14 Feb 2022 9:33 pmFeatured
தென்னரசு மின்னிதழ் சிறுகதைப் போட்டி-40
படைப்பாளர் - ஹரண்யா பிரசாந்தன், மட்டக்களப்பு, இலங்கை
நாக்கு கொஞ்சம் கொஞ்சமாய் அந்தச்சுவையை உள்ளுக்குள் இழுத்தது. முகர்ந்து பார்த்த போது அதன் வாசைன உடலை மட்டுமல்லாது உள்ளத்தையும் துளைத்தது. தலைமுடியை தன் கைகளால் கொத்தாகப் பற்றி உடலை சிலுப்பிக்கொண்டாள் மாலினி. ஏதோ ஒரு உணர்வு… சொல்லொண்ணா எண்ணங்கள்…மேகங்களோடு பயணம் செய்யும் மனம்….. மாலினி பறந்துகொண்டிருந்தாள் இறக்கை இல்லாமலே…… பாரமில்லா இலேசான இறகாய்…… வெற்றிலையை வாசற்படியில் துப்பிஇ சிவந்த நாக்கை கைகளால் துடைத்து தன் சட்டையில் அதை துடைத்துக் கொண்ட ராணி. மாலினியை காணத்தவறவில்லை. மாலினியை தன் கால்களால் புரட்டிப் போட்டாள் ராணி. தலை குனிந்து அவள் கன்னங்களைத் தட்டினாள். யாராலும் எழுப்பமுடியா தூக்கம் அது.
மாலினியின் இமைகள் மெதுவாக திறக்க முயற்சித்தன. கண்களின் முன் நிறைய விம்பத்துகள்கள் தூசியாய் தெரிந்தன. அவன் முகம் மட்டும் பிரகாசமாய் தெரிந்தது அவளுக்கு. களங்கமில்லா ராகுலின் முகம்…. அவன் முகம் பார்த்ததும் உதட்டில் பூத்த புன்னகை பக்கென்று உதிர்ந்து போனது. கண்மணிகள் பந்து போல் உருண்டு விளையாடத் தொடங்கின. கைகளை முறுக்கிக் கொண்டாள் மாலினி. உதடுகள் ஏதோ சொல்ல முயற்சித்தன. குரல் வரவில்லை…. மாலினி கைகளை ஊன்றி மெதுவாக எழுந்தாள். சுவரில் தன் உடலை சாய்த்து தலையணையை இரண்டு கைகளாலும் இறுகப் பற்றிக் கொண்டாள். தலையணையின் உறைக்குள் இருந்து எட்டிப்பார்த்தது ராகுலின் புகைப்படம். அந்தப்புகைப்படத்தை தன்னால் முடிந்தவரை தலையணை உறைக்குள் திணித்தாள் மாலினி. “பார்க்ககூடாது” என்ற கட்டளையை மூளை அவள் மனதுக்கு சொல்லிக் கொண்டிருந்தது. உடல் வலித்தது உடல் மட்டுமா????
பத்தொன்பது வயதாகிறது மாலினிக்கு. மட்டக்களப்பில் பாடசாலையில் படித்துக் கொண்டிருக்கும் போதே முளைத்த காதல்சிறகு கொண்டு கொழும்பு வரை பறந்து வந்தவள் அவள். தன்னை காதலிப்பதாக அவன் நேரில் சொன்ன போது அவள் இதயத்தின் சிரிப்பொலி ராகுலுக்கு கேட்டிருக்க நியாயமில்லை. இந்த வயதில் சினிமாக்களில் வருவது போல் தன்னையே சுற்றி வந்து காதல் பிச்சை கேட்ட ராகுலை அவளுக்கு பிடிக்காமலில்லை. இருந்தாலும் உடனே சரி என்பது காதல் பிச்சைக்கு அக்கணமே வரம் கொடுத்த மாதிரி ஆகிவிடுமே என்ற பயத்தில் ராகுலை கெஞ்ச விட்டது உண்மைதான்.
அம்மா வெளிநாட்டிலிருக்க மட்டக்களப்பில் அம்மம்மாவின் அரவணைப்பில் வாழ்ந்த மாலினிக்கு அன்பை ஊறறிக் கொடுத்தவன் ராகுல் தான். அந்த அன்புக்கு பரிசாக காதலுக்கு சம்மதம் தெரிவித்தாள் மாலினி. “காதல்” படம் பார்த்ததன் விளைவோ என்னவோ…. ராகுலும் மாலினியும் கொழும்பில் கரை ஒதுங்கினார்கள். ஹொட்டலில் அறை எடுத்து காதல் பொங்க பேசிய ராகுல் இரண்டு நாட்களில் மாலினியின் பொருட்களோடு காணாமல் போனான். அவன் மாலினியின் பொருட்களை மட்டும் களவாடவில்லை…அவளையும் தான்.. உயர்தரம் படித்துக் கொண்டிருந்த பள்ளி மாணவியின் காதல் வாழ்க்கை சுருக்கமாக முடிவடைந்தது.கொழும்பு மாநகரம் மகா நரகமாய் அவளுக்கு காட்சியளித்தது. ஹொட்டலை விட்டு வெளியேறி எத்தனையோ வாலிப கழுகுகளுக்கு பயந்து தப்பி ஓடியவளுக்கு கைகொடுத்த தெய்வம் தான் இந்த ராணி அக்கா.
