15 Feb 2022 1:34 amFeatured
தென்னரசு மின்னிதழ் சிறுகதைப் போட்டி-43
படைப்பாளர் - N.நித்யா, திருப்பூர்
எப்போதும் ஆக்ரோசத்துடன் பொங்கியெழும் கடல் அன்றைக்கு அதிசயமாக உள்வாங்கியிருந்தது.
மொட்டைப் பாறைகள் துருத்தி நிற்க அதனுள் ஆங்காங்கே தேங்கி நின்றி ருந்த தண்ணீர், குட்டை போலக் காட்சி தந்தது. எப்போதும் ஈரமாக இருக்கும் மணல்வெளி காய்ந்து போய்க் கிடந்தது. காற்றில் துளி கூட குளிர்ச்சி இல்லை.
ஒளிந்து, தூர ஓடிப் போன கடலையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் பிரியா. மனதிற்குள் கோபமும், வெறுப்பும் ஏறிக் கொண்டே இருந்தன. வெளிவரப் போகும் வார்த்தைகள் நிச்சயம் அமில மழை பொழிவது உறுதி.
அருகில் கை கட்டினபடி பாவமாக தன் முகத்தையே பார்த்தபடி நின்றிருந்த அம்மா ஜெயந்தி அவளது கோபத்திற்கு இன்னும் பெருந் தீனி போட்டாள்.
“என்கிட்டேயிருந்து என்ன பதிலை எதிர்பார்க்கிறே நீ. நான் என்ன சொல்லுவேன்னு தெரியாதா உனக்கு. ஏன் இப்படியொரு நாடகம். சகிக்கலை.”
ஜெயந்தி கை பிசைந்தாள். முகத்தை இன்னும் சோகமாக்கிக் கொண்டு “இந்த ஒரு தடவை மட்டும்டா தங்கம். கடைசியா. அவரைப் பார்த்தா பாவமா இருக்கு!”
“நீ ஒரு பைத்தியம். உணர்ச்சிப் பைத்தியம். மேற்கொண்டு ஏதாவது பேசினே அந்தாளு மேல இருக்கிற அத்தனை கோபத்தையும் உன் மேல தான் துப்புவேன். தாங்க முடியாது உன்னால. பொசுங்கிடுவே. பார்க்கிறியா.. பார்க்கிறியா..” அமர்ந்த நிலையிலேயே குதித்தாள்.
ஜெயந்தி வார்த்தைகள் இழந்து தவித்தாள். சரிக்கு சரி பேச வேண்டாம் எனத் தவிர்த்தாள். முதலில் இவள் தன் அத்தனை கோபத்தையும் கொட்டட்டும்.
அம்மாவின் கோபம் பிரியாவை ஒரு மாதிரி சந்தோசம் கொள்ள வைக்க.. தான் நியாயம் தான் பேசுகிறோம் என்கிற எண்ணத்தில் மீண்டும் ஆரம்பித்தாள்.
“தெரியாமத் தான் கேக்கிறேன் நான். இத்தனை வருசமா எங்கேம்மா இருந்தான் அந்தாளு. ஒரு தகவல் உண்டா. இப்போ மட்டும் திடீர்ன்னு ஏன் தேடி வரனும். எங்கிருந்து வந்தது இத்தனை பாசம்.? உன்னைச் சொல்லனும், சரியான வெட்கம் கெட்ட ஜென்மம் நீ. எப்படி அந்தாளை நீ வீட்டுக்குள்ளே விடப் போச்சு.? நான் மட்டும் இருந்திருந்தா அங்கே நடந்திருக்கிற காட்சியே வேற மாதிரி இருந்திருக்கும்!”
குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும். பிரியா ’அந்தாளு, அந்தாளு’ என்று அன்புடன்
குறிப்பிட்டது தன் சொந்த அப்பாவை.
“உன்னைத் தானே கேட்கறேன். பழசெல்லாம் அத்தனை சீக்கிரத்துல மறந்துட்டியா. நாம பட்ட துன்பங்கள், துயரங்கள், அவமானங்கள், கேவலங்களை ஞாபகப்படுத்தவா.?” சாமி வந்தவள் போல ஆடினாள்.
