Thennarasu, தென்னரசு மும்பையிலிருந்து வெளியாகும் செய்தித் தளம்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

காலடிச் சுவடுகள் – கல்பனா சுரேன்

14 Feb 2022 9:02 pmFeatured Posted by: Sadanandan

You already voted!
thennarasu Short Story Pictures kalpana

தென்னரசு மின்னிதழ் சிறுகதைப் போட்டி-39
படைப்பாளர் -கல்பனா சுரேன், USA

கீழ்வானம் வெளுத்தது. பறவைகள் இரைத் தேட கூட்டைவிட்டுப் பறந்தன. மாடுகள் மேய்ச்சலுக்குச் சென்றுகொண்டிருந்தன. அன்நேரம் வெளியிலிருந்து சில ஆட்கள் தன் வீட்டுக்கதவை தட்ட,  காலணிகளை மாட்டிக்கொண்டு முன்னா தயாரானான்.

“அம்மா நான் போயிட்டு வரேன். வர ராத்திரி ஆயிடும். நீ சாப்பிட்டு தூங்கு. எனக்காக காத்திருக்கவேண்டாம்" என்று அவன் தாய்மொழி ஹிந்தியில் உரக்கச் சொல்லிவிட்டு, சுவரில் இருந்த ஹனுமான் படத்தைத் தொட்டு கும்பிட்டுக்கொண்டே கதவைத் திறந்து வெளியே வந்தான். “ஜாக்கிரதை முன்னா. பார்த்து போ. கூட்டமாவே போங்க. தனியா எங்கேயும் போகவேண்டாம்" என்று சொல்லிக்கொண்டே ஓடி வந்து கதவை உள்பக்கம் தாழிட்டுக் கொண்டாள் அம்மா. சுவரில் இருந்த ஹனுமான் படத்திடம் நின்று கைகூப்பி ஏதோ ஜெபித்துவிட்டு அடுப்படிக்குச் சென்றாள்.

உத்தர பிரதேச மாநிலம்  பிஜ்னூர் மாவட்டத்தில் ஒரு சிறிய அழகிய கிராமம் தான் முன்னாவின் சொந்த ஊர். தந்தை சில வருடங்களுக்குமுன் மாரடைப்பால் காலமானார். அக்கா மாயா திருமணமாகி கணவருடன் ஆகிரவில் வசிக்கிறாள்.

அவன் கிராமத்தில் அதிக படிப்பு படித்த வெகுசிலரில் முன்னாவும் ஒருவன். பிளஸ் 2 பாஸ். மேலே படிக்க வசதி இல்லை முன்னாவுக்கு. தற்போது சொந்தமான சிறிய நிலத்தில் விவசாயம் பார்த்து வருகிறான். ஆனாலும் முன்னாவின் நாட்டம் விவசாயத்தில் இல்லை. சிறு வயதிலிருந்தே விலங்குகளின் மீது கூடுதல் பாசமும், கருணையும் இருந்தது அவனுக்கு. வனவிலங்கு பாதுகாப்புத் துறையில் பணி  செய்யவே அவன் விரும்பினான்.

தன் கிராமம் மட்டுமன்றி அருகிலிருந்த பல சிறு கிராமங்களைச் சுற்றி அடர்த்தியான காடுகள் இருந்ததால் முன்னா அடிக்கடி பல விலங்குகளைப் பார்ப்பது வழக்கம். சமயங்களில் காட்டு ராணியான புலி கூட தடம் மாறி காட்டைவிட்டு வெளியே வருவதுண்டு. ஜன நடமாட்டத்தைப் பார்த்தவுடன் தடமறிந்து அவை மீண்டும் காட்டுக்குள் ஓடிவிடும்.

