாடி அவஸ்தைப்பட்டுக்காதே.” எச்சரித்தான்.
“பரவாயில்லை, நான் சமாளிச்சுக்குவேன்..” சிரித்தாள் சாவித்திரி.
அம்மாவை வியப்புடன் பார்த்தான். “என்னாச்சு உனக்கு! தனியா அழைச்சுட்டுப் போய் நல்லா மூளைச்சலவை பண்ணிட்டாளா.”
அகிலா பெருமூச்சு விட்டாள். ”டேய், நான் யார்றா..”
“என் அம்மா.!”
“அது உனக்கான உறவு. என்னோட தனிப்பட்ட அடையாளம் என்ன தெரியுமா. நான் ஒரு ஓவியர். திறமையான ஓவியர். ஒரு இயற்கைக் காட்சியைப் பார்த்தா அதை அச்சு அசலா தத்ரூபமா வரையற திறமை எனக்கு இருந்தது. என்னை பாராட்டாதவங்களே கிடையாது. நீ சினேகா வீட்டுல பார்த்தியே.. அதை விட அதிகமான பரிசுகள் வாங்கியிருக்கேன்.! இதெல்லாம் எப்போ தெரியுமா. என் கல்யாணத்துக்கு முன்னாடி.
இங்கே வந்த பின்னாடி வரைய ஆசைப்பட்டு கையிலே ப்ரஸ்சை எடுத்தாலே ஒடி வந்துடுவா என் மாமியார்.. அதான் உன் பாட்டி.. பிடுங்கி ஒடச்சிடுவா. ‘நீ வரைஞ்சு கிழிச்சது போதும். வீட்டுக்கு அடங்கினவளா இரு. தேவையில்லாத தெல்லாம் செய்தே.. அப்பன் வீட்டுக்கு அனுப்பி வெச்சுடுவேன்’னு மிரட்டியே எனக்குள்ள இருந்த கலைஞனை அழிச்சுட்டாங்க அவங்க.”
“என்னம்மா சொல்றே.”
“ஆமாடா என் நிலைமை சினேகாவுக்கு வர வேண்டாம். அந்தக் கடவுளாப் பார்த்து தான் அவளை என்கிட்டே ஒப்படைச்சிருக்கான். ஏன்னா ஒண்ணை இழந்தவளுக்குத் தான் அதோட அருமை பெருமை தெரியும். அவளோட சாதனைகளுக்கு நான் கண்டிப்பா உறுதுணையா இருப்பேன். நீயும் இருக்கணும். ஒரு கலைஞன் திருமணம் என்கிற பந்தத்தால செத்துப் போயிடக் கூடாது புரியுதா.?” தழுதழுத்த குரலில் சொன்ன அம்மாவை ஆதரவாக அணைத்துக் கொண்டான் ஜெகன். “உன் மனசு புரியுதும்மா. சினேகா தான் இந்த வீட்டுக்கு மருமக. சந்தோசம் தானே.?” என்றான் புன்னகையுடன்