“முன்பொரு காலத்துல நீ, நான், அந்தாளு எல்லோரும் ஒரே குடும்பமா வாழ்ந்துட்டு வந்தோம். அவரை நான் அப்பா, அப்பான்னு கூப்பிட்டேன். புத்தி நல்லாத் தான் இருந்தது. திடீர்ன்னு ஒரு நாள் காணாமப் போயிட்டான். நாம பதறிப் போனோம். யாராவது கடத்திட்டுப் போயிட்டாங்களோன்னு பயந்துக்கிட்டு மூலைக்கு ஒருபக்கம் தேடினோம். விசாரிக்காத இடம் இல்லை. ஆள் கிடைக்கலை. எங்கே இருக்கான்னே தெரியலை.
ஒரு வாரம் கழிச்சு பதிவுத் தபால் வருது. ’என்னை மன்னிச்சுடு, அடுத்த வீதியில மெஸ் நடத்திட்டு வர்ற மலையாளத்துக்காரிய நான் ரகசியக் கல்யாணம் பண்ணிட்டேன். இனி அவ கூடத் தான் வாழப் போறேன். அங்கே வரமாட்டேன்’னு ஒப்புதல் வாக்குமூலம் மாதிரி ஒரு லெட்டர்.
நாம திடீர் அனாதைகளாயிட்டோம். ஊரும், உறவும் சிரிப்பா சிரிச்சது. புருசனைக் கைக்குள்ள வெச்சுக்கத் தெரியாத பைத்தியக்காரி, கையாலாகாதவ ன்னு உன்னைக் காறித் துப்பினாங்க.”
அம்மா சேலைத் தலைப்பில் முகம் பொத்திக் கொண்டு குலுங்கி குலுங்கி அழுதாள்.
“அப்போ அழ ஆரம்பிச்சவ தான், இப்போ வரை நீ நிறுத்தலை!”
“பொம்பளையாப் பிறந்தவ தலையெழுத்தே இதுதானே.”
”பரிதவிச்சுப் போனோம். ஆனா எத்தனை நாளைக்கு அப்படியே அழுதுக்கிட்டே காலத்தை ஒட்ட.? நீ படிச்ச படிப்புக்கு ஒரு மில்லுல வேலை கிடைச்சது. நான் அரசுப் பள்ளிக்கு குடியேறினேன். புறாக் கூண்டு வீட்டுல வாழ்ந்தோம். தாத்தாவும், மாமாவும் ஊர்ப் பேச்சுக்கு பயந்து ஏதோ உதவினாங்க.
உலகத்து மேல இருக்கிற கோபத்தை படிப்புல காட்டினேன். ஜெயிக்கனும்ன்ற வெறி. ஸ்கூல்ல முதல் மாணவியா வந்து மெடல் குவிச்சேன். க்ளப்காரங்க தேடி வந்து கருணை மனசோட உதவித் தொகை தந்து மேற்படிப்புக்கும் கை கொடுத்தாங்க.
அவங்க உதவிக் கரத்தால காலேஜ் போனேன். வளாகத் தேர்வுல கலந்துக்
கிட்டு நல்ல வேலையில சேர்ந்தேன். படிப்படியா முன்னேறிட்டு இருக்கேன்.”
“சரிதான்டா தங்கம். உன்னை நினைச்சுப் பூரிச்சுப் போயிருக்கேன்.”
“நீ பூரி விக்கறதுக்காக இதெல்லாம் நான் சொல்லலை. அந்தாளு துணையும், ஆதரவும் இல்லாமயே இத்தனை சாதிச்சிருக்கேன். கூட இருந்து ஒரு கை கொடுத்திருந்தா இன்னும் அதிக உயரம் போயிருப்பேன். ஸ்கூலில, கல்லூரியில உடன்படிக்கிற அத்தனை பேரும் உங்க அப்பா எங்கேன்னு கேள்வி கேட்டப்போ எத்தனை துடிச்சுப் போயிருக்கேன்.! சமாளிக்க முடியாத இடங்கள்ல அவர் இறந்துட்டார்ன்னே துணிச்சலா பொய் சொல்லி இருக்கேன்.”
“கடவுளே..”