மான், காட்டெருமை, காட்டுப்பன்றி, நரி, முள்ளம்பன்றி இன்னும் பெயர் தெரியாத பல விலங்கினங்களை முன்னா அடிக்கடி பார்ப்பதுண்டு. இந்த மிருகங்களை ஆட்கள் வேட்டையாடிக் கொன்று தூக்கிச் செல்வதைக்கண்டு முன்னாவுக்கு நெஞ்சு பதைபதைக்கும். சில சமயம் இறந்துபோகாமல்  உயிர் ஊசலாடும் விலங்குகள் இவனைப்பார்த்து “என்னை எப்படியாவது காப்பாத்து. என் பிள்ளைகள் எனக்காக பசியோடு காத்துக்கிட்டு இருக்கும்” என்று அழுவதைப்போல முன்னாவுக்குத் தோன்றும்.

ஏன் இந்த விலங்குகள் இப்படி வலிய  வந்து இந்த கொடிய வேடர்களிடம் மாட்டிக்கொள்கின்றன என்று சிறு வயதில் தன்னைத்தானே அவன் கேட்டுக்கொண்டு விடை புரியாமல் நின்றதுண்டு. பெரியவனானதும் அவனுக்கே புரிந்து போனது.

மக்கள் தொகை பெருக பெருக, காடுகள் அழிக்கப்பட்டன. ஒரு காலத்தில் காட்டுப்பகுதியாக இருந்த இடமெல்லாம் இன்று விவசாய நிலமாகவும், மக்கள் வசிக்கும் நிலமாகவும் மாறிவிட்டன.

விலங்குகளின் இருப்பிடத்தை மனிதன் அபகரித்துக்கொண்டது மட்டுமல்லாமல் அவைகளை வேட்டையாடி கொன்று வீழ்த்துவது எந்த விதத்தில் நியாயம் என்ற கேள்வி அவனுள் எழுந்தது.

பலரிடம் இந்த கேள்வியைக் கேட்டான் முன்னா. சிலருக்கு பதில் சொல்ல நேரமில்லை. சிலருக்கு கேள்வியைக் கேட்க கூட நேரமில்லை. இன்னும் சிலருக்கு இந்தக் கேள்வியே புரியவில்லை.

இது எவ்வளவு ஆபத்து என்று யாரும் உணரவுமில்லை.

அப்போதுதான் ஒரு நாள் கிராமமே நடுங்கும்படி ஒரு கோரம் நடந்தது. காட்டிலிருந்து தடம்மாறி வெளிவந்த ஒரு பெண் புலி முன்னா கிராமத்துக்கு பக்கத்து கிராமத்தில் வசித்துவந்த ஒரு ஆளை அடித்து கொன்றுவிட்டதாக ஊரே பேசிக்கொண்டது. முன்னா உட்பட அனைவருக்கும் தூக்கிவாரிப்போட்டது. இதுவரை அங்கு இதுபோல் எப்பொழுதும் நடந்ததில்லை.

அந்தப் பகுதிக்கு அருகில்தான் ஜிம் கார்பெட் தேசிய பூங்கா இருக்கிறது. அங்கிருந்து வெளிவந்த ஒரு புலிதான் அந்த கிராமத்து ஆளை அடித்து கொன்று விட்டதாக மக்கள் பேசிக்கொண்டார்கள்.

சில நாட்களுக்குப்பின் மீண்டும் ஒரு பயங்கரம். காலையில் வயலில் வேலை செய்துகொண்டிருந்த ஒரு ஐம்பது வயது ஆளை பின் இருந்து தாக்கிக் கொன்றது அந்தப் புலி.

சுற்றி இருக்கும் அனைத்து கிராமங்களும் நடுங்கின. காட்டுக்குள் திரும்பிச் செல்லாமல் இங்கு எங்கோதான் அது சுற்றிக்கொண்டிருக்கிறது என்பது உறுதியானது.