மாளிகாவத்தையில் ஒதுக்குப்புறமான சேரியில் தனியே வசித்த ராணி அக்கா மாலினியின் மீது கருணைகொண்டு அவள் கதை கேட்டு இரண்டு கண்ணீர்ச்சொட்டுக்களை உதிர்த்தினார். ஆறுதலாய் சில வார்த்தைகள் பேசி தலையையும் தடவிக் கொடுத்தார். ஆன்பை பொழிந்த அவர்மீது நம்பிக்கை கொண்டு ராணி அக்காவோடு நடக்க ஆரம்பித்தாள் மாலினி. இன்று வரை நடந்து கொண்டு தான் இருக்கிறாள். கண்ணீர் கன்னத்தின் வழியே வழிய ஆரம்பித்தது. எல்லோரும் இறந்ததன் பின்அடைகின்ற நரகத்தை தான் வாழும் போதே அடைவதை இப்போதெல்லாம் மாலினி ஏற்றுக் கொண்டிருந்தாள். செருமல் சத்தம் கேட்டு கண்களை துடைத்துக் கொண்டாள் மாலினி;.
“என்ன மாலினி… இண்டைக்கி காலயிலயே தொடங்கிட்டா போல” ராணி அக்கா கூடைக்குள் இருந்த பிரியாணிப் பார்சல்களை எடுத்து வைத்துக் கொண்டே கேட்டார்.
“……….”
“என்ன… இண்டைக்கு வெளியில போகல்லயா?..பின்னேரம் நாலு மணிக்கு நான் சொன்ன அட்ரசுக்கு போகோணும். ஞாபகமிருக்கா?”
“எனக்கேலா………” ஒற்றை வார்த்தையை துப்பிவிட்டு தலையணையோடு அறைக்குள் நுழைய எத்தனித்த மாலினியை தடுத்தாள் ராணி அக்கா.
“ஏலாதா???? என்னடீ கொழுப்பா?ஃ பிச்ச எடுத்திட்டிருந்த உனக்கு அடைக்கலம் தந்தது நான். உண்ட வாழ்க்க சீரழிஞ்சப்ப சாப்பாடு போட்டு இருக்க இடம் தந்தது நான்.. ஒருத்தன நம்பி எல்லாம் இழந்து நிண்டப்ப எல்லாம் சரி எண்டு சொன்னா…. இந்த வாழ்க்கைக்குள வந்தா உண்ட விருப்பம் முக்கியமில்ல. கஸ்டமரிட சந்தோசம் தான் முக்கியம். வெளிக்கிட்டுத்து போற வழியப்பாரு..”
“மாட்டன்”
“என்ன கதைக்க வைக்காத சரியா?? நானும் நீயும் இண்டைக்கு சாப்பாடுறதுக்கு காரணமே இந்த தொழில் தான்… மறந்திடாத…..”
“தூ……. ஏலா…ஏலா…நான் போகமாட்டன்” வெறி பிடித்து கத்திய மாலினியின் கன்னங்களில் ராணி அக்காவின் கைரேகை பதிந்தது. ஆத்திரத்தோடு அவள்முடியை கொத்தாகப் பிடித்த ராணி அக்காவின் வாயிலிருந்து கெட்ட வார்த்தைகள் மின்னல் வேகத்தில்…….மாலினியை தாக்கத் தொடங்கின.
“அக்கா விடுங்க அவள” ராணியின் கைகளை பிடித்திழுக்க நிவேதாவால் இயலாமல் போனது. ஆக்ரோஷத்தோடு மாலினியை தன் கைகளிலிருந்து விடுவித்தாள் ராணி. மூவருக்கும் மூச்சு வாங்கியது. முட்டி வந்த அழுகையோடு அறைக்குள் ஓடிச் சென்றாள் மாலினி. தரையில் கிடந்த பொருட்களை கால்களால் எட்டி உதைத்தவாறு வெளியேறினாள் ராணி அக்கா. ஸ்தம்பித்து நின்றாள் மாலினியின் தொழில் நண்பி நிவேதா. ஆமாம்.அவளும் கூட ஒரு பாலியல் தொழிலாளி தான்.
கட்டிலில் கசங்கிக் கிடந்தாள் மாலினி. வியர்வையோடு கண்ணீரும் இணைந்து அவள் முகத்தை நனைத்திருந்தது. கலைந்த அவள் கோலம் பார்த்தால் கண்துளிகள் தானாக உதிரும். நிவேதாக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை. கைகளில் தண்ணீர்குவளையை ஏந்திய வண்ணம் உள்நுழைந்தாள். அரவம் கேட்டு திரும்பிய மாலினி நிவேதாவை கட்டியணைத்து அழத் தொடங்கினாள். அவள் அழுகையொலி மெல்ல மெல்ல உயர்ந்தது.
