15 Feb 2022 12:26 amFeatured
தென்னரசு மின்னிதழ் சிறுகதைப் போட்டி-41
படைப்பாளர் - ரா.பரத்குமார், தஞ்சாவூர்.
கிணற்று ------- பட்டி கிராமம் மிகுந்த கட்டுப்பாடுகள் நிறைந்தது. மற்ற சமூகத்தினரைவிடக் குறிப்பிட்ட பிற்படுத்தப்பட்டவர்கள் மட்டுமே அதிகம் வாழும் ஓர் ஊர் அது. சாதி வெறியர்கள் வாழும் ஊர் என்றே சொல்லலாம். அவர்களைத் தவிர மற்ற சாதியைச் சேர்ந்தவர்கள் கோயிலுக்குள் செல்ல அனுமதி இல்லை. கோயில் கிணற்றில் இறங்கவும் அனுமதி இல்லை. அவர்களும் அவர்களுடைய குழந்தைகளும் மட்டுமே அந்தக் கிணற்றில் நீச்சலடிப்பார்கள். அம்மன் தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் மற்ற சமூகத்தினர் கோயிலுக்கு வெளியில் நின்றுதான் வழிபாடு செய்ய வேண்டும். கிணற்றுக்கு வந்தாலும் மேலே நின்று வேடிக்கைதான் பார்க்க முடியும். உள்ளே இறங்கினால்தான் தீட்டாகிவிடுமே. இவ்வளவு ஏன்....? வேறு சமூகத்தினர் வீட்டிற்கு வந்தால் வெளியில்தான் உட்கார வேண்டும். அதுவும் தரையில். அவர்களுக்குத் தாகம் எடுத்தால் தண்ணீர் ஊற்றப்படும். அவர்கள் கைகளை ஏந்திப் பிடித்துத்தான் குடிக்க வேண்டும். தேநீர் கடைகளிலும் பொது இடங்களிலும்கூட எல்லாச் சமூகத்தினரும் சமமாக உட்கார முடியாது. கணினிமயமாகிவரும் இந்தக் காலத்திலும்கூட வெளியுலகம் அறியாமல் கிணற்றுத் தவளையாகவே வாழ்ந்து வருகிறார்கள் அந்த ஊரார்.
கட்டுப்பாடுகள் நிறைந்த கிணற்று ------- பட்டி முழுவதும் தேடியும் கிடைக்கவில்லை அந்த முதியவர். கோயிலுக்கு அருகில் உள்ள சாமி கிணற்றில் அவர் அணிந்திருந்த வெள்ளை வேட்டியும் ஊன்றுகோலாகப் பயன்படுத்திய ஒரு குச்சியும் அவரது காலணிகளும் கிடப்பதாகத் தகவல். பதறி அடித்துக்கொண்டு கிணற்றுக்கு ஓடுகிறாள் அந்த முதியவரின் மனைவி. உடனிருந்த சிலரும்தான். அந்தக் கிராமத்தில் கிழவனும் கிழவியும் தனியாகத்தான் இருக்கிறார்கள். மகனோ, மனைவி மக்களுடன் வெளியூரில் வசித்து வருகிறான்.
''அய்யோ இந்தக் குச்சியும் இந்தச் செருப்பும் அழுக்குப் புடிச்ச வெள்ள வேட்டியும் எங்க கெழவனோடதுதா. நா என்ன செய்வேன். இந்த ஆளு ஏந்தா இப்படிப் பண்ணுனானோ? சின்னப் பயலாட்ட நீச்சலடிக்கப் போகாதன்னு சொன்னாக் கேட்டானா? இப்படி ஆகீருச்சே. இந்த 85 அடிக் கெணத்துல நா யாரக் கூப்பிட்டுத் தேடச் சொல்லுவேன்?" என்று கதறி அழுகிறாள் கிழவி.
கிணற்றில் இறங்கி முதியவரின் உடலைத் தேட யாருக்கும் தைரியம் இல்லை. தைரியம் எப்படி வரும்? 35 அடி நீளம், 20 அடி அகலம், 85 அடி ஆழம் கொண்ட அந்தக் கிணற்றில் 70 அடிவரை தண்ணீர் நிறைந்துள்ளது. பலரும் கூடிப்பேசி ஒரு வழியாகத் தீயணைப்புத் துறைக்குத் தகவல் கொடுக்கலாம் என முடிவு செய்கின்றனர். இதற்கு இடையில் வெளியூரில் உள்ள மகனுக்கும் தகவல் கொடுக்கப்படுகிறது.