பார்க்கும் இடத்தில் அந்தப் புலியைச் சுட அரசு ஆணையிட்டது. அதற்குள் பலியானவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போனது. வெளியில் விளையாடச்சென்ற பிள்ளையைக் காணவில்லை, சுள்ளி, விறகு பொறுக்கச்சென்ற பெண் வீடு திரும்பவில்லை, மாடு மேய்க்கச்சென்ற பையன் திரும்பவில்லை என்று ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு புகார் வந்தபடி இருந்தது. காணாமல்  போனவர்களை ஊரே தேடிச் சென்றது.

பெரும்பாலும் காணாமல் போனவர்களின் உடை, டர்பன், காலணி இவைகளுடன் உறைந்துபோன ரத்தம் இவைதான் கிடைக்கும். சில சமயம் கோரமாய் சிதைந்து கிடக்கும் உடல்கள் கிடைக்கும். பதற வைக்கும் காட்சிகள் அவை.

நன்கு வளர்ந்த புலிக்கு ஒரு ஆளைக் கொல்ல சுமார் 30 வினாடிகளே போதுமாம். பெரும்பாலும் பின்புறத்திலிருந்து தாக்கிச் சட்டென்று பாய்ந்து கொன்றுவிடும். கத்துவதற்கும், கூச்சலிடுவதற்கும்  கூட பலியாளிக்கு முடியாது.  கண்மூடி திறப்பதற்குள் விஷயம் முடிந்துவிடும்.

புலிக்கு பயந்துபோய் கிராமத்து மக்கள் பலர் பகலில் வேலைக்குப் போவதையே நிறுத்திக்கொண்டார்கள். அப்படியேச் சென்றாலும் கூட்டமாய் சென்று வந்தார்கள். இரவு நேரங்கள் இன்னும் நரகமாய் இருந்தன. சின்னஞ்சிறு குடிசைகளுக்குள் சரியாக தாழிட்டுக்கொள்ள கதவுகள் இல்லாத நிலையில், பீதியில் தூங்கமுடியாமல் தவித்தார்கள். ஒரு ஆட்கொல்லி புலியின் அட்டகாசத்தால் பல கிராமங்கள் பசியில் வாடின.

நாளாக ஆக பலியானவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போனது. இனியும் அங்கிருந்த மக்களால் பொறுக்க முடியவில்லை. எப்படியாவது அந்த ஆட்கொல்லியைக் கொன்றே தீரவேண்டும் என்று இளைஞர்  கூட்டம் ஒன்று புறப்பட்டது. காடு மேடுகளில் விரைந்துச் செல்லக்கூடிய ஜீப் ஒன்றில் அந்த இளைஞர்கள்  துப்பாக்கிகளுடன் புறப்பட்டுச் சென்றார்கள்.

அதே சமயம்  வனவிலங்கு பாதுகாப்பு ஆர்வலர்கள் சிலர் அப்புலியைத் தேடிச் சென்றார்கள். அந்த ஆர்வலர்களுடன் தானும்  ஒருவனாய் சேர்ந்து புலியைத் தேடினான் முன்னா.

அந்த ஆட்கொல்லியை இரண்டு குழுக்களும் தீவிரமாய் போட்டி போட்டுக்கொண்டுத் தேடின.

கிராமத்து மக்கள் வெறியுடன் அந்த புலியைத் தேடிவந்த நிலையில் எப்படியாவது அதை அவர்களுக்கு முன்னால் கண்டுபிடித்து காட்டில் விட்டுவிடத் துடித்தான் முன்னா.

வெட்டப்படாது ஓங்கி அடர்ந்து வளர்ந்து நின்ற கரும்பு தோட்டத்தில் உருமறைந்து பதுங்கி இருந்தது அப்புலி. ரயிலடி, நெடுஞ்சாலை எல்லாவற்றையும் கடந்துச்சென்று தம் தாக்கும் வேலையைச் செய்துகொண்டிருந்தது அந்த காட்டு ராணி.

தேடலும் தொடர்ந்தது. தண்ணி காட்டியது புலி. தேடுதல்களுக்கிடையே பலியானவர்களின் குடும்பம் கண்ணீர் விட்டு அழுவதை அவ்வப்போது பார்த்தான் முன்னா. மனம் கலங்கியபோதும் அவன் தன் குறிக்கோளிலிருந்து மாறவில்லை.