“சரி…சரி..விடு மாலினி… அக்காவப் பத்தி தெரியும் தானே??.. வீணான பிடிவாதம் என்னத்துக்கு?. நமக்கெல்லாம் இதான் விதி”
“எனக்கு விருப்பமில்ல நிவேதா….இந்த வாழ்க்க.. இந்த தொழில்.. சே…. அருவருப்பா… ஒவ்வொருத்தனும் பாக்கக்குள்ளயே சாகணும் போல இருக்கு… “
***
“ராகுல் என்ன ஏமாத்தாம இருந்திருந்தா….. நான் படிச்சி ஏஎல் பாஸ் பண்ணிருந்தா… எண்ட வாழ்க்க எப்பிடியிருந்திருக்கும்?? பாழாப்போன லவ்……அந்த நாயால நான் இண்டைக்கி.. நான் மறக்கணும்….எனக்கு ராகுல் வேணா.... வேணா…” கத்தியபடி எதையோ தேட ஆரம்பித்தாள் மாலினி.
“இதானே வேணும்….. இந்தா…பிடி” தன் கைப்பைக்குள் இருந்த பவுடரை மாலினியின் கைகளில் வைத்தாள் நிவேதா. மாலினியின் இந்த தருணத்து வலியை போக்கும் நிவாரணி அது. நிஜ உலகை விட்டு புது உலகுக்கு அழைத்துப்போகும் விமானம் அது. தட்டுத் தடுமாறி விழுந்து எழுந்து ஆசையாய் பவுடரை கைகளில் வாங்கி முகர்ந்து பார்த்தாள் மாலினி. சொர்க்கத்தின் நுழைவாயில் மெதுவாக திறந்தது……
மூக்கினால் பவுடரை முகர்ந்து நாக்கினால் உறிஞ்சி சுவாசத்துக்கு உயிர் கொடுத்த போது நரம்புகள் சுறுசுறுப்படைந்தன. குருதி குதிரைப்பாய்ச்சலில் ஓடத் தொடங்கியது. தலை சுற்றியது. ஏதாவது செய்ய வேண்டும்……கோபம்.. விரக்தி வலி சலிப்பு அவமானம் எல்லாம் ஒருங்கே சேர்ந்து மாலினியின் எண்ணங்களை கடித்துக்குதறின. செவ்வரி படர்ந்த கண்களோடு நிவேதாவைப் பார்த்தாள் மாலினி. அவள் அலைபேசியில் புதைந்திருந்தாள்.
“மாலினி… இங்க பார்டீ… “ஸ்லப்” எண்டொரு புது அப் வந்திருக்கு.அதில யார வேணா நாம அடிக்கலாம். அவங்கட போட்டோவ அதில போட்டா அடிக்கவேண்டியது தான். புதுசா இருக்கு…”
***
“நாம அடிக்கிறதுக்கு பொய்ண்ட்ஸ் எல்லாமிருக்கு…இப்பிடியெல்லாம் ஒரு அப் ……யார் இத டவுண்லோட் பண்ணி … அறையப் போறாங்க?????” அவள் சொன்ன வார்த்தைகள் கேட்காமலில்லை. காதுகளில் தெளிவாகவே கேட்டன. எதற்காக உருவாக்கப்பட்டதோ தெரியாது. ஆனால் அது இப்போது தேவையாகிறது…. அத்தியாவசிய……..
வடுக்களிலிருந்து வலிகளைப் பிரிப்பது ஒன்றும் இலகல்ல…மனம் கண்ட ரணத்துக்கு மருந்தில்லை என்பது உண்மை தான். ஆனால்….. ஏதாவது செய்யவேண்டும்.
நிவேதா அலைபேசியைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தாள். பவுடர் எடுக்காமலே பலரை சிரிக்க வைக்கும் சக்தி சமூக வலைத்தளங்களுக்கு உண்டு. சட்டென்று அவள் கைகளிலிருந்த அலைபேசியை பறித்தாள் மாலினி. அவள் கைவிரல்கள் பட்டன்களை அழுத்திக் கொண்டிருந்தன விரைவாக…….அவள் போதை விழிகள் அலைபேசியில் நிலைகுத்தி நிற்க கைவிரல்கள் மட்டும் இயக்கத்தில் இருந்தன. மாலினியின் தோள்களைப்பிடித்து தன் அலைபேசியை எட்டிப்பார்த்தாள் நிவேதா. மாலினி வெறிபிடித்தவள் போல….. உடல் எங்கும் உஷ்ணம் கொப்பளிக்க கண்கள் ரௌத்திரத்தில் சிவந்திருக்க ஸ்லப் அப்பில் (யுpp) தன் அலைபேசியிலிருந்த புகைப்படத்தை பதிவேற்றி விரல்களால் அவனை பந்தாடிக் கொண்டிருந்தாள். ராகுல் புகைப்படத்தில் புன்னகைத்தபடி மாலினியிடம் அறை வாங்கிக் கொண்டிருந்தான்.
Super story congratulations teacher
Excellent Teacher Superb👌👌👌👌
Nice story teacher
வாழ்த்துக்கள்
It’s a nice story based on the real life.
Yes very nice story