வெளியூரில் உள்ள மகன் வந்துசேர ஒரு நாள் ஆகுமாம். அதற்குள் தீயணைப்பு வாகனம் வருகிறது. வீரர்கள் ஏழு பேரும் காவல்துறை அதிகாரிகள் இரண்டு பேரும் வருகின்றனர். மதியம் இரண்டு மணியளவில் காணாமல்போன முதியவர், கிணற்றில்தான் விழுந்துள்ளார் என்பதை உறுதிசெய்யவே மணி ஆறுஆகிவிட்டது. தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவிக்கும்போது மணி ஏழு. அவர்கள் வந்துசேரும்போது மணி எட்டு.
எட்டு மணிமுதல் தீயணைப்பு வீரர்கள் விடா முயற்சியில் முதியவரின் உடலைத் தேடிக் கொண்டிருந்தனர். ''கெணறு சிறுசா இருந்தாக்கூடப் பரவாயில்ல. பாவம் இந்தப் போலீஸ்காரங்க. எப்படிக் கஷ்டப்படுறாங்க பாருங்களேன்" சில பெண்களின் பேச்சு இது. இந்தக் கெழவன் வயசான காலத்துல சோத்தத் தின்னுட்டு வீட்டுல கெடக்காம நீச்சலடிக்க வந்திருக்கான் பாரேன். இதெல்லாம் தேவையா? இந்தச் சாமப் பொழுதுல எத்தன பேருக்குக் கஷ்டமுன்னு பாருங்க" சில ஆண்களின் பேச்சு இது. ''சாமி கெணத்துலதா சாகணுமுன்னு இந்தக் கெழவனுக்குத் தலையில எழுதியிருக்கும் போல. மொதல்ல இந்தக் கெணத்தச் சுத்தி ஒரு வேலியப் போட்டுட்டு, பெரிய பூட்டு ஒன்ன வாங்கிப் போடணும். அப்பத்தா ஒழுங்குக்கு வரும் "பொதுநலவாதிகள் சிலரின் பொதுப் பேச்சு இது. '' இனிமேல் எங்க வீட்டுல நீச்சலடிக்கவே விடமாட்டாங்க "சில வாண்டுகளின் வருத்தம் நிறைந்த வீச்சு இது. கடைசி கடைசியா அது, இதுன்னு ''எம்புருசனோட ஒடம்பாவது கெடச்சிட்டாப் பரவாயில்ல" இது அந்தக் கிழவியின் குமுறல்.
பலரும் பலவாறு பேசிக்கொண்டிந்த அந்த வேளையில் கிணற்று ------- பட்டிக் கடவுளுக்கும் வருத்தம்தான். காலத்தின் கட்டாயத்தால் நமது ஊர்க் கட்டுப்பாடுகள் காற்றில் கரைந்துவிட்டனவே என்று.
பின்ன என்ன? தீயணைப்பு வீரர்களும் காவலர்களும் காலணிகளுடனே கோயில் கிணற்றுக்குள் இறங்கியுள்ளார்கள். அவர்கள் எந்தச் சமூகத்தினர் என்று அந்த ஊர் மக்களுக்குக் கவலையில்லை. அவர்களைப் பொருத்த அளவில் கிழவனின் உடல் கிடைத்தால் போதும். சொல்லப் போனால் கிட்டத்தட்டக் கடவுளும் அந்த மனநிலைக்கு வந்தாச்சு. தேவை வரும்போது அந்த ஊர் மக்கள் மட்டுமல்ல; சாமியும் வளைந்து நெலிந்து கொடுத்துத்தான் ஆக வேண்டும். ஏனென்றால் ஊர் அப்படி. கிணற்று ------- பட்டியாச்சே....! சாமியும் மக்களும் கிணற்றைவிட்டு வெளியில் வந்ததில்லையே....!
மனிதத்தை உணர்த்தும் கதை
சாதி என்னும் பித்தம் பிடித்தவர்கள்
அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு கதை.. இந்த தமிழகத்தில் இன்னும் தேவையா ? இந்த சாதி வெறி?? இதனை ஒழிப்பதே இக்கால இளைஞர்களின் பணி…
அருமையான சிறந்த கதை…
இன்றைய எதார்த்த உலகம்….அன்று முதல் இன்று வரை கிணற்றுத் தவளைகளாய் தான் உள்ளோம் என்பதே நிதர்சனம்….அவரவர்களாய் மாறாத வரை இங்கு மாற்றம் என்பது மாயையே……நன்றி நண்பரே…
சிறப்பு