அவ்வப்போது அவன் பார்க்கும் புலியின் காலடி சுவடுகளை வேறு யாரும் பார்பதற்குமுன் அழித்து விடுவான்.

ஒரு மாதமாகியும் இன்னும்  தேடுதல் தொடர்ந்தது. இரண்டு குழுக்களும் சோர்வடையாமல் தேடின. இடையிடையில் ஓரிரு உயிர் பலிகளும் நடந்தன. கிராம மக்களின் வெறியும் கூடியது.

20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சுமார் 40,000 புலிகள் தாராளமாய் சுதந்திரமாய் இந்திய நாட்டின் காடுகளில் திரிந்து வந்தன. மக்களின் எண்ணிக்கை கூடக்கூட, புலிகளின் எண்ணிக்கை குறைந்துக் கொண்டே வந்தது. இந்திய நாட்டின் தேசிய விலங்கான புலி இனமே அழிந்துவிடும் என்ற அபாயமணி ஆங்காங்கே ஒலிக்க, பல முயற்சிகளுக்குப்பின் மெல்ல உயர்ந்த புலிகளின் எண்ணிக்கை இன்று சுமார்  2700 ரை எட்டியுள்ளது.

அன்று முன்னா வழக்கம்போல் தேடுதலுக்குப் புறப்பட்டான். அம்மா கதவைத் தாழிட்டு கொண்டதும், வாசலில் நின்றவர்களுடன் புறப்பட்டுச் சென்றான். “ஓ” வென்று ஒரு பெண் குரல் கதறி அழும் சத்தம் கேட்டு அந்த திசை நோக்கி ஊரே ஓடியது. முன்னாவும் ஓடினான்.

மகன் புலிக்கு பலியாகி இறந்து கிடப்பதைப் பார்க்க முடியாமல் கதறி அழுதாள் அந்தத் தாய். நெஞ்சைப் பிளந்தது அந்த அழுகை. அவள் பின்புறம் நின்ற ஒரு ஓலைத் தடுக்கின் பின்னால் கோரமாய் இறந்து படுத்து கிடந்தான் அவள் மகன். முன்னாவின் வயதுதான் இருக்கும்  அவனுக்கும்.

அந்த தாயின் கதறல் முன்னாவை ஏதோ செய்தது. இறந்து கிடந்த அந்த பையனின் கோர முகமும் அந்தத் தாயின் அழுகை முகமும் மாறி மாறி அவன் கண் முன் வந்துச் சென்றன. தொடர்ந்து தேடுதலுக்குச் சென்றான்.

அந்த அழுகை சத்தம் தொடர்ந்து அவன் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருந்தது. முன்னாவிற்கு தலைச் சுற்றியது. சுதாரித்துக்கொண்டு மனமில்லாமல் தேடுதலைத் தொடர்ந்தான்.

இன்று அவன் பாதையில் தெரிந்த காலடிச் சுவடுகளை அவன் அழிக்கவில்லை.

மறுநாள் விடியற்காலை முன்னாவைத் தேடுதலுக்கு அழைத்துச் செல்ல யாரும் வரவில்லை. அந்த தாயின் குரல் மட்டும் நன்றி சொல்வதாய் அவன் காதில் ஒலித்தது.

இனி புலியைத் தேடும் அவசியம் இல்லை என்று புரிந்தது முன்னாவுக்கு. கொஞ்ச நேரம் மௌனமான அவன் மெல்ல எழுந்து தன் அன்றாட வயல் வேலைக்குத் தயார் ஆனான்!!

You already voted!
5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

Visitors

097934
Users Today : 2
Total Users : 97934
Views Today : 2
Total views : 419384
Who's Online : 0
Your IP Address : 3.21.93.108

Archives (முந்தைய செய்திகள்)