“சரியான ஆம்பளைத் துணை இல்லாம ஒவ்வொரு வீட்டுலேயும் துரத்தப் பட்டு, அசிங்கப் பட்டு சுத்தி இருக்கிறவங்க வாந்தியெடுக்கிற நச்சு வார்த்தைகளை காதுல கேட்காம கடந்து போய்.. நாம வாழ்ந்த அந்த அவமான வாழ்க்கை அத்தனை சீக்கிரம் மறந்து போயிடுச்சோ..”
பேக் திறந்து தண்ணீர் பாட்டில் திறந்து வாய்க்குள் திரவத்தை கொட்டிக் கொண்டாள். “உன்னையும், என்னையும் ’போடி லூசுங்களா’ன்னு துச்சமா தூக்கி எறிஞ்சுட்டு அம்போன்னு தவிக்க விட்டுட்டு ஒரு மேனாமினுக்கி கூட உடல் சுகத்துக்காக பல்லை இளிச்சுகிட்டு ஓடிப் போனான் அந்தாளு! எப்படிம்மா அந்தாளை மன்னிச்சு அவ்வளவு எளிதா வீட்டுக்குள்ளே விட்டே.”
”மனசு மாறி, திருந்தி, நொந்து போய் வீட்டுக்கு வந்திருக்காரும்மா. செத்த பாம்பை திரும்பவும் அடிக்கச் சொல்றியா.?”
கடல் வெறித்தாள். அவள் கோபத்துக்கு அஞ்சி அது இன்னும் உள்ளேயே இருந்தது.
”எத்தனையெல்லாம் பட்டோம் அந்தாளால. ஒரு நல்லது, கெட்டதுக்கு துணிஞ்சு போக முடியாது. தோழிகளோட குடும்பத்துல உள்ளவங்க புலன் விசாரணை பண்ணினா தலை குனிஞ்சு நிக்கனும். கொஞ்ச நஞ்ச கொடுமையா. உன்னை ஒண்ணு கேட்கவா. நமக்கு எதுக்கு இப்போ இந்தாளு.?”
அம்மா காது மூடிக் கொண்டாள். ”ஆயிரம் இருந்தாலும் அவர் தான் உன் அப்பான்ற சத்தியத்தை மாத்த முடியுமா.? நமக்கு ஒரு சமூகப் பாதுகாப்பு தேவை தானே. நாளைக்கு உனக்கே ஒரு கல்யாணம், காட்சின்னா..”
அம்மாவை அதட்டினாள். ”அந்தாளை உள்ளே நுழைக்க என் வாழ்க்கையை வம்புக்கு இழுக்காதே. உன் லூசுத் தனத்தால பட்டது போதும். எனக்கு ஆம்பளைங்க மேல வெறுப்பு வந்து பல வருசம் ஆச்சு. தெரிஞ்ச ஆசிரமம் ஒண்ணு திருவண்ணாமலைல இருக்கு. ரெண்டு பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கப் போறேன். உங்க பைத்தியக்கார கல்யாண பழக்கங்களுக்கு குட்பை. எனக்கு கிடைக்காத பாசத்தை, அன்பை அதுக மேல கொட்டி அருமையா வளர்ப்பேன்.”
இவள் செய்தாலும் செய்வாள் எனத் தோண்ற அதிர்ச்சியுடன் பார்த்தாள். கண்ணீர் தானாக வந்தது. இத்தனை சின்ன வயதில் மனிதர்கள் மேல், உலகம் மேல் எத்தனை ஆத்திரம், வெறுப்பு, இரக்கமின்மை.
“அழாதே. சின்ன வயசுல நீ அழுதா பரிதாபமா இருக்கும். நானும் துணைக்கு, ஆதரவா அழுவேன். ஆனா இப்பல்லாம் எரிச்சலா வருது. பெண்களோட கண்ணீரு க்கு மதிப்பு அதிகம். அதை இந்த மாதிரி மலிவான மனுசங்களுக்காக வீணடிக்காதே.”
பிரியா பல்லாண்டு கால கோபத்தை அம்மா மீது உமிழ்ந்தாள்.
“இந்த அம்மாவுக்காக, அவளோட கடைசி கால சந்தோசத்துக்காக இந்த ஒரே ஒரேயொரு தடவை மட்டும் வீட்டுக்கு வந்து அவர் முகத்தைப் பார்த்துட்டுப் போயிடுடி தங்கம். பேசக் கூட வேணாம். அம்மாவுக்காக..”
யாசகம் கேட்கும் குரலில் அம்மா கெஞ்ச “வர்றேன். எனக்கும் அந்தாளைப் பார்க்கனும். என்னைப் பார்த்ததும் குற்ற உணர்ச்சியோட தலைகுனிவானே அந்தக் கண்கொள்ளாக் கட்சியைப் பார்க்கனும். வர்றேன்..” என்றாள் பழி வாங்கும் குரலில்.
”சரிம்மா, சரிம்மா. நீ வந்தா சரி.” அம்மா சிறுமியாக குதித்தாள்.
***
அம்மாவும், மகளும் ஜோடியாக வீட்டை அடைந்தபோது இருட்டத் துவங்கியிருந்தது.
“முன்னாடி கூட லைட்டைப் போடாம உள்ளே என்ன பண்றாரு..”
திறந்திருந்த கதவு தாண்டி உள்ளே வந்தார்கள். சுவரைத் தடவி ஸ்விட்சைப் போட அது திணறினபடி எரிந்தது. யாரும் இருப்பதற்கான அறிகுறியே இல்லை.
படிகள் பார்த்தாள். ”ஒருவேளை மொட்டை மாடிக்குப் போயிருப்பாரோ..”
“நம்பமுடியாது! மறுபடியும் ஓடிப் போயிருப்பான்..!” கருணையின்றி கிண்டலாய் சிரித்தாள் பிரியா.
படியேறி மேலே வந்தார்கள். ஹாவென்று விரிந்திருந்தது மொட்டை மாடி வானம். பவுர்ணமி போல. நிலா வெளிச்சம் தரையை தாலாட்டிக் கொண்டிருந்தது.
“இதோ இங்கிருக்காரு பாரு..”
கைப்பிடிச் சுவரில் கைகளை ஊன்றிக் கொண்டு எங்கேயோ வேடிக்கை பார்த்தபடி நின்றிருந்த அந்த உருவம் குரல் கேட்டு திரும்பியது.
அடிபட்ட புலியின் சீற்றத்துடன் அவரை எதிர்கொள்ளத் தயாரானாள் பிரியா.
‘இதோ இதுதான் என் அப்பா. இவர் போட்ட விந்து பிச்சையில் வளர்ந்தது தான் இந்த உடம்பு, ’நீ படிக்கிற படிப்பு தான் இந்த உலகத்தைப் புரிஞ்சுக்க உதவும்’ சொல்லித் தந்தது இவர் தான், ‘பயப்படாம முன்னேறு, நான் பின்னாடி இருக்கேன்’ சைக்கிள் சக்கரத்துடன் ஓடி வந்த அப்பா, ’கடல்ன்னா ரொம்பப் பெரிசா..’ எனக் கேட்ட போது ராமேஸ்வரம் அழைத்துப் போய் இதுதான் கடல் என பிரம்மாண்டம் காட்டின அப்பா, அம்மாவின் அருகாமை இல்லாத நேரத்தில் திடீர் பூப்படைந்த போது ஆறுதல் சொல்லி அதன் அறிவியல் குறிப்புணர்த்தி அச்சம் போக்கிய அப்பா..’
இப்போது..
மங்கிப் போன தங்கமாய், ராஜ்ஜியம் இழந்த ராஜாவாய், வீரியம் அனைத்தும் கரைந்து, தளர்ந்த வயதில் ஒரு அகதி போல அடைக்கலப் பிச்சை கேட்டு வாழ்வில் தோற்று திரும்பி வந்திருப்பவர்..
“டீ.. தங்கக் குஞ்சு..”
அத்தனை அன்பையும் ஒற்றை வார்த்தையில் தேக்கிவைத்தபடி, அந்தரங்கான நேரத்தில் அவர் அழைக்கும் அந்த ஒற்றைச் சொல்லில்.. தனது கோபம், வீராப்பு, அகங்காரம் அத்தனையும் இழந்தவளாக.. சுயம் மறந்த ஐந்து வயதுச் சிறுமியாக மாறிப் போனவள்.. கண்ணீர், விழிகளை மறைக்க “அப்ப்ப்பா..” எனக் கதறினபடி அவரை ஓடிப் போய் அணைத்துக் கொள்கிறாள்.